Sunday, April 26, 2026

அரசியல் சட்ட எரிப்பு ஏன்? - 1 - பெரியார்

 அரசியல் சட்ட எரிப்பு ஏன்? - 1

தோழர்களே!

‘பிராமணன்’ என்று ஒரு சாதி சட்டத்தில் இருக்க அணுமதிக்க மாட்டோம். அப்படி இருந்தாலும், அவன் பிராமணனாக வாழ அணுமதிக்க மாட்டோம்’ என்று அரசாங்கம் சொல்லட்டும்.

இந்த மாதம் 26 ஆம் தேதிக்குள்,‘பிராமணன் என்ற ஒரு சாதி கிடையாது. சட்டத்தில் அந்த மாதிரிக் கருதமாட்டோம்’ என்று அறிக்கை வராவிட்டால் அரசாங்கச் சட்டப் புத்தகத்தை நாங்கள் கொளுத்தப் போகிறோம். இதை நாங்கள் வருத்தத்துடனேயே சொல்கிறோம். வெறும் குறும்புக்காகவோ, விளம்பரத்திற்காகவோ, ஜெயிலுக்குப் போய் வந்ததைக் காட்டி ஒட்டு வேட்டையாடவோ நாங்கள் அந்தக் காரியம் செய்யவில்லை.

எனக்கு 79 வயதாகிவிட்டது. நம் மக்களுக்கு ஏதாவது காரியம் செய்துவிட்டு நான் சாக வேண்டும். இல்லையென்றால், நம் மக்களுக்கு உணர்ச்சியூட்டிவிட்டுச் சாக வேண்டும்.

இன்றைய தினம் எல்லாப் பார்ப்பனப் பத்திரிகைகளும் கட்டுப்பாடாக-நான் பார்ப்பனரை வெட்டச் சொன்னேன், குத்தச் சொன்னேன் என்று கூப்பாடு போடுகின்றன! எந்தப் பார்ப்பானிடம் எனக்கு விரோதம்? யார் மீது துவேஷம்? நேற்று எனக்கு நடைபெற்ற விழாவுக்குப் பார்ப்பனர் பணம் கொடுத்திருக்கிறார்கள்; அவர்கள் கொடுத்த ‘செக்’ என்னிடம் இருக்கிறது; ஏன் இதைச் சொல்லுகிறேன் என்றால், எனக்குத் தனிப்பட்ட முறையில் யார் மீதும் துவேஷம் இல்லை என்பதைக் காட்டவே!

நான் ஏன் ஒரு கூட்டமே ஒழிய வேண்டுமென்று சொல்லுகிறேன்? நம் சமூதாயத்திற்கே களை மாதிரி இருந்து கொண்டு வளர வொட்டாமல் செய்கிறது- அந்தக் கூட்டம். வெட்டுகிறேன் என்று சொன்னேன், குத்துகிறேன் என்று சொன்னேன் என்று பூச்சாண்டி காட்டுகின்றனர். அப்படிச் சொல்லுவதன் மூலம் அந்த நாளையே அவர்கள் விரைவுபடுத்துகின்றனர்.

‘காந்தியார் படத்தை எரித்தால் தலைகள் உருளும்; இரத்த ஆறு ஓடும்; அதற்கு 2000 பேர் தயார்’ என்று சொன்னார்களே, அவர்களை நீ என்ன செய்தாய்? நான் சொல்லுகிறேன்-‘சாதி ஒழியாவிட்டால் இரத்த ஆறு ஓடும்’ என்று. ‘சாதி இருக்கத்தான் வேண்டும்’ என்று நீ சொல்லேன்!

இந்த மாதிரிக் கூப்பாடு போட்டால் அரசாங்கம் பிடித்து எங்களை ஜெயிலில் போடும்; நாங்கள் பயந்து கொள்வோம் என்பது பார்ப்பனர்கள் நினைப்பு. இது யாரிடம் பலிக்கும்? நான்தான் உயிரைவிடத் தயாராயிருக்கிறேனே! என்ணுடைய தொண்டர்களும் தயாராயிருக்கிறார்களே!

வேண்டுமானால், இந்தப் பார்ப்பன சமுதாயத்திற்கு நான் வாய்தா கொடுக்கிறேன்; தன்னை அது மாற்றிக் கொள்ளட்டும்

இன்றைய தினம் அரசாங்கத்திற்கு வாய்தா கொடுக்கிறேனே! சாதி ஒழிப்புக்குப் பரிகாரம் கிடைக்காவிட்டால் அரசியல் சட்டத்தைக் கொளுத்தப் போகிறோம். அதிலும் முடியாவிட்டால் காந்தியார் சிலையை உடைக்கப் போகிறோம். வேண்டுமானால் என்னை ஜெயிலில் போடட்டும்; வெளியே இருந்து கொண்டு கொடுமையைச் சகித்துக் கொண்டிருக்க எங்களால் முடியாது.

இதற்கு முன்பே- 1950-லிலேயே நான் சொன்னேன், ‘இது மணுதர்ம சாஸ்திரத்தின் மறுபதிப்பு. ஆகவே, இதைக் கொளுத்த வேண்டும்’ என்று.

இந்தச் சட்டம் எழுதியவர்கள் ஆறு பேர்கள். அதில் நாலு பேர் பார்ப்பனர்கள். அல்லாடி கிரு·ணசாமி அய்யர், முன்ஷி, டி.டி. கிரு·ணமாச்சாரி, கோபால்சாமி அய்யங்கார் ஆகிய பார்ப்பனர்கள் எழுதினார்கள். மற்றவர்கள் இரண்டு பேரில் ஒருவர் அம்பேத்கார், மற்றவர் ஒரு சாயபு.

அம்பேத்கார் கொஞ்சம் நம் உணர்ச்சியுள்ளவர். அவர் என்னைக் கேட்டார், ‘உன்ணுடைய மக்களுக்கு என்ன செய்ய வேண்டும்?’ என்று நிறைய விவரங்களையெல்லாம் அவரிடம் கொடுத்தேன்; அதையெல்லாம் அவர் பேச ஆரம்பித்தார். உடனே பார்ப்பனர்கள் அவருக்கு விலை கொடுத்துவிட்டார்கள். அது என்ன விலையென்றால். அவர் தன்ணுடைய மக்களுக்கு 100-க்கு 10 இடம் கல்வி வசதியில், உத்தியோக வசதியில் கேட்டார். அவன், ‘15 ஆகவே எடுத்துக்கொள்’ என்று சொல்லிவிட்டான்! அவணுக்குத் தெரியும், 25 இடம் கொடுத்தால் கூட அவர்களில் மூன்று அல்லது நான்கு பேர் கூட வர மாட்டார்கள் என்பது. பார்ப்பான் எழுதிக் கொடுத்த சட்டத்தில் அவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விட்டார். மற்றவர்களுடைய சங்கதியைப் பற்றி அவர் சிந்திக்க வில்லை.

ஓரு சட்டம் எல்லோருக்கும்; சமம், சம வாய்ப்பு என்று சொல்லிக் கொண்டு,பார்ப்பனருடைய உயர்வைக் காப்பாற்றி- அவர்களுடைய ஏகபோக அணுபவத்திற்குக் கல்வியையும், உத்தியோகத்தையும் தருகிறதென்றால். அது எந்த வகையில் நீதியான, நேர்மையான சட்டம்?

இத்தகைய மோசடிச் சட்டம் ஒழிக்கப்பட்டே ஆக வேண்டும். அந்த முயற்சியாக, 26 ஆம் தேதியன்று இந்தச் சட்டத்தைத் தீயிலிட்டுப் பொசுக்கப் போகிறோம். (விடுதலை-11-11-1957)

No comments: