Sunday, April 26, 2026

நேருவின் முட்டாள் தனம் - பெரியார்

 நேருவின் முட்டாள் தனம்

‘இந்த அரசியல் சட்டம் பிடிக்க வில்லையானால் நாட்டைவிட்டு வெளியேறிவிடு’-பண்டித நேரு.

இன்றைய ஆட்சி முட்டாள்தனமான, காட்டிமிராண்டி ஆட்சி என்றும், இது பார்ப்பன ஆட்சி என்றும், இது சர்வாதிகாரக் கொடுங்கோன்மை ஆட்சியென்றும், இது திராவிட மக்களை ஆரியர் (பார்ப்பனணும், வட நாட்டாணும்) அடிமை கொண்ட ஆட்சியென்றும், இந்த வட நாட்டாராலும் பார்ப்பனராலும் அவர்களது நலணுக்கும் உயர்வுக்கும் ஆகவே செய்யப்பட்டிருக்கும் அரசியல் சட்டமானது மணுதர்ம சட்டத்தின் மறு பதிப்பே என்றும் -1949 லேயே நான் சொன்ன கருத்துக்கு இது எடுத்துக் காட்டாக இல்லையா என்பதைத் தமிழ் மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன்.

தவிரவும், ‘இந்த அரசியல் கொடி உனக்குப் பிடிக்கவில்லையானால் நாட்டை விட்டு வெளியேறிவிடு’ என்றும் பேசியிருக்கிறார். யார் என்றால் -பண்டித ஜவகர்லால் நேரு!

அவர் என்ன சாதி என்றால், பார்ப்பன புரோகித சாதி; எந்த நிலையில் என்றால், இந்தியா முதல் மந்திரி (ஆட்சித் தலைவர்) என்ற நிலையில்,

‘தோலைக் கடித்துத் துருத்தியைக் கடித்து மனிதனையே கடிக்க வந்து விட்டது’ என்று ஒரு பழமொழி உண்டு. அதற்கேற்ப, இந்தப் பார்ப்பனர்கள் சாதி காரணமாகத் தாங்கள் சம்பாதித்துக் கொண்ட உயர்பதவிகளையும் ஆதிக்கங்களையும் ஆதரவாகக் கொண்டு சட்டம் செய்து கொண்டு, ‘இந்த சட்டம் பிடிக்க வில்லையானால்-அதாவது, சாதி முறைக்குப் பாதுகாப்பளிக்கும் இந்தச் சட்டம் உனக்குப் பிடிக்க வில்லையானால்- இந்தச் சட்டத்திற்குக் கீழ்ப்பட்டு, நீ சூத்திரனாய்-பார்ப்பானின் வைப்பாட்டி மகனாய் வர உனக்கு இ·டமில்லையானால் இந்தத் திராவிட நாட்டை, தமிழ் நாட்டை விட்டு வெளியேறி விடு; இல்லாவிட்டால் ஜெயிலில் வைப்பேன்; இல்லாவிட்டால் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் வைப்பேன்’ என்பதாகப் பேசியிருக்கிறார் (பார்ப்பன மொழியில் ‘முழக்கி’ இருக்கிறார்)

எங்கு முழக்கியிருக்கிறார் என்றால், தமிழ் நாட்டின் மார்பு, (இதயம்-மத்திய ஸ்தானம்) போன்ற திருச்சி நகரில், தமிழர் உணர்ச்சிக்குத் தாயகமான சுமார் 20-30 ஆயிரம் பேர் நகர மக்கள் கொண்ட மாபெரும் தமிழர் கூட்டத்தில் சொல்லியிருக்கிறார்.

சொன்னது, மட்டுமல்லாமல் இப்படிச் சொல்லிவிட்டுத் திரும்பித் தனது ஊருக்கும் பறந்து சென்றிருக்கிறார். எப்படியென்றால் -8000 பேர் கொண்ட போலிஸ் பாதுகாவலில்.

உண்மையாக, உள்ளது உள்ளபடி சொல்ல வேண்டுமானால், இந்த  ‘பனியா -பார்ப்பன’ ஆட்சி ஏற்பட்ட பிறகு தமிழ் நாட்டில் தமிழர், சிறையில் இருக்கும் கைதிகள் போலவே நடத்தப் பட்டு வருகிறார்கள்; ‘கன்விக்ட் வார்டர்’களாகத் தமிழர் சேவகர்கள், தமிழர் அதிகாரிகள் ஆகியவர்கள் இருந்து வருகிறார்கள்.

தமிழர்கள் மந்திரிகளாக இருந்தாலும் சரி, உயர்ந்த தலைமை மாவட்ட நீதிபதிகளாக இருந்தாலும் சரி, நிர்வாக அதிகாரிகளாக இருநதாலும் சரி, போலிஸ் அதிகாரிகளாக இருந்தாலும் சரி, இவர்கள் யாவருமே கன்விக்ட் வார்டர்களைப் போலவேதான் இருந்து வரவேண்டியதாக இருக்கின்றனர்.

(கன்விக்ட் வார்டர் என்றால், நல்ல அடிமையாக இருந்து விடுதலை பெறக் கருதி சிறையில் தொண்டு செய்யும் நீண்ட நாட்கள் தண்டனை பெற்ற கைதி)

இந்தப் பாதுகாப்பான நிலையில்தான் பார்ப்பனர் நேரு திருச்சி நகரத்தில், திருச்சி மக்கள் முன்னிலையில், ‘எங்களுக்கு அடங்கிக் கீழ்ப்பட்டு சூத்திரனாக இருந்தால் இரு; இல்லாவிட்டால் நாட்டை விட்டு வெளியே போ; போகாவிட்டால் ஜெயிலில் போடுவேன்’ என்று எக்காளமிட்டுச் சென்று விட்டார்.

இந்தச் சமயத்தில் மந்திரிகளைப்பற்றி, போலிசாரைப் பற்றி, சிறிதும் சிந்திக்காமல் அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட வாழ்விற்கேற்ப அதைப் பார்த்துக் கொள்ள அப்படி (அதாவது கன்விக்ட் வார்டர்களாக ) நடந்து கொள்ள வேண்டியவர்கள் ஆனார்கள். அவர்களை மறந்து விடுங்கள்! அப்படி மறக்கும் போது அந்த இடங்களில் பார்ப்பனர்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை நினைவில் வைத்து, மறந்து விடுங்கள்.

ஆனால், தமிழ் மக்களே! இந்தச் சந்தர்ப்பத்தில் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? உங்களுடைய கடமை என்ன என்பதுதான் இப்போதைய பிரச்சினை.

அரசியல் சட்டம் எதற்காகக் கொளுத்தப்பட்டது? யாருக்காகக் கொளுத்தப்பட்டது? 3000 பேர் எதற்காகச் சிறைபிடிக்கப்பட்டார்கள்? நான் எதற்காகச் சிறைத் தண்டனை இடப்படுகிறேன்?

பார்ப்பனர்களைக் குத்தியதற்கா, கொன்றதற்கா, பார்ப்பனச் சேரியில் நெருப்பு வைத்துக் கொளுத்தினதற்கா, அல்லது பார்ப்பனப் பெண்களை இம்சித்தற்கா? இல்லவே இல்லை. இதற்காக இன்று யாரும் சிறையிலில்லை.

குத்தச் சொன்னதற்காகவோ, கொல்லச் சொன்னதற்காகவோ, கொளுத்தச் சொன்னதற்காகவோ கூட இன்று யாரும் சிறையிலில்லை, என்றாலும், என் ஒருவன் பேரில் மட்டுந்தான் அப்படிப்பட்ட குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது. அதுவும் ‘வெள்ளரிப் பழத்திற்குப் பூண் போட்டுக் கெட்டிப் படுத்துவது’ போன்ற குற்றந்தான் சாட்டப்பட்டிருக்கிறது. இது எப்படியோ போகட்டும், அதைப்பற்றித் தமிழர்களாகிய உங்களுக்குக் கவலை வேண்டாம்.

‘சாதி காப்பாற்றப்படும் சட்டம் எங்களுக்கு வேண்டாம்; சாதியை ஒழிக்க இயலாத சட்டம் எங்களுக்கு வேண்டாம்; அதைத் திருத்து; ‘சாதி ஒழிக்கப்பட வசதி செய்து கொடு’ என்பதற்கு அறிகுறியாக, சாதியைப் பாதுகாக்க வசதியுள்ள பாகத்தைக் குறித்த ஒரு துண்டுக் காகிதத்தை, அறிக்கை கொடுத்துக் கொளுத்துவதன் மூலம் வலியுறுத்திக் காட்டியதற்காகக் குழந்தைகள், குஞ்சுகள், வயோதிகர்கள், பெண்கள், பார்ப்பனப் பெண்கள் இளை…ர்கள் உட்பட 3000 மக்களை-அதுவும் கொளுத்தின மக்கள் 10000 பேர்களில் பலவிதமாக 7000 பேர்களை விட்டுவிட்டு, 3000 பேர்களைச் சிறையில் அடைத்து ஊசிப் போன சோளக் கஞ்சியையும் கேப்பைக் கூழையும் மக்கிப் போன அரிசிச் சாத உருண்டையையும் களி மொத்தையையும் கொடுத்துக் கொடுமைப்படுத்துகிற இந்த அட்டூழியத்திற்கு என்ன பதில் சொல்லுகிறார்கள்?

சிறையில் கொடுமைப்படுகிறவர்களில் 1,2,3 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்காரர்களும், ஆண்டொன்றுக்கு 1000, 5000, 10000 ரூபாய்க்கு மேல் வரும்படி உள்ளவர்களுமான பல செல்வான்களும், உயர் வாழ்வு வாழுகின்ற சுக புருடர்களும்-அது போன்றே தாய்மார்களும் தகுதிக்கு மேம்பட்ட மக்களாக இருந்து வருவது அரசாங்கத்திற்கே தெரியும்.

அப்படிபட்ட மக்களையும் இப்படிக் கொடுமைப் படுத்துவதற்கு, என்ன செய்யப்போகிறீர்கள்?

வெள்ளையனான அன்னியனாட்சிக் காலத்தில், ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற கூட்டத்தையும் வெடிகுண்டு ஏந்திய கூட்டத்தையும் தண்டவாளங்களைப் பெயர்த்து, இரயிலைக் கவிழ்த்து, தபாலாபிசுகளுக்கும், நீதி ஸ்தலங்களுக்கும் இரயில்வே ஸ்டேஷன் கட்டடங்களுக்கும் நெருப்பு வைத்துக் கொளுத்திக் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களை, ஆயிரக்கணக்கான உயிர்களை நாசப்படுத்தியவர்களையும் மனிதத் தன்மைக்கு மேலாகவே நடத்தினான்.

‘உங்கள் நாட்டை நீங்கள் ஆண்டு கொள்வதில் எனக்கு ஆட்சேபணையில்லை’ என்று சொன்னான்.

‘எங்களை, உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் நாங்கள் மனப்பூர்வமாய்ப் போய் விடுகிறோம். உங்கள் நாட்டை நீங்களே ஒப்புக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி ஒப்புவித்தானே தவிர, இப்படி வடகோடியிலிருந்து தென்கோடிக்கு வந்து, தென் கோடி மக்களை ‘என்ணுடைய ஆட்சி, என்ணுடைய சட்ட திட்டம் உங்களுக்குப் பிடிக்க வில்லையானால் நீங்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேறிவிடுங்கள்’ என்று சொல்லவில்லை.

இந்தப் பேச்சு நேருவின் கெட்டிக்காரத் தனத்தையும் வீரத்தையும் காட்டுகிறதா? அல்லது தமிழர்களின் மானங்கெட்ட தன்மையையும் மடமையையும் கோழை (சோதா)த் தனத்தையும் காட்டுகிறதா என்பதுதான் இங்கு சிந்தித்துப் பார்க்கத் தக்கதாகும்.

நேரு சாதியார் இந்த நாட்டில் எவ்வளவு கட்டுப்பாடு , ஒற்றுமை, தங்கள் இன நலத்தில் கவலை, முயற்சி முதலியவைகளோடு இருந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நம் சாதியார் என்பவர்கள் எவ்வளவு ஈனமாய், ஓற்றுமை இன்றி, இனத்தைப்பற்றிய உணர்ச்சியே இல்லாமல் சுயநல வாழ்வு வாழ்கிறார்கள் என்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழனைப் பார்த்து, ‘ஓ தமிழர்களே! நீங்கள், எங்களுக்கு வைப்பாட்டி மக்களாய், இழி மக்களாய், சூத்திரர்களாய், கீழ் மக்களாய் இருந்தால் இந் நாட்டில் இருங்கள்; இல்லாவிட்டால் இந்நாட்டை விட்டு வெளியேறுங்கள்’ என்று சொல்ல - இந்த நேரு கூட வேண்டியதில்லையே; இன்னமும் பரம முட்டாளும், படுகோழையும் பிழைக்க வழியற்ற - தெருவில் பிச்சையெடுத்து வயிறு பிழைக்கும் ஒரு பார்ப்பன விதவை கூடப் போதுமானதாகுமே!

இதில் நேருவுக்கொன்றும் கெட்டிக்காரத் தனத்தையோ, துணிவையோ, வீரத்தையோ பொருத்த வேண்டியதில்லை; தமிழனின் மானமற்ற சுயநல ஈனப் பிழைப்பும் கோழைத்தனமும், நாட்டைக் காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கும் தன்மையும் தான் காரணமாகும்.

கொலைக் குற்றப்பிரிவின் படி குற்றம் சாட்டப்பட்டு ‘முக்சலிக்கா பாண்டு’ மீது நான் வெளியில் இருக்கிறேன். வழக்கு விசாரணை 12 ஆம் தேதி நடக்க இருக்கிறது; நான் இந்த நாட்டுக்கு 100-இக்கு 90 பேர்களைக் கொண்ட திராவிடர் கழகத்திற்குத் தலைவன்; இந்த நிலையிலும் சட்டம் எரித்தார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு, இனியும் விசாரணை செய்துத் தீர்ப்புச் சொல்ல வேண்டிய        2000-க்கு மேற்பட்ட கழகத் தோழர்கள்-அதாவது, என்னைப் பின்பற்றுகிறவர்கள் சிறையிலும் விசாரணையிலும் இருக்கிறார்கள்; இந்த நிலையிலும் ஆட்சித் தலைவன் என்ணும் பேரால் ஒரு நபர் இங்கு வந்து-அதாவது, எங்கு விசாரணை நடக்கிறதோ அந்த ஊருக்கு வந்து, எந்த நீதிபதியும், மாஜிஸ்ட்ரேட்டும் விசாரிக்க வேண்டியவர்களோ-விசாரிக்கிறார்களோ, அந்த மாஜிஸ்ட்ரேட்டையும் நீதிபதியையும் அழைப்பணுப்பி வரவழைத்து எதிரில் உட்கார வைத்துக் கொண்டு, அவர்களைப் பார்த்து, ‘இவர்கள் (இந்தக் குற்றவாளிகள்) சிறையில் இருக்க வேண்டியவர்களாவார்கள்; இவர்கள் மன்னிக்கப்படக் கூடாதவர்கள்; மன்னிக்கத் தக்கவர்களல்லர்’ என்று இடி முழக்கம் செய்கிறாரென்றால்-இந்த ஆட்சி எவ்வளவு நீதியும் நேர்மையும் நாணயமுமான ஆட்சி என்பதைத் தமிழர்கள்-மானம், ஈனம் இவற்றைப் பற்றிக் கவலைப்படாத தமிழர்கள் சிந்தித்துப் பார்ப்பார்களாக!

இதில் ஒரு குறிப்பிற்கிடமான விஷயம் என்னவென்றால், இந்த நேரு 9 ஆம் தேதிக்கு முதல் நாள் 8 ஆம் தேதி-கொலை, கொள்ளை, கொளுத்தல், நாசவேலை, உயிருடன் தூக்கி நெருப்பில் போட்டுப் பொசுக்குதல், சுமார் 100, 200 பேர்களுக்கு மேல் உயிரிழக்கச் செய்திருத்தல் ஆகிய காரியங்களைப் பற்றிப் பேசும் போது , ‘விவகாரம் விசாரணையிருப்பதால், அதைப் பற்றிப் பேசுவது நீதியாகாது; நேர்மையாகாது’ என்று சொல்லிப் பேசாமல் வாயை மூடிக் கொண்டு வந்து, மறு நாள் காலையில் விசாரணை நடக்கும் இடத்திற்கே வந்து நீதிபதி அவர்களிடத்திலேயே நேரில், ‘இவர்கள் ஜெயிலில் இருக்க வேண்டியவர்கள். நல்லபடி கடினமாகத் தண்டிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், உங்களுக்கு உத்தியோகம் நிலைக்காது; பிரமோஷன் இருக்காது’ என்று சொல்லுவது போல்-அதுவும் பெரிதும் பார்ப்பன ‘நீதிபதிகள்’ இடமே எக்காளமிட்டுச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறாரென்றால்- இந்த ஆட்சி, சட்டம். ஆட்சிக் கொடி மாத்திரமல்லாமல், ஆட்சிமுறை, ஆட்சிநீதி, ஆட்சிப் பீடம் ஆகியவையும் சுட்டுப் பொசுக்க வேண்டியதாகுமா ஆகாதா? இதில் நமக்கு நலமான வாழ்வோ, நீதியோ கிடைக்குமா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்-தமிழர்களே! சிந்தித்துப் பாருங்கள்! (விடுதலை-11-12-1957)

No comments: