Sunday, April 26, 2026

புரட்டாசி சனிக் கிழமை - பெரியார்

 புரட்டாசி சனிக் கிழமை

புரட்டாசி சனிக்கிழமை உற்சவங்களும், திருப்பதி முதலிய நூற்றுக்கணக்கான ‘சனிக்கிழமைப் பெருமாள்கள்’ உள்ள ஊர்களின் உற்சவங்களும் சனிக்கிழமை பிடிப்பதன் மூலம் அவரவர்கள் வீட்டில் ஏராளமாய் சமைத்துக் கொண்டு, சோம்பேறிகளையும் அயோக்கியர்களையும் மெனக்கெட்டுத் தேடிப்பிடித்து வந்து, அவர்களுக்கு வயிறு நிறையவும் போட்டு-மற்றும் மூட்டை கட்டிக்கொண்டும் போகக்கூடிய அளவு மேற்கொண்டும் போட்டு-கஞ்சாவுக்கோ, கள்ளுக்கோ, சூதாடவோ கையில் பணமும் கொடுத்து-இவ்வளவும் போதாமல் அந்த நாளெல்லாம் பட்டினி கிடந்து-அந்தச் சோம்பேறிகளின் காலிலும் விழுந்து, மாலை 3 மணி,4மணி சுமாருக்குச் சாப்பிடும் பண்டிகையிலோ, விரதத்திலோ, கடுகளவு அறிவு இருக்கின்றதா என்று கேட்கின்றேன். புரட்டாசி சனிக்கிழமை வந்தால் எத்தனை பேர்கள் தங்களுக்கும் பட்டை நாமம் போட்டுக் கொண்டு, சொம்புக்கும் நாமத்தைக் குழைத்துப் போட்டுக் கொண்டு, துளசி, அரளிப் பூவையும் அந்தச் சொம்புக்குச் சுத்திக் கொண்டு, ‘வெங்கிடாசலபதி கோவிந்தா’ என்றும் கூப்பாடு போட்டு-அரிசியோ, காசோ வாங்கிக் கொண்டு போவதில் ஏதாவது பலணுண்டா என்றுதான் கேட்கிறேன்.

மற்றும், ‘திருப்பதிக்குப் போகிறேன்’ என்று சொல்லிக் கொண்டு தலைமயிரும், தாடி மயிரும் வளர்த்து வெறும் மஞ்சள் நனைத்த துணி கட்டிக் கொள்வதும், மேளம் வைத்துக் கொள்வதும், பெண் பிள்ளைகள் சுற்றத்தார்களை அழைத்துக் கொள்வதும், வருஷமெல்லாம் பணம் உண்டியலில் போட்டு மொத்தமாய்ப் பணம் சேர்ப்பதும், அல்லது வேண்டுதலையின் மேல் இவ்வளவு பணம் என்று கடன் வாங்கியாவது எடுத்துக் கொள்வதும், அல்லது வியாபாரத்திலோ அல்லது வேறு வரும்படியிலோ இலாபத்தில் இத்தனை பங்கு என்று கணக்கு வைத்து எடுத்துச் சேர்த்துக் கொள்வதும், ஆன பண மூட்டையைக் கட்டிக் கொண்டு, கடைவாயிலும் நாக்கிலும் வெள்ளிக் கம்பியைக் குத்திக் கொண்டு-போதாக் குறைக்குத் தெருவில் கூட்டமாய் ‘கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா’ என்று கூப்பாடு போட்டு-வீட்டு வீட்டுக்கு-கடை கடைக்குக் காசு பணம் வாங்கி, ஒரு பகுதியை இரயிலுக்குக் கொடுத்து திருப்பதி போவதும், அங்கு முழங்கால் முறிய மலை ஏறுவதும், ஆண்களும் பெண்களும் தலை மொட்டை அடித்துக் கொள்ளுவதும், அந்த மலைச் சுனைத் தண்ணீரில் குளிப்பதும், அங்கு பட்டை நாமம் போட்டுக் கொள்வதும், கொண்டு போன பணத்தைக் கடாரத்தில் காணிக்கையாகக் கொட்டுவதும், ஆண்களும் பெண்களும் நெருக்கடியில் இடிபடுவதும், பிடிபடுவதும்-வெந்ததும் வேகாததுமான சோற்றைத் தின்பதும், மற்றும் பல சோம்பேறிகளுக்கும் மேக வியாதிக்காரருக்கும் வேகவைத்தோ விலைக்கு வாங்கியோ போடுவதும், விறகுக் கட்டைகளிலும் வேர்களிலும் செய்த மரமணிமாலைகளை வாங்கிக் கழுத்தில் போட்டுக் கொள்வதும், மலைக் காய்ச்சலோடு மலையை விட்டு இறங்கிவருவதும், வீட்டுக்கு வந்து ‘மகேஸ்வர பூசை’, பிராமண சமாராதனை’ செய்வதும் தவிர மற்றபடி இவைகளால் ஏதாவது செய்தவணுக்கோ, கூடப்போன மக்களுக்கோ, நாட்டுக்கோ, ஒழுக்கத்திற்கோ, மதத்திற்கோ கடுகளவு நன்மை உண்டாகின்றதா என்று கேட்கிறேன்.

திருப்பதிக்குப் போய்வந்த பிறகாவது, யாராவது தங்கள் துர்க்குணங்களையோ கெட்ட செய்கைகளையோ விட்டுவிட்டதாக-அல்லது திருப்பதி யாத்திரையானது இம்மாதிரிக் குணங்களை விடும்படி செய்ததாகவாவது-நம்மில் யாராவது பார்த்திருக்கின்றோமா என்று கேட்பதுடன், இம் மாதிரியான அறிவீனமான காரியத்திற்கு நமது நாட்டில் வருடத்திற்கு எத்தனை கோடி ரூபாய் செலவாகின்றது என்பதை எந்தப் பொருளாதார இந்தியத் தேசிய நிபுணராவது கணக்குப் போட்டார்களா என்று கேட்கின்றேன். (குடி அரசு 20-10-1929)

No comments: