சோதிடம்
இந்தியாவில் இந்துக்கள், சாமியாடுதல், வாக்குச் சொல்லுதல்; பூதம், பேய், பிசாசு என்பவை மனிதனை அடித்தல், மனிதனைப் பிடித்தல்; மந்திரம், மந்திரித்தல் பில்லி சூன்யம் செய்து மக்களுக்குத் துன்பம், சாவு முதலியவை உண்டாக்குதல், குட்டிச்சாத்தன், கருப்பு முதலியவைகளைக் கொண்டு சித்து விளையாடுதல், வசியம் செய்தல், முன்பிறவி, மறுபிறவி உண்டெனல் ஆகியவைகளில் நம்பிக்கைக் கொண்டு தங்கள் வாழ்க்கை நலத்திற்கென்றும், எதிரிகளின் கேட்டிற்கென்றும் எப்படித் தங்கள் பணத்தையும் நேரத்தையும் உபயோகிக்கின்றார்களோ அதுபோலவே-தங்கள் வாழ்க்கைக்குச் சோதிடம் என்ணும் விஷயத்திலும் அதிக நம்பிக்கை வைத்துப் பணத்தையும், நேரத்தையும் செலவு செய்து வருகின்றார்கள். இதனால் மக்களின் வாழ்க்கைக்கு எவ்வளவோ கெடுதிகளும் ஏற்பட்டு வருவதைக் கண்கூடாய்ப் பார்க்கிறோம். எப்பொழுதுமே சோதிடன், மந்திரவாதி, கோயில் குருக்கள் ஆகிய மூவரும் மக்களின் பேராசைக்கும் முட்டாள் தனத்திற்கும் பங்கு தயாதிகளேயாவார்கள்.
எப்படியெனில், முதலில் சோதிடன், ஒருவணுடைய சாதகத்தைப் பார்த்துப் பலன் சொல்லுவதன் மூலம் கண்டம் நீங்க சாந்தியும், கிரக தோஷப் பரிகாரத்திற்குச் சாமிகளுக்கு அர்ச்சனை செய்யும் படியும் சொல்லுவான். இதைக் கேட்ட மனிதன் தன் ஆசைக்காவும், பயத்திற்காகவும் மந்திரவாதியைக் கூப்பிட்டு சாந்தி கழிக்கச் சொல்லுவார்கள். இந்த மந்திரவாதிகள் அநேகமாய் வைத்தியர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் சாந்தி கழிக்க கடைச் சாமான்கள் பட்டியல் போடும் போதே -ஒரு மண்டலம் (48 நாட்கள்), அரை மண்டலம் நவக் கிரகங்களோ அல்லது குறிப்பிட்ட சனி, செவ்வாய் முதலிய ஏதாவது ஒரு கிரகத்திற்கோ ஒரு சாமிக்கோ அர்ச்சனை, எள்ளு, பருத்திக்கொட்டை முதலிய தானம், விளக்கு வைத்தல், அபிஷேகம் செய்தல் ஆகியவைகளையும்; ஏதாவது புண்ணிய புராணம் படித்தல் முதலியவைகளையும் சொல்லி விடுவான். இவைகளையெல்லாம் செய்வதால் மந்திரவாதிக்கும், அர்ச்சகணுக்கும் வரும் வரும்படியில் ஒரு பாகம் சோதிடணுக்கும் சேர்ந்துவிடும்.
இந்தப்படியே எங்கும் நடப்பது வழக்கம். ஆகவே, இந்த விஷயத்தில் மந்திரம், அர்ச்சனை ஆகியவைகளைப் பற்றி விசாரிக்கும் முன் சோதிடம் என்பது பற்றி ஆராய்வோம்.
சோதிடம் என்றால் என்ன? அது உண்மையா? அப்படி ஒன்று இருக்க முடியுமா?
சோதிடம் என்பது உலக வழக்கில், அணுபவத்தில் ஒரு மனித ஜீவணுடைய பிறந்த காலத்தை ஆதாரத்தை வைத்து அந்த மனிதனின் வாழ்க்கை, அதன் சம்பவம், பலன் ஆகியவைகளை மொத்தமாய் வருஷப் பலனாயும், மாதப் பலனாயும், தினப் பலனாயும், நிமிஷப் பலனாயும் சொல்லுவதும் ; அவற்றுள் துன்பம் வரத்தக்கது ஏதாவது நேர்ந்தால் அதற்கு ஏதாவது பரிகாரம் செய்து தடுத்துக் கொள்ளுவதும் ; இ·ட சித்திக்கு ஏதாவது விரோதமாய் இருந்தால் அதற்கு ஏதாவது பரிகாரங்கள் செய்வதன் மூலம் விரோதத்தை நீக்கி சித்தியடைய முயற்சிப்பதும் ஆகிய காரியங்களுக்கு உபயோகப்படுத்திக் கொள்வதாகும். இந்தச் சோதிடம் முன் சொன்னது போல், பிறந்த காலத்தைக் கொண்டு சொல்வதோடு, மற்றும் வேறு பல வழிகளிலும் -அதாவது பேர் நாமத்தைக் கொண்டும், கேட்கப்பட்ட நேரம், கேட்பவரின் இருப்பு நிலை , கேட்ட சங்கதி, சோதிடணுக்கு எட்டும் நேரம், கேட்பவரின் தாய், தகப்பன், சகோதரம், பந்து முதலானவர்களின் பிறந்த கால சாதகம் முதலிய வைகளைக் கொண்டும் பலன் சொல்லுவதுண்டு. இன்ணும் இது போன்ற பலவகை-அதாவது , ஏதாவது ஒரு எண், ஒரு பூ, எழுத்து ஆகியவைகளைக் கேட்டல் ; ஒரு அங்கத்தைத் தொடுதல் முதலியவைகளின் மூலமும் பலன் சொல்லுவதுமுண்டு. ஆகவே, மேற்கண்ட எல்லாவற்றின் மூலமும் பலன் சொல்ல முடியுமா என்பதைப் பற்றி யோசிப்பதில் முதலாவதாக ஜீவன் பிறந்த காலத்தை ஆதாரமாக வைத்துப் பலன் சொல்லக் கூடுமா என்று பார்ப்போம்.
பிறந்த காலம் என்பது வயிற்றுக்குள் இருக்கும் போது ஜீவன் (உயிர்) ஏற்பட்ட காலமா? அல்லது வயிற்றிலிருந்து பிறக்கும் காலமா? அப்படிப் பிறக்கும் காலத்தில் தலை வெளியில் தெரியும் காலமா? அல்லது ஒருநாள் அரைநாள் அக்குழந்தை கீழே விழாமல், தாய் சரீரத்தில் பட்டுக்கொண்டிருக்கும் காலமா? அல்லது, கால், தலை ஆகிய எல்லாம் மருத்துவச்சி கையில் விழுந்த காலமா? அல்லது மருத்துவச்சி கையிலிருந்து கீழே விழுந்த நேரமா? என்பனவாகிய கேள்விகள் ஒருபுறமிருக்க –ஜீவணுடைய சரீரமெல்லாம் பூமியில் விழுந்த நேரம் என்பதாக வைத்துக் கொண்டே பார்ப்போமானாலும், அந்த நேரத்தைச் சரியாக எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? குழந்தை கீழே விழுந்ததும் அது உயிருடன் இருக்கிறதா?, இல்லையா? ஆணா, பெண்ணா? போன்றவைகளைப் பார்க்கச் சிறிது நேரமாவது செல்லும். பிறகு அந்தச் செய்தியைக் கொண்டு வந்து வெளியிலிருக்கும் ஆண்களிடம் சொல்லச் சிறிது நேரமாவது செல்லும். அந்தச் செய்தியைக் கேட்டவன் நேரத்தைக் குறிக்க அங்கேயே அவணுக்குக் கடிகாரம் வேண்டும், அந்தக் கடிகாரம் சரியான மணி காட்டுவதா என்பது தெரிய வேண்டும். கடிகாரமில்லாவிட்டால், வானத்தைப் பார்த்து நேரம் கண்டுபிடிப்பதாய் இருந்தால் அதற்குப் பிடிக்கும் நேரம் முதலியவை; அல்லது அக்கம் பக்கதிலுள்ள கடிகாரம், அதுவுமில்லாவிட்டால், உத்தேச சுமார் நேரம் ஆகியவைகளின் தாமதங்களும், பிசகுகளும் எப்படி நேராமல் இருக்க முடியும்? இவை ஒருபுறமிருக்க, அந்த நேரத்தால் பலன் சொல்லுவதனால் அந்த நேரத்தில் உலகத்தில் பிறக்கும் ஜீவன்கள் எவ்வளவு இருக்கக் கூடும்? மற்ற ஜீவன்களையெல்லாம் தள்ளிவிட்டு, வெறும் மனித ஜீவனை மாத்திரம் எடுத்துக் கொண்டாலும், உலகத்தில் 170 கோடி மக்கள் இருக்கிறார்கள் என்ற கணக்குப்படி பார்ப்போமானால், சென்னை முதலிய பட்டணங்களின் சாதாரண அணுபவங்களின்படிக்கு உலகத்தில் நாள் ஒன்றுக்கு 226666 குழந்தைகள் பிறப்பதாகக் கணக்கு ஏற்படுகிறது. இதைத் தவிர கணக்குக்கு வராத விதவைகளின் குழந்தைகள், கலியாணம் ஆகாத பெண்களின் குழந்தைகள், புருஷன் சமீபத்தில் இல்லாத பெண்களின் குழந்தைகள் இவைகளைச் சேர்த்தால் இன்னமும் இந்தக் கணக்கு அதிகமாகும். இது ஒருபுறமிக்க, மேற்படி சாதாரணக் கணக்குப்படிக்குப் பார்த்தாலே ஒரு நாளைக்குப் பிறக்கும் குழந்தைகளைப் பங்கிட்டுப் பார்த்தால் ஒரு நிமிடத்திற்கு சுமார் 160 குழந்தைகள் வீதம் பிறப்பதாகக் கணக்கு ஆகிறது. இதில் 33 கோடி கண்ட இந்தியாவுக்கு மாத்திரம் கணக்குப் பார்த்தால் நிமிஷத்துக்கு சுமார் 33 குழந்தைகள் வீதம் பிறக்கின்றதாகக் கணக்கு. ஆகவே, இந்த 33 குழந்தைகளுக்குமாவது சாதகப் பலன் ஒத்திருக்க முடியுமா? இவைகளுக்குச் சரியான நேரம் கண்டுபிடிக்க முடியுமா?
நிமிஷக் கணக்கே இப்படி-அதாவது நிமிஷத்திற்கு 33 குழந்தைகள் பிறப்பதாக இருக்கும் போது, சோதிடம் சொல்லுவதற்குப் போதுமான காலமாகிய ஒரு ‘லக்கினம்’ ‘நட்சத்திரம்’ ஆகியவைகளின் காலத்திற்குள் எத்தனை குழந்தைகள் பிறக்கக்கூடும்?
சாதாரணமாய், ஒரு சாதகமென்பது வருஷம், மாதம், தேதி, கிழமை, மணி, அந்தச் சமயத்தின் லக்கினம், நட்சத்திரம் ஆகியவைகளைக் குறித்துள்ளதேயாகும். உதாரணமாக, பிரமாதி வருஷம் புரட்டாசி மாதம் புதன் கிழமை காலை 10 மணிக்கு, விருச்சிக லக்கினத்தில், அஸ்த நட்சத்திரத்தில் ஒருவன் பிறந்தான் என்பதாக ஒரு துண்டுச் சீட்டில் எழுதி ஒரு சோதிடனிடம் கொடுத்து விட்டால், இதன் பேரில் சோதிடம் சொல்லக் கூடும். ஆகவே இந்த விருச்சிக லக்கினம் என்பது அய்ந்தேகால் நாழிகையுடையதாகும். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகை. இந்த நேரத்திற்குள் அதாவது 126 நிமிஷ நேரத்திற்குள் உலகத்திலே 20160 குழந்தைகள் பிறந்திருக்க வேண்டும். இது ஒருபுறமிருக்க, மேலும் இந்த லக்கினத்தில் நடப்பன, பறப்பன, ஊர்வன, நீந்துவன ஆகிய பூதக் கண்ணாடிப் பூச்சி முதல் யானை வரையிலுள்ள உயிர்களின் குழந்தைகள் பலகோடிக்கு மேல் பிறந்திருக்க வேண்டும்.
இந்தியாவில் மட்டும் அந்த ‘விருச்சிக லக்கினத்தில்’ முன் சொல்லப்பட்ட கணக்குப்படிக்கு 4,158 குழந்தைகள் பிறந்திருக்க வேண்டும். ஆகவே, அன்றைய தினம் அந்த விருச்சிக லக்கினத்தில் பிறந்த காரணத்திற்காக மேற்படி 4,158 பேருக்குக்கும் வாழ்க்கையில் ஒரேவிதமான பலன் அணுபவமிருக்க முடியுமா?அந்தப்படி இருக்கின்றதா?
தவிர, இந்தப் பலன் அணுபவங்கள் மனிதணுக்குத் தானாக ஏற்படுவதா? அல்லது இரட்சிக்கிற கடவுள்களின் தன்மையால் ஏற்படுவதா? அல்லது முன் பிறவியில் செய்த கருமத்தின் பலனாய்ப் பலன் ஏற்படுவதா? அல்லது விதியின் பயனாய்ப் பலன் ஏற்படுவதா?
இந் நான்கிலும் மனிதணுக்குப் பலன் அவனது சொந்த இ·டத்தால், செய்கையால் தற்சம்பவமாய் ஏற்படுமானால் மேல் காட்டியவைகளில் அது தவிர மற்றவைகள் மூன்றும் அடிபட்டுப் போகும். கிரகங்களின் தன்மையால் ஏற்படும் என்றால் இதைத் தவிர மற்ற மூன்றும் அடிபட்டுப் போகும். முன் ஜென்ம கர்மத்தின் படி என்றால் இது தவிர மற்ற மூன்றும் அடிப்பட்டுப் போகும். ஆகவே மனிதணுடைய அணுபவ பலணுக்கு இவற்றுள் ஏதாவது ஒன்றுதான் காரணமாய் இருக்க முடியுமே தவிர இந்நான்கும் சேர்ந்து குழப்பிக் கொண்டிருக்க முடியாது. இன்ன இன்ன கிரகம் இன்ன இன்ன வீட்டில் இருப்பதாலும், இன்னின்ன காலத்தில் இன்னின்ன கிரகங்கள் இன்னின்ன கிரகங்களைப் பார்ப்பதாலும் இந்த சாதகன் இன்ன இன்ன காரியம் செய்து இத்தனை தடவை சிறைக்குப் போவான் என்பதாக, ஒரு சரியான பிறந்த காலத்தைக் கண்டுபிடிக்கப்பட்ட சாதகன் ஒருவணுக்கு சரியான கெட்டிக்காரச் சோதிடன் ஒருவன் பலன் சொல்லுகிறான் என்பதாக வைத்துக்கொள்வோம்.
இவற்றுள் இந்த சாதகன் இன்ன வேளையில் இன்னாரைக் கொன்று ஜெயிலுக்குப் போவான் என்று இருந்தால், அந்தக் கொல்லப்பட்டவணுடைய சாதகத்திலும் இன்ன வேளையில் இன்னாரால் கொல்லப்பட்டுச் சாவான் என்று இருந்தால் ஒழிய ஒரு காலமும் பலன் சரியாக இருக்க முடியாது. இந்த இரண்டு சாதகர்களுடைய பலன் இருவருக்கும் தெரிந்து விட்டதாகவே வைத்துக் கொண்டாலும் இவர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டாவது தப்பித்துக் கொள்ள முடியுமா என்றால் ஒரு காலமும் முடியாது. ஏனெனில் தப்பித்துக் கொண்டால் சோதிடம் பொய்யாகிவிடும். ஓரு சமயம் தப்பித்துக் கொள்வதாகவே வைத்துக் கொண்டால் அந்த இருவர்கள் சாதகத்திலும் அந்த முடிவும் இருக்கும். அப்படி இருக்குமானால், இந்த விஷயத்தை அவர்கள் இருவரும் தெரிந்து ஜாக்கிரதையாய் இருந்தாலும், தெரியாமல் கவலையற்று அஜாக்கிரதையாயிருந்தாலும் இவ்விருவருக்கும் கொiலையும் சிறைவாசமும் கிடைக்க முடியவே முடியாது என்பதிலும் சந்தேகமில்லை. ஏனெனில் சாதகத்தில் ஏற்கனவே இருக்கின்றபடி நடந்துதானே தீரும்.
இதற்குச் சாந்தி, தோஷ பரிகாரம் என்பவைகள் செய்வதன் மூலமாவது ஏதாவது பலனை மாற்றிவிட முடியுமா என்பதையும் யோசிக்கலாம். அதாவது இன்ன கிரகம் இன்ன கூட்டில் இருப்பதால் இன்ன கெடுதியான பலன் ஏற்படும்: ஆதலால் இன்ன தோஷ பரிகார சாந்தியும் இன்ன கிரக தேவதைக்கு இத்தனை நாள் அர்ச்சனை செய்தால் நிவர்த்தியாகும் என்று சோதிடன் சொல்வானானால் இந்த சாந்தியின் மூலமாகவோ அர்ச்சனை அல்லது அவைகள் மாறுமா என்பதைக் கவனிக்க வேண்டும். அது மாத்திரமல்லாமல், இம்மாதிரி சாந்தியோ, பரிகாரமோ செய்வதன் மூலம் தப்பித்துக் கொள்வான் என்றும் அதில் இருந்தாக வேண்டாமா? அப்படிக்கில்லாதப் பட்சம், எந்தவித சாந்தியாலும் தோஷம் பரிகாரமாக முடியாது. முடிந்தால் சோதிடம் பொய்யென்றே ஆகிவிடும்.
முடிவாக, எந்தக் காரணத்தைக் கொண்டாவது சோதிடம் உண்மை என்றாகிவிட்டால் எந்த மனிதன் மீதும் எந்தக் குற்றமும் சொல்லுவதற்கு இடமுண்டா? சாதகப் பலன்படி நடவடிக்கை நடந்தால் அதற்கு சாதகன் மீது குற்றம் சொல்லுவது மடமையும் யோக்கியதைப் பொறுப்பற்ற தன்மையும் ஆகாதா? ஓரு மனிதணுக்கு இன்ன காலத்தில் திருடரால் பொருள் இழப்பு ஏற்படும் என்று இருந்தால், அதே நேரத்தில் மற்றொரு மனிதணுக்கு ‘திருட்டுத் தொழிலில் பொருள் இலாபம் கிடைக்கும்’ என்று சாதகப் பலன் இருந்துதான் ஆக வேண்டும். அது மாத்திரமல்லாமல், திருட்டுக் கொடுத்தவணுக்குப் பணம் கொடுத்து யார் யார் ந·டமடைந்தார்களோ, அவர்கள் சாதகத்திலும் இன்ன காலத்தில் இன்னாருக்குப் பணம் கொடுத்து அது திருட்டுப் போய் அதனால் ந·டமடைய வேண்டும் என்று இருந்தே ஆக வேண்டும். ஆகவே, இந்தப்படியெல்லாம் சோதிட உண்மை இருந்து விட்டால் பிறகு கடவுள் செயல் எங்கே? மோட்ச நரகம் எங்கே? தலைவிதி எங்கே? முன் ஜென்ம வினைப்பயன் எங்கே? இவைகளுக்கு வேலை ஏது? என்பதைப் பற்றி யோசித்தால் இவை அவ்வளவும் பொய்யாகவே முடியும்.
இவைகளெல்லாம் நேரமும் இடமும் சம்பாதித்து மெய்ப்படுத்தக் குழப்புவதாக வைத்துக் கொண்டாலும், கண்டிப்பாக ஒரு மனிதனின் நடவடிக்கைகளுக்கு அந்த மனிதணுடைய பொறுப்பையாவது அடியோடு விட்டுத்தான் வேண்டும். (குடிஅரசு- தலையங்கம் 6.7.1930)
No comments:
Post a Comment