Sunday, April 26, 2026

பெரியார் கோர்ட்டு வாக்கு மூலம்

பெரியார் கோர்ட்டு வாக்கு மூலம்

திருச்சி செஷன்ஸ் போர்ட்டார் அவர்கள் முன்பாக

எஸ்.சி. 93-1957

திருச்சி விசேஷ போலிஸ் இன்ஸ்பெக்டர்-கம்பளைனெண்ட்

எதிர்

பெரியார் ஈ.வெ. இராமசாமி-எதிரி

எதிரி தாக்கல் செய்த ஸ்ட்டேட்மெண்ட்:-

‘இந்த ஆட்சி கொடுமையான காட்டுமிராண்டி ஆட்சி. அதாவது, பச்சைப் பார்ப்பான், நீதி, நேர்மை, அன்பு, அறிவு அற்ற கொடுங் காட்டுமிராண்டிப் பார்ப்பனப் பாதகர்கள் ஆட்சி.

இந்த ஆட்சியில் இப்போது இயற்கையாகவே நீதி கிடைக்கமாட்டாது. அதிலும், பார்ப்பனத் தலைவணும் பார்ப்பன ஆட்சித் தலைவணுமான முதல் மந்திரி வேஷத்தைக் கொண்ட பண்டிட் நேரு ஆகிய பார்ப்பனர், வழக்கு நடக்கும் இந்த ஊருக்கு வந்து, வழக்கு நீதிபதியாகிய தங்களை அழைத்து வைத்துக் கொண்டு, தங்கள் முன்னிலையிலேயே 9.12.1957 இல் ‘பார்ப்பனர்களைக் கொல்ல வேண்டும் என்று சொன்னவர்களை விடக் கூடாது; ஜெயிலில் தள்ள வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார்.

நூற்றுக்கணக்கான பேர்கள் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் கொளுத்தப்பட்ட வழக்கு பற்றி மதுரை ஜில்லாவில் திண்டுக்கல்லில் பேசும் பொழுது, ‘வழக்கு விசாரணையிலிருக்கும் பொழுது நான் அதைப்பற்றி இங்கு பேசக் கூடாது’ என்று சொல்லிவிட்டு, மேலும் அங்கு அந்தக் கொலை, கொள்ளை,எரிப்பு ஏற்படக் காரணமான சாதியை, சாதி உணர்ச்சியை ஒழிக்கப்பட வேண்டியது அவசியம் என்று பேசி வழக்கு இணக்கம் காட்டிவிட்டு, யாரும் கொல்லப்படாத, எங்கும் கொளுத்தப்படாத இந்த வழக்கு பற்றி-அதுவும் சாதி ஒழியாவிட்டால் முதுகுளத்தூர் போன்ற கொலை, கொள்ளை ஏற்படும்- என்பதாக எச்சரிக்கை செய்யப்பட்ட பேச்சைப் பற்றிப் போடப்பட்டிருக்கும் தப்பு வழக்குப்பற்றி இப்படிப் பேசிப் போயிருக்கும் போது, அந்தப் பார்ப்பன ஆட்சியின் ஆதிக்கத்தின் கீழ் இராண்டாந்தர சிப்பந்தியாக இருக்கும் தங்களிடம் நான் என்ன நீதி காண முடியும்?

இந்த வழக்குக்குச் சாட்சியாக, ஆதரவாகக் கோர்ட்டில் ஒப்புவிக்கப்பட்டிருக்கின்ற ஆதாரங்களை நான் பார்த்த அளவில் என் பேச்சு என்ற தலைப்பில் எழுதப்பட்ட சொற்கள் பெரிதும் கற்பனைச் சொற்களைக் கொண்ட ஆதாரங்களாகும். எப்படியெனில், கம்பன் பாட்டையும் ஒட்டக்கூத்தன் பாட்டையும் படிக்கும் மாத்திரத்தில், இது கம்பன் கவி அல்ல என்பது எப்படிக் கவி…ர்களுக்குச் சொல்ல முடியுமோ அதுபோல், என் பேச்சு என்ற ஆதாரங்களை ஒரு சாதாரண மனிதன் பார்த்தாலும் அதில் உள்ள மாறுதலும் கோர்வை இல்லாமல் விடப்பட்ட பொருத்தமில்லாத சேர்க்கையும் பிற தவறுகளும் நன்றாய்த் தெரியும். மிக மிக அலட்சியமாய் எழுதப்பட்ட குறிப்புகளாகப் பெரிதும் அவை காணப்படுகின்றன. அதாவது, நான் பேசிய பேச்சு அப்படியே வார்த்தை வார்த்தையாக எழுதப்படவில்லை வேறு வார்த்தைகளால் எழுதப்பட்டவைகளும் வழக்குக்கு (செக்ஷன்களுக்கு) பொருந்தக் கூடியதாக இல்லை. செக்ஷன்களின் கருத்துக்கேற்ற தொடர் வாக்கியங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சொற்களையும் வாக்கியங்களையும் கொண்டு சேர்த்துத் தொகுத்து எழுதி செக்ஷணுக்கு ஏற்ப என்று காணூம்படியாக, பேசும் போது பேசிய சந்தர்ப்பங்களைக் காட்டும் வாக்கியங்களை மறைத்து விட்டுப் பொருத்தப்பட்டிருக்கிறது. ‘கொலை செய்வது’ என்றாலும் ஏன்? எதற்காக? எப்படி? எப்போது? என்பதையும் குறிப்புக் காட்டவில்லை. நான் கட்டளை கொடுத்த பின்பு தான் சாதி ஒழிக்க இது ஒரு கடைசி வழி, அதாவது இந்த நிலைதான் வந்து சேரும் என்ற உத்தேசக் கருத்தில் அச் சொற்கள் உச்சரிக்கப்பட்டதாகவே காணப்படுகின்றதா? உடனடியாகச் செய்யும்படி கட்டளையிடப்பட்டிருக்கிறதா? என்பவைகளை எல்லாம் கவனித்தால் செக்ஷன் கருத்துக்கு ‘கொலை’ என்ற சொல் ஏற்றது என்பது விளங்காது; ஒரு புண்ணூக்கு இந்த மருந்துதான் பொருந்தும் என்கின்ற தன்மையில் கடைசி வைத்தியமாகச் சொல்லப்பட்டதா? அல்லது இந்த மருந்தை உடனே போடு என்று யாருக்காவது கட்டளையிட்டதாகச் சொல்லப்படுகிறதா என்பதும் நடுநிலையில் இருந்து சிந்தித்துச் சிறிதும் சந்தேகத்திற்கிடமில்லாமல் தெளிவாகிறதா என்று கனம் நீதிபதி அவர்கள் பார்த்து, தங்களுக்குத் தோன்றும் முடிவின்படி முடிவு செய்ய வேண்டிக் கொள்ளுகிறேன்.

கனம் கோர்ட்டார் அவர்கள் தீர்ப்பில் எனக்குக் கடினமான நீண்டகால தண்டனை கிடைப்பதாக இருந்தாலும் அதை எனது இலட்சியம் நிறைவேறுவதற்காக நான் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டிய விலையைக் கருதி ஏற்றுக் கொள்ளுவேனே தவிர சிறிதும் அதிர்ச்சியடைய மாட்டேன். (விடுதலை 1-12-1957)

No comments: