Sunday, April 26, 2026

கணபதி உருவ பொம்மை உடைப்பு - பெரியார்

 கணபதி உருவ பொம்மை உடைப்பு

27.5.1953 புதன் கிழமை மாலை 6.30 மணிக்கு கணபதி உருவப் பொம்மையைத் தூள் தூளாக்கி மண்ணோடு மண்ணாய்க் கலக்கிவிடுங்கள்.

திராவிடத் தோழர்களே! இந்தியாவில்‘வெள்ளைக்காரச் சக்கரவர்த்தி’ ஆட்சி ஒழிந்து, பார்ப்பன ஆதிக்க ‘ஜனநாயக ஆட்சி’ ஏற்பட்டதிலிருந்து-இன்று, இந் நேரம் வரை ஒவ்வொரு மாத்திரை நேரமும் வருணாசிரம தர்ம ஆட்சி வளர்ந்து, வளம் பெற்று வருகிறது. 

வருணாசிரம தர்மத்தைப் புகுத்த-பார்ப்பன ஆதிக்க ஏகபோக ‘ஜனநாயக’ ஆட்சியானது பல துறைகளில் பல கொடுமையான முறைகளைக் கையாண்டு வந்தாலும்,திராவிட நாட்டில்-தமிழ் நாட்டில்-தென் இந்தியாவில்-சென்னை இராஜ்யத்தில் ‘வெள்ளைச் சக்கரவர்த்தி’ காலத்தில் ஒரு அளவுக்கு முன்னேற்றமடைந்திருக்கிற திராவிடர்களை மணுகாலச் சூத்திரர் ஆக்கத் திட்டம் கொண்டு உத்தியோகத் துறையிலும், கல்வித் துறையிலும் திட்டம் வகுத்துச் செயலில் இறங்கிவிட்டது.

1. ‘சூத்திரர்களுக்கு அரசாங்க உத்தியோகத்தில் இருந்த ‘சூத்திரர்’ வகுப்பு உரிமை அரசியல் சட்டத்தின் மூலம் உறுதியாகி அமுலுக்கு வந்துவிட்டது. இதிலிருந்து ‘சூத்திரர்கள்’ (தமிழர்கள்) உத்தியோக உரிமை அற்றவர்களாக ஆக்கப்பட்டுவிட்டார்கள்.

2. சூத்திரர்களுக்குக் கல்வித் துறையில் ஒரு அளவுக்கு சிறிய உரிமை இருந்தது. அதுவும் ஆச்சாரியார் ஆட்சியில் அழிக்கப்பட்டுவிட்டது.

3. கல்வித் துறையில்,  மேல் வகுப்பு-அதாவது உத்தியோகத்திற்குத் தகுதியாகும் படிப்புதான் ‘சூத்திரர்’களுக்கு உரிமையில்லாமல் இருக்கும்படி செய்யப்பட்டுவிட்டது என்றாலும், பொதுக் கல்வி என்பதுகூடச் சரிவரப் பெறுவதற்கில்லாமல், அடிப்படைக் கல்வி என்ணும் பேரால் தகப்பன் தொழிலை-பரம்பரைத் தொழிலைப் படிக்க வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு விட்டது.

இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், எந்த நாட்டிலும் இல்லாத இந்த அதிசய முறையானது, நாட்டு நலணுக்காகவோ, கல்வி நலணுக்காகவோ, ஆட்சி நலணுக்காகவோ அல்லது மக்கள் ஒழுக்க நலணுக்காகவோ அல்லாமல் பார்ப்பன நலணுக்கும், சர்வ ஆதிகக்க நலணுக்கும் ஆகவுமே ஏற்படுத்தப்பட்டு, இருந்து வருகிற வருணாசிரம தர்ம புதுப்பிப்புக்காகவே       (சுநஎiஎiபே-க்காகவே) இந்த ‘ஜனநாயக ஆட்சி’ என்பதில் செய்யப்பட்டு வருகிறது என்பதைக் காட்டுவதற்கு ஆகவேயாகும்

