Sunday, April 26, 2026

கம்யூனிஸ்டுகளும், கொடி எரிப்பும் - பெரியார்

 கம்யூனிஸ்டுகளும், கொடி எரிப்பும்

தலைவவரவர்களே! தோழர்களே! தாய்மார்களே!

கம்யூனிஸ்டுகளை எடுத்துக் கொள்வோம். உலகத்தில், அறிவு பிறக்குமிடம் அங்கே தான் உள்ள தென்பார்கள்; அறிவாளிகளை உற்பத்தி செய்யுமிடம் அதுவே என்பார்கள்.

ஆனால், நம்நாட்டுக் கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தமட்டிலும் அத்தனையும் பொய்யாகிவிட்டது. பெரும் அயோக்கியர்களையும், பித்தலாட்டக்காரர்களையும், கலகக்காரர்களையும், கொள்ளை, கொலையைத் தூண்டிவிடும் அராஜகச் செயல் கொண்டவர்களையும் கொண்டுள்ளது, இந் நாட்டுக் கம்யூனிஸ்டக் கட்சி என்று மெய்ப்பிக்கிறார்கள். அப்பேர்பட்டவர்களிடமிருந்து வரும் பதில், ‘குமரன் காப்பாற்றிய கொடி அல்லவா? அதை எப்படி எரிப்பது’ என்கிறார்கள்.

குமரணுக்கும், இவர்களுக்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை. குமரன் இந்தக் கொடியினையா காப்பாற்றினார்? குமரன் காலத்தில் எந்த மூலையில் இவர்கள் கிடந்தார்களோ, தேடிப்பிடிக்கவும் முடியாதே?குமரன் காலத்தில் இந்தக் கொடி கர்ப்பத்தில் கூட இருந்திருக்காதே? சுதந்திரம் வரும் என்று நினைத்தது யார்? இந்தக் கொடி ஆட்சிக் கொடியாக வரும் என்று கனவிலும் நினைத்தவர் உண்டா? அப்படி இருக்க குமரணுக்கும், இந்தக் கொடிக்கும் என்ன சம்பந்தம்?

குமரன் ஒருவன் உயிர்விட்டுக் காப்பாற்றிய கொடி இதுவானால், தாளமுத்து-நடராசன் என்ற இருவர் உயிர்விட்டது, இந்திக் கிளர்ச்சிக்காக வல்லவா? குமரன் ஒரு ஆள்; எங்களில் இருவர்கள் பலியானோம்! இது யார் இன்றைக்குக் கூறுகிறார்கள்?

குமரன் காப்பாற்றியதால் அந்தக் கொடியை எரிக்க முடியாதா? அந்தத் துணியென்ன அவ்வளவு அழுக்குப் படிந்த கந்தல் துணியா?மண்ணெண்ணெய் ஊற்றினால் இன்ணும் சிறிது நேரம் கொழுந்து விட்டு எரிகிறது! அல்லது அந்தக் கொடி வாட்டர் புரூஃப் துணியைப் போல் ஃபயர் புரூஃப் துணியால் செய்யப்பட்டதா? 

ஓரு உருண்டைக் களிமண் பிள்ளையார் ஆன சங்கதிதானே-முழத்துணி அரசியல் கொடி ஆனது? மண்ணூக்குள்ள மதிப்புத்தானே, பிள்ளையாருக்கு என்பதை நிருபித்தோம். அதைப்போல், முழுக் கந்தல் துணிக்குள் மதிப்புத்தான், உன் கொடிக்கு என்பதையும் நிரூபிக்கிறோம்.

ஆனால், பிள்ளையார் பெயரைக் கூறிச் சுரண்டி வாழும் உனக்கு பிள்ளையார் தெய்வமாகத் தோன்றலாம். அதைப்போல், இக் கொடியால் உனக்குச் சவுகரியம் அடைய வசதி இருப்பதனால் உனக்குப் பெரிதாகத் தோன்றலாம். குமரன் காத்து வளர்த்த பாரத மாதா கொடி என்று எது வேண்டுமானாலும் கூறலாம். அதைப்போலத்தானே, இராமாயணமும், இராமணும் சீதையும் மற்றும் பதிவிரதைகளும் கூறப்பட்டனர்? அவர்கள் வண்டவாளங்களே வெளிப்படுகையில் இக்கொடியைக் கொளுத்துவது பெரிய காரியமில்லை. (விடுதலை-5.8.1955)

தலைவரவர்களே!தோழர்களே! தாய்மார்களே!

நேரு அவர்கள், கடைசிக் கூட்டத்தில், கொடி கொளுத்துவதாச் சொன்னவர்களைப் பற்றி மிகவும் துடுக்காகப் பேசி இருக்கிறார். அவருடைய பைத்தியக்காரத்தனமான காரியங்களில் இதுவும் ஒன்றாகும். கொடி எரிப்பதைப் பற்றிப் பேசினதின் கருத்தெல்லாம்- திராவிடக் கழகத்தாரை வைய வேண்டும். மிரட்ட வேண்டும் என்பதைத் தவிர, அதில் அவசியமோ, அறிவுடைமையோ என்ன இருக்கிறது?

கொடி கொளுத்துவதாகச் சொல்லப்பட்டவுடன் குறிப்பிட்ட தேதிக்குள்ளாகவே இவ் விஷயம் ஏதோ ஒரு அளவுக்குச் சமரசமாக முடிந்து போன பிறகு-அதை மறுபடியும் சர்க்கார் தரப்பிலேயே ஏன் கிளப்ப வேண்டும்? கிளப்புவது மாத்திரமல்லாமல் ஏன் பேச வேண்டும்? இது, கொளுத்துகிறதாகச் சொன்னவர்களைத் தூண்டிவிடுகிறது போலும். அவர்களுக்கு ஆத்திரமூட்டுவது போலும் நினைக்கிறது என்பதே தவிர, வேறு என்ன சொல்ல முடியும்? இதிலிருந்தே இந்த அரசாங்கத்தை ஏதாவது மிரட்ட வேண்டுமானால் கொடி கொளுத்துகிறோம் என்று சொல்லுவதே போதுமானது என்று தெரிகிறதா, இல்லையா?

கொடியைப்பற்றிப் பிரமாதப்படுத்தியதும். அதை எரித்தால் உலகத்தையே சுட்டெரித்துவிடுவதாக வீரப்பிரதாபம் பேசுவதும் வெறும் வீண்பேச்சே தவிர, மற்றபடி கொடியை எரித்தால் இவர்களால் என்ன செய்து விடமுடியும்? செய்வதற்கு இவர்கள் கையில் என்ன சரக்கு இருக்கிறது? அரசியல் சட்டத்திலாகட்டும், கிரிமினல் பீனல் கோடிலாகட்டும்-கொடிக்கு என்ன மரியாதை இருக்கிறது? அதை எரிப்பதற்கு என்ன தண்டனை இருக்கிறது? அதைச் சொல்லாமல் சும்மா வீரப்பிரதாபம் பேசுவதில் பலன் என்ன? இன்ன காரியம் செய்தால் இன்ன குற்றமாகும் என்பது ஒருவணுக்குத் தெரிந்தால்தானே, அந்தக் காரியத்தை ஒருவன் செய்யாமல் இருக்க முடியும்? வீண் பூச்சாண்டி காட்டுவதைக் கொண்டு யார் பயப்படுவார்கள்? அதிகாரம் தங்கள் கையில் இருக்கிறது; ஆதிக்கம் தங்கள் கையில் இருக்கிறது; ஆதலால் எதையும் பேசலாம் என்பதே தவிர, மற்றபடி இதில் என்ன நியாயமோ நேர்மையோ இருக்கிறது?

கொஞ்ச நாளைக்கு முன்பு சட்டசபையில் பண்டித நேருவைப் போலவே ஒரு வீரர் பேசினார். அதாவது, ‘வேறு எது செய்தாலும் நான் சும்மா இருப்பேன்; இராமனையோ, சீதையையோ குறைசொன்னால் கொன்று போடுவேன்’ என்பதாகப் பேசினார். அதற்கும் பண்டித நேரு அவர்கள் பேச்சுக்கும் என்ன வித்தியாசம்?

உலகத்தையே படைத்ததாகக் கூறப்படும் கடவுள்களே எங்களிடம் அகப்பட்டுத் திண்டாடும் நேரத்தில் உன் அரசாங்கக் கந்தல் துணியாகிய கொடி எம் மாத்திரம்? அதன் யோக்கியதை தெரியாதவர்கள் அதைத் தலையில் தூக்கிக் கொண்டு ஆடலாம். அதன் பித்தலாட்டம் தெரியாத மூடர்கள் அதைத் தாயின் மணிக்கொடி-புனிதத்தன்மை கொண்ட பாரத மாதாவின்  கொடி என்றெல்லாம் புகழலாம். அக் கொடியின் பெயரைக் கூறி வயிறு வளர்க்கும் சோம்பேறிகளும் எல்லா அயோக்கியத்தனங்களும் துணிந்து செய்ய முற்படுபவர்களும் அதை வானளாவப் புகழ்ந்து பேசலாம்..

ஆனால், அதன் யோக்கியதை என்ன என்று தெரிந்த நாங்கள், மற்றவர்களுக்கும் அதன் யோக்கியதையை வெளிப்படுத்த முற்படுகிறோம்.; தாயின் மணிக்கொடியின் அந்தஸ்து-கந்தல் துணிக்குள்ள அந்தஸ்துகூடக் கிடையாது என்ற உண்மையை வெளிப்படுத்துகிறோம். ஒளிவு மறைவாகச் செய்வதாகக் கூறவில்லை; யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் கொளுத்துவதாக ‘அண்டர் கிரவுண்ட்’ வேலை செய்ய வில்லை; பகிரங்கமாக முச் சந்திகளில் கொளுத்துகிறோம்; தெருக்களில் கொளுத்துகிறோம்; அவரவர் வீட்டின் முன் பலபேர் அறியக் கொளுத்துகிறோம் என்று அரசாங்கத்துக்குத் தெரிவித்தோம். தெரிந்தவுடன் உன்னால் என்ன செய்ய முடிந்தது?

கொடியைக் கொளுத்தினால், நாடே அழிந்தாலும்-கொடியைக் கொளுத்த விட மாட்டேன் என்றாயே! பாட்னாவில் மாணவர்கள் எரித்தார்கள்; என்ன செய்தாய்? உன் வீரப் பிரதாபம் அப்போது எங்கே போனது? அப்படி இருக்க, நாங்கள் எரித்தவுடன் என்ன செய்துவிடுவாய்? உன்னையே எவனோ ஒருவன் அடிக்க வந்தான் என்று பத்திரிகையில் எல்லாம் செய்தி பறந்ததே! அவனை உன்னால் என்ன செய்ய முடிந்தது? (விடுதலை 12-10-1955)

No comments: