இழிவு நீக்கக் கிளர்ச்சி
சூத்திரர் என்கின்ற இழிவை நீக்கக் கிளர்ச்சி செய்வது என்பது சமுதாய சம்பந்தமான (சோஷியலிச) காரியமே தவிர, இதில் அரசியல் ஏதுமில்லை; மற்றும் இதில் பலாத்காரம் என்பதுமில்லை.
அதிலும், இந்த இழிவு நீக்கக் கிளர்ச்சி என்பது, லேசில் எங்குமே இல்லாத அக்கிரமக் கொடுமையிலிருந்து மனிதன் விடுதலை, மானம் பெற வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் கிளர்ச்சியேயாகும். இதில் எந்தவித வகுப்புத் துவேஷமோ, வகுப்பு வெறுப்போ இல்லை. நம் நாட்டில் (இந்துக்கள் என்ணும்) சமுதாயத்தில் 100க்கு 97 பேர்களாக உள்ள மக்கள்- அதிலும், படித்தவர்கள், செல்வவான்கள், உயர்தர அய்க்கோர்ட் நீதிபதிகள், கலெக்டர்கள், உப அத்தியட்சகர்கள், மடாதிபதிகள், சமீப காலம்வரை மகாராஜாக்கள், அரசர்கள், ஜமீன்தார்கள், பலகோடி ரூபாய்க்குச் சொந்தக்காரர்கள், பிரபுக்களுட்பட இவர்கள்- சமுதாயத்தில் கீழ்ப் பிறவியாக, கீழ்மக்களாக, கடவுள் என்கிற (அதுவும் அவர்களுடைய கடவுள்)சிலையிடம் நெருங்கக் கூடாதவர்களாக, அறைக்கு வெளியே நிற்க வேண்டியவர்களாகத் தலைமுறை தலைமுறையாகத் தடுக்கப்பட்டு, நிரந்தரக் கீழ்மக்களாக, (கடவுள் என்கிற அவர்களுடைய கடவுள்) சிலையிடம் நெருங்கக் கூடாதவர்களாக, அறைக்கு வெளியே நிற்க வேண்டியவர்களாகத் தலைமுறை தலைமுறையாகத் தடுக்கப்பட்டு, நிரந்தரக் கீழ்மக்களாக ஆக்கப்பட்டிருக்கும் கொடுமைக்கு, இழிவுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதிலிருந்தது விலக்கி, மானமுள்ள மக்களாக-ஆக்கப்பட வேண்டுமென்பதற்குக் கிளர்ச்சி செய்வதென்றால் - இது, இது வரை செய்யமாலிருந்ததுதான் மானங்கெட்ட தன்மையும், இமாலயத் தவறுமாகுமே யொழிய, இப்போது கிளர்ச்சி செய்வதென்பது ஒரு நாளும். ஓரு விதத்திலும் தவறாகவோ கூடாததாகவோ ஆகாது; ஆகவே ஆகாது.
நீக்ரோக்களுக்கும், வெள்ளையருக்கும் உள்ள அளவு பிறவி பேதம், நிறபேதம், நாகரிக பேதம் நமக்கும் பார்ப்பனருக்கும், பூசாரிகளுக்கும் கிடையாது. அவ்வளவு பேதமுள்ள (மைனாரிட்டி) நீக்ரோக்கள் மெஜாரிட்டியான, ஆளும் சாதியரான, பிரபுக்களான வெள்ளையர்களோடு எல்லாத் துறைகளிலும் சரிசமமாகக் கலந்து, உண்பன, உறங்குவன, பெண் கொடுக்கல்-வாங்கல், உட்படக் கலந்து புழங்குகிறார்கள். ஆனால், நம் நாட்டில் 100-க்கு மூன்று பேரே உள்ள கூட்டம் பிச்சை எடுப்பதையும் உழைக்காததையும், கூலிக்குப் புரோகிதம் செய்வதையும் உரிமையாய்க் கொண்ட-பிழைப்பாய்க் கொண்ட கூட்டம், மற்றும் வாழ்வில் யோக்கியமாக, நேர்மையாக, நாணயமாக இருக்க வேண்டும் என்கின்ற தர்மம் இல்லாததும் தாங்கள் எது வேண்டுமானலும் செய்து பிழைக்கலாம், எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்கின்ற அணுபவத்தில் இருக்கிற கூட்டம்- தங்களை‘மேல் பிறவி’ என்றும், நம்மைக் ‘கீழ்ப்பிறவி இழி பிறவி’ பொது இடமாகிய கடவுள் என்கின்ற கல் சிலையிருக்கும் இடத்தில் பிரவேசிக்கக் கூடாத மிகமிக இழிதன்மையானவர்கள் என்பதான நிபந்தனையை நம் பேரில் ஏற்றிக் கொண்டு கட்டிடத்திற்கு அறைக்கு வெளியில் நின்று வணங்க வேண்டும் என்பதை-நிலைக்க விடலாமா என்பது தான் கிளர்ச்சியின் தத்துவமாகும்,
வேறு நாடுகளில் இப்படிப்பட்ட கொடுமையான, இழிவான தன்மை எந்தச் சமுதாயத்திற்கும் இருக்குமானால் எவ்வளவோ கொலை, பலாத்காரம், நாச வேலை நடத்தி ஒழிக்கப்பட்டிருக்கும். அப்படிக் கொடுமை இந்த நாட்டில் இருந்து வருகிறதென்றால் இது யாருடைய தவறு? யாருடைய மானங்கெட்ட ஈனத்தனம் என்று ஒவ்வொரு தமிழனையும் சிந்தித்துப் பார்க்கும்படி வேண்டிக் கொள்கிறேன். மற்றும். இது விஷயத்தில் நாம் கிளர்ச்சி செய்து வெற்றி பெற்றால் அதனால் யாருக்கும். எந்த நபருக்கும் ஒரு தூசி அளவு நட்டமும். கேடும் இல்லாத ஒரு காரியமாகும். கடவுள்களைப் பூசை செய்கிற பூசாரி வேலை பார்ப்பனருக்குத் தான் -மேல் சாதிக்காரருக்குத்தான் உண்டு என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லையென்றாலும் கோயில் பூசை செய்பவன் பார்ப்பனல்லன்;மேல் சாதிக்காரணுமல்லன்; குருக்கள் என்கின்ற ஒரு சாதியானவன் என்றும் சொல்லப்படுகிறது; ஆதாரங்களுமிருக்கின்றன.
அந்தக் குருக்கள் என்பவர்கள் பார்ப்பனரல்லாத சைவர்களே ஆவார்கள் என்று சில ஆதாரங்களில் இருக்கின்றன. மற்றும் ஒரு குறிப்பிட்ட சாதியார் தான் பூசாரியாக இருக்க வேண்டுமென்கின்ற நிபந்தனை எந்த ஆதாரத்திலுமில்லை.
குருக்கள், அர்ச்சகர்கள் என்பவர்கள் வீட்டில் பார்ப்பனர்கள் சாப்பிடவே மாட்டார்கள். பெண் கொடுக்கல், வாங்கலும் செய்ய மாட்டார்களாம். இந்த நிலையிலிருப்பவர்கள் பூசை செய்யும் இடத்திற்கு, மற்ற இந்து மக்கள்-பார்ப்பனரல்லாதார் மட்டும் நுழையக் கூடாது என்றால் அது எப்படி நியாயமாகும்?
தமிழ் நாட்டிலேயே பல கோயில்களில் சாத்தாணி என்கின்ற பார்ப்பனரல்லாதவர்கள் பூசை செய்கிறார்கள். பல கோயில்களில் ஆண்டிகள், பண்டாரங்கள் என்கின்ற பார்ப்பனரல்லாதவர்கள் பூசை செய்கிறார்கள். மற்றும், நாம் மூலஸ்தானம் என்பதற்குள் செல்வதால் அந்த மதத்திற்கோ-சாமிக்கோ எந்தவிதப் புனிதமும் கெட்டுப்போவதில்லை; சிலையைத் தொடவேண்டாமென்று வேண்டுமானாலும் திட்டம் வைத்துக் கொள்ளலாம். ஆனால், நெருங்கக் கூடாது; அந்த அறையின் படியைத் தாண்டக் கூடாது என்பது என்ன நியாயம்? உற்சவக் கடவுள்கள், சிலைகள் என்பவைகளிடமெல்லாம் எல்லாச் சாதியாரும், எல்லா மக்களும் நெருங்குகிறார்கள்.
மூலஸ்தானத்திற்கு வெளியில் பிரதி·டை செய்யப்பட்ட நவக்கிரகங்கள் என்கின்ற கடவுள்கள்- மற்ற சிலைகளிடம் எல்லோரும் நெருங்குகிறார்கள்.
எனவே, அந்தக் கர்ப்பக் கிரகம் என்கின்ற பூச்சாண்டிகள் பார்ப்பனரல்லாத மக்களை, இழி மக்கள்-இழி பிறப்பாளர்கள் என்றாக்கப்படுவதற்காகத்தான் இருந்து வருகிறதேயல்லாமல். மற்றபடி வேறு எந்தப் புனிதத் தன்மையையும் பாதுகாக்கவல்ல என்பதே நமது கருத்து. அன்றியும் நாம் உள்ளே சென்று வணங்குவதால் எந்தப் புனிதத் தன்மையும் கெட்டுவிடுவதில்லை என்பதும், உள்ளே செல்ல வேண்டும் என்ற நமக்கும் நம் உறுதிக்கும் உண்மையில் எந்தப் புனிதத் தன்மையையும் கெடுக்க வேண்டும் என்கின்ற எண்ணம் இல்லவே இல்லை.நமது இழிவு நீக்கப்பட வேண்டும் என்கின்ற காரியத்திற்காகத்தான் இதைச் சொல்லுகிறோம்.
ஆகவே, தோழர்களே, இந்தக் கிளர்ச்சி அவசியமா, இல்லையா?
என்ன சொல்கிறீர்கள்? அவசியம் என்றால் வாருங்கள் போகலாம்.
உடனே பெயர் கொடுங்கள் (விடுதலை-19-10-1969)
No comments:
Post a Comment