Sunday, April 26, 2026

பெரியாரின் புறநானூறு - கவி

பெரியாரின் புறநானூறு - கவி

 1996 ஆம் ஆண்டு தேர்தலில்  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வி கண்ட நேரம். நான் ‘சங்கொலி’ இதழை விரும்பிப் படிப்பதுண்டு. சென்னையில் நான் பணியாற்றிய காலத்தில், தங்குவதற்கு தன் வீட்டிலேயே இடம் கொடுத்து எனக்கு உதவி புரிந்த  நண்பர் சங்கொலி முகவர் திரு. சுப்பாரவ் அவர்களுடன் புதன் கிழமை தோறும் ம.தி.மு.க அலுவலகமான தாயகம் செல்வேன். அப்போதைய சங்கொலி பொறுப்பாசிரியர் திரு. க. திருநாவுக்கரசு அவர்களுடன் அவ்வப்போது உரையாடிவிட்டு வருவேன்.

சங்கொலியில் ‘திராவிட இயக்க 80 ஆண்டுகள்’ என்ற தலைப்பில் வைகோ எழுதிய தொடர் வெளிவந்து கொண்டிருந்தது. கலைஞர் எழுதிய திருக்குறள் உரைக்கு மறுப்புத் தெரிவித்து, திரு. க. திருநாவுக்கரசு அவர்கள், ‘திருக்குறளும் திராவிடர் இயக்கமும்’ என்ற தொடரை எழுதிக் கொண்டிருந்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ‘திராவிடர் இயக்க ஏடுகள்’ கருத்தரங்கு பற்றிய செய்திகள் சங்கொலியில் வெளிவந்தன.

 இவற்றையயல்லாம் படித்து, திராவிடர் இயக்க வரலாற்றை உள்வாங்கிக் கொண்டிருந்த நேரத்தில், எஸ்.வி.இராசதுரை மற்றும் வ.கீதா எழுதிய ‘பெரியாரும் சமதர்மும்’ என்ற நூலும் ‘பெரியார் :ஆகஸ்ட் 15’ என்ற நூலும் என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சென்னையில் நடந்த ‘பெரியார் ஆகஸ்ட் 15’ நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது அங்கு நடந்த பெரியார் ஆய்வரங்கு என்னை புதியதோர் பாதைக்கு இட்டுச்சென்றது.

ஆய்வரங்கில் ஏற்பட்ட எண்ணயோட்டத்தோடு நான் சென்னை அண்ணாசாலையில் நடந்து வந்தபோது ‘கவிதாசரண்’ என்ற இதழின் பழைய பதிப்பு ஒன்று கிடைத்தது. அதில் கோ.கேசவன் அவர்கள் பெரியார் பற்றிக் கூறிய அவதூறுகளுக்கு எஸ்.வி.இராசதுரை எழுதிய மறுப்புக் கட்டுரையைப் படித்தேன்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் ‘அண்ணா பொது வாழ்வியல் மையம்’ சார்பாக ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. பெரியாரின் பன்முகத்தை அங்கு பல பேராசிரியர்கள், ஆய்வறிஞர்கள், பெரியாரின் வழித்தோன்றல்கள் பேசினர்.

ஆர்.எம் .வீரப்பன் தொடங்கி வைத்த விழாவில், நீதியரசர் மோகன், ‘பெரியாரின் சிந்தனைகளை’ 3000 பக்கங்களுக்கு மேல் தொகுத்து வெளியிட்ட அறிஞர் வே. ஆனைமுத்து ஆகியோர் பெரியார் பற்றி ஆய்வு சொற்பொழிவு நடத்த முதல் அமர்வு முடிவுற்றது. இரண்டாவது அமர்வில் பேரா. அய்யாசாமி தலைமையுரையாற்ற, ‘தன்மானம்’ என்ற தலைப்பில் அண்ணாநகர் தமிழ்ச் சங்கத்தலைவர் இராமலிங்கம் அவர்களும், ‘பெரியாரின் அரசியல் தத்துவம்’ பற்றி மாநிலக் கல்லூரி பேரா. முத்துச்சாமி அவர்களும் சொற்பொழிவாற்றினர். இத்துடன் இரண்டாம் அமர்வு முடிவுற்றது.

பிற்பகல் அமர்வுக்கு பெரியார் நூற்றாண்டு விழாக் குழுவில் ‘பெரியாரின் பொன்மொழிகள் மற்றும் கல்வெட்டு பொறித்தல்’ பொறுப்பைப் பெற்று, பெரும் பணியைச் செய்த பேரா. நன்னன் அவர்கள் தலைமையேற்க, பேராசிரியை சாரதா நம்பி ஆரூரான் அவர்கள் ‘மூடநம்பிக்கை’ என்ற தலைப்பிலும், மாநிலக் கல்லூரி பேராசிரியர் இளவரசு அவர்கள் ‘பெரியாரின் மொழிக்கொள்கை’ பற்றியும், மலையமான் அவர்கள் ‘பெண்ணியம்’ பற்றியும் திரு.குருநாதன் அவர்கள் ‘வள்ளுவம்’ என்ற தலைப்பிலும் சொற்பொழிவாற்றினர். இறுதியாக பேராசிரியர் நன்னன் பேச, இக்கருத்தரங்கு முடிவுற்றது.

இதன் பின் 1998 ஆம் ஆண்டு ஏப்பிரல் 27 முதல 29 வரை மீண்டும் ‘அண்ணா பொது வாழ்வியல் மையம்’ திராவிட இயக்கம் பற்றிய கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. பேரா. அன்பழகன் அவர்கள் திராவிடர் இயக்க முன்னோடிகள் பிட்டி.தியாகராயர், சி. நடேசனார் மற்றும டி.எம்.நாயர் ஆகியோர் பற்றியும் நீதிக் கட்சி பற்றியும் விரிவாக சொற்பொழிவாற்றினார். மிகவும் அரியக் கருத்துக்கள் அடங்கிய சொற்பொழிவு.

மறுநாள் நடைபெற்றக் கருத்தரங்கில் பேராசிரியர்கள் ஈ.சா.விசுவநாதன், சிவஞானம், கருப்பையா, சந்திரசேகரன், டாக்டர் பாலகிருட்டிணன் உள்ளிட்டோர் சொற்பொழிவாற்றினர். மாலையில் ‘தமிழ்வழிக் கல்வி’க் குறித்து மகாதேவன், ‘தமிழிசை வளர்ச்சி’ப் பற்றி சாம்பமூர்த்தி ஆகியோர் பேசினர். பேராசிரியை சக்குபாய் நெடுஞ்செழியன் அவர்களும் பேரா. மு.க. சுப்ரமணியன் அவர்களும் சொற்பொழிவாற்றினர்.

இந்த இரண்டு கருத்தரங்குகளும் பெரியாரைப் பற்றியும் திராவிடர் இயக்க வரலாறு பற்றியும் நான் அறிந்து கொள்ள, செம்மைப்படுத்திக் கொள்ள உறுதுணையாக இருந்தது.இவ்விரு கருத்தரங்குகளின் பேச்சுக்களை அப்போது நான் முடிந்த வரை குறிப்பெடுத்தேன்.

அத்துடன் திருவான்மியூரில் வசிக்கின்ற, திராவிடர் இயக்க ஆய்வாளரும், காமரசர் ஆட்சிக்காலத்தில் கல்வி இயக்குநராகவும் சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தராகவும் இருந்த திரு.நெ.து. சுந்தரவடிவேலு அவர்களுடன் ஏழரை ஆண்டுகாலம் உடனிருந்து அவருடைய வாழ்க்கை வரலாற்று நூலை எழுத துணைபுரிந்தவரும், குருவிக்கரம்பை வேலு அவர்களுக்கு ‘குத்தூசி குருசாமி’ என்ற நூல் எழுத துணை நின்றவரும், ‘தமிழிசை ஆதி மும்மூர்த்திகள்’ என்று அழைக்கப்படுவர்களில் ஒருவரான மாரிமுத்தா பிள்ளையின் ஏழாம் தலைமுறையைச் சார்ந்தவருமாகிய பேராசிரியர் தி.வ.மெய்கண்டார் அவர்களின் தொடர்பும் நட்பும் அவரது ‘இளந்தமிழன்’ இதழும் என்னை திராவிடர் இயக்கச் சிந்தனையில் முழுவதுமாக ஈடுபட வைத்தது.

இந்த பின்னணியில் பெரியாரைப் பற்றிய இன்னொரு கோணமும்  இருப்பதை பலரும் வெளிப்படுத்த விரும்பாத நிலை, ‘ஈ,வே.இரா. சிந்தனைகள்’ என்ற தொகுப்பு நூலைப் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்ட போது தெரிந்தது. பெரியார் நடத்திய போராட்டங்கள், அதறகு அவர் மேற்கொண்ட வழிமுறைகள், அவருக்குக் கிடைத்த சிறை தண்டனைகள், வழக்குமன்றங்களில் அவர் தன்தரப்பு வாதங்களை மட்டும் பதிவு செய்துவிட்டு, எதிர்த்து வழக்காடாமை போன்றவை மக்களிடம் பரவலாக்கம் செய்யப்படாமை என்னுள் ஒருவிதத் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, அரசியல் சட்ட எரிப்புப் போர், காந்தி பொம்மை உடைப்பு,   இவற்றைப் பற்றியயல்லாம் பெரியார் வெளியிட்டிருந்த ஆழமான கருத்துக்கள் என்னை வியக்கவைத்தது.

இந்த மக்கள் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதோடு மட்டுமல்லாமல் அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடத்திய இத்தகைய போராட்டங்களையும் அவற்றின் வரலாற்றையும் மறைக்கின்ற இந்நிலையில், பெரியார் பட்டறை இத்தொகுப்பு நூலை வெளியிடுவதில் பெருமைப்படுகிறது.

அன்புடன்

கவி

பெரியார் 95 - (1973)

எனது 95 ஆம் ஆண்டு பிறந்த நாள் துவக்கத்துக்கு வழமை போல் ஆண்டு மலரில் ஒரு கட்டுரை எழுத வேண்டு இருக்கிறது. அதை முன்னிட்டு இக்கட்டுரை எழுதுகிறேன். அப்படி எழுதப்படும் இக்கட்டுரை என்னால் ஆண்டு மலர்களுக்கு எழுதப்படும் கட்டுரைகளில் இதுவே கடைசி கட்டுரையாக இருந்தாலும் இருக்கலாம். ஏன் இப்படி எழுதுகிறேன் என்றால், அடுத்த ஆண்டு மலர் எழுதப்பட வேண்டிய காலத்தில் நான் இருப்பேனா, இல்லையோ என்கிற பிரச்சனை மாத்திரமல்லாமல், எழுதும் படியான வாய்ப்பு இருக்குமோ இருக்காதோ என்பதே முக்கிய காரியமாகும்.

ஏனெனில், இன்ணும் நாம் இருப்பதுபோலவே அதாவது, இந்திய ஆட்சி என்பதற்குள் பிரஜையாகவும், சமுதாயத்தில் நாலாஞ்சாதி (சூத்திர மகனாகவும்) சட்டப்படி, சாஸ்திரப்படி பார்ப்பானின் தாசி மகன் என்ணும் பெயருடன், நமது தாய்மார்கள் பார்ப்பானின் தாசிகளாகவும் இருக்கும் தன்மையாகலேயே இருப்போமா என்கின்ற கருத்தைக் கொண்டே இப்படி எழுதுகிறேன்.

இந்திய அரசியல் சட்டப்படி நாம் இந்திய ஆட்சியில் பிரஜையாய் இருக்கும் வரை இந்துவாய், அதாவது, கிறிஸ்துவனாகவோ, முஸ்லிமாகவோ நாம் மதம் மாற்றிக் கொள்ளாத வரை, நாம் நமது பண்டார சன்னதிகள் உட்பட பவுத்தணுக்கும்-ஜெயினணுக்கும் சமானமாக இருக்கம் படியாக இருந்தாலும், பகுத்தறிவுவாதியாக இருந்தாலும் வேறு எந்தப் பெயரில் வாழ்ந்து வருபவனாக இருந்தாலும் சூத்திரனாகத்தான்-பார்ப்பானின் தாசிமகனாகத்தான் இருந்தாக வேண்டும்.

இதுதான் இன்றைய இந்திய அரசியல் சட்டமாகும். இந்தச் சட்டத்தைத் திருத்தவோ, மாற்றவோ நம் மக்களுக்கு ஒரு நாளும் சக்தியோ, உரிமையோ ஏற்படும் என்று கருதவே முடியாத நிலையில் இருக்கிறோம். அது மாத்திரமல்லாமல் இந்திய ஆட்சியில் இருந்து தமிழ்நாட்டை விலக்கிக்கொள்ள முயற்சி செய்தே ஆக வேண்டிய ஒரு கட்டாயமான -நிர்ப்பந்தமான நிலையில் இருக்கிறோம். இந்த முயற்சியில் நாம் இந்திய ஆட்சியிலிருந்து விலகிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுமா என்பது பற்றி நமக்கு முடிவு செய்துகொள்ள முடியாமல் இருந்தாலும், இம் முயற்சியில் நாம் பலர் சிறையில் இருக்க நேரிடலாம் என்கிறதாலேயேதான் இந்தப் படி எழுதுகிறேன்.

நமக்கு இன்றைய இந்திய ஆட்சியில் அரசியல் பிரச்சனை எப்படி இருந்தாலும், சமுதாயப் பிரச்சனையில் நாம் இன்று இருக்கும் இழிதன்மையில் இருந்து அதாவது சூத்திரனாக, தாசிமகனாக நம் தாய்மார்கள் தாசிகளாக சட்டப்படி, சாஸ்திரப்படி இருக்கும் நிலைமையை மாற்றிக் கொள்ள முயற்சிக்காமல் நாம் இருக்க முடியுமா?

இந்தியாவில் நாம் இருக்கும் வரை இந்துவாகத்தானே இருந்து ஆக வேண்டும்.இந்து என்றாலே முஸ்லிம், கிறிஸ்துவம் தவிர மற்ற யாவருமே சூத்திரர், தாசி மக்கள் தான் என்று இருப்பதால் ஏதாவது முயற்சி செய்துதான் ஆக வேண்டும்.

நம் மக்கள் எளிதில் மதம் மாறமாட்டார்கள். மதம் மாறுவதை இழிவாய் கருதுபவர்களாவார்கள்.

ஆதலால் நாம் உடனடியாக விடுதலை, அதாவது இந்தியக் கூட்டாட்சியிலிருந்து விலகி, சுதந்திரத் தமிழ்நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டாக வேண்டியவர்களாக இருக்கிறோம். இம் முயற்சிக்கு இன்றைய தி.மு.க. ஆட்சி இணங்கும் என்று கருத முடியாது. ஏனெனில், தி.மு.க ஆட்சி விரும்புவதெல்லாம் இந்தியக் கூட்டாட்சி ஆதிக்கத்திற்கு உள்பட்ட மாகாண சுயாட்சிதான் அது விரும்புகிறது.

மாகாண சுயாட்சி என்றால், அரசியலில்தான் ஏதோ சில மாறுதல்களைச் செய்து கொள்ள முடியுமே தவிர, சமுதாயத் துறையில் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக ஒரு காரியமும் செய்ய முடியாது.

இந்திய அரசியல் சட்டத்தில் சமுதாய (மத) சம்பந்தமான காரியங்களைப் பற்றி பழைய மணுதர்ம நிலையை மிக மிகப் பலப்படுத்திக் கொண்டபடி இருக்கிறது. உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால், கர்ப்பக் கிரகத்திற்குள் சூத்திரன், அதாவது பண்டார சன்னதி உட்பட இந்து என்ற தலைப்பில் வரும் எவருமே, பார்ப்பான தவிர்த்து எவருமே செல்ல முடியாதென்று உயர் நீதி (சுப்ரீம்) மன்றத் தீர்ப்பு இருப்பதினாலும், இன்ணும் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கென்று போகும் யாருமே தீண்டத் தகாதவர்கள் போல் வாயில்படிக்கு வெளியில்தான் எட்டி நிற்க வேண்டும் என்றால் மற்றபடி எதில் நாம் மாறுதலைக் காணமுடியும்?

இன்று அமுலில் இருக்கும் `இந்து லா’ என்ணும் சட்டத்திலும், பல உயர்நீதிமன்றங்களின் தீர்ப்பிலும், பார்ப்பனரல்லாத இந்து மக்கள் என்பவர்களை மிக மிக இழிவாகக் கூறி நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்து என்ணும் சொல்லுக்கு சட்டத்தில் கொடுத்திருக்கும் விளக்கம் என்னவென்றால், `கிறிஸ்துவர்கள்-முஸ்லிம்கள் தவிர்த்த இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருமே இந்துக்கள் ஆவார்கள்’. இதன் படி நாத்திகன், பகுத்தறிவுவாதி, பரதேசி முதலிய சகலரும் இந்துக்கள் ஆகி சூத்திரர், பார்ப்பானின் தாசி மகன் என்று ஆகிவிடுகிறார்கள்.

நான் முதலில் நான் இந்து அல்ல என்று சொல்லி விட்டால் இழிவு நீங்கிவிடும் என்றுதான் கருதினேன். பிறகு சட்டங்களைப் பார்க்க ஆரம்பித்த பிறகு கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் தவிர்த்த, இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் இந்துக்கள்- இந்துக்கள் என்றால் சூத்திரர்கள், வேசி மக்கள் என்று பல இடங்களில் காணப்படுகின்றன. ஆதலாயே தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

இன்று நம் நாட்டில் இந்துக்கள் எல்லோருக்குமே அரசியலில்தான் முக்கிய கவனம் இருக்கிறது. அன்றியும், நாட்டுப் பிரிவினை என்றால், எல்லா மக்களுமே பயப்படுகிறார்கள். காரணம், பதவி கிடைக்காதே என்கின்ற காரணம் மாத்திரமல்லாமல், சிறைக்குச் செல்ல  வேண்டுமே என்றும் பயப்படுகிறார்கள். 50 வருஷ காலமாகச் சுயமரியாதை இயக்கம் சாதித்தது என்ன என்று பார்த்தால், சிறிது படிப்பு-பல பதவி உத்தியோகம் பெற நேர்ந்ததோடு, அரசியலில் பார்ப்பனர் கொட்டத்தை நல்ல அளவுக்கு அடக்கிற்று என்பதல்லாமல் சமுதாயத் துறையில் உள்ள அடிப்படை இழிவு ந்லல அளவுக்குப் பலம் பெற்று விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

எனவே, நாம் சட்டத்தைப் பற்றிப் பயப்படாமலும், பதவி கிடைக்காதே என்று கவலைப்படாமலும் சுதந்திரத் தமிழ்நாடு பெற ஒவ்வொருவரும் முடிவு செய்து கொண்டு முன் வரவேண்டியது ஒவ்வொரு தமிழணுக்கும் அவசியமான காரியம் என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

`சுதந்திரத் தமிழ்நாடு- எனது இலட்சியம்’ என்ற சொற்களை ஒவ்வொரு இலட்சியச் சொல்லாகக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். பதினாயிரக் கணக்கில் பாட்ஜுக்கு ஆர்டர் கொடுத்துத் தயார் செய்து மக்களுக்கு வினியோகக்க ஆசைப்படுகிறேன். பொது மக்களுக்கும் இதுவே இலட்சியச் சொல்லாக (கூப்பாடாக) இருக்க வேண்டும் என்று  ஆசைப்படுகிறேன். பொது மக்களே! இளை…ர்களே! பள்ளி கல்லூரி மாணவர்களே! மாணவிகளே! உறுதி கொள்ளுங்கள்! உறுதி கொள்ளுங்கள்! உறுதி கொள்ளுங்கள்!

(95 வது பிறந்தநாள் மலர் -17-9-1973)

பெரியார் 94 - (1972)

 எனக்கு (நான் பிறந்து) நாளது செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதியோடு 93 ஆண்டு முடிவ டைந்து 94 ஆம் ஆண்டு முதல் நாள் தோன்றிவிட்டது. 93 ஆண்டு என்றால், நான் பிறந்து, மாதங்களில் 1116 மாதங்கள், நாட்களில் 34045 நாட்கள், பிறைகளில் (அமாவாசைகளும்) 1635 ஏற்பட்டு மறைந்துவிட்டன. இனிமேலும் எத்தனை காலத்துக்கு வாழ்ந்தாலும், வாழ்வில் தேய்மானம்தான் காணமுடியுமே ஒழிய வளர்ச்சி காண்பது (இயற்கையில்) முடியாத காரியமேயாகும்.

என் வாழ்நாளில் நான், மற்றவர் (அனேகர்) கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர்கள் கருத்து என்பவைகளில், யாரும் நினைக்காததும், நினைத்தாலும் வெளியில் சொல்லப்பயப்படுவதும், துணிந்து சொன்னாலும் செய்கையில் நடவாததும் நடத்திக் காட்ட முடியாதது காரியத்திலும் நடந்து வந்ததோடு. ஓரளவுக்கு மற்றவர்களுக்கும் தெரியும் படி-விளங்கும் படி ஓரளவுக்கு நடத்திக் காட்டியும் வந்திருக்கிறேன்.

இந்த நிலை உலகெல்லாம் பரவ வேண்டும் என்ற எண்ணங்கொண்டு அதற்காக வாழ்கிறேன்-;எனற் எண்ணத்தில் இருந்து வருகிறேன். அப்படிப்பட்ட காரியம் (எண்ணம்) என்னவென்றால், தெய்வம் இல்லை, தெய்வ சக்தி இல்லை என்பதாக எதுவும் இல்லை, மனிதத் தன்மைக்கு மேற்பட்ட தெய்வ சக்தி- தெய்வீகத்தன்மை என்பதாக எதுவுமில்லை; அப்படிப்பட்ட தெய்வீகத்தனம் கொண்டவர்கள் என்பதாக யாருமே இல்லை; அப்படிப்பட்ட காரியம் என்பதாகவும் எதுவே இல்லை என்றும் திண்ணமாய்க் கருதி, உறுதியான பணியாற்றியும் வந்திருக்கிறேன்-வருகிறேன்.

இந்த எனது நிலையில் எனது 93 ஆண்டு வாழ்நாளில் எனக்கு யாதொரு குறைவும் சங்கடமும் மனக் குறைவோ, அதிருப்தியோ கூட ஏற்பட்டதேயில்லை. மேற்கண்ட எல்லாக் காரியங்களிலும் மற்றவர்கள் எளிதில் பெற முடியாத அனேக ஏற்றங்களைச் சாதாரணமாகப் பெற்றிருக்கிறேன். மக்களால் நல்ல அளவுக்கு மதிக்கப்பட்டும் பாராட்டப்பட்டும் விருப்பப்பட்டும் போற்றப்பட்டும் வந்திருக்கிறேன்.இதனால் உலகுக்கு-மக்களுக்கு யாதொரு கெடுதியும் ஏற்பட்டதில்லை என்பதோடு நாட்டுக்கும் மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் யாவருக்குமே நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்பட்டு வருகின்றன என்றே சொல்லலாம்.

நமது கருத்து வெளியீடும் பிரச்சாரமும் துவக்கப்பட்ட காலத்தில் நமது மக்களின் சராசரி ஆயுள் (வாழ்நாள்) பத்து ஆண்டேயாகும். கல்வியில் நமது மக்கள் 100-க்கு 8பேர் 10 பேர் என எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் ஆவார்கள். ஏராளமான நோய் நலிவுகள்; அவற்றுள் பரிகாரம், சவுக்கியம் செய்ய முடியாத நோய்கள் அதிகம். காலரா (வாந்திபேதி) வந்தால் 100-க்கு 90 பேர் சாவார்கள். பிளேக் வந்தால் 100-க்கு 100-ம் சாவார்கள். இருமல் வந்தால் 100-க்கு 80 பேர் சாவார்கள். அம்மை (வைசூரி) வந்தால் 100-க்கு 50 பேர்களுக்கு மேல் சாவார்கள். தொத்து நோய்களும் பல; குழந்தைச் சாவுகளும் ஏராளம். கர்ப்ப ஸ்திரீகள் சாவுகளும் ஏராளம் இருந்தன. இதற்கு ஏற்ப ஏழ்மையும் கீழ்த்தரமான வாழ்க்கை நிலையும் இருந்து வந்தன.

அரசியலில் அன்னிய ஆதிக்கம், பார்ப்பன ஆதிக்கம் தலைவிரித்தாடின. அது போலவே உத்தியோகத் துறையிலும் பார்ப்பன மயமும் முன்னேற்ற வகுப்பார் ஆதிக்கமும் இருந்து வந்தன. முதலாளிகள் ஆதிக்கமும் எஜமான் -அடிமைத் தன்மையும் இயற்கை என்று சொல்லும் தன்மையில் தாண்டவமாடின. செல்வ நிலையோ ஒரு இலட்சம் என்பதான் உயர்ந்த நிலை. 10 இலட்சம் என்பது மிக மிக உயர்ந்த நிலையாய் இருந்தது. மற்றும் எவ்வளவோ கீழ் நிலைக்கு ஆளாகி இருந்தது மாத்திரமல்லாமல் அந்நிலைப்பற்றி வெட்கப்படாமலும் கவலைப்படாமலும் வாழ்ந்து வந்தோம்.

இப்படிப்பட்ட நிலையில் இந்த நிலைபற்றி யாருமே கவலைப்படாமல்-இவற்றின் விளைவுபற்றி யாருமே கவலைப்படாமல், `எல்லாம் கடவுள் செயல், நம்மாலாவது ஒன்றுமே இல்லை’ என்று கருதி, நிம்மதியுடன் மக்கள் இருந்த காலத்தில் நான் ஒருவன் மாத்திரமே தீவிரமாய்ச் சிந்தித்து, இந்த நிலைக்குக் காரணம் நமது முட்டாள்தனமும், இதுவரை சிந்திக்காததுமே தான் என்று கருதி, துணிந்து கடவுளையும், மதத்தையும் சாஸ்திரங்களையும் முன்னோர் கூற்றையும் அழித்து, ஒழித்துக் கட்டி, மக்களுக்குப் புது எண்ணங்களை-அறிவை உண்டாக்க வேண்டும் என்று பாடுபட்டு வந்ததே இம்மாற்றங்களுக்கு வழியேற்படக் காரணமாயிற்று.

கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர் கூற்று ஆகியவைகளை எதிர்க்கவும், அழிக்கவும் துணிவு எனக்கு எப்போது, ஏன் வந்தது, எப்படி வந்தது என்றால், மேற்கண்ட அவை எல்லாம் மனித சமுதாயத்தின் காட்டுமிராண்டிக்காலமான சுமார் 2000, 3000 ஆண்டுகளுக்கு முந்தின மிருகப் பிராயத்தில் ஏற்பட்டவைகளே. அக்காலம் அறிவில்லாத காலம் என்பது மாத்திரம் அல்லாமல் தாய்-மகன், தந்தை-மகள், அண்ணன்-தங்கை என்பவைகளான முறை பேதங்கள் இல்லாத காலம்; அவை மாத்திரமா? பகுத்தறிவு, சிந்தனை அற்ற காலம்; வளர்ச்சி என்பதாக ஒரு தன்மை இருக்கிறது என்பதே தெரியாத காலம்.

சாதாரணமாக, கந்த புராணம், வாயுபுராணம், பாரத புராணம், இராமாயண புராணம் முதலிய கடவுள் சம்பந்தமான, மத சம்பந்தமான, சாஸ்திர புராண இதிகாசங்களையும், சிவ புராணம், வி·ணூ புராணம், பாகவதம், வெகு சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட பக்த விஜயம், திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் முதலிய ஆதாரங்களையும் இலக்கியங்களையும் பார்த்தாலே நல்ல வண்ணம் உண்மை விளங்கும்.

மற்றும், இந்த மடமைக் கூளங்களை இன்றைய தினத்திலேயே நம்மில் 100-க்கு 90-க்கு மேற்பட்ட மக்கள், அதிகம் புலவர், பண்டிதர், வித்வான், மகாமகோபாத்தியாய, பி.ஏ., எம்.ஏ., டாக்டர் பட்டம் பெற்ற பெரிய படிப்பாளி, அறிவாளிகள் என்பவர்களெல்லாம் கூட நம்பி, அதன்படி நடக்கத் துணிந்தவர்களும் இருக்கிறார்கள் என்றால், பக்தி என்றாலே, இந்த காட்டுமிராண்டிக் காலத்தியக் கற்பனையை நம்புவதும், நடிப்பதும், அதற்கேற்ற கோயில், குளம், உற்சவம், பண்டிகைகள் ஆகியவைகளை ஏற்படுத்தி, பரப்பி, கொண்டாடி வந்தனர் என்றால், அறிவிலிகள் எவ்வளவு மோசமாக ஏற்பட்டவர்களாக-காட்டுமிராண்டிகளாக இருந்திருக்க மாட்டார்கள்?

அவ்வளவு ஏன், கிரணங்களை நம்புகிறவர்கள் எத்தனை பேர்? இன்று கூட சாதாரணமாகச் சொல்ல வேண்டுமானால் இந்தியாவுக்கு அப்பால் உலகம் இருப்பதாகவே தெரியாதோர் எத்தனை? இன்றைக்கு 150, 200, 300 ஆண்டுகளுக்கு முன் நம் நிலை என்ன என்று பார்ப்போமானால்-நெருப்புக் குச்சி ஏது? இரயில், கார், கப்பல், ஆகாயக் கப்பல் ஏது? நடக்க நல்ல பாதை ஏது? இந்த நிலையில் உள்ள மக்களின் மூட -காட்டுமிராண்டி நம்பிக்கையான-அதன் தோற்றங்களான கடவுள், மதம், சாஸ்திரம், பெரியோர் கருத்து என்பவைகளை ஒழிக்க ஒரு மனிதன் துணிவு கொள்வானானால், அத் துணிவில் அதிசயம் ஏது? எப்படி இருக்க முடியும்?

பகுத்தறிவுள்ள மனிதனாக இருந்து கொண்டு , கடவுள், மதம், சாஸ்திரம், பெரியோர் கருத்து என்பனவாகியவைகளை நம்புவதும்; அழிக்காமல் ஒழிக்காமல் இருப்பதும், பின்பற்றுவதும் தான் முட்டாள்தனமான-காட்டுமிராண்டித்தனமான துணிவு கொண்ட தன்மையாகும் என்று சொல்லலாம். 

நிற்க, மேலே கண்ட எனது துணிவான கருத்துக்களால், பிரச்சாரத்தால் இவ்வய்ம்பது ஆண்டுகளுக்கப்பால் ந்ம நாட்டாருக்கு, மனித சமுதாயத்துக்கு ஏற்பட்ட தீமை என்ன, கேடு என்ன என்று பார்த்தால்; ஒரு சாதாரண மனிதணுக்கும், அவன் கடுகளவு சிந்தனையாளனாக இருந்தால் ஒன்றும் ஏற்படவில்லை என்பதோடு, மேலே காட்டப்பட்ட அனேக நன்மைகள் ஏற்பட்டிருப்பது தெரியாமல் போகாதே! அது மாத்திரமா? இந்தக் கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர் கருத்து என்பவைகளால் நாட்டுக்கு-மனித சமுதாயத்துக்கு ஏற்பட்ட கேடுகளும், வளர்ச்சித் தடைகளும் எப்படிப்பட்ட மூடணுக்கும் புரியாமல் போகாது. எனவே, நான் 93 ஆண்டுகள் வாழ்ந்தததை வீண் வாழ்வு என்று கருதவில்லை. என் பணிகளை வீண்பணி என்றும் கருதவில்லை.

இனிமேலும் வாழ்வதைத்தான் க·டமாகக் கருதுகிறேன். என் உடல் நிலைமை மிக மோசமாகிவிட்டது. நினைவு சரியாக இல்லை. மறதி அதிகம். கண், காது சரியாக இல்லை. கால்கள், நடக்கவே முடிவதில்லை. அசதி அதிகம். இப்படிப்பட்ட நிலையிலும் சற்று மகிழ்ச்சி, உற்சாகம் கொள்ளுகிறேன் என்றால், இன்று நமக்கு வாய்திருக்கும் தி.மு.க. ஆட்சிப் பணிகளால்தான்.

காரணம் என்னவென்றால், இதன் முன்னர் இருந்த ஆட்சியின் யோக்கியதைகளை அவைகளால் நாட்டுக்கு-சமுதாயத்திற்கு ஏற்பட்ட கேடுகளை ஒழித்துக்கட்டாததால் சமுதாய விஷயத்தில், சாதி அமைப்பு விஷயத்தில், கல்வி விஷயத்தில் எப்படி நடந்து கொண்டார்கள்; என்ன கொள்கை மேற்கொண்டார்கள் என்பவைகளைச் சிந்தித்தால் தெரிய வரும். ஏதாவது பொல்லாத வாய்ப்பால் இப்போதைய இந்த தி.மு.க. ஆட்சிக்கு ஏதாவது மாறுதல் காலம் ஏற்பட்டால், வேறு எந்த ஆட்சி வரும், அதன் பலன் என்ன ஆகும் என்பவைகளைச் சிந்தித்தால் பெரும் பயம் ஏற்படுகிறது. மற்றபடி மகிழ்ச்சியோடு இதை முடிக்கிறேன். 

(94 வது பிறந்த நாள் மலர் - 17.9.1972)

பெரியார் 93 - (1971)

எனது 93 வது ஆண்டு பிறந்த நாள் மலருக்கு ஒரு செய்தி வேண்டும் என்று நண்பர் திரு. வீரமணி அவர்கள் கேட்டார். சற்றேறக்குறைய 10 ஆண்டுகளாகவே எனது பிறந்த நாள் மலருக்குச் சேதி கொடுத்துக் கொண்டுதான் வருகிறேன். முதலாவதாக எனது பிறந்த நாள் என்பது எனது பிரச்சாரத்திற்கு ஒரு சாதனமாக-ஒரு ஆதாரமாக விளங்குகிறது என்பது ஒரு கல்லுப் போன்ற செய்தியாகும். 

நான் சமுதாய சமத்துவத்திற்குப் பாடுபடுகின்ற ஒரு தொண்டனாவேன். அதாவது, சாதி அமைப்பை அடியோடு ஒழிக்கப் பாடுபடுவேன். சாதி அமைப்பு என்பது `கடவுள்’ `மதம்’ மற்றும் அவைகள் சம்பந்தமான எதையும் ஒழித்தாக வேண்டும் என்று கருதி அவைகளை ஒழிக்கப் பாடுபடுகிறவன். அதில் எந்த அளவும் மக்களுக்குச் சந்தேகமில்லாமல் நடந்தும் வருகிறேன். மக்களோ பெரும்பாலும் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் ஆவார்கள். கடவுள் ஒழிப்பு என்பது  மக்களுக்கு ஆத்திரத்தையும் கோபத்தையும் உண்டாக்கக் கூடியதாகும். இது மாத்திரமல்ல. நம்மைச் சபிக்கவும் கூடியதாகும். ஆகையால் சபிக்கப்பட்டும் வருகின்றேன். சபிக்கும் மக்களோ கடவுளைச் சர்வசக்தி உடையவர் என்று பலமாக நம்புகின்றவர்கள். அவர்கள் சாபம் பலிக்காவிட்டாலும் கடவுள் என்னைச்சும்மா விட்டுக் கொண்டு இருக்க மாட்டார் என்றும் நம்புகிறவர்கள் ஆவார்கள்.

நானோ எனது பிரச்சாரத்தில் கடவுளே இல்லை என்று சொல்லுவதற்காகவே சிறுமைப்படுத்தி,இழிவுபடுத்தி -செய்கையாலும் காட்டிக் கொண்டே, நடந்து கொண்டே வருபவன். இந்த நிலையில் எனது 92-வது வயதில் கடவுள் நம்பிக்கை ஒரு மூட நம்பிக்கையில் பட்டதென்பதை நல்ல வண்ணம் மக்களுக்கு விளங்கும்படி, `கடவுளைச் செருப்பால் அடிக்கும்படி’ நான் சொல்லும் அளவுக்கு ஆளாகி இருக்கின்றேன்.

இந்த நிலையில், எனது 92-வது வாழ்நாள் முடிந்து 93-வது வாழ்நாள் தோன்றிவிட்டது என்றால், கடவுள் இருந்தால் இப்படி நடக்குமா? விட்டுக் கொண்ட இருப்பானா?- என்று எந்த, எப்படிப்பட்ட கடவுள் நம்பிக்கை பக்தணும் நினைத்து-அவணுக்கு ஒரு சிறு அறிவிருந்தாலும் `கடவுளாவது வெங்காயமாவது’ என்று கருதி, ஓரளவுக்காவது தெளிவு பெற முடியும் என்பது எனது பிரச்சாரத்திற்கு ஆதாரம் என்று கருதுகிறேன்.

சென்ற எனது 92-ஆம் ஆண்டு மலருக்கு நான் எழுதிய எனது பிறந்தநாள் செய்தியில் `எனது 91 ஆவது ஆண்டு எனக்கு உற்சாகமாகவே கழிந்தது. மனச் சலிப்பு அடைய வேண்டிய அவசியம் இல்லாமல் இருப்பது மாத்திரம் அல்லாமல், இது போல் வாழ்நாள் நீண்டால் மேலும் பல முன்னேற்றகரமான காரியம் செய்ய வாய்ப்பு ஏற்படலாம் என்று தோன்றுகிறது. மற்றும் மக்களிடையில் ஒரு மாறுதலைக் காண்கின்றேன். அதுவும் தீவிரமான மாறுதலுக்கு இணங்குபவர்கள் போல மக்களைக் காண்கின்றேன்.

கடவுள், மதம் சாதி முதலிய விஷயங்களால் மக்கள் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் மாறுதல் அடையப் பக்குவமாய் இருக்கிறார்கள் என்றே காண்கின்றேன். இந்த நிலைதான் எனது உற்சாகத்திற்கும் மேலும் இருந்து தொண்டு செய்யலாம் என்று நம்பிக்கைக்கும் அவாவிற்கும் காரணமாகும்.

இந்தப்படி எழுதிய நான், முந்திய ஒரு ஆண்டில் எனக்கு மனச் சலிப்பு ஏற்பட்டு `நான் ஏன் இருக்க வேண்டும் என்று தோன்றிற்று’ என்று எழுதிச் சலிப்படைந்து இருக்கின்றேன். இந்தச் சலிப்பைக் கண்டு காலஞ்சென்ற மாண்புமிகு அறி…ர் அண்ணா அவர்களும் திரு. காமராசர் அவர்களும் எனக்கு ஆறுதல் எழுதி உற்சாகமூட்டினார்கள்.

அறி…ர் அண்ணா, கலை…ர் கருணாநிதி ஆகியவர்களது ஆட்சி ஏற்பட்டதற்குப் பிறகுதான் நான் உண்மையிலேயே நம்பிக்கையும் உற்சாகமும் அடைந்தேன்.

உண்மையில் எனது தொண்டு சாதி  ஒழிப்புத் தொண்டு சாதி ஒழிப்புத் தொண்டுதான் என்றாலும், அது நமது நாட்டைப் பொறுத்தவரையில் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் ஒழிப்புப் பிரச்சாரமாகத்தான் முடியும். இந்த நான்கும் ஒழிந்த இடம் தான் சாதி ஒழிந்த இடமாகும். இவற்றில் எது மீதி இருந்தாலும் சாதி உண்மையிலேயே ஒழிந்ததாக ஆகாது.

ஏன் எனில், சாதி என்பது இந்த நான்கில் இருந்தும் ஆக்கப்பட்டதே ஆகும்.

இப்போதும் சொல்லுவேன்; நாகரிகத்திற்காகச் சிலர் சாதி ஒழிய வேண்டும் என்று கூறுகின்றார்கள். ஆனால் அவர்கள் மேற்கண்ட நான்கையும் ஒழிக்கத் துணிவு கொள்ள மாட்டார்கள்.அப்படிப்பட்டவர்களால் நமக்கு ஒரு பயணும் ஏற்படாது. சில சமயங்களில் அவர்கள் நமக்கு எதிரிகளாகவும் ஆகக் கூடும். மனிதனை மடையனாக, அடிமையாக ஆக்கப்பட்ட பின்புதான் சாதி புகுத்தப்பட்டதாகும். சுதந்தர உணர்ச்சியும், அறிவும் ஏற்படாமல் சாதியை ஒழிக்க முடியாது. மடமைக்கும் அடிமைத் தன்மைக்கும் ஆக்கம் அளித்துச் சாதியை நிலை நிறுத்துவதுதான் சாதி ஒழியாமல் பாதுகாப்பதுதான் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் என்பவைகளாகும்.

உண்மையில் சாதி ஒழிய வேண்டும் என்று கருதுபவர்கள், இந்த நான்கு ஒழிப்புக்கும் சம்மதித்தவர்களாளகவேதான் இருப்பார்கள். நமது மக்களில் பெரும்பாலோர் இன்று அப்படி ஆகிவிட்டார்கள் என்பதுதான் எனது உற்சாகத்திற்கும் காரணமாகும். எதனால் இப்படிச் சொல்கிறேன் என்றால், சேலம் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டையும் அதனை அடுத்து நடந்த நமது தி.மு.க. தேர்தலையும் (பொதுத் தேர்தலையும்) கொண்டுதான் இப்படிச் சொல்கின்றேன். 

அதாவது, `கடவுளைச் செருப்பால் அடித்ததாக’ 10 இலட்சக் கணக்கான பத்திரிகைகள், 10 இலட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள், மாணவர்கள், வக்கீல்கள், அதிகாரிகள், சில பெண்கள், மற்றும் காங்கிரஸ் இயக்கம், சுதந்திரா இயக்கம், ஐனசங்க இயக்கம் முதலிய-சாதித் துவேஷமற்ற தமிழ் உணர்ச்சிக்கு மாறான பல இயக்கங்களும் எதிராக பாடுபட்டு -230 இடங்களில் சுமார் 200 இடங்களுக்கு மேல் (தி.மு.க.) வெற்றி பெற நேர்ந்தது என்றால், சென்ற ஆண்டு பிறந்தநாள் செய்திக்கு நான் கொண்ட கருத்து-அதன் அளவுக்கு மேல் மெய்யாகி வெற்றிபெற்றது என்பது யாருக்கும் விளங்கும்.

இனி நமது சாதி ஒழிப்புக்கு மக்களில் யாரும் எதிர்ப்பு இல்லை என்பது உறுதியான செய்தியாகிவிட்டது.

இந்த நிலையில் நான் நமது மக்களை அடிபணிந்த வேண்டிக்கொள்வதெல்லாம்-கோயில்களுக்குப் போகாமல் இருக்க வேண்டும். உற்சவங்களில் கலவாமல், மதப் பண்டிகைகள் கொண்டாடாமல், நெற்றிக் குறி அணியாமல் இருக்க வேண்டும் என்பதேயாகும்.

மற்றும் நான் நினைக்கின்றேன். அண்மையில் ஓர் மாநாடு கூட்டி, கோயில்களுக்குப் போகிறவர்களை அடிபணிந்து வேண்டிக் கொள்வது மூலம் போகாமல் இருக்கச் செய்யலாமா என்று, யோசனை கேட்டுக் காரியத்தில் தொடரலாமா என்று சிந்திக்கிறேன்.

இதுதான் எனது 93-வது பிறந்த நாள் விண்ணப்பம்

 (93வது பிறந்த நாள் மலர், 17.9.1971)

பெரியார் 92 - 2 (1970)

 இன்றைய நிலையில் தமிழர்கள் (திராவிடர்கள்) ஒரு அளவுக்கு முன்னேற்றப் பாதையில் செல்லுகிறார்கள். அவர்கள் அடைய உரிமையுள்ள இடத்திற்குச் சென்றுவிட்டதாகக் கூறமுடியாது. சமுதாயத் துறையில் ஒரு அளவுக்குப் பார்ப்பனரைப் பகி·கரித்திருக்கிறார்கள். என்றாலும் அந்த அளவு பகுதிக்கும் குறைவான அளவு என்றுதான் சொல்ல வேண்டும். கல்வித் துறையில் பார்ப்பனர்களுக்கு ஏகபோகம் இல்லையென்றுதான் சொல்லலாமே தவிர அவர்கள் தங்கள் விகிதாசார அளவுக்கு 100-க்கு 500 பங்கு முதல் 1000 பங்கு வரை அதிகமாக அணுபவித்து வருகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த விகிதம் ஒழிந்து அவர்கள் தங்களுக்குள்ள உரிமையுடன் இருக்க வேண்டுமானால் டில்லி ஆதிக்கம் ஒழிந்தே ஆக வேண்டும். டில்லி ஆதிக்கம் ஒழியும் வரை திராவிடர்கள் 4-ஆம் சாதி- இழிசாதி என்கிற இழிவும் நீங்காது என்பது உறுதி. அரசியல் தலைமைத் துறை, அமைச்சர்துறை ஆகியவற்றில் அவர்களுக்கு இடமில்லாமல் ஆகிவிட்டது என்றாலும் அவர்கள் அவற்றில் இல்லாமலே அவர்களுக்கு வேண்டிய காரியங்களும் நாம் வளர்ச்சி அடைய முடியாமல் இருக்கும் படியான காரியங்களும் தாராளமாய் அவர்களால் செய்ய முடிந்துதான் வருகிறது.

இவற்றிற்கெல்லாம் அவர்களுக்கு ஆதாரமாக `சஞ்சீவி’ மருந்தாக இருந்துவரும் சாதனம் பத்திரிகை உலகம் 100-க்கு 100 அவர்களுடையதாகவும் அவர்களுடைய அடிமைகளுடையதாகவும் இருந்து வருவதேதான். இந்தத் துறையில் தமிழர் சிறிது கூட சிந்தனை செய்ததாகவே காணமுடியவில்லை. அந்த ஒரு காரயத்தில் நாம் முயற்சி எடுத்து நமது மானாபிமானத்தைக் காட்டாத வரையில் வேறு எந்தக் காரியத்தில் நாம் வெற்றிபெற்ற போதிலும் அதன் பயனை நாம் அணுபவிக்கவே முடியாது என்பது மாத்திரமல்லாமல் நம்முடைய நாட்டிலே, அதிலும் மொத்த ஜனத்தொகையில் 100-க்கு 90-க்கு மேற்பட்ட

மேற்பட்டவர்களாக இருக்கும் நமது நாட்டிலே 100-க்கு 3 பேராய் இருப்பவரும் நமது பிறவி எதிரியும் நமது கேட்டிற்கும் அழிவிற்கும் இழிவிற்குமாகவே உழைத்து வரும் வெகு வெகு சிறு சாதியாரான இனத்தாரிடம் நமது நாட்டுப் பத்திரிகைகளும் பத்திரிகைகளின் ஆதிக்கமும் இருந்து வருவது என்றால், இது நமது சமுதாயத்திற்கு எவ்வளவு இழிவான நிலை என்பதும் யோசிக்கத் தக்கதாகும்- என்பதோடு இது (நம்) போன்ற இழிவான, மானங்கெட்ட சமுதாயம் போன்ற வேறு ஒரு சமுதாயம் நானறிந்தவரை உலகத்தில் வேறு எங்குமே இருப்பதாகத் தெரியவே இல்லை. அது மாத்திரமா?நமது பத்திரிகை என்பவைகளை நமது மக்கள் ஆயிரக்கணக்கில் வாங்கிப் படிக்கிறார்கள் என்றால் நமது எதிரிகளான பார்ப்பனருடையவும், அவர்கள் அடிமைகளுடையவும், அவர்கள் ஆதரவால்தான்-அவர்களுக்க நல்ல பிள்ளையாய் இருந்தால்தான் வாழமுடியும் என்று கருதுபவர்களுடையவுமான பத்திரிகைகளை லட்சக்      (1,00,000) கணக்கில் நமது மக்கள் வாங்கிப் படித்து ஈனமக்களாக ஆகிவருகிறார்கள்.

சாதாரணமாகச் சொல்லுவோமானால் தமிழர் நல்வாழ்வுக்காகவே, மான வாழ்வுக் காகவே, வளர்ச்சிக்காகவேயென்று 45 ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டில் சுயமரியாதை (சமூக முன்னேற்ற) இயக்கம் என்பது ஆரம்பிக்கப்பட்டு, மூலை முடுக்குகளெல்லாம் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தும், நம் எதிரிகளை `பிராமணாள்’ `சாமி’ என்றழைப்பது 1000-க்கு பத்து வீதமான மக்களால் கூட நிறுத்தப்படவில்லை என்பதோடு, பத்திரிகை படிப்பவர்களில் 1000-க்கு ஒருவரால் கூட நம் எதிரிகளது பத்திரிகைகளை வாங்கிப் படிப்பது நிறுத்தப்படவில்லையென்றால் நம் மக்கள் தன்மைக்கு எந்தக் குணத்தை உதாரணமாகக் கூறுவது என்பது நமக்குப் புரியவில்லை.

அது மாத்திரமா? நமது கேட்டிற்கும் இழிவிற்கும் வளர்ச்சித் தடைக்கும் என்பதற்காகவே நடத்தப்படும் நம் எதிரிகளுடைய பத்திரிகைகளால் எதிரிகள் ஆண்டு ஒன்றுக்கு ஒன்று, இரண்டு, மூன்று - ஏன் அய்ந்து இலட்ச ரூபாய்கள் வரை இலாப வருவாய் சம்பாதித்துக் கொள்கிறார்கள்.

ஆகவே, நமது இழி நிலையானது நமது எதிரிகள்-மேல் சாதியார், பிராமணாள், சாமி என்று நம்மாலேயே அழைப்பவர்களாகவும், நமது செல்வத்தையே ஆண்டு ஒன்றுக்கு ஒன்று முதல் அய்ந்து இலட்ச ரூபாய் வரை இலாப வருவாய் உள்ளவர்களாக இருப்பதற்கு நாம் இடம் கொடுத்து வருகிறோம். நாம் ஆளாக இருந்து வருகிறோம் என்றால் மறுபடியும் நமது நிலை எவ்வளவு இழிவானது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன். எனவே நான் எனது 92-வது ஆண்டின் வேலைத் திட்டமாக இந்தப் பார்ப்பனப் பத்திரிகைகளை நம் மக்கள் பகி·கரிக்கும்படி செய்யும்படியான ஒரு இயக்கத்தைத் துவக்கி நடத்தலாமென்று ஆசைப்படுகிறேன்; ஆத்திரப்படுகிறேன்.

இதற்காக மாநாடுகள், பொதுக் கூட்டங்கள் நடத்திப் பிரச்சாரம் செய்யச் செய்வது கூடுமானவரை ஒவ்வொரு கிராமங்களிலும் `நம் எதிரிகளின் பத்திரிகை பகி·கார சங்கம்’ என்பதாக ஸ்தாபனம் ஏற்பாடு செய்வதும் இந்தக் காரியத்திற்காக ஒரு இலட்ச ரூபாய் நிதி திரட்டி, பல தொண்டர்களை முழு நேர வேலைக்காரர்களாக ஏற்படுத்தி, நாடெல்லாம் தொண்டாற்றச் செய்யவும் செய்ய வேண்டும் என்று திட்டமிட முடிவு செய்திருக்கிறேன்.

நன்கொடையாளர்கள் பெயர்கள் தெரிவிக்கப்படமாட்டாது. கண்டிப்பாய் ஒவ்வொருவரும் இதற்கு நன்கொடை அளித்தாக வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். அதிகாரிகளும், அமைச்சர்களும் உதவ வேண்டும். அவர்களுக்கு இதனால் ஏராளமான பலணுண்டு. மற்ற தலைவர்களும் வியாபாரிகளும் அவசியம் உதவ வேண்டுமென்றும் வேண்டிக் கொள்கிறேன். பொது மக்களும் இதற்கு நல்லவண்ணம் ஆதரவளிக்க வேண்டும்.

இந்தப் பணியானது கடவுளை, மதத்தை ஒழிக்கும் பணியை விட, கோவில்களை இடிக்கும் பணியை விட முக்கியமானதும் பயன் அளிக்கத் தக்கதுமான பணி என்பது எனது உறுதியான எண்ணமாகும். எனவே மளமளவென்று நன்கொடை வரவேண்டுமென்றும்-என்றும் உறுதியும் தகுதியும் உள்ளவர்கள் முன்வரவேண்டுமென்றும் வேண்டிக்கொள்வதோடு, நன்கொடை அளிப்பவர்களை நண்பர் வீரமணி அவர்களிடம் கொடுத்தருள வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறேன். விஷயம் மிக முக்கியமானதும் செய்து தரப்படவேண்டியதுமான இன்றியமையாத பணி என்றும் விண்ணப்பித்துக் கொள்கிறேன். இந்தக் காரியத்தை நான் செய்வதால் எனது வாழ்நாளில் ஒருபயணுள்ள காரியத்தைச் செய்ததாக நான் கருதிக் கொண்டு முடிவடைவேன்.

 (92 வது பிறந்த நாள் விழா மலர் - 17.9.1970)

பெரியார் 92- ( 1970)

 எனக்கு வயது 91. ஆண்டுகள் 91 முடிந்து விட்டன. 17.9.1970 வது நாள் முதல் 92-வது ஆண்டு துவங்குகிறது.

91 வது ஆண்டு எனக்கு உற்சாகமாகவே கழித்ததுடன் மனச் சலிப்பு அடைய வேண்டிய அவசியமில்லாமல் இருப்பது மாத்திரமல்லாமல் இருப்பதுடன் வாழ்நாள் தீண்டால் மேலும் பல முன்னேற்றகரமான காரியம் செய்ய வாய்ப்பு ஏற்படலாம் போல் எனக்குத் தோன்றுகிறது.

மக்களிடையில் ஒரு மாறுதலைக் காண்கிறேன். அதுவும் தீவிரமான மாறுதல்களுக்கு இணங்குபவர்கள் போல் மக்களைக் காண்கிறேன்.

அதாவது கடவுள் மதம், சாதி முதலிய விஷயத்தில் மக்கள் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் மாறுதலடையப் பக்குவமாய் இருக்கிறார்கள் என்றே காணூகிறேன். இந்த நிலைதான் எனது உற்சாகத்திற்கும் மேலும் இருந்து தொண்டு செய்யலாம் என்ற நம்பிக்கைக்கும் அவாவுக்கும் காரணமாகும்.

இந்த நிலையில், நான் எனது 92-வது பிறந்த நாள் சார்பாக மக்களுக்குத் தெரிவித்துக்கொள்வதெல்லாம், மனம் துணிந்து மேலும் மாறுதலடையுங்கள் என்பதேயாகும். 

நான் இந்த நிலை அடைந்ததற்கும் மக்களை இந்த அளவுக்கு நான் வேண்டுவதற்கும் முக்கியமான காரணம், இந்த இரண்டு மூன்றாண்டுகளாக நமது நாட்டில் நடந்து ஆட்சியாகும்.

நமது நாட்டு ஆட்சியானது பகுத்தறிவு ஆட்சி என்பதோடு எந்தவித மாறுதலுக்கும், எவ்வளவு தூரம் துணிந்து செயலாற்றுவதற்கும் துணிவுள்ள ஆட்சியேயாகும். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு  பொதுவாகவே மக்கள் வாழ்வில் சுபிட்சம் ஏற்பட்டிருக்கிறது. இது இயற்கையின் காரணம் என்றாலும் மக்கள் இன்ப வாழ்வு வாழ்கிறார்கள் என்று திருப்தியடையத்தக்கதாகவே இருந்து வருகிறது. எண்ணத்தில் பெருத்த முன்னேற்றத்தையும் அடைந்து வருகிறார்கள்.

இவற்றை ஏன் பெருமையாகக் குறிப்பிடுகிறேனென்றால், பதவி வெறியால் தூண்டப்பட்ட எதிரிகள்,எதிர்க் கட்சிகள், `தங்கள் சமுதாயத்திற்கு ஆபத்து வந்து விட்டது’ என்று கருதிப் பயந்து கிடக்கும் நம் பிறவி எதிரிகளாகிய பார்ப்பனர்கள் இந்த ஆட்சியை அழிக்கச் செய்த,செய்து வருகிற இமாலயப் பிரயத்தனங்கள் தவிடு பொடியாகி வருவதுடன் எவ்விதத் தடையுமின்றி ஆட்சியின் காரியம் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருப்பதுதான்.

இந்த நிலையில் தான் எனது 92-வது ஆண்டு செய்தியாக மக்களுக்குத் தெரிவித்துக் கொள்வது என்ன வென்றால், இந்த ஆட்சியை இன்ணும் ஒரு பத்தாண்டுக்குப் பாதுகாத்து வரவேண்டுமென்பதே ஆகும்.

தேசம் மிருகப் பிராயத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறது. யாரும் எப்படிப்பட்ட வரும் எந்த இழிவான காரியத்தைச் செய்யவும் பயப்படுவதில்லை. ஒழுக்கம், நேர்மை, நாணயம், அமைதி என்பது பெரும்பாலோரிடம் காணமுடிவதில்லை. பொதுவில் பார்த்தால் நமது நாடுதான் இந்தியாவிலேயே பாதுகாப்பான நாடு என்று கருதத் தக்கதாய் இருந்து வருகிறது.

இதற்குக் காரணம் தி.மு.க. ஆட்சிதான் என்று உறுதியாய்க் கூறுகிறேன். எனவே இதற்கு ஏதாவது மாற்றம், ஏற்படுமானால் அதை வேறு எந்த ஆட்சி வந்து மக்களை இன்றைய நிலைக்குக் கேடில்லாமல் ஆள முடியும்?

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இந்த ஆட்சிக்க மாற்றம் ஏற்படுமானால் அடுத்துவர இருப்பது பார்ப்பன ஆட்சிதான்-அதாவது வருணாசிரமத்தை நிலைநிறுத்தும் ஆட்சிதான். இது உறுதி. உறுதியேயாகும். ஏனிப்படிச் சொல்கிறேன் என்றால் இந்தியா முழுவதற்குமே இன்று வருணாசிரமப் பாதுகாப்பு ஆட்சி, கட்சி, மக்கள் என்பவர்கள் அல்லாமல் வேறு கட்சியும் இல்லை. மக்களும் இல்லை. கொள்கையும் இல்லை. காமராசர் பலமற்றுப் போய்விட்டார். அவரது எண்ணங்களும் மாற்றமடைந்து வருகிறது. பார்ப்பனரைத் தஞ்சமடைய வேண்டிய நிலைமைக்கப் போய்க்கொண்டிருக்கிறார். அவரது கட்சியும் (காங்கிரசும்) உருக் குலைந்து விட்டது. அவருக்கு உதவியாளரும் யாரம் தகுதியானவரில்லை. இவை மாத்திரமா? நமது பொது எதிரியான பார்ப்பனத் தலைவர் - நம் சமுதாயத்தை அழித்து ஒழித்துக் கட்ட கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் இராஜாஜி பலம் பெற்று வருகிறார். இதற்குக் காரணம் காங்கிரஸ் பிளவுபட்டதேயாகும்.

இந்த நிலையில் இன்றைய நமது நாட்டு ஆட்சிக்கு ஏதாவது மாறுதல் ஏற்படுமானால் காமராசர் ஆட்சி ஒருநாளும் அந்த இடத்திற்கு வராது; மற்றெது வருமென்றால் பார்ப்பனர் ஆட்சி-இராஜாஜி ஆதிக்க ஆட்சி தான் வரும். அதுவோ வேறு எதுவோ வந்தாலும் பழிவாங்கும் ஆட்சியாய்தானிருக்கும். அல்லது அசல் காலித்தன, பலாத்காரத்தாண்டவ ஆட்சியாகத்தானிருக்கும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். 

ஆகவே எனது 92 ஆம் ஆண்டுச் செய்தி என்பதாக எனது 91 ஆண்டு அணுபவ அறிவைக் கொண்டு சொல்லுகிறேன்.

மக்கள் எல்லோரும் பகுத்தறிவுவாதிகளாக மாறுங்கள்!

எப்பாடு பட்டாவது இன்றைய நம் தி.மு.க. ஆட்சியை இனியும் ஒர பத்தாண்டுக்கு நல்ல பலம் பொருந்திய ஆட்சியாக இருக்கப் பாடுபடுங்கள் என்பதுதான்.

(92 வது பிறந்தநாள் விழா மலர் -17.9.1970

பெரியார் 91 - (1969)

 எனது 90-வது ஆண்டு `பிறந்த நாள் விழா’ மலரில் `எனது நிலை’ என்கின்ற கட்டுரை எழுதும் போது, 91 வது ஆண்ட `பிறந்த நாள் விழா’ மலருக்கு `எனது நிலை’ என்பது பற்றி எழுத வேண்டிய வாய்ப்பு இருக்குமா என்ற சந்தேகத்தில் எழுதினேன். என்றாலும் எப்படியோ 91-வது ஆண்டு `பிறந்த நாள் விழா’ மலருக்கும் `எனது நிலை’ என்பது பற்றி எழுதும் படியான வாய்ப்பு எனக்கு ஏற்பட்டுவிட்டது. அதாவது 90-வது ஆண்டு `பிறந்த நாள் விழா’ மலரில் `எனது நிலை’ என்ற கட்டுரையில் `எனக்கு வயது 90’ உடல் நிலை மிகவும் மோசம்; கைகால் நடுக்கம் அதிகம்; சிறுநீர் கழிக்கும் போது சப்தம் போட்டுக் கொண்டுதான் கழிக்கிறேன். அதாவது, அவ்வளவு வலி; தூக்கம் சரியாய் வருவது இல்லை.

நினைத்த போது உடலில் ஏதாவது ஒரு பாகத்தில் வலியேற்பட்டு சில ஏப்பமோ, காற்றுப் பிரிவோ ஏற்பட்ட பிறகு நோய் விலகுகிறது. உண்ட உணவு சரியானபடி ஜீரணமாவதில்லை; முன்போல் உணவும் சரியாய் உட்கொள்ள முடியவில்லை; எந்த காரியம் பற்றியும் மனத்திற்கு உற்சாகம் ஏற்படுவதில்லை. களைப்பு அடிக்கடி ஏற்படுகிறது; நெஞ்சில் வலி திடீரென்று ஏற்படுவதும் ஏப்பம் வந்த பிறகு குறைவதுமாக இருக்கிறது. எதைப்பற்றியும் சலிப்பும் வெறுப்பும் ஏற்பட்டு விடுகிறது.

சுருக்கமாகச் சொல்லுவதானால், வாழ்வே வெறுப்பாக இருக்கிறது. என்றாலும் தற்கொலை செய்து கொள்ள மாட்டேன். நினைத்தபடி நினைத்த ஊருக்கெல்லாம் என்னை அழைக்காதீர்கள். அந்தப்படி என்னை மக்கள் அழைக்காமல் இருப்பதற்காகவே எனது வழிச் செலவுத் தொகையை ரூ 100-இல் இருந்து ரூ 150 ஆக ஏற்படுத்தி விட்டேன்.

ரூ.100 எனக்கு வண்டிச் செலவு, ரிப்பேர் செலவு, வைத்திய செலவு முதலியவைகளுக்கு அனேகமாகச் சரியாய்ப்போய்விடும். சில சமயங்களில் போதாமல் போகும். ஒரு தடவையில் 2,3 பயணம் ஏற்பட்டால் ஒரு அளவு மீதியாகி,பிரச்சாரத்திற்குப் பயன்படும்.

எனக்கு இனிப் பிரச்சாரத்தில் ஆசை இல்லை. ஒரு வாரப் பத்திரிகை துவக்கி, அதற்கு ஆசிரியனாக இருந்து எழுதிக்கொண்டு இருக்க வேண்டும் என்பதில்தான் ஆசை அதிகமாக இருக்கிறது. மற்றும் வெளியாக்கப்பட வேண்டிய விஷயம் அதிகம் இருக்கிறது. இதற்காக எளிதில் காணமுடியாத ஒரு தனி இடத்திற்குப் போகலாமா அல்லது ஈரோட்டிற்கே போய்விடலாமா என்று கூட எண்ணூகிறேன்.

இனி என் ஆயுள் எவ்வளவு இருக்க முடியும் என்பதில் எனக்குக் கவலை இல்லை. இருந்த வரை தொண்டு செய்யலாம் என்றுதான் திட்டம் போடுகிறேன். ஆனால் எதிர்பாராத சம்பவங்கள் நடப்பதும், ஏற்படுவதும் இயற்கையேயாகும். அதுபோல் என் முடிவும் இருக்கலாம்.

பொதுவாக என் மனம் குழப்பமாக இருக்கிறது. துறவி ஆகிவிடுவேனோ என்னமோ’ இந்தப்படி எழுதியிருக்கிறேன். அதை ஊன்றிப்படித்தாலே நான் எழுதியதின் தன்மை விளங்கும்.

இப்போது எனக்கு 90 ஆண்டு முடிந்து 91-வது ஆண்டு நடக்கிறது என்றாலும் 90-வது ஆண்டுக்கும் 91-வது ஆண்டுக்கும் இடையில் ஏற்பட்ட எனது உடல் நிலையின் தன்மை 91-வது ஆண்டு போல் இல்லாமல் 94,95 வது ஆண்டு என்று கருதும் படி அவ்வளவு கிழத்தன்மை ஏற்பட்டுவிட்டது என்று ஆகிவிட்டது. இது உடல் நிலை மாத்திரமல்லாமல் பஞ்சந்திரியங்களோடு புத்தி, மனது, சிந்தனா சக்தி முதலிய தன்மைகளும் மிக்கக் குறைந்து பலவீனப்பட்டு விட்டன.

என்றாலும், இவ்வோராண்டு நாட்டு நிகழ்ச்சிகளைப் பார்த்தால் எனக்கு மற்ற கருவி காரணாதிகளின் பலக் குறைவு எப்படி இருந்தாலும் மனம் உற்சாகம் அடையும்படியான பல நிகழ்ச்சிகள் காணப்படுகின்றன.

முதலாவது நிகழ்ச்சி நமது தி.மு.க. ஆட்சியில் 13 மந்திரிகளில் 13 பேரும் தமிழர்கள் என்பதோடு, 18 அய்க்கோர்ட் ஜட்ஜுகளில் 14 பேர் தமிழர்கள் (பார்ப்பனரல்லாதவர்கள்) டெல்லி ஆதிக்கமில்லாத அதிகாரங்களில் 100-க்கு 500-க்கு மேல் 75 வரை பார்ப்பனரல்லாதவர் இருக்கும்படி ஆகிவிட்டது. அரசியலில் ஆளும் கட்சியிலும் எதிர்க் கட்சியிலும் தலைவர்கள், பணியாளர்கள் யாவருமே 100-க்கு 100-ம் தமிழர்களேயாவார்கள். இதை அணுசரித்தே மற்ற நிலைகளும் மாற்றமடைந்து வருகின்றன. இவ்வளவுக்கும் காரணம் தி.மு.க. ஆட்சி என்றே சொல்லுவேன்.

காங்கிரஸ் மத்திய ஆட்சி ஆதிக்கத்திலும், பச்சையாகப் பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் பிளவும், வடநாடு-தென்னாடு என்கின்ற உணர்ச்சியும் காணப்படும் தன்மை உருவாகிவிட்டது. இவையெல்லாம் நம் தமிழர் சமுதாய விடுதலைக்கும், சுயமரியாதைக்கும் நல்ல வெற்றிவாய்ப்பு என்றே சொல்லத் தக்கவையாகும்.

மற்றும், 90 வது `பிறந்த நாள் விழா’ மலரில் `எனது நிலை’ என்ற கட்டுரை முடிவில் `துறவியாய்ப் போய் விடலாமா’ என்று எழுதி இருக்கிறேன். இன்று எனக்கு அப்படி இல்லை. அந்த எழுத்தைப் பார்த்து உயர் காமராசரும் அறி…ர் அணணாவும் எனக்குத் தெரிவித்தது போல், அதாவது `இப்போது உங்களுக்கு எதற்காகக் கவலை? நீங்கள் நினைத்த காரியம் எது நடவாமல் இருக்கிறது? கவலையை விட்டு விடுங்கள்’ என்று சொன்ன சொற்கள் எனக்கு உற்சாகத்தைக் கொடுக்கின்றன.

இன்று எனக்குள்ள குறையெல்லாம் தமிழர் சமுதாயத்தில் `விபீஷணப் பரம்பரை’ வளர்ந்து வருவதுதான். இது தமிழரில் சில `சாதிக்கு’ (வகுப்புக்கு) இயற்கை என்றாலும் இது வருந்தத்தக்கதேயாகும். ஆகவே, எனது 90-வது வயதைவிட 91-வது வயது திருப்தியையும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது என்பது என் கருத்து. விபீஷணர்கள் திருந்துவார்களாக.

தி.மு.க. ஆட்சி இனியும் குறைந்தது 10 ஆண்டுகளுக்காவது இருக்கும்படி மக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். எனக்கு இதற்குமேல் கருத்தும் ஓட வில்லை. எழுதவும் முடியவில்லை.

 (91 வது பிறந்த நாள் விழா மலர், 17.9.1969)

பெரியார் 90 - (1968)

 சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்களும், திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களும், தி.மு.க.விலும், காங்கிரசில் உள்ளவர்களும் பகுத்தறிவு, தமிழர் இன உணர்ச்சி உள்ளவர்களும், அரசியல் அதிகாரிகளாய், குமஸ்தாக்களாய், பணியாளர்களாய் உள்ளவர்களில் தமிழர் உணர்ச்சியாளர்களாய் இருப்பவர்களும், தங்கள் தங்கள் வீட்டில், தொழில் மனைகளில், வாகனங்களில் உள்ள கடவுள் மத, புராண, இதிகாசக் கதைகள் முதலியவை சம்பந்தமான உருவப் படங்கள் எதுவானாலும், அவைகளை அப்புறப்படுத்தி விட வேண்டும். கண்டிப்பாய் அப்புறப்படுத்தி விட வேண்டும் என்று மிக்க மரியாதையாய், வணக்கமாய் வேண்டிக் கொள்கிறேன்.

அரசாங்கப் பணிமனையில் தொங்கும் படங்களை எடுத்து விடுங்கள் என்று சொன்னவுடன் எல்லாப் பார்ப்பனர்களுக்கும் எவ்வளவு ஆத்திரம் வந்தது? நீங்கள்தான் பார்த்தீர்களே, இராஜாஜி மிரட்டுகிறார். `மித்திரன்’, `தினமணி’, `இந்து’, `மெயில்’,`எக்ஸ்பிரஸ்’ முதலிய பார்ப்பனப் பத்திரிகைகள் மிரட்டுகின்றன; விஷமப் பிரச்சாரங்கள் செய்கின்றன. இந்த ஒரு பிரச்சனையைக் கொண்டே தி.மு.க. ஆட்சியையே கவிழ்க்கப்பார்க்கின்றனர். ஏன்?

தங்கள் சாதி உயர்வும், நம் சாதி இழிவும் அந்தப் படங்கள் தொங்குவதில் உயிர் வாழ்கின்றன. அவை (படங்கள்) போய்விட்டால் உயர்வு-தாழ்வு போய்விடுமே என்கின்ற கவலைதானே? மற்றபடி அப்படங்களில் என்ன இருக்கின்றது? அவர்கள் சமுதாய உயர்வுக்கு அவர்கள் (பார்ப்பனர்கள்) அவ்வளவு பாடுபடுகின்றார்கள்.

நமக்கு புத்தி-மான ஈன உணர்ச்சி இருக்க வேண்டாமா? அந்தப் படங்களில் கடவுள் இல்லை என்பதற்காக அவற்றை எடுத்து எறியாவிட்டாலும் நமது ஈன நிலை, இழிவு நிலை பார்ப்பான் உயர்வு நிலை அதில் இருக்கிறது என்பதற்காகவாவது அவற்றை நமது அரசியல் பணிமனைகளிலிருந்தும், அதைவிட நமது வீடுகளிலிருந்தும் , தொழில் ஸ்தாபனங்களிலிருந்தும் எடுத்து எறிய வேண்டாமா என்று கேட்கிறேன்.

தோழர்களே! இனியாவது செய்து நீங்கள் இழி சாதி மக்கள் அல்ல என்பதைக் காட்டிக் கொள்ள வேண்டாமா? உங்கள் தாயார், சகோதரி,மனைவி, மகள்கள் பார்ப்பானக்கு வைப்பாட்டி, காமக் கிழத்தி ஆனவர்கள் அல்ல, ஆக வேண்டியவர்கள் அல்ல என்பதைக் காட்டிக் கொள்ள வேண்டாமா?

இதற்காக நான் 45 ஆண்டுகளாகப் பாடுபட்டு வருகின்றேன். அதன் பலன் இதுவாகவாவது (இந்தப் படங்களை அப்புறப்படுத்தவாவது) பயன்பட்டது என்று இருக்க வேண்டாமா?

நம் நல்வாய்ப்பாக தி.மு.க. ஆட்சி ஏற்பட்டது. அதை ஒழியும்படி செய்தீர்கள். ஆனால் பிறகு உங்கள் கதி என்ன ஆவது? நாணும் இனியும் (90-இக்கு மேல்) வாழ முடியுமா? எனக்கு அப்புறம் உங்களுக்கு இதை யார் சொல்லுவார்கள்? தி.மு.க. ஆட்சிக்கு அப்புறம் யார் இந்த உத்தரவு போடுவார்கள்? எல்லோரும் மாறான காரியத்தை அல்லவா செய்வார்கள்! நீங்கள் பழைய நிலைக்குத்தான் போக வேண்டி இருக்கும். ஆகவே எனக்கு 90-வது ஆண்டு பிறந்த நாள் பரிசாக இதையாவது செய்யுங்கள். செய்து காட்டுங்கள் என்று வணங்கிக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

இதுகிடைக்கப் பெற்ற ஒவ்வொருவரும் இதை மற்றவருக்குப் படித்துக் காட்டுங்கள்.

 90-வது பிறந்தநாள் மலர் 17.9.1968

பெரியார் 89 - (1967)

 எனக்கு இன்று முதல் 89-வது வயது தொடங்குகிறது. என் வாழ்வு எவ்வளவோ கவலை, தொல்லை துன்பங்களுக்கு ஆட்பட்டதாய் இருந்தாலும் சராசரி மக்கள் வாழ்க்கைக்குக் குறைந்ததாய் இல்லாமல் மேம்பட்ட வாழ்வாகவே நடந்திருக்கிறது. நான் சிறுவயது முதற்கொண்டே சுதந்திர எண்ணமுடையவனாகவும் நான் சொல்கிறபடி மக்கள் நடக்கவேண்டுமென்கின்ற உணர்ச்சியுள்ளவனாகவுமிருந்தே வாழ்ந்திருக்கிறேனே ஒழிய, மற்றொருவர் சொல்கிறபடி நடக்க வேண்டுமென்கிற எண்ணமற்றவனாகவே இருந்திருக்கிறேன். இன்றைக்கும் அப்படியே இருக்கிறேன். எனது சரித்திரத்தில் எனக்குத் தலைவனே இருந்ததில்லை.

எனது பத்தாவது வயதில் பிரைமரி நான்காவது வகுப்பு பாஸ் செய்து விட்டு வியாபாரத் துறையில் எனது தகப்பனார் மண்டிக் கடையில் கையாளாக ஆகிவிட்டேன். என் குழந்தைப் பருவத்தில் என் தாயாருக்கு உள்ள இரண்டு குழந்தைகளில் நான் இரண்டாவது குழந்தையாக இருக்கும் போது என்னை என் தகப்பனாருடைய சிறிய தாயாருக்கு வளர்த்துக் கொள்ளும் படி `தத்து’ போல் கொடுத்துவிட்டார்கள். அதனால் நான் ஒரு அடங்காப் பிடாரியாகவும், தறுதலை என்று சொல்லும்படியாகவும் சில சமயங்களில் ஒரு நாள் இரண்டு நாள்கூட வீட்டுக்கு வராமல் ஊர் சுற்றிக் கொண்டு திரிபவனாகவும் இருந்திருக்கிறேன். அப்போது என் வளர்ப்புத்தாய் நான் என்னைப் பெற்ற தாய் வீட்டிற்குப் போயிருப்பேனோ என்று தேடாமலும் கவலைப்படாமலும் இருந்து விடுவார்கள். இப்படிப்பட்ட என் சிறுவயதில் இது போன்ற சில பையன்கள் சேர்க்கை எனக்குண்டு. அந்தச் சேர்க்கைக் கூட்டத்திற்கு நான் தான் மேலாளாக (தலைவனாக) இருப்பேன். தெரு சுற்றிக்கொண்டு இருப்பதில் சாதி பார்ப்பதோ, எச்சில், சுத்தம், அசுத்தம் பார்ப்பதோ கிடையாது. எச்சில் பீடியைப் பொறுக்கிவந்து பீடி புகைப்போம். அப்பொழுது குழந்தைகளுக்குச் சாந்தி கழிப்பது என்ற வழக்கம் அதிகம். அமாவாசை, …hயிற்றுக் கிழமை வரும் அமாவாசை மற்றும் சில `விசேஷ’ நாட்களில் சாந்தி கழித்து அந்தச்  சாந்திப் பண்டங்களை முச்சந்தியில் கொண்டுவந்து கொட்டிவிட்டுப் போய்விடுவார்கள்.நாங்கள் அவைகளில் உள்ள பண்டங்களைப் பொறுக்கி எடுத்து வந்து பங்கு போட்டுக் கொண்டு சாப்பிடுவோம். பத்து வயதாகி கடைக்குக் கையாளாக ஆனவுடன் இந்த நேசமும் பழக்கமும் மறைந்துவிட்டது. என்றாலும், கடைக்கு வருகிறவர்களுடன் பெரிய வாயாடிபோல் பேசிஅரட்டை அடிப்பதில் பழக்கம் அதிகமாகி, யாரும் என்னை விரும்பும்படி ஆகிவிட்டேன். கடை,வியாபாரம் என்றால் அது தரகுமண்டி வியாபாரம். அதாவது, கிராமத்து மக்கள், மிளகாய்,மஞ்சள் மற்றும் விளைந்த தானியங்கள் முதலியவைகளைக் கொண்டுவந்து எங்கள் கடையில் போட்டு விற்றுக் கொடுக்கச் சொல்லுவார்கள். இது போலவே, சில கிராம வியாபாரிகளும் , கிராமங்களிலும், கிராமச் சந்தைகளிலும் வாங்கிய சரக்குகளை எங்கள் கடையில் போட்டு விற்றுக் கொடுக்கச் சொல்லுவார்கள். இப்படியாக  ஒரு நாளைக்குச் சராசரி இருபது பேர், முப்பது பேர் வருவார்கள். சில நாளைக்கு அய்ம்பது பேர் கூட வருவார்கள். இவர்களிடம் அரட்டை அடிப்பதுதான் என் ஒழிந்த நேர வேலை. இந்த அரட்டை எங்கள் கடைக்கும் வீட்டிற்கும் காசு பெற வரும் பக்தர்கள், புலவர்கள், பாகவதர்கள், சன்னியாசிகள் இவர்களிடமும் அவர்கள் வேஷத்தையும் அவர்கள் பேசும் விஷயங்களையும் பற்றிக் கேலி செய்யும் படியும் வளர்ந்துவிட்டது.

இப்படிப்பட்ட அரட்டையும் வாதமும் தான் 1900-இலேயே அதற்கு முன்பே என்னைப் பகுத்தறிவுவாதியாக (நாத்திகனாக) ஆக்கிவிட்டது. அப்படியிருந்தாலும் ஆத்திகமான காரியங்களில் கலந்து கொள்வதில் நான் பின்வாங்குவதில்லை. அதில் ஏற்படும், அதனால் வரும் பெருமைகளை அடைவதில் நான் தவறுவதில்லை. காரணம், அக்காலத்தில் ஈரோட்டில் எங்கள் கடைதான் பெரிய கடை. எங்கள் வீடுதான் பெரியவீடு. எங்கள் தகப்பனார்தான் ஊருக்குப் பெரிய மனிதர். ஒரு அளவுக்குப் பணக்காரருங் கூட. இந்த நிலையில் எல்லாக் காரியங்களிலும் கலந்து கொள்வது போல ஆத்திகக் காரியங்களிலும் கலந்து கொள்வேன்.

நான் தேவஸ்தான கமிட்டி செகரட்டரியாக, தலைவனாக 15 ஆண்டு போல் இருந்திருக்கிறேன். அந்தக் கடமைகளில் நான் தவறவில்லை. ஆனாலும், மக்கள் மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டுமென்பதிலும் மக்களைப் பகுத்தறிவுவாதிகளாக ஆக்க வேண்டுமென்பதிலும் எனக்கு 1925 ஆம் ஆண்டு முதல் உறுதியான எண்ணமும் ஆசையும் உண்டு. இதற்குக் காரணம், ஆத்திகத்தினால் (கடவுள், மத நம்பிக்கை ஆதிக்கத்தால்) தான் இந்த நாட்டில் சாதி (பார்ப்பான் `பிராமணணாய்’ வாழ்வதும்) அரசியல், மத ஆதிக்கத்தில் பார்ப்பான் இருந்து கொண்டு சமுதாய வளர்ச்சியையும், அறிவு (விஞ்…hன) வளர்ச்சியையும் தடைசெய்து கொண்டு இருக்கிறான் என்பதும் எனது உறுதியான எண்ணம் என்பதோடு, நான் எந்த ஸ்தாபனம் வைத்திருந்தாலும் எந்தக் கட்சியை ஆதரித்தாலும், யாரோடு சேர்ந்தாலும் யாரை விரோதித்தாலும் அவற்றிற்கெல்லாம் இதுவே காரணம். இப்போதும் காங்கிரஸ்காரர் பலரை ஷௌவறுக்கிறேன் என்றாலும் தி.மு.க.காரர் பலரை நேசிக்கிறேன் என்றாலும் இதுவேதான் காரணம். இந்திய சரித்திரத்திலேயே புத்தன், அசோகன் ஆட்சிக்குப் பிறகு நமது நாட்டுக்கு இன்றுதானே பகுத்தறிவாளர் (நாத்திகர்) ஆட்சி ஏற்பட்டிருக்கிறது. இதை ஆத்திகர் எதிர்க்கலாம். ஆனால் பகுத்தறிவாளர் (நாத்திகர்) என்பவர்களின் கடமை என்ன?

அரசியல் `குற்றம் குறை’ என்பது யாருடைய ஆட்சியிலும் எந்த அளவுக்காவது நடந்துதான் தீரும். அக்காலத்தில் ஜஸ்டிஸ் (திராவிடர் கழக) ஆட்சியைக் காங்கிரஸ்காரர்கள் எப்படியெப்படி எல்லாம் எதிர்த்தார்களோ (`தாலியறுத்தார் இராமசாமி முதலியார்’ என்று சொல்லி) அப்படி எல்லாம் இப்போதும் சொல்லுவார்கள்; எதிர்ப்பார்கள்; தப்புப் பிரச்சாரம் செய்வார்கள்; நல்ல காரியம் எதையும் செய்துவிடாமல் தடுப்பார்கள்; கலகம், குழப்பம் செய்வார்கள். நமது மக்களுக்கு அவற்றை உணரும் சக்தியில்லை; இருக்காது. 

என்றாலும் இதில் சுயமரியாதை இயக்கத்தார்-திராவிடர் கழகத்தார் கடமை என்ன என்பதை நல்ல வண்ணம் சிந்தித்து நடந்து b.காள்ள வேண்டும். இந்தியாவில் சரிபகுதி காங்கிரசிற்கு எதிர்ப்பாகி விட்டது. என்றாலும், காங்கிரசார் மக்களைத் தங்கள் பக்கம் திருப்ப மக்களிடம் பிரச்சாரம் செய்வதை விட்டுவிட்டு, எதிர்ப்பு ஸ்தாபனங்களை அழிக்கப் பாடுபடுகிறாரகள். இது `தும்பை விட்டு வாலைப் பிடைக்கிற கதை’யாகத்தான் முடியும்.

 காங்கிரசார் தங்களைப் பகுதிதறிவுவாதிகள் என்று காட்டிக் கொள்ளாதவரை நாம் எப்படி இன்று காங்கிரசை ஆதரிக்க முடியும்?

தி.மு.க.காரரும் என்ன செய்தாவது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்கின்ற ஆர்வத்தில், தங்கள் இருக்கும் படகில் ஓட்டை ஏற்படி செய்து கொள்வதும் ஒரு வழியென்று நினைப்பார்களானால் அது தங்களைக் காப்பாற்றிக் கொள்வதாகாது. மூழ்கடித்துக் கொள்வதுதானாகும். அவர்கள் முயற்சியில் கூடியவரை சுயமரியாதைக்காரரையும் திராவிடர் கழகத்தாரையும் விரோதித்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; தங்கள் மக்களுக்கு அடக்கத்தைப் போதிக்க வேண்டும்; சிறு தகராறு, கோளாறுகளைச் சிறிது விட்டுக் கொடுத்தாவது பொறுமை காட்டி சரிப்படுத்திக் கொள்ள வேண்டும். இன்ணும் இக் கூட்டத்திலும் தங்களை ஒருவருக்கொருவர் விரோதிகள் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் சிலர் இருக்கிறார்கள்; அது தவறு. இன்று பார்ப்பனரும் காங்கிரசாரும் ஒன்றாகிவிட வில்லையா? ஒருவருக்கொருவர் எவ்வளவு சிபாரிசு! எவ்வளவு ஆதரவு! அந்தப் புத்தி நமக்கு வரவேண்டாமா? தலைவர்களுக்கு மிக்க பொறுப்பு வேண்டும். என்னைப் பொறுத்தவரை நான் அடக்கிக் கொண்டுதான் வருகிறேன். ஒரு நாள், இரண்டு நாள் அல்ல. இன்ணும் நாலரை வருடம் இருக்கிறது. அடுத்த எலக்ஷன் எப்படி ஆனாலும் எனக்குக் கவலையில்லை. அதுவரை தி.மு.க. ஆட்சி நல்ல படி நடக்க வேண்டும். பல அரிய காரியங்களைச் செய்ய வேண்டும். கட்டுப்பாடு, ஒற்றுமை, எதிர்க்கட்சியாரிடம் பொறுமை, அடக்கம் வேண்டும். நமதுதோழர்கள் இனி பகுத்தறிவுப் பிரச்சாரத்தில்தான் கவலை கொள்ள வேண்டும். மக்களிடம் இலட்சக் கணக்கில் அவர்கள் பகுத்தறிவுவாதிகள் என்று கையொப்பம் வாங்க வேண்டும். கையொப்பம் வாங்க அலவன்ஸ் கொடுத்துத் தொண்டர்களை நியமிக்க வேண்டும். தங்களுக்கு வேலை இல்லை என்று யாரும் நினைக்கக் கூடாது. இதுதான் நமது நிர்மாணத்திட்டம்.

எனது காயலா சற்றுக் கடினமாதுதான். எளிதில் குணமாகாது. மூத்திர வழியில் கற்கள் இருக்கின்றன. அவை கரைய மாதக் கணக்கில் காலமாகும். ஒரு சமயம் ஆபரேஷன் (அறுவை சிகிச்சை) தேவை இருந்தாலும் இருக்கலாம். ஆனாலும் நான் பயப்படவில்லை. எதற்கும் தயாராக இருக்கிறேன். மணியம்மையார் கவனிப்பும் உதவியும் அளவிடற்கரியது. உங்கள் கடமையிலிருந்து தவறாதீர்கள்! 

(89வது பிறந்த நாள் விழா மலர் 17.9.1967)

பெரியார் 87 - (1965)

 நான் 1925 ஆம் ஆண்டில் காங்கிரஸிலிருந்து விலகிய பின், அரசியல் என்பது நமது நாட்டைப் பொறுத்துவரையில் பார்ப்பன ஆதிக்கத்திற்குப் பார்ப்பனரால் நடத்தப்படும் போராட்டமேயொழிய, பொதுஜன நன்மைக்கேற்ற ஆட்சிமுறை வகுப்பதற்கோ அல்லது வேறு எந்த விதமான பொதுநல நன்மைக்கேற்ற லட்சியத்தைக் கொண்டதோ அல்ல ;எனபதைத் தெளிவாக உணர்ந்து, அப்படிப்பட்ட பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்பதையும் எந்தக் காரணம் கொண்டும் நமது நாட்டில் இனியும் பார்ப்பன ஆதிக்கம் ஏற்பட இடம் கொடுக்கக் கூடாது என்பதையும் கருதி, பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஊற்றாக இருந்து வரும் கடவுள், மதம், சாதித் தத்துவங்களையும், இந்தத் தத்துவத்திற்கு இடமாகவிருக்கிற மூட நம்பிக்கையையும், மூட நம்பிக்கையை அரசியல், கடவுள், மதம், சாத்திரம், தர்மம் ஆகியவற்றின் பேரால் வளர்க்கும் பார்ப்பன சமுதாயத்தையும் ஒழிப்பது என்ற கொள்கை மீது ‘சுயமரியாதை இயக்கம்’ என்பதாக ஒரு இயக்கத்தைத் தோற்றுவித்து, நானே தோற்றுவித்தவனாகவும், தொண்டாற்றுபவனாகவுமிருந்து பல தோழர்களின் ஆதரவுபெற்று அதை நடத்தி வந்தேன். இந்த நிலையில் காங்கிரசானது, அரசியல் ஆதிக்கத்தில் பிரவேசிப்பதில்லை என்றும் , சமுதாயத் தொண்டேதான் காங்கிரசின் பிரதான கொள்கையென்றும் சொல்லி, நிர்மாணத் திட்டம் என்ணும் பேரால் பொய் நடிப்பு நடித்து மக்களை ஏமாற்றி வந்த (காங்கிரஸ்) தனது வேடத்தை மாற்றிக் கொண்டு அரசியல் ஆதிக்கத்தைக் கைப்பற்றத் துணிந்து, வெளிப்படையாகவே அரசியலில் புகுந்து ஆட்சியைக் கைப்பற்றற முன் வந்து விட்டதையும் உணர்ந்தேன்.

பிறகு எனது நிலை மேலே குறிப்பிட்டபடி கடவுள், மதம்,சாதி, தர்ம, சாத்திர சம்பிரதாய, பார்ப்பன சமுதாய ஒழிப்பு வேலைகளுடன், அரசியலில் பார்ப்பனர் நுழையாதபடியும், ஆதிக்கம் பெறாமல் இருக்கும் படியும் தொண்டாற்றவேண்டிய அவசியத்திற்கு ஆளாக நேரிட்டுவிட்டது. அதாவது, இவ்வளவு துறையிலும் பாடுபட வேண்டியதே எனக்குச் சமுதாயத் தொண்டாக ஆகிவிட்டது. இதன் பயனாய் எனது வேலை இரட்டித்து விட்டதுடன், எதிர் நீச்சல் போல் மிக மிகக் க·டமான காரியமுமாகிவிட்டது. எப்படி எனில் நான் கடவுள், மத, சாஸ்திர, சம்பிரதாய, சாதித் துறையில் பாடுபட்டால் எதிரிகள் (பார்ப்பனர்) அரசியல் துறையில் முன்னேறிவிடு கிறார்கள். அரசியல் துறையில் பாடுபட்டால் எதிரிகள் கடவுள், மத சாஸ்திர, சம்பிரதாய சாதித் துறையில் முன்னேறிவிடுகிறார்கள். ஆதலால், இரு துறை களில் மூட நம்பிக்கையுள்ள பாமர மக்கள் இடையில் வேலை செய்வ தென்பது எனக்கு மேற்சொன்னபடி மிகமிகக் க·டமாகவும் காட்டு வெள்ளத்தில் எதிர் நீச்சல் போடும் வேலை போலும் திணற வேண்டி யதாகிவிட்டது.

இதற்கிடையில் எனக்கேற்பட்ட மற்றொரு மாபெரும் தொல்லையென்ன வென்றால், என் தொண்டுக்கு ஆதரவாகச் சேர்த்து எடுத்து அணைத்துப் பக்குவப் படுத்திவந்த தோழர்கள் எல்லாம் 100-க்கு 100 பேரும் பக்குவம் அடைந்தவுடன், விளம்பரம் பெற்றுப் பொதுமக்கள் மதிப்புக்கு ஆளானவுடன் அத்தனைபேரும் எதிரிக்குக் கையாள்களாகவே (எதிரிகளால் சுவாதீனம் செய்யப்பட்டு) எதிரிகளுக்குப் பலவழிகளிலும் பயன்படுபவர்களாகி விட்டதோடு. எனக்கும் எனது தொண்டிற்கும் எதிரிகளாக, முட்டுக்கட்டை களாகப் பலர் விளங்க வேண்டியவர்களாகிவிட்டார்கள். இதற்குக் காரணம் (பிரகலாதன், விபீஷணன் போல்) நமது `சாதிப்பிறவி’த் தன்மைதான் என்று சொல்ல வேண்டியதைத் தவிர எனது 40வருட பொதுத் தொண்டின் அணுபவத்தில் வேறொன்றும் சொல்ல வேண்டியதைத் தவிர, எனது 40 வருட பொதுத்தொண்டின் அணுபவத்தில் வேறொன்றும் சொல்ல முடிய வில்லை.

இந்த நிலையில், நான் 40 ஆண்டுகளாகத் தொண்டாற்றிவந்து இன்றுள்ள நிலையில் எனது தொண்டின் பயணும், நிலையும் இருக்கிறதென்றால் என்னைப் பற்றி அறி…ர்கள்தான் விலைமதிக்க வேண்டும்.

என்னை விட்டு விலகி எதிரிகளானவர்கள், எதிரிகளின் கையாள் களானவர்கள்-ஒழுக்கத்தில் என் மீது குற்றமிருந்து என் நடத்தையில் கோளாறு இருந்து விலகி இருப்பார்களேயானால் அதற்காக நான் வெட்கப்பட வேண்டியதுதான் நியாயமாகும். ஆனால், விலகியவர்கள் அத்தனை பேரும் எதிரிகளோடு சேர்ந்தார்கள் என்பது மாத்திரமல்லாமல், எந்தக் கொள்கைக்காக என்ணுடன் இருப்பதாக நடித்தார்களோ அதை அடியோடு விட்டுவிட்டு நேர் எதிரிடையான கொள்கையை மேற்கொண்டும், அதற்கு ஆக்கமளிக்கும் எனக்கு முட்டுக்கட்டை போட்டு வருவதுதான் நமது சமுதாயத்திற்கென்றே ஏற்பட்ட கெட்ட வாய்ப்பாகும் என்று மறுபடியும் சொல்ல வேண்டி இருக்கிறது. இந்தநிலை ஒரு புறமிருக்க,

இந்தியாவிற்குச் சமீபத்தில் வந்துபோன ஒரு ர·யப் பிரமுகரை ஒரு பார்ப்பனர் `இந்தியாவிற்கு யார் வந்தாலும் சங்கராச்சாரியாரைப் பார்த்துவிட்டுப் போவதுதான் முக்கிய காரியம்’ என்று சொல்லி, சங்கராச்சாரியாரிடம் அழைத்துப்போனாராம்!. அந்த ர·யர் சங்கராச்சாரி யாரிடம் பல விஷயங்கைப் பற்றிப் பேசிவிட்டுக் கடைசியாக,`உங்கள் நாட்டில் உங்கள் மத சம்பிரதாயத்திற்கும் உங்கள் சம்பிரதாயத்திற்கும் விரோதமாக பெரியார் ஒரு இயக்கம் நடத்துகிறாரே, அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்று கேட்டாராம். அதற்குச் சங்கராச்சாரியார் `ஆமாம். அப்படி ஒரு இயக்கம் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது என்றாலும் அது இன்றைக்குப் பதினேழு வருடங்களுக்கு முன் வரையில் நாங்கள் மிகக் கவலை கொள்ள வேண்டிய அளவுக்கு நடந்தது. ஆனால், இந்தப் பதினேழு வருடமாக (1948 ல் இருந்து) எங்களுக்கு அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லாதநிலை ஏற்பட்டுவிட்டது. அதன் பாட்டுக்க அது நடைபெறுகிறது என்றாலும் இன்று அதனால் எங்களுக்கு எந்தவிதத் தொந்தரவும் இல்லை’ என்று சொன்னாராம்.

`இப்படி அவர் சொல்லக் காரணம் என்ன?’ என்று அந்த ர·யர் என்னிடம் வந்து கேட்டார். அவர் இப்படி என்னைக் கேட்கும் போத ஒரு பார்ப்பனரும் கூட இருந்தார். அதற்கு நான் சொன்ன பதில்: `அது ஒரு நல்ல அளவுக்கு உண்மைதான். அது பார்ப்பனருக்கு வந்த சுதந்திரமேயாகும் என்பதோடு அதன் பயனாய் நம்மிலிருந்து விளம்பரம் பெற்ற, மக்களிடம் செல்வாக்குப் பெற்ற ஒரு கூட்டம் பார்ப்பனருக்கு (நல்ல நிபந்தனையற்ற) அடிமைகளாகக் கிடைத்துவிட்டது. இந்த இரண்டின் ஆதரவில், பார்ப்பனர்கள் இழந்ததையெல்லாம் பெற்றுக் கொண்டதோடு மேலேறவும் அவர்களுக்கு நல்ல வசதி ஏற்பட்டுவிட்டது.

இது மாத்திரமல்லாமல், நாணும் இப்படிப்பட்ட பார்ப்பன சுதந்திரத்தை எதிர்க்கும் வேலையை விட்டுவிட்டு, இராஜாஜியை ஆட்சியை விட்டு வெளியேற்றி விட்டோம் என்ற ஆணவத்தாலும் காமராசரிடத்தில் வைத்த அளவுக்கு மீறிய நம்பிக்கையாலும் `சுதந்தரத்தை’, காங்கிரசை, அரசாங்கத்தை ஆதரிக்கும் பணியில் தீவிரமாக நிபந்தனையற்றுப் பாடுபட்டு வந்ததாலும், காமராசர் ஆட்சியை விட்டுப்போய்விட்டதாலும், அதற்குப் பிறகு `அசல் பார்ப்பனிய’ ஆட்சியே தங்குதடையின்றி நடந்து வருவதாலும் இதன் பயனாய்ச் சமுதாயத் துறையிலும் மதத் துறையிலும் உத்தியோகத் துறையிலும் கல்வித் துறையிலும் யாதொரு குறைவுமில்லாமல் மேலே போகும்படியான நிலையில் அவர்கள் (பார்ப்பனர்கள்) நிலை இருப்பதாலும் சங்கராச்சாரியார் அவ்விதம் கூறி இருக்கிறார். மற்றும் இன்றைய ஆட்சியின் பயனாய் நம் சமுதாயத்திற்கு எவ்வளவு கேடும் இழிவும் ஏற்பட்டாலும் அதை மனதார வெளியில் சொல்லி அழுது திருப்தியடையக் கூட வாய்ப்பில்லாத நிலையில், நான் காங்கிரசை ஆதரித்துத் தீரவேண்டியவனாய் இருக்கிறேன். இது பார்ப்பனர்களுக்கு இலாபகரமான விஷயமாகிவிட்டது’ என்று பதில் சொன்னேன். ர·யப் பிரமுகர் இது கேட்டுப் புன்சிரிப்புடன் பரிதாபப்பட்டார்.

நிற்க, இன்றைய `சுதந்திர’ ஆட்சி ஒரு மதப் பாதுகாப்பு ஆட்சியாகவே ஆட்சி நடத்துகிறது. இதைப் பயனனிக்கும் படியான அளவுக்குக் கிளர்ச்சி செய்யவோ கண்டிக்கவோ தக்கபடி எதிர்ப்பிரச்சாரம் செய்யவோ கூட தொண்டாற்ற முடியவில்லை. பத்திரிக்கைகள் யாவும் கூண்டோடு பார்ப்பன ஆதிக்கப் பிரச்சாரத்தில் இறங்கி விட்டன. ரேடியோ, சினிமா, ஜோசியம், புராணம், உற்சவம், காலட்சேபம் ஆகியவைகளையே விளம்பரம் செய்யும் சாதனங்களாக, ஒன்றுகூட விலக்கில்லாமல், எல்லாப் பத்திரிகைகளும் விளங்குகின்றன. இரா·டிரபதி, கவர்னர் உட்பட எல்லா மந்திரிகளும் கோவில், பக்தி பிரச்சாரம் செய்து வருகின்றார்கள்! அதிகாரிகள் நியமனம் பெறவும் தங்கள் குற்றங்களை மறைத்துக் கொள்ளவும், பிரமோஷன்கள் பெறவும் மந்திரிகளையேதான் பின்பற்றுகிறார்கள். காங்கிரசிலுள்ள மெம்பர்கள், காங்கிரஸ்காரர்கள் 100-க்கு 90-க்கு மேற்பட்டவர்கள் தங்களின் உண்மை நிலையையும், நிறத்தையும் மறைத்துக் கொள்ள மந்திரிகளைப் பின்பற்றுவதுடன் பக்தகோடிகளாக விளங்குகிறார்கள். சமுதாய நலம் காரணமாகவே பார்ப்பனர்கள் கூண்டோடு காங்கிரசை ஒழித்துக் கட்ட, தோல்வியடையச்செய்யப் பாடுபட்டாலும், அப் பார்ப்பன சமுதாய நலத்திற்கேற்ப எல்லாக் காரியங்களையும் நமது ஆட்சி மூலம் நிறைவேற்றிக் கொள்ள மந்திரிகளும், அதிகாரிகளும், காங்கிரஸ்காரர்களும் தெரிந்தோ,தெரியாமலோ அவர்களுக்கு எல்லாவித உதவியான காரியங்களையும் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் எனது தொண்டு இப்படிப்பட்ட காங்கிரசை-மந்திரிகளை-அதிகாரிகளை `பாதுகாப்பதற்கு’ எனபதல்லாமல் வேறு எதற்குப் பயன்படக் கூடுமென்பது எனக்கு விளங்கவில்லை. இந்த நிலையில் எனக்குள்ள ஆறுதல் என்னவென்றால், இவ்வளவு எதிர்ப்பிலும், ஏமாற்றத்திலும் எனது தொண்டுக்குச் சாதனமாகவிருக்கும் சுயமரியாதை இயக்கத்திலும், திராவிடர் கழகத்திலும் சுயநலமற்று தன்னலத் தியாகத்துடன் எவ்விதப் பிரதிபிரயோஜனத்தையும் எதிர்பாராமல், ஒழுக்கம், நாணயம் என்பதில் இருந்து ஒரு சிறிதும் வழுவாமல், தமிழ் நாட்டில் சென்னை முதல் குமரிவரை ஒவ்வொரு குறிப்பிட்ட இடங்களிலும் ஆர்வமும் முயற்சியும் உள்ள தோழர்கள்  நல்ல அளவுக்கு இருந்து எனக்கு ஆதரவளித்து உற்சாகமூட்டு வதுடன், நெறி தவறாமல், படிந்து தொண்டாற்றுவதுதான் எனக்கு உயிரூட்டி, சலிப்படையாமல் உழைக்கச் செய்து வருகிறது. மேலும், நமது இயக்கத்தால், உழைப்பால் மனித சமுதாயத்தின் நடத்தையில் பெரிய மாறுதல் ஏற்பட்டு விடவில்லை என்றாலும் பெரவாரியான மக்களுக்கு மனமாற்றம் ஏற்பட்டி ருப்பதை உணருகிறேன். மற்றும் நம் எதிரிகளாக பார்ப்பனர் `எங்கள் நிலைமை இப்போது சீரடைந்த விட்டது. இனிப் பயப்படத்தேவையில்லை’ என்று சொன்னாலும் அது வாயளவில் கொள்ளும் தைரியமே அல்லாமல் மன அளவில் அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் நடத்தையில், முயற்சியிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இன்று என்றுமில்லாத அளவுக்குக் கோவில் திருப்பணி, கோவில் உற்சவம், கோவில் கும்பாபிஷேகம், புதுக்கோவில் உண்டாக்குதல், புராணப்பிரச்சாரம் செய்தல்; கவர்னர், மந்திரி முதலியவர்களை ஸ்தலயாத்திரை செய்யச் செய்தல்; இவைகளைப் பற்றிய விளம்பரங்களைப் பெரிய அளவில் செய்தல்; பத்திரிகைகளில் எல்லாம் கடவுள் பிரச்சாரம் கடவுள் கதைப் பிரச்சாரம், மதப்பிரச்சாரம், சாஸ்திர தர்மப் பிரச்சாரம், பஜனை, காலட்சேபம் செய்தல் முதலிய காரியங்களில் எப்போதையும் விட அதிகமாக-மிகமிக அதிகமாக ஈடுபட்டிருக்கிறார்கள். அரசாங்கத்திலும், இன்று மக்களின் மூடநம்பிக்கையால், முட்டாள் தனத்தால் சமுதாயத்தில் மிகமிகச் சிறுபான்மையாராகிய `பெரிய சாதியாரும்’ பணக்காரர்களும் `பெரிய படிப்புக்காரர்’ என்பவர்களும் சூழ்ச்சியால் பெரிதும் மந்திரிகளாக இருக்கிறார்கள். ஆனால், இவர்களுக்கு ஓட்டுச் செய்பவர்கள் இவர்களைப் போல் 30 பங்கு அதிகமான சமுதாயத்தில் கீழ் நிலையிலிருக்கும் மக்களாக இருக்கிறார்கள். ஆனதால் , மக்களை மூட நம்பிக்கையிலிருந்து ஈடேறாமல் செய்து, மேலும் மேலும் மடையர்களாக ஆக்கி, இன்றுள்ள நிலைமையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்பதற்காகவே செய்கிறார்கள் என்றால், மேல் நிலையிலுள்ள சிறுபான்மையோருக்குப் பயம் வந்துவிட்டது; பயத்தால் துடிக்கிறார்கள் என்றுதானே ஏற்படுகிறது.

நாட்டில் படிக்காத நல்ல படிப்பு வாசனை அற்ற மக்கள் 100-க்கு 80 பேர் இருக்கிறார்கள். அது போலவே உழைப்பாளி, ஏழை மக்கள் 100-க்கு 80 பேர் இருக்கிறார்கள்.சமுதாயத்தில் கீழ்சாதி மக்கள் எனப்படுவோர் 100-க்கு 90-க்கு மேற்பட்ட மக்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் மேல்சாதிக்காரர்களும் பணக்காரர்களும், படித்தவர்கள் என்று சொல்லப்படுபவர்களும் ஆட்சியிலும், ஆதிக்கத்திலும் இருக்கிறார்கள் என்றால் இந்த நிலையை ஜனநாயக சுதந்திரமென்றால், மேலே குறிப்பிட்டப்படி இதற்கு மக்களின் முட்டாள் தனமும் மூட நம்பிக்கையுமல்லாமல் வேறு என்ன காரணம் சொல்ல முடியும்? ஆதலால்தான் மக்கள் அறிவு பெற்றுச் சுயமரியாதைக்காரர்களாகி விட்டால் தங்களின் இன்றைய நிலை என்ன ஆவது என்கின்ற பயம் ஆதிக்ககக் காரர்களுக்கு ஏற்படும் அளவுக்காவது நமது தொண்டு பயன்பட்டிருக்கிறது என்று சொல்லித்தானாக வேண்டும். என்றாலும், செய்ய வேண்டிய அளவுக்கு  நாம் செய்ய வேண்டியதைச் செய்யவில்லை. இமயமலை பனிக்கட்டி யால் குளிரில் அவஸ்தைப்படுகிறது என்று கருதி சால்வையை மலைக்குப் போர்த்துகிறவனைப் போல், நாம் காங்கிரஸைக் `காப்பாற்றுகிற’ வேலையில் ஈடுபட்டு, சமயத்துறையில் பெரிய அளவுக்கு ஏற்பட்டிருக்க வேண்டிய நன்மையை-மாறுதலை இழந்து விட்டோம் என்பதை நாம் ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும்.

நாம் காங்கிரசைக் `காப்பாற்றும்’ தொண்டில் இறங்காமலிருந்து, இந்த 10,12 வருடத்தில் காங்கிரசை எதிர்த்து இரண்டு மூன்று முறை பதினாயி ரக்கணக்கில் சிறை சென்றிருந்தால் `வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ’ முறையில் கண்டிப்பாய் நல்ல அளவிற்கு வெற்றி பெற்றிருப்போம். கல்வித் துறையில் மேலும் முன்னேறி இருப்போம். சமுதாயத்துறையில் சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும்படியாகவும், முழு ஆலயப் பிரவேசம் முதலிய உரிமை பெறவுமான பல உரிமைகள் பெற்றிருப்போம். நீதித்துறையில்  வக்கில்களின் தொல்லையை நல்லஅளவுக்குக் குறைத்துக் கொண்டிருப்போம். இந்த காரியங்கள் ஈடேறாமல் இருப்பதற்குக் காரணம், நமது கவனத்தை வேறு வழியில் திருப்பிக் கொண்டது பெரும் காரணமாகும். இப்போதும் நாம் இனியும் ஒன்றரையாண்டு காலத்திற்க -18 மாதங்களுக்கு இந்தப் போக்கிலேயே இருக்க வேண்டியவர்களாய் இருப்பதால் அதற்குள் நமது வெகுதூரம் பாதிக்கப்பட்டு எதிரிகள் மிகவும் வளர்ந்து விடுவார்களே என்று அச்சப்பட வேண்டியவர்களாகத்தான் இருக்கிறோம். நமது தொண்டுக்காக நமக்கு-நமது இலட்சியத்திற்குச் செய்யாவிட்டாலும், நன்றி காட்டாவிட்டாலும் நமது இலட்சியத்துக் கேடு பயக்கும் பணியையாவது காங்கிரஸ் ஆட்சி செய்யாமல் இருக்கலாம். ஆனால், அப்படிக்கல்லாமல் நம்மால் காங்கிரசுக்கு-ஆட்சிக்கு `ஒரு பயணுமே ஏற்படவில்லை,தொல்லைகள் தாம் ஏற்படுகிறது’ என்று காங்கிரஸ் கட்சி கருதுகிறபோது, நமது நிவர்த்தி இல்லாத முட்டாள்தனத்தைப் பற்றி வெட்கப்பட வேண்டியதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்?

இன்று காங்கிரசுக்கு எதிராக எப்படியாவது காங்கிரசை-காங்கிரஸ் ஆட்சியை ஒழித்துக் கட்டுவது என்கின்ற இலட்சியத்தில் பொதுமக்களுக்கும் ஆட்சிக்கும் எவ்வளவோ கொடுமைகளையும், துரோகங்களையும் நாசங்களையும், நட்டத்தையும் கொடுத்துவரும பல வசதிகளையும் நடப்புரிமைகளையும் பெற்றுவருகிறார்கள். எனவே, நமது தொண்டு-எனது தொண்டு எதிரிகள் நகைக்கும் படிதான் பலனளித்தது என்று சொல்லி வெட்கப்படுகிறேன்.

ஆகவே, இனி நமது தொண்டு அடுத்து வரும் தேர்தலில் காங்கிரசுக்கு நல்ல வெற்றி கிடைக்கும் படி செய்யவேண்டியது பெருங்கடமையானாலும் அதோடு அதைவிடப் பெருங்கடமைக் கொண்டும் தொண்டாற்ற வேண்டியவனாக இருக்கிறேன்-இருக்கிறோம் என்பதைக் கழகத் தோழர் களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

(87வது பிறந்தநாள்விழா மலர்- 17.9.1965)

பெரியார் 85 - (1963)

 சுமார் 10,15 ஆண்டுகளாக எனது பிறந்த நாள் பாராட்டுக் கூட்டம் (விழா) என்பதில் நான் பாராட்டுதலுக்கு நன்றி செலுத்தும் போது அடுத்த ஆண்டு வேலைத்திட்டம் என்பதாக ஏதாவது ஒரு திட்டத்தை வெளியிடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

அப்படி வெளியிடுவதில் நான் பெரிதும் சமுதாய சம்பந்தமான குறைபாடுகளை, மத சம்பந்தமான மூட, காட்டுமிராண்டித்தனமான கருத்து, செய்கை ஆகியவைகளைப் போக்குவதற்கு ஏற்றதான திட்டங்களையே வேலைத் திட்டமாகச் சொல்லி (வெளியிட்டு) வந்திருக்கிறேன். அப்படிச் சொல்லி வருவதில் சொல்லுவதற்கேற்ப ஒரு அளவுக்கு அது நிறைவேறும் வண்ணம் கிளர்ச்சியோ, முயற்சியோ கழகத்தின் மூலம் செய்தும் வந்திருக்கிறேன். ஆனால் அவை எல்லாம் நிறைவேற்றம் அடைந்தது என்று சொல்லுவதற்கு இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு சிறு அளவுக்காவது வெற்றியும் வெற்றி முகம் ஏற்பட்டு வருவதுடன், மக்களிடையில் அத் திட்டத்தின் அவசியம் பற்றிய உணர்ச்சி வளர்ச்சி அடைந்து வந்திருக்கிறதை நான் உண்மையாகவே உணருகிறேன்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அத்திட்டங்கள் எவ்வளவு புரட்சி கரமானதாக இருந்தாலும் அவற்றில் எதையும் வாயளவில் கூட மறுக்கும் படியான எதிர்ப்புக் காரியங்களை இது வரை நான் எந்தக் கூட்டத்தாராலும் எந்தத் துறையிலாவதும் காணவே இல்லை.

பொதுவாக, பார்ப்பனர்களுடையவும் மத உணர்ச்சியாளருடையவும் வெறுப்பைப் பெற்று வந்திருக்கிறேன் என்பதை நான் மறுக்க வில்லை.  இந்த வெறுப்புத் தன்மை எனது திட்டங்களுக்குப் பாமர மக்களாலும் கூட ஏற்படுவது என்பது அதிசயமாகாது. ஏனெனில், நம் மக்கள் 100-க்கு 90 பேர் எழுத்து வாசனை அற்றவர்கள். படித்த மக்களில் 100-க்கு 99 பேர் மூட நம்பிக்கையில் மூழ்கிப் பேராசை கொண்டவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நமது திட்டங்கள் அவர்களுடைய சுயநலத்திற்குக் கேடு ஏற்பட்டதாகவே கருதி, நம் மீது வெறுப்புக் கொண்டுதான் வந்திருக்கிறார்கள்.

இந்த வெறுப்புக்களை நான் குழந்தைகள் மருந்து சாப்பிட, தங்கள் எதிர்ப்பைக் காட்டுவது போன்றது என்று கருதி `எதிர்ப்பை’-வெறுப்பை இலட்சியம்  செய்யாமல் தொண்டாற்றியே வந்திருக்கிறேன்.

அத் தொண்டுகள் அடியோடு வீணாகிவிட்டன என்று சொல்ல முடியாமல் நாடும், கொடுமைக்கும் மடமைக்கும் ஆளான சமுதாயமும், நல்ல அளவுக்கு முன்னேறியே வருகிறதைப் பார்க்கின்றேன்.

இதற்கு எடுத்துக் காட்டு என்னவென்றால், நாடு, சமுதாயம், முன்னேற்றத்தினால் இன்று எந்தச் சமுதாயத்திற்கு `கேடு’ நெருங்கி வருகிறதோ அந்தச் சமுதாயம் தங்களது கடைசி ஆயுதத்தை இன்று பயன்படுத்த முன் வந்து இருப்பதே போதுமானதாகும்.

சாதாரணமாகச் சொல்லுவதானாலும் கடவுள், மதம் சாதி என்கின்றதான மாயப்பேய்கள் இன்று செத்துப் பிணங்களாகிவிட்டன என்றே சொல்லலாம். இவற்றில் ஈடுபட்டவர்கள், இவற்றால் பயனடைந்தவர்கள் இப்பிணங்களுக்குச் சமாதி கட்டும் வேலையில் தான் இன்று ஈடுபட்டிருக்கிறார்களே ஒழிய, கொஞ்சமாவது உயிர் இருக்கிறதென்று கருதி, யாரும் பிழைக்க வைக்க முயற்சிக்கவில்லை என்றே எனக்கு த் தோன்றுகிறது. என்றாலும் கூட இந்தச் சுயநல-மவுடீகக் கும்பல்கள் மக்களை, சமாதியைக் காட்டி ஏமாற்றிப் பிழைப்பதற்கில்லாமல் மேலும் சில வேலைசெய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்பதை நான் மறைக்கவில்லை.

ஏனென்றால் மக்களின் மடமை அவ்வளவு முதிர்ந்ததாக இருக்கிற படியாலும் எதிரிகள் கடைசி முயற்சி செய்கிறபடியாலும் நமக்கு இப்போது வேலை இல்லை என்ற சொல்லுவதற்கு இல்லை. மற்றும் நமக்கு இன்று மற்றொரு புதிய தொல்லை ஏற்பட்டி ருக்கிறது. அது என்ன தொல்லை என்றால், இது வரை நாம் பார்ப்பனர் தொல்லைக்குப் பரிகாரம் தேடும் பணியில் முனைந்து இருந்தோம். இப்போது நாம் பார்ப்பனர் மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுடையவும் கிறிஸ்துவர்களுடையவும் தொல்லையைச் சுலபமான தொல்லை என்று கருதி விட முடியாது. க·டமான தொல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

நான் இந்த 85 வது ஆண்டுக்கு வேலைத் திட்டமாக நமது சமுதாயம், நமது பார்ப் பனரல்லா சமுதாயமாகிய `4-ஆம் சாதி’ `சூத்திரர்’ என்று பார்ப்பனரால் ஆக்கப்பட்டு அதற்கு ஏற்ப இழி மக்களாகவும் கல்வி அறிவற்ற காட்டுமிராண்டி மக்களாகவும் இருக்கச் செய்யப்பட்ட நாம், கல்வி, நல்வாழ்வு, ஆட்சி உரிமை முதலாகியவற்றில் நம் சமுதாயம் (எண்ணிக்கைக்கு ஏற்ப) விகிதாசாரம் அடைய வேண்டும் என்கின்ற சில இலட்சியத்தைப் பெறும்படியான பணியை வேலைத் திட்டமாகக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்.

இதை மிகக் கடினமான வேலைத்திட்டம் என்று தான் கொள்ள வேண்டும். ஏனெனில், இந்த நாட்டில் பார்ப்பன சமுதாயத்தின் உயிர்-ஜீவநாடியே இதுதான். அதாவது, நம்மை மேற்கண்ட இழிவான அடிமை நிலையில் வைத்து இருப்பதுதான். எப்படி என்றால் ஆட்சியில் நமக்கும் அவர்களுக்கும் சமுதாய எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதாசாரம் ஏற்பட்டு விட்டது என்றால், அந்த நிமிடமே (பார்ப்பான்) `பிராமணன் செத்தான்’ என்று ஆகிவிடும். அதுமாத்திரமல்லாமல், சூத்திரன், இழிமகன், மூடக் காட்டுமிராண்டி மகன் என்பவணும் ஒழிந்தான். சரிநிகர் மனித சமுதாயம் தான் நம் நாட்டில் இருக்கிறது என்பதாக ஆகிவிடும். ஆதலால், இந்த நம் இலட்சியம் நிறைவேற பார்ப்பான் தன்ணுடைய எல்லாவற்றையுமே செலவழித்துப் பார்ப்பான். ஆனதினாலே இந்த நமது இலட்சியம் மிகக் க·டமானது என்று கருதினேன்.

உதாரணமாக, நம்மில் கீழ்த்தரமான மக்களையெல்லாம் பார்ப்பான் இன்று தன்னோடு இணைத்துக் கொண்டு அவர்களையும் நம் சமுதாய நலத்துக்கு எதிரிகளாக ஆக்கி தொல்லை கொடுத்துக் கொண்டு இருந்த பார்ப்பனர், இன்றைய நிலைக்குத் தனக்கு அந்தப் பலம் போதாது என்று கண்டு கொண்டவுடன் புதிய பலத்தை உண்டாக்கிக் கொள்ள முயற்சித்து அதில் வெற்றி பெற்று விட்டனர்.

அந்தப் புதிய பலம் என்னவென்றால் நம் நாட்டில் பார்ப்பனர்களைப் போலவே உள்ள மற்றும் சிறுசிறு (மைனாரிட்டி) வகுப்புகளான முஸ்லிம்களையும் கிறிஸ்த வர்களையும் தன்னோடு சேர்த்துக் கொண்டனர்.

ஆதலால், நாம் இன்று 1. பார்ப்பனர் 2. நம்மில் கீழ்த்தர மக்கள் 3. முஸ்லிம்கள் 4. கிறிஸ்தவர்கள் ஆக இன்று நமக்குச் சமுதாய எதிரிகளாக இந்த நான்கு கூட்டங்கள் (குழுக்கள்) இருக்கின்றன. இந் நால்வரும் ஏற்கனவே நம் சமுதாயத்தைப் பற்றிக் கவலை இல்லாவதவர்கள். மற்றும் இந் நான்கில் மூவர், தம் தம் சமுதாயத் துறையில் நம்மைவிட மேலான நிலைமையில் அரசியல் பொருளாதார இயல், கல்வி இயல், பதவி இயல், மத இயல் முதலியவற்றில் சராசரித் தன்மைக்கு மிகமிக மேலான நிலைமையில் இருப்பவர்கள், வாழ்பவர்கள் என்று சொல்லத் தக்கவர்கள் ஆவார்கள். ஒரு கூட்டத்தினர் நம்முடைய இழிநிலை பற்றியும் ஏன்-தங்களுடைய இழிநிலை பற்றியுங் கூடக் கவலை இல்லாமல் `சோறு-சீலை-காசு’ ஆகிய மூன்றையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டவர்கள் ஆவார்கள். ஆதலால் ஒரு சிறு நலத்திற்கும் தங்களுடைய எதையும் தியாகம் பண்ணவும் துணிவு கொண்ட வர்களாக இருக்கிறார்கள்.

ஆகையால் நமது இலட்சியம் நிறைவேறுவதற்கு இவர்கள் - இந் நான்கு குழுவி னர்களும் பெரும் கேடர்களாக இருக்கும் நிலைமை நமக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலை நம் வளர்ச்சியையும் நம் இன்றைய நல்வாழ்வையும் சிதைத்து விடும் என்றே கருத வேண்டி இருக்கிறது.

இந் நிலை இன்று ஏற்படக் காரணம், இதுவரை இல்லாத அளவுக்கு காமராசர் ஆட்சி காரணமாகத் தமிழ் மக்களாகிய நாம் பெரும் அளவுக்கு முன்னேறி வருகிறோம். இதைச் சிதைக்க வேண்டிய அவசியம் பார்ப்பனருக்கு ஏற்பட்டுவிட்டது. அவர்கள் (பார்ப்பனர்கள்) தனித்து நின்று நம்மை எதிர்த்து அழிக்க முடியாது. ஆதலால், துணை தேட முயன்றார்கள். அம் முயற்சியில் ஏனைய முக் குழுவினர் அவர்களுக்குக் கிடைத்துவிட்டார்கள். ஏனெனில், இவர்களுக்கு எவ்விதக் கொள்கையும் கிடையாது. யாரை அண்டியாவது எப்படி நடந்தாவது தங்கள் நலன் ஒன்றே இலட்சியமாகும். நாம் வகுப்புவாரி உரிமை கேட்கும் போது அந்தப்படி நாம் அடைந்து விட்டால் இவர்கள் நலம் கெடும் என்கின்ற குறை, அச்சம் ஏற்பட்டுவிட்டது. ஆதலால் இவர்கள் எளிதில் பார்ப்பனர் வலையில் பட்டுவிட்டனர்.

மற்றும் ஆச்சாரியார் முஸ்லிம்களை மயக்க கா·மீரை முஸ்லிம்களுக்க (பாகிஸ்தாணுக்கு) கொடுத்துவிட வேண்டியது நியாயம் என்று சொல்லிவிட்டார். இதற்கு முஸ்லிம்கள் நன்றி காட்டும் முகத்தான் இராஜாஜிக்கு இந்தியப் பிரதமர் பதவி கொடுக்க வேண்டும். அவர்தான் அதற்குத் தகுதி உடையவர் என்று பாகிஸ்தான் தலைவர் அயூப்கான் சொல்லி இந்நாட்டு முஸ்லிம்களை ஆச்சாரியாரை ஆதரிக்கச் செய்து விட்டார்.

மற்றும் நமது பகுத்தறிவுக்குக் கிளர்ச்சியும் நேருவின் சோ·யலிசம் கொள்கையும் இஸ்லாம், கிறிஸ்துவ சமுதாயத்திற்கு -அவர்கள் மதத்திற்குக் கேடு வரும் என்ற புரளியைப் பார்ப்பனர் கிளப்பிவிட்டு விட்டார்கள். இதனாலேயே முஸ்லிம்-கிறிஸ்தவ சமுகத் தலைவர்களான திரு. இஸ்மாயில் அவர்களும் திரு. ரத்தினசாமி அவர்களும் இவ்விரு சமுதாயமும் இராஜாஜியை ஆதரிக்க வேண்டும் என்று கட்டளை இட்டுவிட்டார்கள்.

ஆகவே இனி வரும் தேர்தல்களில் இம்மூன்று குழுவினரும் தங்களுக்கு வெற்றி கிடைக்க வகை இல்லை என்று தெரிந்தாலும் நம் மில் இருந்து கொண்டே தங்கள் சுய நலத்துக்கு, நம் இனத்துக்குக் கேடு செய்து வாழ்வது என்ற முடிவில் ஆச்சாரியாரை அண்டி இருக்கும் `கண்ணீர்த் துளிகளை’த்தான் ஆதரிக்க வேண்டும்; எப்படியாவது காமராசரைத் தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்ற சதித் திட்டம் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதன் பயன் என்ன ஆகும் என்றால் இனித் தேர்தல்களில் இரண்டு கட்சிகள்தான் போட்டி! அப்போட்டிகளில் காமராசர் (காங்கிரஸ்) கட்சி, தமிழர்களின் ஓட்டுகளை அதிகமாய் (மெஜாரிட்டியாய்) பெற்றாலும் வட இந்த பார்ப்பனர், முஸ்லிம், கிறிஸ்துவர்கள் ஆகிய முக் குழுவும் எந்தக் கட்சிக்கு ஓட்டு செய்வார்களோ அந்தக் கட்சிதான் ஜெயிக்க முடியும். திருவண்ணாமலைத் தேர்தல் முடிவு அப்படித்தான் ஏற்பட்டது. நம் தமிழ் மக்களின் ஓட்டு நமக்கு அதிகமாய் கிடைத்திருந்தும் இந்த முக் குழுவினர் ஓட்டுகளாலேயே காமராசர் (தமிழர் கட்சி) தோல்வி அடைய வேண்டிய தாயிற்று. அது போலத்தான் இனியும் அவர்கள் 3 பேர்கள் நமக்கு எதிரிகளாகி நம் எதிர்கட்சிக்கு ஓட்டுச் செய்தால் அது நமக்கு பெருங் கேடாகவே முடியும்.

இதற்காகத்தான் இராஜாஜி காங்ககிரஸ் மெஜாரிட்டி சமுதாயக் கட்சி ஆனதால், அதனால் மைனாரிட்டி சமுதாயத்திற்குக் கேடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள மைனாரிட்டி சமுதாயம் ஒன்றாகச் சேர்ந்து கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்று கூறி, கூட்டுச் சேர்த்துக் கொண்டு துணிந்து எதிர்க்கிறார்.

இதற்குப் பரிகாரம் தேடவில்லையானால் நாம் என்னதான் பிரச்சாரம் செய்தாலும் கட்சியைப் பலப்படுத்தினாலும் வெற்றி கிடைப்பது முடியாத காரியமாக ஆனாலும் ஆகிவிடலாம். ஆனதால் மைனாரிட்டி முழு வோட்டினால் மெஜாரிட்டி கெடாமல் இருக்க அவர்களைத் தேர்தலில் ஒதுக்கி விடுவதேதான் நாம் இத் தொல்லையில் இருந்து விலகத்தக்க மார்க்க மாகும். குறைந்தது, அவ்விரு சமுதாயத்திற்குமாவது தனித் தொகுதி கொடுத்து ஒதுக்கி விட்டுவிட்டால் பெரும் அளவிற்குத் தொல்லை ஒழியும் என்பது எனது கருத்து. அதோடு கூடவே வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் என்ணும் பேரால் தமிழர், பார்ப்பனர், முஸ்லிம், கிறிஸ்தவர் என்கின்ற தலைப்பில் அவரவர் சமுதாய எண்ணிக்கைப்படி அரசாங்கத்திற்குள்ள எல்லாத் துறையிலும் இவ்வாறு பிரித்து விட்டால், தமிழ் நாட்டை தமிழ் மக்களைப் பிடித்த எல்லாக் கேடுகளும் ஒழிந்தே போகும்.

ஆகவே இதைத்தான் எனது 85 வது ஆண்டுத் திட்டமாக நான் கொண்டிருக்கிறேன்.

இவற்றிலும் முதலாவது, நம் நாட்டு ஆட்சியில் நாம் அடையவேண்டிய வகுப்பு உரிமைக்குக் கிளர்ச்சி செய்வதை உடனடித் திட்டமாய்க் கொண்டி ருக்கிறேன்.

நம் இயக்கத் தோழர்கள் ஆயத்தமாய் இருக்க வேண்டிக் கொள்ளுகிறேன்.

(85 வது பிறந்த நாள் விழா மலர் 17.9.1963)

பெரியார் 86 - அறிக்கை (1964)

நான் புவியில் 85 ஆண்டுகள் வாழ்ந்து 86 வது ஆண்டில் புகுகிறேன்.

இந்த நாட்டில் மக்கள் வாழும் சராசரி வயது 10 ஆண்டுகளுக்கு முன் 32 வயதாக இருந்தது. இன்று 48 வயதாக மாறியுள்ள இக்காலத்தில் ஒரு மனிதன் 85 ஆண்டு வாழ்ந்து, அதுவும் ஓய்வு என்பதை அறியாத தொண்டும் சுகம் என்பதை அறியாத வாழ்வும், கிடைத்ததைத் தின்று கொண்டு, வாய்த்த இடத்தில் தூங்கிக் கொண்டு திரிந்த நான் 85 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டேன் என்றால் என் ஆயுளைப் பற்றி நான் பாராட்டிக் கொள்ள வேண்டாமா?

என்ன செய்து சாதித்து விட்டாய்? என்று நீங்கள் கேட்கலாம். அதற்குப் பதில் நீங்களே (வாசகர்கள்) தான் தேடிப்பிடித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஓய்வு ஒழிச்சல் இன்றி, சோம்பல் கழிப்பிணித்தனமின்றி உழைத்தேன். திருட்டு, புரட்டு, மோசடி இன்றி வெள்ளையாய் நடந்து கொண்டேன். என் நடத்தையில் பல தவறுதல்கள், தகாத காரியங்கள் ஏற்பட்டு இருக்கலாம். என்னையே நீதிபதியாகக் கொண்டு எனக்கு சரி என்று பட்டதையும் , தேவை என்று பட்டதையும் செய்தேன். அதுவும் ஒளிவு மறைவு இல்லாமல் செய்து வந்தேன்.

வாழ்வில், செயலில் பல ஏமாற்றம் அடைந்து இருக்கலாம். ஆனாலும் அதையே ஒரு படிப்பினையாகக் கொண்டு முயற்சியில் சளைக்காமல் நடந்து கொண்டுதான் வருகிறேன்.

நான் ஒரு அநாமதேய வாழ்வு வாழவில்லை என்பதும், அநாவசியமான மனிதனாய் இருந்து வரவில்லை என்பதும் எனக்கு ஒரு ஆறுதல் தரத்தக்க விஷயமாக இருந்து வந்தது.

இப்படிப்பட்ட எனது வாழ்நாள் பற்றிய விளக்கம் என்னவென்றால் 1964 செப்படம்பர் 17-ந்தேதி வியாழக் கிழமைக்கு சரியான குரோதி வருஷம் புரட்டாசி மாதம் 1  ந்தேதிக்கு எனக்கு 85 வயது முடிகிறதென்றால், அது நான் பிறந்து ஓராயிரத்து இருபது (1020) மாதங்கள் ஆகிறதுடன் ,  நான் பிறந்து இன்றைக்கு (17.9.1964 -க்கு) முப்பத்தி ஓராயிரத்து நாற்பத்தேழு நாட்கள் வாழ்ந்து விட்டேன் என்று ஆகிறது. 

மற்றும் நான் (1034) ஓராயிரத்து முப்பத்தி நான்கு அம்மாவாசையையும், 1034 பவுர்ணமியையும் , 1034 பிறையையும் கண்டு விட்டேன் என்று ஆகிறது. 

ஆயிரம் பிறை கண்டவன் முழு ஆயுள் வாழ்ந்தவனாவான் என்று சொல்லுவார்கள். அதுபோல் முழு வாழ்நாள் வாழ்ந்துவிட்டேன்.

 (86 ஆம் பிறந்த நாள் விடுதலை மலரிலிருந்து 17.09.1964)


இந்திக் கிளர்ச்சி-3 - பெரியார்

 இந்திக் கிளர்ச்சி-3

இந்தி கட்டாயப் பாடமாக ஆகும் பட்சத்தில் கண்டிப்பாகப் பார்ப்பனரல்லாத பிள்ளைகள் 100-க்கு 90-க்கு மேல் தேர்ச்சியில் தவறிவிடுவதோடு, பார்ப்பனப் பிள்ளைகள் 100-க்கு 100 தேர்ச்சி பெற உதவியாயிருக்கும். ஆகவே, பார்ப்பனரல்லாத பிள்ளைகளை மேல் படிப்பில்லாமல் அழுத்தத்தான் இந்தி ஒரு நல்ல சாதனமாகுமே தவிர-மனித வாழ்க்கைக்கோ அறிவுக்கோ தமிழர்களுக்கு எந்த விதத்திலும் இந்தி இன்றியமையாததாகாது.

கட்டாயப் படிப்பு என்பது நாட்டின், சமூகத்தின் பொதுக் காரியமாகும். அதற்காகச் செலவு செய்யும் நேரம், பணம் ஊக்கம் ஆகியவைகள்-நாட்டின் பொதுச் சொத்தாகும். அப்படிப்பட்டதைக் கொண்டு போய்ப் பாழான-பார்ப்பனச் சூழ்ச்சியான-முட்டாள்தனத்துக்கு வித்தான காரியத்துக்குப் பயன்படுத்துவது என்றால் யார்தான் சம்மதிக்க முடியும்?

‘இந்தி படித்தால் துளசிதாஸ் இராமாயணம் படிக்கலாம்’ என்கிறார், நமது அக்கிரகார பிரதம மந்திரி. ‘இந்தி படித்தால் வடநாட்டில் சுற்றுப்பயணம் செய்யலாம்’ என்கிறார் நமது விபீஷணாழ்வாரான கல்வி மந்திரி. துளசிதாஸ் இராமாயணம் நமக்கு எதற்கு?

கம்பராமாயணம் படித்து முட்டாளாகி, துரோகிகளாகி, சுயமரியாதை இழந்து, எதிரிகளின் கால் அலம்பிக் குடித்து வயிறு வளர்க்கும் ஈன மக்கள் போதாது என்று கருதியா-நமது அக்கிரகார மந்திரி துளசிதாஸ் இராமாயணம் படிக்கச் சொல்கிறார் என்று யோசிக்க வேண்டி இருக்கிறது! கம்ப ராமாயணத்தின் கருப்பொருள் கண்டுபிடித்துப் படித்த மக்களில் 100-க்கு 5 பேருக்காவது சுயமரியாதையோ, சமூகப் பற்றோ, தாய்மொழிப்பற்றோ இருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமோ? ஆரிய இராமாயணத்தை நெருப்பிலிட்டுக் கொளுத்த வேண்டும் என்று ஆதியில் நாம் சொன்ன காலத்தில்-இராமாயணக்  கதை ஆபாசமானது. வெறுக்கத் தகுந்தது, கீழ் மக்களின் இயற்கையையும் கெட்ட குணங்களையும் சித்தரிப்பது என்றும், ‘ஆனால், கம்பன் கவித்திறம் ,தமிழின் கலைத் திறம் முதலியவை கம்ப ராமாயணத்தில்-மலத்தில் கிடக்கும் முத்துப் போல் பொதிந்து கிடப்பதால் அதை எரிக்கக் கூடாது’ என்றும் சொன்ன கம்ப ராமாயணக் கருப்பொருள் பண்டிதர்கள்- இன்று ‘பக்கா பட்டரான’ ஆச்சாரியார் துளசிதாஸ் இராமாயணம் படிப்பதற்காக இந்தியைக் குழந்தைகளுக்குக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று சொல்லி, அதற்கு வேண்டிய காரியங்கள் செய்து வரும் போது-மனைவியை மற்றொருவன் சேலையை அவிழ்த்துப் பலாத்காரம் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்த வீரர்கள் கதை போல-இன்று வாய் திறவாமல் அடிமையாய் துரோகியாய், தமிழ் மாதுக்கு மாதுரு துரோகியாய் வீற்றிருக்கும் காரணம் என்ன?

தமிழ் மொழியில் உள்ள புராணங்களின் ஆபாசங்களையும் சூழ்ச்சிகளையும் மக்கள் சுலபமாய் அறிந்து, ஆரிய மதத்திலிருந்து மக்கள் விலகி அதை இழிவுபடுத்தி வருகிறார்கள் என்பதை உணர்ந்தே தமிழை ஒழிக்கவும், இந்தியைப் பரப்பவும் பார்ப்பனர் ஆட்சி முயலுகின்றது. அதை நம் மக்கள் சிறிதும் உணரவில்லை. ஆரிய புராணங்களை - கடவுளின் தன்மைகளை மனிதன் படித்தால் அவன் மனிதன் என்று சொல்லக் கூடிய நிலையை அடைய முடியுமா? சிறுவயதிலேயே குழந்தைகளின் பகுத்தறிவையும், ஆராய்ச்சி உணர்ச்சியையும் பாழ்படுத்த-அதன் எதிரியை இரத்தத்தில் செலுத்துவது போல் அல்லவா இந்தி படிப்பதின் பலன் ஏற்படக் கூடும்? இன்று மனிதணுக்கு அறிவோ தொழில் திறமையோ ஏற்படவேண்டுமானால் ஆங்கில மொழி மூலந்தான் கற்க வசதி இருக்கிறது. நமது தமிழ்ப் பண்டிதர்கள் இராமாயணத்தில் கருப்பொருள் தேடவும், திருவிளையாடல் புராணத்துக்கு77 வது உரை எழுதவும், பெரிய புராணத்துக்கு 113 வது உரையும் தத்துவார்த்தமும் எழுதவுந்தான் தகுதியுடையவர்களாகவும் கவலையுடையவர்களுமாகவே இருக்கின்றார்களே ஒழிய, பகுத்தறிவை அடையத்தக்கதாகவோ, மானத்துடன் பிழைக்க ஒரு தொழில் கற்றுக் கொள்ளத்தக்கதாகவோ இன்று ஒரு புத்தகமும் ஒருவராலும் எழுதப்பட்டதாக இல்லை. சாமி வேதாசலம் என்ணும் மறைமலை அடிகள் இந்தக் கருத்தை மனத்தில் கொண்ட ‘பாவத்துக்காக’ சற்றேறக் குறைய 100-க்கு 75 தமிழ்ப் பண்டிதர்கள்  அடிகளைக் காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்க முற்பட்டார்கள் என்றால்- தமிழ் படிப்பதனாலாவது தமிழ்த்தாய் பக்தியினாலாவது மனிதணுக்குச் சுயமரியாதை உணர்ச்சியும், பகுத்தறிவு உணர்ச்சியும் வருமா என்று சந்தேகப் பட வேண்டியிருக்கிறது. இன்று தமிழ் நாட்டில் ஒரு ஆரியப்பார்ப்பனர் -நாட்டை மணு ஆட்சிக்குக் கீழ்க் கொண்டு வரும் முயற்சிக்குச் சூழ்ச்சி கர்த்தர்-தமிழ்மொழியை எப்படிப்பரப்புவது, எப்படிமேன்மைப்படுத்துவது என்பதை விட்டுவிட்டு, குழந்தைகளுக்குக் கட்டாயமாக இந்தி கற்பிக்க வேண்டும், துளசிதாஸ் இராமாயணம், மற்ற புராணம் ஆகியவைகள் மூலம் படிக்க வேண்டும் என்று சொல்லுவது என்றால், இந்த நாட்டில் உண்மைத் தமிழ் இரத்தம் ஓடும் மக்கள் ஒருவர் இருவராவது இருக்கிறார்களா? (குடி அரசு 22-8-1937)

இந்தி எதிர்ப்பின் மூலம் தமிழ்மக்கள் வெற்றி பெற வேண்டுமானால், அவன் சரீரத்தில் ஓடும் பார்ப்பன மத உணர்ச்சி இரத்தம் அவ்வளவும் வெளியாக்கப்பட்டுப் புதிய-சுதந்திர அறிவு இரத்தம் பாய்ச்சப்பட்டாக வேண்டும்.

ஏனெனில், பார்ப்பனியம் இன்று இந்தியைத் தமிழ் மக்களுக்குள் கட்டாயமாகப் புகுத்த வேண்டும் என்கின்ற மூர்க்கப் பிடிவாதத்தைக் கொண்டிருப்பதன் உண்மைக் கருத்து என்னவென்றால், அரசியலுக்கு அல்ல; பொருளியலுக்காக அல்ல; அல்லது பார்ப்பனர்களுக்கு வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதற்காக அல்ல. உண்மையான காரணம் என்னவென்றால் இன்று தமிழ் மக்கள் பெரும்பாலோருக்குள் ஏற்பட்ட சுயமரியாதை உணர்ச்சியால் ஆட்டம் கொடுத்திருக்கும் பார்ப்பனீய மத உணர்ச்சியைத் தமிழ் மக்களுக்குள் மறுபடியும் சரியானபடி புகுத்தி -அதைக் கெட்டிப் படுத்தி-பார்ப்பனீயத்துக்குத் தமிழ் மக்களைப் புராணகாலம் போல நிரந்தரமாய் அடிமையாக்குவதற்காகவேயாகும். அதனால்தான், சோழவந்தான் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அதன் தலைவர், ‘இந்தியைக் கட்டாயப் பாடமாக ஆக்கப்படுவதை ஒழித்தால் போதாது. இந்தியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்பதற்கான உள் காரணங்களை ஒழிக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.

ஆதலால், ‘இந்திப் போர்’ தமிழ் மக்களுக்கு ஒரு கிடைத்தற்கரிய ‘பாக்கியம்’ என்றே ஒவ்வொரு தமிழ் மகணும் கருத வேண்டும். அது போன்ற ஒரு பயனளிக்கத்தக்க போராட்டம் இனி சுலபத்தில ஏற்படும் என்று எந்தத் தமிழ் மகணும் இலேசில் கருத முடியாது என்பதோடு இது அவ்வளவு சுலபமானதும் அவ்வளவு பெரிய பயனை அளிக்கக்கூடியதுமான ஒரு அரும்பெரும் போராட்டமாகும். (குடியரசு 15-5-1938)

நான் இந்தியை 1924,1925 முதலே எதிர்த்து வருகிறேன். அதற்கு ஆதாரம் ‘குடியரசு’ பத்திரிகையில் பார்க்கலாம். இன்றைய இந்தி எதிர்ப்புத் தோழர்களும் மற்றும் அனேகரும் வெகு நாட்களாகவே தமிழ் நாட்டிற்கு இந்தி ஏன் என்று எதிர்த்து வந்திருக்கிறார்கள்.

இந்தி என்றால் பார்ப்பன மொழி என்றுதான் அர்த்தம். ‘டிக்ஷனரியை’ப் பாருங்கள். பார்ப்பன மொழியை, பார்ப்பனரல்லாதாருக்குக் கட்டாயமாகப் புகுத்தினால் பார்ப்பனரல்லாதாருக்கு வீரமும், அறிவும், மானமும் இருந்தால் ஒப்புக் கொள்ள முடியுமா என்பதை யோசித்துப் பாருங்கள் (குடியரசு 10-7-1938) 

இந்தி கிளர்ச்சி-4

தலைவரவர்களே! தோழர்களே!

இந்தி மொழி தமிழ் நாடடில் எப்போது இருந்தது? பம்பாயில் எப்போது இருந்தது? வங்காளத்தில் எப்போது இருந்தது இந்தியா 56 தேசமாய் இருந்தபோது 56 மொழிகளின் பேரால்தானே தேசமாய் இருந்தது? அப்போதும் மொத்தத்தில் 56 மொழிகள் இருந்திருக்கும். நாளாக நாளாக ஒரு தேசத்தார் மற்றொரு தேசத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் போதுதான் அன்னிய மொழி புகுத்தப்பட்டுவிடுகிறது. அந்த முறையிலேயே இன்று இந்தியைத் தமிழ் நாட்டில் புகுத்தப் பார்ப்பது தமிழனல்லாத அன்னிய வகுப்பான் இன்று தமிழ்நாட்டில் ஆதிக்கம் பெற்றுவிட்டதினாலேயே ஒழிய வேறில்லை.

ஒரு பொது  மொழி தேர்ந்தெடுக்க மெஜாரிட்டி பலமே போதுமானதாகுமா? மொழி எதற்காக வேண்டும்? பேசுவதற்கு மாத்திரம் தானா? புதிதாக ஒரு மொழியைத் தேர்ந்தெடுப்பதினால் அந்த மொழி பழையது என்றோ, வெகுபேர் பேசுகிறார்கள் என்றோ காரணம் சொல்லித் தெரிந்தெடுப்பது அறிவுடைமையாகாது. அந்த மொழியால் தேச மக்களுக்கு ஏற்படும் பயன் என்ன என்று பார்க்க வேண்டும். புது அறிவு உண்டாகுமா? ஆராய்ச்சிக்குப் பயன் படுமா? முற்போக்கிற்கும் நாகரிகத்துக்கும் பயன்படுமா? சீர்திருத்தத்திற்கு ஏற்றதா, என்றெல்லாம் பார்க்க வேண்டாமா? இவர்கள் சொல்லும் ‘இந்தி’ எதற்காகப் பயன்படும்? தோழர் இராஜகோபாலாச்சாரியாரும்-அதாவது இந்தியைப் பொதுமொழி ஆக்க வேண்டும் என்று சொல்கிறவரும் அவரது சகாக்களும், ‘இந்தியால் துளசிதாஸ் இராமாயணம் படிக்கலாம். சமஸ்கிருதம் சுலபத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்துமத சாஸ்திரம் உணரலாம்’ என்றெல்லாம் சொல்லுகின்றனர். ஆகவே, இந்தி மூலம் மோட்சத்திற்குப் போவதற்கு அணுகூலமாக- ஆத்மார்த்த விஷயங்கள் என்பதற்கு அணுகூலமாகக் காரணம் சொல்லுகிறார்களே ஒழிய, இந்த உலக வழிக்கான காரணம் எதுவும் இந்தியில் இருப்பதாகச் சொல்லவே இல்லை. இராமாயணத்திலும், பாரத்திலும் ஆகாய விமானம் இருக்கிறது. ஆனால் அது மந்திர சக்தியில் ஓடி இருக்கிறது. இங்கிலீஷில் ஆகாய விமானம் இருக்கிறது, அது இயந்திரத்தில் ஓடுகிறது. நமக்கு எது வேண்டும் மந்திர சக்தியா? இயந்திர சக்தியா? (குடி அரசு 26-9-1937)

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி-1 - பெரியார்

 இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி-1

முதலாவது, இந்தி மொழி என்றால் என்ன? அதற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் என்ன சம்பந்தம்? அதைப் படித்ததினால் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படும் பயன் என்ன? என்பவைகளை முதலில் கவனிப்போம். இந்தி மொழி என்பதை அகில இந்திய மொழியாகக் கருத வேண்டும் என்பது பற்றிப் பின்னால் யோசிப்போம்.

இந்தி மொழி படித்த மக்களுக்கு அதனால் ஏற்படும் பயன் என்ன? இதுவரை தமிழ்நாட்டில் காங்கிரஸ் பணத்திலிருந்தும், மற்றும் பொதுமக்களிடமிருந்தும் இந்திக்காக செலவு செய்யப்பட்ட பணத்தில் எவ்வளவு பார்ப்பனரல்லாதார்கள் படித்தார்கள்? அதை எதற்கு உபயோகப்படுத்துகின்றார்கள்? என்பவைகளும் கவனிக்கத் தக்கதாகும்.

இந்திமொழி என்பது தமிழ் மக்களுக்கு விரோதமான ஆரிய மொழியாகும். அதிலுள்ள வாசகங்கள் முழுவதும் ஆரியப் புராணங்களும் மூடப்பழக்க வழக்கங்களும் கொண்டனவும் பார்ப்பனர்களின் உயர்வுக்கு ஏறப்பட்டனவுமாகும். இந்த நாட்டில் இப்போது சமஸ்கிருதம் இருப்பது போலவும் அது உபயோகப்படுவது போலவும்-இந்தி ஒரு சிறிதும் தேவையில்லாததாகும். அப்படியிருந்தாலும் அது ஏதாவது வடநாட்டுக்குப் போய் சொல்லுவதற்கில்லாமல், இதுவரை இந்தி படித்தவர்களில் 100-க்கு 95 பேர் பார்ப்பனர்களே படித்து அந்தப் படிப்பைக் கொண்டு வட நாட்டிற்கு உத்தியோகத்திற்கோ பிச்சைக்கோ சென்று, அதன் மூலம் பார்ப்பனரல்லாதார்களுக்குத் துரோகம் செய்யவே உதவப்பட்டு வருகின்றது. அதற்காகச் சம்பாதித்த பணங்கள் முழுவதும் பார்ப்பன ஆதிக்கத்திலேயே இருந்து வருகின்றது. ஒரு சமயம் பார்ப்பனரல்லாதவர்களும் இந்தி படித்திருப்பதாக வைத்துக் கொண்டாலும் இந்த நாட்டில் அவர்களுக்கு அது என்ன பயனைக் கொடுக்கும்? இது வரை இந்தி படித்த பார்ப்பனரல்லாதாரில் எவராவது அதனால் இன்ன பிரயோஜனம் அடைந்தார்கள் என்று ஏதாவது ஒரு சின்ன உதாரணமாவது காட்ட முடியுமா?

இந்தியாவுக்கு ஒரு பொதுமொழி வேண்டுமானாலும் அல்லது வியாபாரத்திற்கு ஒரு பொது மொழி வேண்டுமானாலும் ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்து அதை எல்லா மக்களிடையிலும் பரப்ப முயற்சிக்க வேண்டுமேயல்லாமல், வேறு மொழியைப்பற்றி யோசிப்பது முட்டாள்தனமோ அல்லது சூழ்ச்சியோதான் ஆகும்.

ஆங்கிலம் உலக மொழி; உலக வர்த்தக-விஞ்…hன மொழி; இந்திய அரசாங்க மொழி; அது மாத்திரமல்லாமல் மூடப்பழக்க வழக்கமும், பார்ப்பனீயமும் இல்லாமல் அவ்வளவும் அடிப்படையான கலைகளை வாசகமாகப் பெற்ற மொழியாகும். 

இவைகள் மாத்திரமல்லாமல், இந்தி உருது முதலியவற்றுக்குத் தாய்மொழியாக உள்ள துருக்கி மொழி கூட, ஆங்கில மொழிக்கும் ஆங்கில எழுத்துக்கும் மதிப்புக் கொடுத்து தனது நாட்டுத் தாய்மொழியாகிய தன்மையே மாற்றிக் கொண்டது, அன்றியும், நமது பிரிட்டி· அரசாங்கம் உள்ளவரை- மேல்நாடுகளின் வர்த்தக உடன்பாடோ, கலை சம்பந்தமோ, கல்வி சம்பந்தமோ உள்ளவரை-ஆங்கிலம் இல்லாமல் முடியவே முடியாது. இப்படி எல்லாம் இருக்க, இதைச் சற்றும் கவனியாமல் இப்போது தமிழ்நாட்டில் இந்தி மொழி பரப்ப வந்திருப்பதென்பது தற்காலம் தமிழ்நாட்டில் உள்ள உணர்ச்சியை ஒழிக்கச் செய்யும் சூழ்ச்சியேயாகும். ஆதலால், இதற்கு எந்தப் பார்ப்பனரல்லாதாராவது பணம் கொடுத்தோ அல்லது ஆதரித்தோ பேசினாலும் அது பெரிய சமூகத் துரோகமாகும். (குடி அரசு - 20-1-1929)

இந்திக் கிளர்ச்சி-2

இந்தி என்பது, பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஏற்படுத்தப்பட்ட புரட்டு, இந்தியாவில் முப்பட்தைந்தரை கோடி மக்கள் இருந்தாலும் பல மொழி, மதம், நாகரிகம், நடை, உடை, பாவனைகளாக இருந்து வருவதை யாரும் மறுக்க முடியாது. அப்படி இருந்தாலும் மக்களுக்குள் மதத்தின் பேராலும், சாதியின் பேராலும். மொழியின் பேராலும் போட்டிகள் நடந்து வருவதும் மறுக்கக் கூடியவை அல்லவென்றே சொல்லுவோம்.

இந்த நிலைமையிலுள்ள சமுகங்களை-பிரிவினைக்கு ஆதாரமாய் இருப்பனவற்றைக் கண்டுபிடித்து. அவைகளை ஒழிக்க முயற்சிக்காமல், கண்மூடித்தனமாய் எல்லோரையும் இந்தி கற்றுக் கொள்ள வேண்டுமென்று அரசியலின் பேரால் நிர்ப்பந்திப்பது எப்படி ஒழுங்காகும்? இந்தி என்பது அனேகமாக வடமொழியின் சார்போ அல்லது திரிபோ ஆகும். இந்த நாட்டில் ஆரியர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட வடமொழிக்கு உயர்வுகொடுக்கப் பலவழிகளிலும் சூழ்ச்சி செய்து உலக வாழ்க்கையில் ஒரு ஒடிந்து போன குண்டூசிக்குப் பயன்படாத மொழியாகிய அவ் வட மொழிக்கு எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டு வருகின்றது என்பது வெகுநாட்களாகத் தமிழ்மக்கள் கவனித்துவரும் சங்கதியாகும். இப்போது மறைமுகமாய் வடமொழியை ஆதரிக்கவும், ஆரிய நாகரிகம்., சமயக் கொள்கை ஆகியவைகளை நிலை நிறுத்தவும் இந்தியை அரசியல் விஷயமாக ஆக்கி, அதைக் கதரைப் போல்-ஏன், கதரைவிட அதிகமாக ஒவ்வொருவருக்குள்ளும் புகுத்தப் பார்ப்பது, எவ்வளவு வஞ்சகமான காரியம் என்பதை நமது சோணகிரிகள் அனேகர் இன்ணும் உணரவே இல்லை. தமிழ்ப் பண்டிதர்கள் சாம்பலையும் மண்ணையும் குழைத்துச் சூடுபோட்டது போல் மேலெல்லாம் தீட்டிக் கொண்டு-சிவ, சிவ, சிவ என்பதற்கும், ராம, ராம என்பதற்கும் உதவுவார்களே தவிர மற்றபடி நமது மக்கள் மீது. அனாவசியமான ஒரு மொழி-சூழ்ச்சித் திறத்தால் சுமத்தப்படுகிறதே என்கின்ற அறிவும் கவலையும் அவர்கட்குச் சிறிதும் கிடையாது என்றே சொல்லவேண்டியிருக்கின்றது. இன்றையத்தினம் இந்திய மக்களுக்கு அவரவர்கள் சொந்த மொழி தவிர வேறு மொழி தெரிய வேண்டுமானால், அது ஆங்கில மொழி என்றே நான் தைரியமாகச் சொல்லுவேன்.

உலகமே தங்கள் கிராமந்தான் என்று எண்ணிக் கொண்டிருந்த காலம் மலையேறி, இப்போது நிலப்பரப்பு, நீர்ப்பரப்பு, முழுவதும் தெரிந்து-200 கோடி உலக மக்களையும் சகோதரர்களாகப் பாவித்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் போது, உலகச் செலவாணி மொழி எதோ, அதை மனிதன் அறியாமல், கபீர்தாஸ் இராமாயணத்தைப் படிக்க வேண்டிய இந்தி மொழி எதற்குப் படிக்க வேண்டும் என்று கேட்கிறோம்.

தமிழ் மக்களுக்குச் சுயமரியாதை என்பது பல துறைகளிலும் வரவேண்டியிருப்பதை இந்தியின் ஆதிக்கம் இனியும் அதிகமாய் வலியுறுத்துகின்றது.

தமிழ் மொழியின் பாண்டியத்தியம் என்பது இப்போதே அனேகமாய்ப் பார்ப்பனர்களிடமே இருக்கிறது. தமிழ் மொழியின்  சங்கத் தலைவர்கள் பார்ப்பனர்களாய் இருக்கின்றார்கள் என்பதோடு- இந்தப் பார்ப்பனர்கள் தமிழர்களை இந்தி படிக்கக் கட்டாயப்படுத்துகின்றார்கள் என்றால், தமிழ் மொழிக்காரர்களின் சுயமரியாதை எவ்வளவு என்பதைத் தமிழர்களே உணர்வார்களாக!

அரசியல் தத்துவத்தின் பலனாய், தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதார் பணத்தில் இந்தி கற்று, இந்தியத் தலைவர்களாகி வடநாட்டுத் தலைவர்களிடமெல்லாம் பார்ப்பனர்களே போய்க் காரியதரிசிகளாய் அமர்ந்து -அவர்களே தென்னாட்டுப் பிரதிநிதிகளாகி, அவர்களது ஆதிக்கத்திற்கே இந்திய அரசியலைத் திரும்பப் பயன்படுத்திக் கொண்டு வருகின்றார்கள்.

ஆகவே, அரசியல் துறையிலிருக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் அறிவு இருந்தாலும் அதைப் பார்ப்பனர்களுக்குத் தக்க விலைக்கு விற்றுவிட்டார்கள் என்றாலும்-அரசியலில்லாத பார்ப்பனரல்லாதார்கள் அறிவையாவது தக்க வழியில் உபயோகித்துத் தகுந்த ஏற்பாடு செய்யவேண்டாமா? (குடிஅரசு - 10-5-1931)

இழிநிலை நீக்க மாநாடு - பெரியார்

 இழிநிலை நீக்க மாநாடு

நண்பர்களே! நாம் நமது நாட்டில் நாலாம் சாதியார்-சூத்திரர்-பார்ப்பனரின் தாசி புத்திரர்கள் என்றும், சில அணுபவங்களில் தீண்டப்படாத, நெருங்கப்படாத இழிபிறவி மக்கள் என்றும் இந்த மத சாஸ்திரங்களில் தர்மமாகவும் ‘இந்து லா’ என்ணும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டும் அதை அணுசரித்தே கோர்ட் தீர்ப்புகளும் இருந்து வருகின்றன. அந்தப்படி அமுல் நடத்தப்பட்டும் வருகின்றன.

இந்த நிலை, இந்த அமைப்பு, இந்த அணுபவம் மாற்றப்பட வேண்டும் என்பது இன்றையத் தமிழர்களின் பெரும்பான்மையோரின் ஆவல்.

இந்த நிலை அரசியல் நிர்வாக சட்டத்திலும், நீதி சட்டத்திலும் இடம் பெற்று இருக்கின்றபடியால், அரசாங்கத்துடன் போராடித்தான் நீக்கிக் கொள்ளத் தக்கதாக இருக்கிறது.

நம் நாடு, முஸ்லிம் ஆட்சியிலோ (அய்ரோப்பிய)  கிறிஸ்தவருடைய ஆட்சியிலோ இருக்குமானால் இந்த நிலை வெகுநாளைக்கு முன்னதாகவே ஒழிக்கப்ப;டிருக்கும். அப்படிக்கில்லாமல் (பார்ப்பனருடைய) இந்துக்களுடைய ஆட்சியில் இருப்பதால் இதை ஒழிக்கப்படும் வரையில் மாற்ற முடியாததாக அமைக்கப்பட்டிருக்கிறது.

இதற்குக் காரணம் இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள்-கிறிஸ்தவர்கள் தவிர்த்து மற்ற எல்லா மக்களும் அதாவது, பவுத்தர், சீக்கியர், சமணர். பகுத்தறிவுவாதிகள், நாத்திகர் மற்றும் பிள்ளையார் சிலையை உடைத்தவர்கள், இராமாயணம் கொளுத்தியவர்கள், இராமனை முருகனை, வெங்கிடாசலபதியை (கடவுள்களை)ச் செருப்பால் அடித்தவர்கள் முதலிய எல்லோருமே - இந்துக்கள் தான் என்று சட்டமும், சட்ட நிபுணர்களால் கோர்ட் தீர்ப்புகளும் இருக்கின்றன. இந்து என்கின்ற பெயரிலிருந்து விலகிக் கொள்ள நமக்கு உரிமையில்லை; இடமும் இல்லை.

அதனால், உலகம் உள்ளவரை இந்திய ஆட்சியில் தமிழ் நாடு ஆட்சியின் கீழ் குடிமகனாய் இருப்பவர்கள், முஸ்லிம்-கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் யாவருமே சூத்திரர், நாலாம் சாதியார், பார்ப்பனரின் தாசி புத்திரர்கள் என்ணும் தன்மையில் இருக்கிறோம்.

இதோடு கூடவே நம் கோவில்களுக்குப் போகிற எவரும் எந்தக் கோவிலுக்குப் போவதானாலும் சாமி இருக்கிற அறைக்கு (கர்ப்ப கிரகத்திற்கு) வெளியில் நின்றுதான் சாமி தரிசனமோ, மற்றதோ செய்ய வேண்டியிருக்கிறது. காரணம் நாம் கீழ்சாதிக்காரர்கள். நாம் தொட்டால், நெருங்கினால் சாமி தீட்டாகிவிடும். ஆதலால் எட்டி நிற்க வேண்டும். வெளியில் நிற்கிறோம். எனவே, நமக்கு இந்த இழிநிலை போக்கப்பட வேண்டாமா என்பதுதான் நான் நமது மக்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளும் விண்ணப்பம்.

இன்றைய நமது இந்திய ஆட்சிக்கு உட்பட்ட தமிழ் அரசுக்கு இது விஷயத்தில் உள்ள சட்டத்தடைகளை நீக்க சக்தி போதாது. இந்தியாவில் தமிழ்நாடு தவிர்த்த மற்ற நாட்டு மக்கள் அனேகமாக இசைய மாட்டார்கள். என்றாலும் நாம் இந்த இழிவுகளை இனி பொறுத்துக் கொண்டு இருக்க மாட்டோம். எப்படியாவது, என்ன செய்தாவது, என்ன க·ட ந·டங்களை ஏற்றாவது அணுபவித்தாவது இந்த இழிநிலையை ஒழித்துக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். இதற்காக, இதுவரை செய்துவந்த பிரச்சாரம் எதுவும் நமக்குப் பயன் அளிக்க வில்லை. ஆதலால், இப்போது நாம் இதற்காக என்றே ஒரு மகாநாடு ‘சூத்திரன்-தாசிமகன் என்கின்ற இழிநிலை நீக்க மாநாடு’ என்ணும் பெயரால் சென்னையிலோ, திருச்சியிலோ ஒரு மாநாடு கூட்டி, அதில் நமது இந்திய அரசாங்கத்திற்கு எதிராக நமது வேண்டுகோள் என்பதாக விளக்கி, ஒரு தீர்மானமும் அந்த வேண்டுகோள் நிறைவேற்றபடவில்லையானால், நமது முயற்சி என்னவென்பது பற்றி ஒரு தீர்மானம் செய்ய உத்தேசித்தும் இருக்கின்றோம்.

இந்த மாநாடு டிசம்பரில் கூடுவதாக என்று. அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் துவக்கி இருக்கிறேன். மாநாடு நடத்தவும் கிளர்ச்சி நடத்தவும் பெருந்தொகை தேவைப்படும். அது நன்கொடை மூலமும், டிக்கெட் விற்பனை மூலமும் மற்றும் பலவழிகளில் சேகரிக்கவும் முயற்சிக்கிறேன்.

தமிழ் நாட்டில் ஆளுங்கட்சியில் உள்ள இயக்கத் தோழர்களும் மற்றும் இந்தக் கொள்கையை ஏற்கும் மற்ற எல்லாக் கட்சித் தோழர்களும் வேண்டிய முயற்சி செய்து உதவ வேண்டுகிறேன் (விடுதலை-14-10-1973)

மூலஸ்தானப் பிரவேசம் - பெரியார்

 மூலஸ்தானப் பிரவேசம்

‘மூலஸ்தானத்தில் எல்லா மக்களும் பிரவேசிக்கக் கூடாது’ என்பது கோயில் சம்பந்தமாக அல்லது ஒரு பொது இடம் சம்பந்தமாக அரசாங்கத்தார் செய்து கொண்ட ஏற்பாடு தானே யொழிய, அது எந்த விதத்திலும் ஒரு மத சம்பந்தமான தத்துவமாகாது; எந்த விதத்திலும் ஒரு புனிதமான காரியமோ, யாருக்காவது மனம் புண்படுவதைத் தடுக்கும் படியான காரியமோ என்று சொல்ல முடியாது; கோயில் பிரகாரத்திற்குள் தாழ்த்தப்பட்ட இன மக்கள் செல்வது’ எவ்வளவு சாதாரண காரியமோ, அதைவிடச் சாதாரணமான காரியமேயாகும்.

கோயிலுக்குள்ளாகவோ, மூலஸ்தானத்திற்குள்ளாகவோ இன்ன மதத்தார்தான் இன்ன சாதியார்தான் செல்லலாம்; இவரிவர் செல்லக் கூடாது என்பதற்கு எந்தச் சட்டமும், மத ஆதாரமும், சரித்திர நியமனமுமில்லை.

இன்ன மொழியில்தான் பூசைக்குச் சொற்கள் சொல்ல வேண்டும் என்கிற கட்டாயமும் இல்லை, கோயில் நிர்வாகத்திற்கு, டிரஸ்டி பதவிக்கு இன்ன சாதியாகத்தானிருக்க வேண்டும் என்பதற்கு ஒரு நிர்ப்பந்தமுமில்லை. மத விரோதமும், சாஸ்திர விரோதமும், சட்ட விரோதமுமில்லை.

நான் சுமார் 20 ஆண்டு ஈரோடு தாலுக்கா தேவஸ்தானக் கமிட்டிச் செயலாளனாகவும் தலைவனாகவும் இருந்திருக்கிறேன்; ‘சாத்தாணி’ இனத்தாரை அர்ச்சகராக நியமித்து இருக்கிறேன்; நான் கடவுள் நம்பிக்கையில்லாதவனாக (நாத்திகனாக) இருந்து கொண்டேதான் இந்தத் தாலுக்கா தேவஸ்தானக் கமிட்டித்தலைவனாக, செயலாளனாக இருந்திருக்கிறேன்; மற்றும் ஈரோடு, பவானி, திருப்பூர், கோபி தாலுக்கா கமிட்டித் தலைவனாகவும் இருந்திருக்கிறேன். இது பற்றிக் கலெக்டருக்கு சிலர் நான் நாத்திகன் என்று புகார் எழுதி, அவர் என்னை அதியமாக ‘நாயக்கரே! நீர் நாத்திகரா! என்று கேட்டார். ஆம என்று சொன்னேன்; அவர் சிரித்துக் கொண்டே, ‘இந்துதானே! என்று, தானே கேட்டுக் கொண்டு சும்மா இருந்துவிட்டார்.

இதை நான் 20, 30 ஆண்டுகளுக்கு முன் குடிஅரசிலும் விடுதலையிலும் எழுதியிருக்கிறேன்.

இன்றும் வி·ணூ கோயில்கள் பலவற்றில் மூலஸ்தானத்திற்கும், மற்றவர்கள் நிற்குமிடத்திற்கும் இடையில் கதவு நிலைதான்-வாயிற்படிதான்-அதாவது சுமார் ஒரு அடி அளவு இடம் தூரம் தானிருக்கிறது. பிரசாதம் வாங்கக் கையை, கதவைத் தாண்டி உள்ளே நீட்டலாம். படுத்திருக்கும் 10, 12 அடி நீளமுள்ள சிலையின் தலையையும் காலையும் பார்க்க-பக்தர்கள் தலையையும் கழுத்தையும் கதவு நிலையைத் தாண்டி உள்ள நீட்டலாம். பூசாரிக்குக் கூட நெற்றியில் நாமம், விபூதிதான் இருக்க வேண்டுமேயொழிய, அவன் ஸ்நானம் செய்துவிட்டு  வர வேண்டுமென்றோ, சுத்தமான வேட்டி கட்டிக் கொண்டு வர வேண்டுமென்றா திட்டம் கூடக் கிடையாது.

அவர்களில் அனேகர் ‘மாமா’வாக இருப்பார்கள் என்பதோடு, தாசிகளிடம் சங்கமம் இதழ் அமுதம் பருகுபவர்களாகவும் இருப்பார்கள். மாலையில் நாம் கோயிலுக்கு அணுப்புகிற சண்பகப் பூ, மனோரஞ்சிதப் பூமாலையில் உள்ள பூ-இரவு 10 மணிக்குத் தாசி வீட்டிற்குப் போனால் அந்தத் தாசியின் தலையில் பார்க்கலாம். (அந்தக் காலத்தில் இந்தப் பூக்கள் எங்கள் நந்தவனத்தில் மாத்திரம்தான் உண்டு). ஆக மூலஸ்தானப் பிரவேசத்திற்கும், கர்ப்பக் கிரகப் பிரவேசத்திற்கும் சட்டம். சாஸ்திரம் ஒன்றும் கிடையாது. ஆச்சாரம் அணு·டானம் என்பதற்கும் எந்தத் திட்டமும் கிடையாது -இந்து மதம் என்பதற்கே கிடையாது.

நெற்றிக் குறி என்பதும் அதிகாரத்தாலும்.  செல்வாக்காலும் ஏற்பட்டதேயொழிய அதற்குச் சட்டமோ, சாஸ்திரமோ, நிர்ப்பந்தமோ கிடையாது.

ஆகவே, சாதிபேதம், மத பேதம் என்பவை அணு·டாத்திலும் இல்லை; சட்டத்திலும் இல்லை. சாஸ்திரத்திலும் இல்லை.

உண்பன, தின்பன வகையிலும் பெண் கொடுப்பன, கொள்வன என்பவைகளிலும் சட்டப்படியே தடை நீக்கப்பட்ட பிறகு-‘ஒரு நிலக் குறிப்பான இடத்திற்கு-மூலஸ்தானத்திற்கு’ மட்டும் உண்டு என்றால், இது எவ்வளவு பைத்தியக்காரத்தனம் என்பதோடு, இதனால் சமுதாய இழிவும் அமுல் படுத்தப்படுவதென்றால் எவ்வளவு மானக் கேடான காரியம் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

எனவே, ஆட்சியாளர் இதைப் பகுத்தறிவோடு கவனிக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறேன். (விடுதலை-18-10-1969)

இழிவு நீக்கக் கிளர்ச்சி - பெரியார்

 இழிவு நீக்கக் கிளர்ச்சி

சூத்திரர் என்கின்ற இழிவை நீக்கக் கிளர்ச்சி செய்வது என்பது சமுதாய சம்பந்தமான (சோஷியலிச) காரியமே தவிர, இதில் அரசியல் ஏதுமில்லை; மற்றும் இதில் பலாத்காரம் என்பதுமில்லை.

அதிலும், இந்த இழிவு நீக்கக் கிளர்ச்சி என்பது, லேசில் எங்குமே இல்லாத அக்கிரமக் கொடுமையிலிருந்து மனிதன் விடுதலை, மானம் பெற வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் கிளர்ச்சியேயாகும். இதில் எந்தவித வகுப்புத் துவேஷமோ, வகுப்பு வெறுப்போ இல்லை. நம் நாட்டில் (இந்துக்கள் என்ணும்) சமுதாயத்தில் 100க்கு 97 பேர்களாக உள்ள மக்கள்- அதிலும், படித்தவர்கள், செல்வவான்கள், உயர்தர அய்க்கோர்ட் நீதிபதிகள், கலெக்டர்கள், உப அத்தியட்சகர்கள், மடாதிபதிகள், சமீப காலம்வரை மகாராஜாக்கள், அரசர்கள், ஜமீன்தார்கள், பலகோடி ரூபாய்க்குச் சொந்தக்காரர்கள், பிரபுக்களுட்பட இவர்கள்- சமுதாயத்தில் கீழ்ப் பிறவியாக, கீழ்மக்களாக, கடவுள் என்கிற (அதுவும் அவர்களுடைய கடவுள்)சிலையிடம் நெருங்கக் கூடாதவர்களாக, அறைக்கு வெளியே நிற்க வேண்டியவர்களாகத் தலைமுறை தலைமுறையாகத் தடுக்கப்பட்டு, நிரந்தரக் கீழ்மக்களாக, (கடவுள் என்கிற அவர்களுடைய கடவுள்) சிலையிடம் நெருங்கக் கூடாதவர்களாக, அறைக்கு வெளியே நிற்க வேண்டியவர்களாகத் தலைமுறை தலைமுறையாகத் தடுக்கப்பட்டு, நிரந்தரக் கீழ்மக்களாக ஆக்கப்பட்டிருக்கும் கொடுமைக்கு, இழிவுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதிலிருந்தது விலக்கி, மானமுள்ள மக்களாக-ஆக்கப்பட வேண்டுமென்பதற்குக் கிளர்ச்சி செய்வதென்றால் - இது, இது வரை செய்யமாலிருந்ததுதான் மானங்கெட்ட தன்மையும், இமாலயத் தவறுமாகுமே யொழிய, இப்போது கிளர்ச்சி செய்வதென்பது ஒரு நாளும். ஓரு விதத்திலும் தவறாகவோ கூடாததாகவோ ஆகாது; ஆகவே ஆகாது.

நீக்ரோக்களுக்கும், வெள்ளையருக்கும் உள்ள அளவு பிறவி பேதம், நிறபேதம், நாகரிக பேதம் நமக்கும் பார்ப்பனருக்கும், பூசாரிகளுக்கும் கிடையாது. அவ்வளவு பேதமுள்ள (மைனாரிட்டி) நீக்ரோக்கள் மெஜாரிட்டியான, ஆளும் சாதியரான, பிரபுக்களான வெள்ளையர்களோடு எல்லாத் துறைகளிலும் சரிசமமாகக் கலந்து, உண்பன, உறங்குவன, பெண் கொடுக்கல்-வாங்கல், உட்படக் கலந்து புழங்குகிறார்கள். ஆனால், நம் நாட்டில்  100-க்கு மூன்று பேரே உள்ள கூட்டம் பிச்சை எடுப்பதையும் உழைக்காததையும்,  கூலிக்குப் புரோகிதம் செய்வதையும் உரிமையாய்க் கொண்ட-பிழைப்பாய்க் கொண்ட கூட்டம், மற்றும் வாழ்வில் யோக்கியமாக, நேர்மையாக, நாணயமாக இருக்க வேண்டும் என்கின்ற தர்மம் இல்லாததும் தாங்கள் எது வேண்டுமானலும் செய்து பிழைக்கலாம், எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்கின்ற அணுபவத்தில் இருக்கிற கூட்டம்- தங்களை‘மேல் பிறவி’ என்றும்,   நம்மைக் ‘கீழ்ப்பிறவி இழி பிறவி’ பொது இடமாகிய கடவுள் என்கின்ற கல் சிலையிருக்கும் இடத்தில் பிரவேசிக்கக் கூடாத மிகமிக இழிதன்மையானவர்கள் என்பதான நிபந்தனையை நம் பேரில் ஏற்றிக் கொண்டு கட்டிடத்திற்கு அறைக்கு வெளியில் நின்று வணங்க வேண்டும் என்பதை-நிலைக்க விடலாமா என்பது தான் கிளர்ச்சியின் தத்துவமாகும்,

வேறு நாடுகளில் இப்படிப்பட்ட கொடுமையான, இழிவான தன்மை எந்தச் சமுதாயத்திற்கும் இருக்குமானால் எவ்வளவோ கொலை, பலாத்காரம், நாச வேலை நடத்தி ஒழிக்கப்பட்டிருக்கும். அப்படிக் கொடுமை இந்த நாட்டில் இருந்து வருகிறதென்றால் இது யாருடைய தவறு? யாருடைய மானங்கெட்ட ஈனத்தனம் என்று ஒவ்வொரு தமிழனையும் சிந்தித்துப் பார்க்கும்படி வேண்டிக் கொள்கிறேன். மற்றும். இது விஷயத்தில் நாம் கிளர்ச்சி செய்து வெற்றி பெற்றால் அதனால் யாருக்கும். எந்த நபருக்கும் ஒரு தூசி அளவு நட்டமும். கேடும் இல்லாத ஒரு காரியமாகும். கடவுள்களைப் பூசை செய்கிற பூசாரி வேலை பார்ப்பனருக்குத் தான் -மேல் சாதிக்காரருக்குத்தான் உண்டு என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லையென்றாலும் கோயில் பூசை செய்பவன் பார்ப்பனல்லன்;மேல் சாதிக்காரணுமல்லன்; குருக்கள் என்கின்ற ஒரு சாதியானவன் என்றும் சொல்லப்படுகிறது; ஆதாரங்களுமிருக்கின்றன.

  அந்தக் குருக்கள் என்பவர்கள் பார்ப்பனரல்லாத சைவர்களே ஆவார்கள் என்று சில ஆதாரங்களில் இருக்கின்றன. மற்றும் ஒரு குறிப்பிட்ட சாதியார் தான் பூசாரியாக இருக்க வேண்டுமென்கின்ற நிபந்தனை எந்த ஆதாரத்திலுமில்லை.

குருக்கள், அர்ச்சகர்கள் என்பவர்கள் வீட்டில் பார்ப்பனர்கள் சாப்பிடவே மாட்டார்கள். பெண் கொடுக்கல், வாங்கலும் செய்ய மாட்டார்களாம். இந்த நிலையிலிருப்பவர்கள் பூசை செய்யும் இடத்திற்கு, மற்ற இந்து மக்கள்-பார்ப்பனரல்லாதார் மட்டும் நுழையக் கூடாது என்றால் அது எப்படி நியாயமாகும்?

தமிழ் நாட்டிலேயே பல கோயில்களில் சாத்தாணி என்கின்ற பார்ப்பனரல்லாதவர்கள் பூசை செய்கிறார்கள். பல கோயில்களில் ஆண்டிகள், பண்டாரங்கள் என்கின்ற பார்ப்பனரல்லாதவர்கள் பூசை செய்கிறார்கள். மற்றும், நாம் மூலஸ்தானம் என்பதற்குள் செல்வதால் அந்த மதத்திற்கோ-சாமிக்கோ எந்தவிதப் புனிதமும் கெட்டுப்போவதில்லை; சிலையைத் தொடவேண்டாமென்று வேண்டுமானாலும் திட்டம் வைத்துக் கொள்ளலாம். ஆனால், நெருங்கக் கூடாது; அந்த அறையின் படியைத் தாண்டக் கூடாது என்பது என்ன நியாயம்? உற்சவக் கடவுள்கள், சிலைகள் என்பவைகளிடமெல்லாம் எல்லாச் சாதியாரும், எல்லா மக்களும் நெருங்குகிறார்கள்.

மூலஸ்தானத்திற்கு வெளியில் பிரதி·டை செய்யப்பட்ட நவக்கிரகங்கள் என்கின்ற கடவுள்கள்- மற்ற சிலைகளிடம் எல்லோரும் நெருங்குகிறார்கள்.

எனவே, அந்தக் கர்ப்பக் கிரகம் என்கின்ற பூச்சாண்டிகள் பார்ப்பனரல்லாத மக்களை, இழி மக்கள்-இழி பிறப்பாளர்கள் என்றாக்கப்படுவதற்காகத்தான் இருந்து வருகிறதேயல்லாமல். மற்றபடி வேறு எந்தப் புனிதத் தன்மையையும் பாதுகாக்கவல்ல என்பதே நமது கருத்து. அன்றியும் நாம் உள்ளே சென்று வணங்குவதால் எந்தப் புனிதத் தன்மையும் கெட்டுவிடுவதில்லை என்பதும், உள்ளே செல்ல வேண்டும் என்ற நமக்கும் நம் உறுதிக்கும் உண்மையில் எந்தப் புனிதத் தன்மையையும் கெடுக்க வேண்டும் என்கின்ற எண்ணம் இல்லவே இல்லை.நமது இழிவு நீக்கப்பட வேண்டும் என்கின்ற காரியத்திற்காகத்தான் இதைச் சொல்லுகிறோம். 

ஆகவே, தோழர்களே, இந்தக் கிளர்ச்சி அவசியமா, இல்லையா?

என்ன சொல்கிறீர்கள்? அவசியம் என்றால் வாருங்கள் போகலாம்.

உடனே பெயர் கொடுங்கள் (விடுதலை-19-10-1969)

தேச படத்தைக் கொளுத்துங்கள் - பெரியார்

 தேச படத்தைக் கொளுத்துங்கள்

அருமைத் தமிழ்ப் பெருமக்களே!

இந்திய யூனியன் ஆட்சி (டெல்லி ஆட்சி) இந்தி மொழியைத் தீவிரமாகப் பரப்ப ‘கச்சையை’ வரிந்து கட்டிக் கொண்டு தீவிரமாக எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டு வருகிறது.

இந்திய அரசியல் சட்டத்தின் 343 வது ஷரத்து சொல்கிறது; ‘யுனியனின் ராஜாங்க பாஷை தேவநாகரி லிபியில் எழுதப்பட்ட இந்தியாக இருக்க வேண்டும்’ என்று.

அதில் குறிப்பிடப்பட்டப்படி ஏற்படுத்தப்பட்ட அரசாங்க மொழிக் கமிஷன் -திரு. பி.ஜி. கெர் என்பவர் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது-நாம் முன் கூட்டியே சொன்னபடி ‘இந்தி மொழிக் கமிஷன்’ என்று கூறும் அளவு இந்திதான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதையும் இங்கிலிஷிலிருந்து இந்திக்கு மாற்றங்கள் விரைவில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் எழுதிவிட்டது. பார்லிமெண்டும் அதன் சிபாரிசுகளை ஏற்றுக் கொண்டது. நமது நாட்டைச் சார்ந்த திரு. டாக்டர் சுப்பராயன் அவர்கள் அக் கமிஷனில் ஒரு மெம்பராக இருந்து ஆட்சேபக் குறிப்பு  தெரிவித்த போதிலும் அவர்கள் காரியம் இதனால் எள்ளளவும் பாதிக்கப்படவில்லை.

ஆறு பேர் கொண்ட கமிட்டி அமைத்து அதில் டாக்டர் அம்பேத்கார் அவர்களையும் ஒரு அநாமதேய முஸ்லிமையும் போட்டு 4 பார்ப்பனர்கள் கூடி, கல்லுப் பிள்ளையார் மாதிரி அமர்ந்து, அசைக்க முடியாதபடி பார்ப்பன நலச்சட்டம் ஒன்றை-நவீன மணுதர்மத்தை-எழுதி அதற்கு ‘இந்திய அரசியல் சட்டம்’ என்று பெயரிட்டுக் கொண்டது போல், இந்திக் காரர்களையே போட்டு. பெயருக்கு ஒரு தமிழரைப் போட்டு அவரது ஆட்சேபக் குறிப்புக்கு எந்த மரியாதையும் கொடுக்காமல், இந்தி நுழைப்புக்குச் சரியானபடி அடிகோலி ஆணி அடித்துவிட்டார்கள்.

முன்பு ஒரு தடவை திருப்பதியில் இந்திய யூனியன் ஆட்சியின் தலைவரான ஜனாதிபதி திரு. ராஜேந்திர பிரசாத் அவர்கள் இந்தித் திணிப்பிற்கு முழு ஆதரவு கொடுத்துப்  பேசியதைத் தமது அடுக்கடுக்கான உத்தரவுகள் மூலம் செயல்படுத்திக் காட்டுகிறார்.

முன்பு நாம் இந்தியைப் புகுத்துவதை எதிர்த்து இந்திய யூனியன் கொடியைக் கொளுத்துவது எனப் பிரகடனம் செய்தோம். ‘இல்லை, இல்லை; இந்தி பேசாத மக்களின் விருப்பத்திற்கு மாறாக இந்தியைத் திணிப்பதில்லை’ என்று அரசாங்கத்தினர் உறுதிமொழி கொடுத்து, நம்மைக் கொடி கொளுத்தும் போராட்டத்தைக் கை விடும்படி கேட்டுக் கொண்டனர்.

நான் அப்போதே இவர்களது நாணயத்தையும் வாக்குறுதியையும் எடை போட்டுப் பார்த்துத்தான் கைவிட வில்லை. தற்போதைக்கு நிறுத்தி வைக்கிறேன்-அதாவது ஒத்தி வைத்திருக்கிறேன் என்று அறிக்கை விட்டேன்.

பிறகு சாமர்த்தியமாக, கொடியைக் கொளுத்தினால் மூன்று வருஷ தண்டனை என்பதாக ஒரு சட்டத்தை (இந்நாட்டுச் சட்டசபைக்கு உத்தரவிட்டு)ச் செய்து வைத்துக் கொண்டு, இந்தியைத் தீவிரமாகப் புகுத்தும் கைங்கர்யத்தில்’ டெல்லி ஆட்சியினர் இறங்கியுள்ளனர்.

மைல் கற்களில் எல்லாம் இந்தி எழுப்படுகிறது. தமிழ்நாடு மந்திரிகள் ஆட்சேபித்தாலும் கூட அதற்கு டெல்லிக்காரர்கள் செவி சாய்ப்பதில்லை.

மணியார்டர், கார்டு மற்ற தபால் தந்தி ரசீதுகளில் இந்தி மயம்!

(வெளிநாடான இலங்கையில் சிங்களவர் அரசாங்கத்தால் கூட தமிழில் இவைகள் எல்லாம்-அதாவது கார்டு, ஸ்டாம்பு முதலியன இருக்கின்றன என்பது இங்கு நாம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்)

வானொலிப் பெட்டியைத் திருப்பினால் அங்கு ஆகா·வாணி’ என அலறுவதைக் காணூகிறோம்.

மத்திய இலாக்காக்களான தபால், ரயில்வே,சுங்கம் போன்ற பல துறைகளில் வேலையில் உள்ளவர்களை எல்லாம் இந்திபடித்து பாஸ் செய்யும்படி சுற்றறிக்கைகளும், தாக்கீதுகளும் தூண்டுதல்களும் இடைவிடாமல் நடந்தவண்ணமே இருக்கின்றன.இலாக்காவினரோ இந்தி வாத்தியார் போட்டு வேலை நேரத்தில் ஒரு பகுதியை அதற்கும் தந்து இந்தி படிக்கும்படி செய்துகொண்டு இருக்கிறார்கள்.

பள்ளிக்கூடங்களில் எல்லாம் இந்தி கட்டாயமாகவே மாணவர்களுக்குப் புகுத்தப்படுவதுடன், இந்தியில் மார்க் வாங்காத மாணவர்கள் ஃபெயிலாக்கப்படுகின்றார்கள்.

இந்தி பேசாத ராஜ்யங்களிலிருந்து பிரதிநிதிகள் டெல்லி சட்டசபையில் மந்திரிகளைக் கேள்வி கேட்டால் அவர்களுக்குப் புரியாதவகையில் இந்தியிலேயே பதில்கள் தரப்படுகின்றன. இதைத் தட்டிக் கேட்டுப் பரிகாரம் தேட அவர்களுக்கு வசதி ஏதும் இல்லை.

இந்தியைப் பிரதான மொழியாகக் கொண்ட உத்திரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் போன்ற ராஜ்யப் பிரதிநிதிகள் கணிசமான அளவு அங்கு இருப்பதால் இந்தி ஆதிக்கத்தை-ஆதிபத்தியத்தை எதிர்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று பல பார்லிமெண்ட் உறுப்பினர்களுக்கே தெரியும்.

மற்றும், அகில இந்தியக் கட்சிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் எந்தக் கட்சியும் இந்தித் திணிப்பை எதிர்ப்பது- பேசுவது என்பது இயலாத காரியமாகும்.

சென்ற இரண்டு வாரங்களுக்குமுன் ஜனாதிபதி போட்டுள்ள உத்திரவு-இந்தியை எப்படியேணும் சீக்கிரம் திணித்து இங்கிலிஷைப் புதைகுழிக்கு அணுப்பியாக வேண்டும் என்கிறது.

இந்தி எதிர்ப்பாளர்கள் கருத்துக்கு மதிப்புத் தருவது போல, பிரதம மந்திரி நேரு சிற்சில நேரங்களில் பார்லிமெண்டிலும் வெளியிலும் வாய்ப்பேச்சு-உறுதிமொழிகள் தருகிறார். அந்தப் பேச்சு அச்சுப் போட்டு வெளியே வருவதற்குள்-அச்சு மை உலருவதற்கு முன்பே உள்நாட்டு மந்திரி இலாக்காவிலிருந்தோ அல்லது ‘இரா·டிரபவன’த்திலிருந்தோ இந்தி நுழைப்புத் திட்டம் வந்துவிடுகிறது.

ஆகவே இந்தியைத் தீவிரமாக எதிர்க்கிறோம் என்கிற தோழர்களே! கட்சிக் காரர்களே!

இந்தியாளர்களை ஆட்சிப் பீடத்தில் கொண்ட இந்திய யூனியன் ஆட்சி இருக்கும் வரை இந்தி நுழைக்கப்படாமல் இருக்க முடியுமா? என்று தீவிரமாக நாணயமாக யோசியுங்கள்!

நண்பர் ஆச்சாரியார் அவர்கள் இரண்டு ஆண்டுகளாக ‘இந்தி நுழைப்பு தேச அய்க்கியத்தைக் குலைக்கும்’ என்று சொல்லி வருகிறார். அதன் அர்த்தம், கருத்து எல்லாம்- இந்தியை ஒழிக்க முடியாவிட்டால் நாம் இந்தி ஆட்சியாகிய இந்திய ஆட்சிலிருந்து பிரிந்து கொள்வது என்பதுதானே?

இந்தியை எதிர்க்க, அதன் ஆதிக்கத்தை ஒழித்துக் கட்ட ஆட்சியின் பிணைப்பிலிருந்து நாம் விடுபடுவதைத் தவிர வேறுவழியுண்டா? சொன்னால் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றேன்.

மைல் கற்களில் இந்தி எழுதப்படுவதை எதிர்த்து ஒரு போராட்டம். உண்ணாவிரதம்

‘ஆகாசவாணி’யை எதிர்த்து ஒரு போராட்டம்! உண்ணாவிரதம்! மறியல்!

தபால், கார்டு, கவர்கள், மணியார்டர் கூப்பன்களில் இந்தி இருப்பதை எதிர்த்து ஒரு போராட்டம்! மறியல்! கிளர்ச்சி!

இப்படித் தனித்தனியாகக் கிளர்ச்சிகள் நடத்துவதனால் இலட்சியம் எந்த அளவுக்குக் கைகூடும்? எந்த அளவு இந்திக் கேடு நம்மைவிட்டு நீங்கும்? என்று யோசியுங்கள்! தனிப்பட்டவர்களுக்கும், கட்சிக்காரர்களுக்கும், விளம்பரம், வோட்டு, தியாக முத்திரை இவை கிடைக்குமே தவிர, காரியத்தில் அது இந்தி ஒழிப்புக்கு எந்த அளவு பயன்படும்?

எனவே இந்தி விஷவிருட்சத்தின் ஆணி வேரைக் கெல்லி எறிய ஒரே வழிதான் உண்டு. அதுதான் நாடு பிரிவினை.

ஆகவே அருமை இந்தி எதிர்ப்பாளர்களே! நீங்கள் வேறு எதற்காகவும் இந்திய தேசப் படத்தை எரிக்கவில்லை என்றாலும் இதற்காகவாவது கொளுத்துங்களேன்!

ஜுன் 5 ஆம் தேதி மாலை தயார்தானா? பல நாட்கள் அவகாசம்  இருக்கிறது! நிதானமாகச் சிந்தியுங்கள்! இலட்சியத்தில் கவலை இருந்தால் தீ வையுங்கள், இந்தியத் தேசப்படத்திற்கு (விடுதலை-21-5-1960)

தமிழ்நாடு எதற்காக யூனியன் (டெல்லி) ஆட்சியின் கீழ் அடிமையாக இருக்க வேண்டும்? இல்லாவிட்டால் என்ன ஆகிவிடும்?டெல்லி ஆட்சி அப்படி என்ன நீதிக்கும், நிர்வாகத் pதிறமைக்கும், நேர்மைக்கும் ஜனநாயகத்திற்கும், பாதுகாப்பிற்கும், பலத்திற்கும் சிறப்பான பேர்போன ஆட்சி?

1. வரலாற்றுப்படி நாம், டெல்லியுடன் இணைந்து கூட்டாக இருக்க வேண்டும் என்பதற்கு ஏதாவது ஆதாரங்கள்; உண்டா? 56 நாடுகளில்  நாம் ஒரு நாட்டாராய் இருந்து வந்தவர்கள்!

வெள்ளைக்காரன் வியாபாரம் நிமித்தம் இங்கு வந்து பல பகுதிகளில் இருந்த நாடுகளையும் பிடித்துத் தனது சவுகரியத்தை முன்னிட்டு இதை ‘ஒரு குடைக்கீழ்’ கொண்டு வந்தானே தவிர அதற்கு முன்பு எப்போதாவது டெல்லியை எஜமானனாகக் கொண்டு தமிழ்நாடு இருந்தது என்று சரித்திரத்தைப் புரட்டிக் காரணம் காட்ட முடியுமா? ‘கா·மீரம் முதல் கன்னியாகுமரி வரை’ என்ற சொற்றொடருக்கு அய்க்கியப்பட்ட ஒரே நாடு இந்தியா என்ற பொருள் இதற்கு முன் எப்போதாவது இருந்திருக்கிறதா? அல்லது,

2. புராணப்படியோ, இதிகாசப்படியோ;ஒரே நாடாக இருந்திருக்கிறதா? ‘சுயம்வரத்திற்குக் கூட 56 தேசத்து ராஜாக்கள் வந்திருந்தார்கள்’ என்றுதான் அவைகள் கூறுகின்றன. இராமாயணத்தில் வில் உடைப்பதற்குக் கூட பல தேச ராஜாக்கள் வந்தார்கள் என்று இல்லையா?

ஆகவே அப்போதும் கூட பற்பல ராஜ்யங்கள், அவைகளுக்குத் தனித்தனி ல்லைகள், ராஜாக்கள் இருந்திருக்கின்றனர் என்று தானே அறிகிறோம்?

3. பூகோளப்படி எந்த நாடாவது 2000 மைல்களுக்கு அப்பால் எஜமான் ஆட்சியை வைத்திருப்பதும், எதற்கெடுத்தாலும் அங்கு  ஓடி ஓடி கருத்தும் உத்தரவும் என்ன என்று தெரிந்து, பிறகு செயலாற்றும் தன்மையைக் கொண்டுள்ளதா? எந்த வகையில் இது சரியானதாகும்?

4. கலாசாரப்படியாவது டெல்லி எஜமான ஆட்சிப் பீடர்களாகிய அவர்களுக்கும் நமக்கும் சம்பந்தம் ஏதாவது உண்டா?

உணவில், உடையில், மொழியில் எல்லாவற்றிலுமே ஒன்றுக்கு மற்றொன்று ஏறுமாறான நிலை?

ஆகவே, வரலாற்றுப்படியும் காரணமில்லை;

பூகோளப்படியும் காரணமில்லை;

புராணப்படியும் காரணமில்லை;

கலாசாரப்படியும் காரணமில்லை.

இந்தப்படியான எத்தன்மையாலும் நாம் டெல்லி ஆதிக்கத்திற்கு அடிமையாவதால் நமக்கு ஏதாவது சமுதாயம், பொருளாதாரம், ஆட்சிமுறை ஆகிய ஏதாவது ஒரு துறையிலாவது பலன் ஏற்படுகிறதா? ஏற்படுகிறது என்ற நிலையிலிருந்தாலாவது யூனியன் ஆட்சியின் கீழ் நாம் இருப்பதில் அர்த்தம் உண்டு.

இந்த ஆட்சியில் நீதி இல்லை என்பதைச் சில ஆண்டுகளுக்கு முன்பே சென்னை அய்க்கோர்ட்டில் என்மீது போடப்பட்ட ஒரு வழக்கின் போது தெளிவாக எடுத்து விளக்கி ‘பார்ப்பான், நீதிபதியாய்-ஆட்சியாளனாய் உள்ள நாடு கடும்புலி வாழும் காடேயாகும்’ என்று குறிப்பிட்டுள்ளேன்.

நிர்வாகத் திறமையோ நேர்மையோ இல்லை. ஒவ்வொரு வருஷமும் ஆடிட்டர் ஜெனரல் தரும் ரிப்போர்ட் ஒன்றே அதற்கு நல்ல ‘சர்ட்டிபிகேட்’டாக இருக்கிறது. பலகோடி நம்மிடம் சுரண்டும் வரிப்பணம் நாசத்திற்கும் மோசத்திற்கும் ஈடாக்கப்படுகிறது.

நம்மிடமிருந்து நம்மைக் கசக்கிப்பிழிந்து வாங்கி அதை அவர்கள் டாட்டா, பிர்லா, முந்திராக்கள் இடம் கோடி கோடியாகத் தந்து, அதற்குக் கைமாறாக (காங்கிரஸ் தேர்தல் நிதிக்கு இலட்சம் இலட்சமாகப் பெற்றுக் கொள்ளுகின்றனர்.

சென்ற ஆண்டு பிரதம மந்திரி திரு. நேருவின் காரியதரிசியாக இருந்த திரு. மந்தாய் என்பவர் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு அதிபராகவும், அதைக் கொண்டு அவர் தாயார் பெயரில் ‘ஜக்கம்மா டிரஸ்ட்’ என ஏற்படுத்தியும், செய்த ஜகஜாலப் புரட்டுகளையும், அதைப் பூசி மெழுகி மூடி மறைக்க நேரு பட்டபாட்டினையும், கடைசியில் முந்திரா விவகாரம் போலவே அது அமிழ்த்தப்பட்டதும் நாம் அவ்வளவு சுலபமாக மறந்து விடுவதற்குரியவைகளா?

பிர்லா, டாட்டா, டால்மியா போன்றவர்களிடம் வாங்கும் தேர்தல் நன்கொடையும் அதற்குப்  பிரதிஉபகாரம் என்ற முறையில் சர்க்கார் அவர்களுக்கு வழித்துறை வகுப்பதும் நாம் எடுத்துக் காட்டி வராதவைகள் அல்லவே? இந்திய யூனியன் ஆட்சியின் நிர்வாகத் திறமைக்கும் நீதிக்கும் இன்ணும் வேறு எடுத்துக்காட்டுகள் வேண்டுமா?

ஜனநாயகத்திற்கும், இந்த ஆட்சிக்குந்தான் ஏதாவது சம்பந்தமுண்டா? ‘எனது கொடி, அரசியல் சட்டம், ஆட்சி பிடிக்காதவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறி விட வேண்டும்’  என்று பார்ப்பன சர்வாதிகாரத் திமிருடன் பேசும் ஒரு பிரதம மந்திரியைக் கொண்ட இந்த ஆட்சிக்கு ஜனநாயக ஆட்சி என்று பெயரிட்டு அழைப்பதை விட வடிகட்டிய முட்டாள்தனம் வேறு உண்டா?

அதிலும், கேரளத்தில் முறைப்படி நடந்த கம்யூனிஸ்ட் ஆட்சியைக் காலித்தனம் மூலம் கவிழ்க்க ஏற்பாடுகள் செய்து, பிறகு அதைக் காட்டி, ஒரு வரி உத்தரவின் மூலம் ஒழித்துக் கட்டினார்களே, அந்தப் பிரத்யட்சநிலையைவிட வேறு உதாரணம் வேண்டுமா?

யூனியன் ஆட்சியின் கீழ் இருப்பதால் மற்ற எவையும் இல்லாவிட்டால் கூட நமக்கு பாதுகாப்பாவது இருக்கிறதா? வருஷம் ஒன்றுக்கு சுமார் 250 கோடி ரூபாய்க்கு மேல் இராûவத்திற்குச் செலவழிக்கப்படுகிறது. அதாவது 55ரூ இதற்குச் செலவழிக்கப்படுகிறது. ஆனாலும் பலன் உண்டா?

ஒரு பக்கத்தில் சீனாக்காரன் ஆக்கிரமிப்பு; இன்னொரு பக்கத்தில் பாகிஸ்தான்காரனிடம் தினம் தினம் உதைபடும் நிலை. ‘சுண்டைக்காய்’ கோவாவை இதுவரை முயற்சி செய்தும் இவர்களால் எடுத்துக் கொள்ள முடியாத நிலை; வீணாகப் பல உயிர் பலியானதுதான் மிச்சம். உலகமெல்லாம் சென்று ‘தோட்டாக்கள்’ பெற்று வரும் பண்டித நேருவால் கடுகளவு உள்ள இதற்குப் பரிகாரம் காண இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளாக முடியவில்லை.

கடன், கடன் என்று வெளி நாட்டாரிடம் பல்லைக் காட்டிக் கெஞ்சி பல கோடிகள் மடிப்பிச்சை வாங்கி, கா·மீர் முனையிலும் இது போன்ற மற்ற காரியங்களிலும் அவை பாழடிக்கப்பட்டு வருகின்றன. கா·மீர் பிரச்சினைக்கு மாத்திரம் இதுவரை சுமார் ரூ 300 கோடிக்கு மேல் செலவழித்தனர். ‘காதொடிந்த ஊசியளவும்’ பயன் விளையவில்லை.

இந்த நிலையில் எதற்காக நாம் டெல்லி ஆட்சியின் கீழ் இருக்கவேண்டும்? ஆண்டு ஒன்றுக்கு 66 கோடி ரூபாய் எதற்காகக் ‘கப்பம்’ கட்ட வேண்டும்?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்! ஏக இந்தியத் தோழர்களே, நன்றாகச் சிந்தியுங்கள்!

தெளிவடைவீர்களானால், ஜுன் 5-ந்தேதி மாலை இந்தியத் தேசப் படத்தில் தீ வையுங்கள்! நாடு பிரிக்க, மேற்கூறிய அநியாய அக்கிரமங்களைக் கண்டிக்க , அடக்கி ஒழிக்க இது ஒன்றுதான் வழி! வேறு மார்க்கம் இருந்தால் காட்டுங்கள்; வேறு வழி இருந்தால் சொல்லுங்கள், இல்லை என்றால் நீங்கள் எங்கள் வழிக்கு வாருங்கள்! நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்! பந்தத்தை ஏந்துங்கள்! படத்தைப் பொசுக்குங்கள்! (விடுதலை -22.5.1960)