இன்று இந்தத் திராவிட (தமிழ்) நாட்டுத் திராவிட மக்கள் இன்று தங்கள் நாட்டிலேயே, தாங்கள் 100-இக்கு 90-இக்கு மேற்பட்டு ஓட்டுரிமை பெற்றிருந்தும், ஜனநாயக ஆட்சியிலேயே இந்த இழிநிலை; அதாவது சூத்திர, பஞ்சம நிலை அடைந்திருப்பதை ஒழித்துக் கொள்ள வேண்டுமானால், இதை மாற்றி-இந்து வருணாசிரம முறையை அழித்து ஒழித்தாலொழிய வேறு எந்தக் காரணத்தாலும், யாராலும் முடியாது என்று நான் மனப்பூர்வமாக-சித்த சுத்தியாக நம்புவதால், வருணாசிரம முறையை அழிக்க முற்படும் முறையில் முன்ணுரையாக இதைக் கூறுகிறேன்.

சமீப காலமாகவே பொது மக்கள் உணரலாம். என்னவெனில், ஆட்சியின் வேலையும் அதிகாரிகளின் வேலையும், சவுண்டிப் பார்ப்பனர் முதல் சங்கராச்சாரியார் பார்ப்பனர் வரை சர்வ பார்ப்பனர்களும் வருணாசிரம வேத சாஸ்திர புராண இதிகாசங்களைப் பிரச்சாரம் செய்வதும், இந்தியப் பிரசிடெண்டு, இந்தியப் பிரதமர், மற்றும் இராஜ்ய கவர்னர்கள், இராஜ்ய பிரதமர்கள் முதல் யாரும் பார்ப்பனர்களாகவே ஆகிக் கொண்டு, மேற்கண்ட வேத,சாஸ்திர, புராண முதலிய பிரச்சாரங்களும் செய்து வருவது என்றால், இதில் ஏதாவது சூழ்ச்சி, உட்கருத்து இல்லாமல் இருக்க முடியுமா?

மற்றும் இவை மாத்திரமல்லாமல் நமது சூத்திர மக்களில் செல்வவான், கல்விமான், அரசியல் விளம்பரம், பதவி பெற்ற உலக விளம்பர சீமான்கள் முதல் எச்சிக்கலைச் செல்வவான்கள் வரையில்-100க்கு ஒருவருக்குக் கூட கவலையோ, மான உணர்ச்சியோ இல்லையே என்று நாம் காணூம் போது-75 ஆண்டுகள் வாழ்ந்து அண்மையில் சாகப்போகிற நான், 35 ஆண்டுகளாக வீடு, வாசல், செல்வம், தொழில், மனைவி, மக்களைத் துறந்து சந்நியாசியாக நம் திராவிட மக்களுக்கு இந்தச் சூத்திரப் பட்டம் ஒழிய வேண்டுமென்றே பாடுபட்ட வந்த-வருகிற நான், ஆண்டு ஒன்றுக்கு 30 ஆயிரம், 40 ஆயிரம் ஏன்-50 ஆயிரம் ரூபாய் கூட வரும்படி உள்ளதான எனது எஸ்டேட்டைப் பாழடைய விட்டுவிட்டு, பரதேசியாப் பிரயாணங்களுக்கும், பிரச்சாரத்திற்கும் பொது மக்களிடம் செலவு பெற்று வாழ்ந்து வரும் நான்-இதற்கு, இந்த வருணாசிரம தர்ம முறை ஒழிப்புக்கு ஏதாவதொரு காரியம் செய்யாமல் என் உயிர் போக, எப்படி என்னால் விட்டுக் கொண்டிருக்க முடியும்?

ஆச்சாரியார் முதல் மந்திரி பதவிக்கு வந்தது குறித்து உண்மையில் மகிழ்ச்சி அடைந்தவன் நான். காரணம், பிரகாசம்-கம்யூனிஸ்ட்-பொறுப்பற்ற ‘உதிரிகள்’ என்பவர்கள் ஆட்சியை விட, நமக்கு நன்றாகக் கண்டித்து, எதிர்த்துப் போர் துவக்க வசதி இருக்கக் கூடிய ஒரு ஆட்சி, அதுவும் சொந்த வாழ்வில் கண்ணியமும் உலக அணுபவ அறிவும் உள்ளவர் ஆட்சிக்கு வருவது மேல் என்று கருதி ஆதரித்தேன்.

இதற்குக் காரணம், தனிப்பட்டவர்கள் சொந்த முறையில் நடந்தகொண்டிருக்கிற முறை பற்றிய அணுபவம் எனக்குச் சிறிது இருந்ததேயாகும். ஆச்சாரியாரும் அது போலவே ஆட்சிக்கு-கவர்மெண்டுக்குக் கவுரவம் இருக்கிற மாதிரியிலேயே பெரிதும் நடந்து வருகிறார் என்றாலும்,

தனது வகுப்புக்கு ஒரு வகுப்பின் உத்தமபுத்திரன் எப்படி நடந்து கொள்வானோ அது போல்-‘தேவர்களுக்கு இராமன் நடந்து கொண்டது’ போல்தான் நடந்து கொண்டிருக்கிறார்.

நம்மில் துரோகிகள், அணுமார்கள், விபீஷணர்கள் இருந்தால் அதற்கு நான் என்ன செய்யமுடியும்?

ஆனதால், நான் என் சொந்தப் பொறுப்பில் முன்பு பல தடவைகள் கூறி இருப்பது போல, வருணாசிரம வியாதியை ஒழிக்கக் கடைசி சிகிச்சையாக, நாளது மாதம் 27 ஆம் தேதி புதன்கிழமை தமிழ்நாடெங்கும் புத்தர் விழா கொண்டாடி, மாலை 6 மணிக்குப் பொதுக் கூட்டத்தில் வருணாசிரம வாதிகள் பெரும்பாலோருக்கும் ‘மூல தேவன்-தெய்வம்’ என்று கருதப்படுகிறதற்கு என்று உருவாக்கி இருக்கும் ‘செயற்கை உருவ கணபதி அறிகுறியை’ மக்கள் உள்ளத்தில் அழித்துவிட வேண்டும் என்பதாகப் பொது மக்களை-அதாவது மணு வருணாசிரம தர்மத்தை வெறுக்கிற பொது மக்களையும்-திராவிடர் கழகத் தோழர்களை, சிறப்பாக இளை…ர்களையும் வேண்டிக்கொள்கிறேன்.

அன்று ‘பிள்ளையார் அல்லது கணபதி உருவம்’ என்பதை-மண்ணால் செய்த பொம்மை உருவத்தையே கொள்ளுங்கள். சர்க்கார் 144 போட்டால் உருவத்தை அழிப்பதை நிறுத்திவிடுங்கள். அவரவர்கள் கழகக் காரியாலயத்தில் அல்லது அவரவர்கள் வீட்டில் உடைத்து மகிழ்ச்சி கொண்டாடுங்கள்! நரகாசூரனைக் கொன்றதாகப் பார்ப்பனர்களும், பார்ப்பன அடிமைகளும் எப்படிக் கொண்டாடுகிறார்களோ அது போல், உருவத்தை உடைத்துக் கொண்டாடுங்கள்!

புத்தர் பிரான், வருணாசிரம தர்மத்தையோ இந்த வருணாசிரம தேவர்களையோ ஏற்றுக் கொண்டவர் அல்லர்; அவற்றை ஒழிப்பதே புத்தர் மதத்தின் உட்கருத்து; முதல் கருத்து!

இந்தத் தேவர்களை, தெய்வங்களை நாம் வணங்குவது-ஏற்பது-மிகுதியும் முட்டாள் தனமும் மானமற்ற தன்மையுமாகும்.

நமக்குக் கடவுள் என்பதெல்லாம். நம் நடத்தையில்-சத்தியம், நாணயம், தயவு உபகாரஞ்செய்தல், துரோகம் செய்யாமலிருத்தல் ஆகியவைகளாகும். (விடுதலை -7.5.1953)

No comments: