Sunday, April 26, 2026

தேசியக் கொடி கொளுத்தும் தீர்மானம் - பெரியார்

 தேசியக் கொடி கொளுத்தும் தீர்மானம்

இந்திய அரசாங்கத் தேசியக் கொடியைக் கொளுத்துவது என்பது மிகக் கடினமான தீர்மானம் என்பதாகப் பலர் கருதக் கூடும். இது இந்திய அரசாங்கத்தைக் கவிழ்க்கவோ, ஒழித்துக் கட்டவோ கருத்துக் கொண்டு  செய்யப்பட்ட-கொடி கொளுத்தும் தீர்மானமல்ல.

எங்களுக்கு-தமிழர்களுக்கு-தமிழ்நாட்டாருக்கு-இந்திய அரசாங்கம் வேண்டாம்; தமிழ்நாடு-தமிழர்கள் இந்திய அரசாங்கத்தின் கூட்டு ஆட்சியில்- இந்திய யூனியனில் இருக்க விரும்ப வில்லை. நாங்கள் எங்களை, நாட்டை, தனிப்பட்ட பூர்ண சுயேச்சையுள்ள தனியரசு நாடாக ஆக்க விரும்புகிறோம்; எங்கள் நாட்டைத் தனி-பூரண சுயேச்சை நாடாக ஆட்சி செய்ய எங்களுக்கு சக்தி உண்டு; சகலவிதத்திலும் எல்லாவிதமான வசதியும் உண்டு. மத்திய கூட்டாட்சியிலிருந்து பிரிந்து கொள்ள ஆசைப்படுகிறோம்.

இந்திய யூனியன் அரசியல் சட்டத்தில், சட்டப்படியான கிளர்ச்சியின் மூலம் பிரிந்து கொள்ளப் போதிய படி சட்ட வசதி இல்லை; எங்களை-தமிழர்களைக் காட்டிக் கொடுத்துப் பிழைக்கும் படியானதும்-தமிழ்நாட்டு மக்களில் 100-க்கு 3 வீத ஜனத்தொகை உள்ளதுமான பார்ப்பனர்கள் மத, சமுதாயத் துறையில் எங்களிடம் பெற்ற ஆதிக்கத்தை வட நாட்டாருக்குக் காட்டிக் கொடுத்துப் பிழைப்பதாலும், தமிழ்நாட்டு அரசியல் ஆதிக்கத்தில் பெரும் பங்கைக் கொண்டவர்களாக இருப்பதாலும். சட்ட சம்பந்தமான வழிகளையெல்லாம் அடைத்து விட்டார்கள். ஆனதால், நாங்கள் சட்ட சம்பந்தமான வழி மாத்திரமல்லாமல் வேறு எந்தவிதமான வழி மூலமானாலும் பிரிந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

நாங்கள் பிரிந்து கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணம், எங்களுக்கு வடநாட்டாரால் நடத்தப்படும் இந்திய அரசாங்கம் ஏற்பட்ட பிறகு தோன்றிய எண்ணமல்ல.

வெள்ளையனால் நடத்தப்பட்ட இந்திய அரசாங்கம், சர்வ வல்லமையுடன் ஆட்சி நடத்திக் கொண்ருந்த காலமான 1937-38- லேயே தோன்றி, திராவிட நாடு கிளர்ச்சியை நடத்தி வந்திருக்கிறோம்.

வெள்ளையர் இந்த நாட்டைவிட்டுப் போகும் போது நாங்கள் ஸ்தாபன பூர்வமாக சட்ட முறைப்படிக் கிளர்ச்சி செய்திருப்பதோடு, டெல்லிக்குத் தூது சென்று, வெள்ளையர்களிடம் எங்கள் விருப்பத்தைத் தெரிவித்துக் கொண்டும் இருக்கின்றோம்; இந்தச் சந்தர்ப்பத்தில் வடவர்கள் வெள்ளையர்களுக்கு இலஞ்சத்தைக் கொடுத்து எங்கள் விருப்பத்தை இலட்சியம் செய்யாமல் செய்து விட்டார்கள். மற்றும், வடவர் ஆட்சி ஏற்பட்டு, அவர்கள் சுதந்திர தினம் கொண்டாடும் போதே அந்நாளை நாங்கள் துக்க நாளாகக் கொண்டி இருக்கிறோம். 

ஆண்டுதோறும்  நாங்கள் பிரிவினை நாளைக் கொண்டாடி வருகிறோம். மற்றும், ‘அரசியல் சட்டம்-எங்களை நிரந்தர அடிமைப்படுத்தும் வடவரின் சர்வாதிகாரச் சட்டம்’ என்றும், அதைத் தீயிட்டுக் கொளுத்த வேண்டுமென்றும் எங்கள் மாநாடுகளில் பலதடவை பேசியும், பத்திரிகைகளில் எழுதியும் வந்திருக்கிறோம்.

எங்களுடைய இந்த உணர்ச்சியையே அடியோடு அழிக்கும்படியான தன்மையில், அன்னிய மொழியாகிய இந்தி மொழியை எங்கள் நாட்டிற்குள் அரசியலின் பேரால் பலாத்காரமாய் புகுத்தி, மொழி, கலாச்சாரம், கல்வி முதலிய துறைகளிலும், அரசியலில் ஆட்சிமொழி என்கின்ற தன்மையிலும் புகுத்தி இருப்பதோடு. இந்தி படித்து பாஸ் செய்தவணுக்குத் தான் உத்தியோகம் என்கின்ற அளவுக்கு வடவராட்சி துணிந்து விட்டதால், இந்திய ஆட்சி தமிழ் நாட்டில் கூடாதென்கின்ற எண்ணம் எங்களுக்கு வலுப்பட்டுவிட்டது.

இந்த வலுப்பட்ட எண்ணம் பெற்ற பின்னர்தான் நாங்கள் 17-ந்தேதி திருச்சியில் செய்த, வடவராட்சிச் சின்னமாகிய தேசியக் கொடி என்பதைக் கொளுத்த வேண்டும் என்ற தீர்மானமாகும். அந்தத் தேசியக் கொடி என்பது எங்களுக்கு, எங்கள் தேசத் தேசியக் கொடியல்ல.

இந்தியா தேசம் என்பதை எங்களுக்குச் சம்பந்தபட்ட தேசமாக நாங்கள் வெகு நாளாகக் கொண்டிருக்கவே இல்லை. நாட்டு இலட்சணப்படி, எங்கள் நாடு எந்தவிதத்திலும் இந்திய நாடு என்பதுடன் சேர்ந்ததாக இருக்க நியாயமே இல்லை. சரித்திர சம்பந்தபட்ட வரையில்-வெள்ளையர் காலத்தைத் தவிர, வேறு எந்தக் காலத்திலும் எங்கள் நாடு தனித்த சுதந்திர நாடாகவே இருந்து வந்திருக்கிறது.

மத சம்பந்தமான புராண இதிகாசங்கள் சம்பந்தப்பட்டவரை தமிழ்நாடு (திராவிட நாடு) தவிர்த்த இந்திய நாடு திராவிட நாட்டிற்கு எதிரி நாடாகவும், அந்த இந்திய மக்கள் (ஆரியா வர்த்தம் ஆரிய மக்கள்) திராவிட மக்களுக்கு எதிரிகளாகவும் இருந்து வந்ததாகவே அறியக் கிடக்கின்றது.

ஆகவே,  இந்தியத் தேசியக் கொடியைக் கொளுத்துவது. இந்தியக் கூட்டாட்சி என்பதில் தமிழ் நாட்டுத் தமிழர்களாகிய நாங்கள் பிரஜைகளாக இருக்கச் சம்மதப்படவில்லை என்கின்ற எங்களுடைய இ·டமின்மையைக் காட்டுவதேயாகும். (விடுதலை-20.7.1955)

No comments: