பிராமணாள் பெயர் அழிப்பு
சென்னை ‘இராஜ்ய ஆட்சியாளருக்கும்’, கவர்னர் பெருமான் அவர்களுக்கும், சென்னை மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் தாழ்மையோடு தெரிவித்துக் கொள்வதாவது:
நம் நாட்டில் இருந்து வரும் சாதிப் பிரிவுகள் ஒழிந்து, மக்கள் யாவரும் சாதிப் பிரிவற்ற ஒரே சமுதாயமாக இருக்க வேண்டும் என்பது அரசாங்கத்தார் இலட்சியமாகவும், முயற்சியாகவும் இருந்துவரும் என்கின்ற எண்ணத்தின் மீதே, இந்த வேண்டுகோளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நம் நாட்டில் இந்தியப் பிரதமரும், தமிழ்நாடு முதலமைச்சரும் ஆகிய இரு கனவான்களும் சாதிப் பிரிவு ஒழிக்கப்பட வேண்டுமென்று பல சந்தர்ப்பங்களில் சொல்லி வந்திருக்கிறார்கள். உத்தியோகங்களில் ‘கவார்ட்டர்லி சிவில் லிஸ்ட்’ என்பதாக நீண்ட காலமாய்ப் பதிப்பித்து வந்த புத்தகத்தில், ஒவ்வொரு உத்தியோகஸ்தர்களுடைய சாதியைக் காட்டும் குறிப்பை இப்போது எடுத்துவிட்டார்கள்.
பல ஆதாரங்களிலும் சாதிகளைக் காட்டக் கூடாது என்று அரசாங்கத்தால் திட்டப்படுத்தப்பட்டிருக்கிறது.
சாதியின் பெயரால் பள்ளிக் கூடங்கள் இருக்கக் கூடாது என்றும், அப்படி ஏற்படுமானால் அதற்கு அணுமதியும் உதவித்தொகையும் கொடுக்கப்படமாட்டாது என்றும் அரசாங்கத்தாரால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சில விஷயங்களில் சாதி மட்டுமல்ல-இனத்தின் பெயரைக் கூடக் குறிப்பிடக் கூடாதென்று சில விளம்பரப் பலகைகளில் இனப் பெயரை அரசாங்கம் மாற்றி விட்டது. உதாரணமாக, திராவிடன் என்று காணப்பட்டதையெல்லாம் அழித்துவிட்டுத் தமிழன், தமிழ்நாடு என்று போடப்பட்டுள்ளது.
பள்ளிக் கூடங்களில், கல்லூரிகளில் சேர்ந்து கொள்ள விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களில் சாதிப் பெயர் காட்டக் கூடாதென்றும், மாணவர்களைத் தெரிந்தெடுத்துச் சேர்ப்பதற்காக ஏற்பாடு செய்யப்படும் கமிட்டியார்-செலக்ஷனில் நேரில் வரும் மாணவர்களை‘நீ என்ன சாதி?’ என்று கேட்கக் கூடாதென்றும் ஆணை கொடுக்கப்பட்டிருக்கிறது.
இவைகளெல்லாம் சாதிப் பிரிவை உத்தேசித்துச் செய்யப்பட்ட ஏற்பாடுகளே தவிர, சாதிக்குள்ளிருக்கும் உட்பிரிவையோ, பேதத்தையோ பொறுத்தல்ல. சாதிப்பிரிவு விஷயங்களில், நம் நாட்டில் முக்கியாமாக அணுபவபூர்வமாகக் காணப்படுவதெல்லாம் இரண்டே சாதிகள் என்கின்ற பிரிவுதான். அதாவது, ஒன்று ‘பிராமணன்’; மற்றொன்று ‘சூத்திரன்’. அந்த ‘சூத்திரன்’ என்கிற வார்த்தை இழிவாயிருக்கிறது என்கிற காரணத்தினால், எதிர்ப்பு ஏற்பட்டதன் பலனாக, பிராமணனை மட்டும் பிராமணன் என்றே சொல்லிக் கொண்டும் எழுதிக் கொண்டும் வருவது பழக்கத்தில் வருவதோடு, சூத்திரர்களைப் பொறுத்த வரையில் ‘பார்ப்பனரல்லாதார்’ என்றும் , ‘திராவிடன்’ என்றும் சில சந்தர்ப்பங்களில் ‘தமிழன்’ என்றும் இப்படிக் பலவாறாகச் சொல்லப் படுகிறது. எப்படியிருந்தாலும், பிராமணன் ஒரு சாதி. அவன் நீங்கிய மற்ற எல்லா இந்து மக்களையும்-அதாவது சத்திரியன், வைசியன், சூத்திரன் முதலிய எந்தச் சாதிக்காரர்களையும் இந்தச் சூத்திர சாதிக்குள்ளாகவே அடக்கினர். தங்களைப் பிராமணன், சத்திரியன், வைசியன் என்று சொல்லிக்கொள்ளுகின்ற பொற்கொல்லர் (ஆசாரி), படையாச்சி (வன்னியர்), நாடார்கள், நாயுடுமார்கள், நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள், வாணியச்செட்டியார்கள் முதலிய பலரைச் சூத்திரர்களுக்கு உண்டான அந்தஸ்தில் வைத்துத்தான் பார்ப்பனரல்லாதார் என்று சொல்லப்படுவதோடு, அவர்கள் ‘சூத்திரர்’களாகவே பாவிக்கப்பட்டும் வருகிறார்கள்.
மற்றும் குறிப்பிடத் தகுந்தது என்னவென்றால், தங்களை வைசியர்கள் என்றே சொல்லிக் கொண்டு மற்ற பெருவாரியான மக்களிடம் உண்பன, தின்பன வைத்துக் கொள்ளாமல் தனித்து விலகி நிற்கும் ‘ஆரிய வைசியர்’ என்று சொல்லிக் கொள்ளும் கோமுட்டிச் செட்டியார்களையும், நகரத்தார் என்று சொல்லிக் கொள்ளும் நகரத்துச் செட்டியார்களையும் சூத்திரர் வகுப்பிலேயே சேர்த்து-சூத்திரர்களாகவே பாவிக்கப்பட்டும் வருகிறார்கள். எதற்காக இவைகளைக் குறிப்பிடுகிறேன் என்றால், சாதி முறையில் அரசாங்கத்தாராலும், பார்ப்பனர்களாலும், அணுபவத்தினாலும்- இரண்டே சாதிப்பிரிவுகள் தான் பழக்கத்திலிருந்து வருகின்றன என்பதைக் காட்டுவதற்காகத்தான்.
இந்த இரண்டு பிரிவுகளில், ‘பிராமணர்கள்’ தவிர மற்ற பிரிவு மறைக்கப்பட்டு விடுவதில் யாருக்கும் கவலையில்லை. பிராமணர்கள் என்பவர்கள் மாத்திரம்தான் தங்கள் சாதியை நிலைநிறுத்திக் கொள்ளப் பாடுபடுகிறார்கள். காரணம், அவர்கள், மேல் சாதி உரிமை பெற்றிருப்பதனால், அதன் பயனாக மற்ற சாதிகளுக்குப் பெரிய தொல்லை இருப்பதனால், சாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்கிற கிளர்ச்சி அவசியம் தோன்றலாயிற்று. அது எப்படியோ, அரசாங்கக் கொள்கையிலும் ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டது; நடைமுறையிலும் சில காரியங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், எப்படியோ-தெரிந்தோ,தெரியாமலோ, அல்லது வேண்டுமென்றோ அல்லது அலட்சியமாகவோ பார்ப்பனருக்கு மத்திய அரசாங்கம் ஒரு உரிமை (அணுமதி) கொடுத்து வருகிறது. அதாவது, அரசாங்கம் அணுமதி (லைசன்ஸ்) கொடுத்து நடைபெறும், நடக்கச் செய்யும் பார்ப்பனர்களின் உணவு விடுதிகளில், ‘பிராமணர் விடுதி’ என்று போட்டுக் கொள்ள அணுமதிக்கிறது.
சாதியின் அணுபவ ஆதிக்கமெல்லாம் பெரிதும் உணவினாலேதான் வரையறுக்கப்படுகிறது; சாதியை ஒழிக்க வேண்டுமென்கிறவர்கள், அந்த உணவுத் தன்மையில்தான் ஒழிக்கப் பாடுபட வேண்டும். அப்படியிருக்க, எதற்காக உணவு விடுதியில் சாதிப்பெயர் போட அரசாங்கம் அணுமதிக்க வேண்டும்? இப்படி அணுமதிப்பது அரசாங்கத்தின் கொள்கைக்கும் நடப்பிற்கும் முரண்பட்டதாகும். இதை அரசாங்கம் சீர்திருத்தவில்லையானால் மக்கள் முயற்சித்துச் செய்ய வேண்டியது அவசியமாகிறது.
பார்ப்பனர்கள் தங்களை மேலான சாதியென்று –மேலே குறிப்பிட்ட மற்றவர்களைப் போல, அவர்கள் வீட்டிலிருந்து சொல்லிக் கொள்ளட்டும். ‘பிராமணாள் வீடு’ என்று அவர்கள் வீட்டில் வேண்டுமானால் போர்டு போட்டுக் கொள்ளட்டும்; பூûல் போட்டுக் கொள்ளட்டும்; நமது மேல் படுவதில்லையென்று எட்ட ஓரமாக நடந்துகொண்டு போகட்டும்; இவைகளைப் பற்றிப் பொதுமக்கள் பார்த்துக் கொள்ளட்டும். அரசாங்கத்தார் - ஏன் ‘பிராமணாள்’ என்று போட்டுக் கொண்டு வியாபாரம் நடத்திப் பணம் சம்பாதிக்கவும், மற்றவர்களை இழிவுபடுத்தும் குறியைக் காட்டவும் இடங்கொடுக்க வேண்டும்? அந்த மாதிரி விளம்பரப் பலகை இருக்க இடங்கொடுப்பதிலிருந்து சாதி உணர்ச்சி தோன்றுகிறதா, இல்லையா என்பதைத்தான் அரசாங்கம் இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.
ஆதலால், நான் அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்திக் கொள்வதெல்லாம்-உணவு, சிற்றுண்டிச் சாலைகளுக்கு அரசாங்கம் அணுமதி கொடுப்பதில் அந்த அணுமதிச் சீட்டு நிபந்தனைகளில், ‘லைசென்ஸ்தார்-சாதிப் பெயர் போடக் கூடாது’ என்று குறிப்பிட வேண்டும் என்பது தான்.
இதைச் செய்ய, சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பாக சில நகரசபைத் தலைவர்களைக் கொண்டு நகர சபை ‘லைசென்சு’களில் குறிப்பிடுவதற்கு ஏற்பாடு செய்தேன். அப்போழுது முனிசிபல் சட்டத்தில் அணுமதிக்கப்பட்டிராத காரியங்களை முனிசிபாலிட்டியார் செய்தால், அது சட்ட விரோதம் என்று சொல்லி அபிப்ராயம் கொடுக்கப்பட்டு விட்டது. அதனால் அது நடைபெறவில்லை. அதற்குப் பிறகுதான், பல இடங்களில் கிளர்ச்சிகளால் மறைக்கப்பட்டன. இரயில்வே பிளாட்பாரங்களில் கூட ‘பிராமணாள் ஓட்டல்’, ‘பிராமணாள் சாப்பிடுமிடம்’ என்பவைகள் மறைக்கப்பட்டன.
ஆதலால், அரசாங்கத்தாராவது, கவர்னர் பெருமானாவது அருள் கூர்ந்து 5.5.1957 ஆம் தேதிக்கு முன் அமுலுக்கு வரும்படியாக –ஓர் அவசர அறிக்கை’ வெளியிட்டுவிட்டால் இதற்காக நேரடி நடவடிக்கை-கிளர்ச்சி செய்ய வேண்டிய அவசியமிருக்காது என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். (விடுதலை -27.4.1957)
No comments:
Post a Comment