நான் 1925 ஆம் ஆண்டில் காங்கிரஸிலிருந்து விலகிய பின், அரசியல் என்பது நமது நாட்டைப் பொறுத்துவரையில் பார்ப்பன ஆதிக்கத்திற்குப் பார்ப்பனரால் நடத்தப்படும் போராட்டமேயொழிய, பொதுஜன நன்மைக்கேற்ற ஆட்சிமுறை வகுப்பதற்கோ அல்லது வேறு எந்த விதமான பொதுநல நன்மைக்கேற்ற லட்சியத்தைக் கொண்டதோ அல்ல ;எனபதைத் தெளிவாக உணர்ந்து, அப்படிப்பட்ட பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்பதையும் எந்தக் காரணம் கொண்டும் நமது நாட்டில் இனியும் பார்ப்பன ஆதிக்கம் ஏற்பட இடம் கொடுக்கக் கூடாது என்பதையும் கருதி, பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஊற்றாக இருந்து வரும் கடவுள், மதம், சாதித் தத்துவங்களையும், இந்தத் தத்துவத்திற்கு இடமாகவிருக்கிற மூட நம்பிக்கையையும், மூட நம்பிக்கையை அரசியல், கடவுள், மதம், சாத்திரம், தர்மம் ஆகியவற்றின் பேரால் வளர்க்கும் பார்ப்பன சமுதாயத்தையும் ஒழிப்பது என்ற கொள்கை மீது ‘சுயமரியாதை இயக்கம்’ என்பதாக ஒரு இயக்கத்தைத் தோற்றுவித்து, நானே தோற்றுவித்தவனாகவும், தொண்டாற்றுபவனாகவுமிருந்து பல தோழர்களின் ஆதரவுபெற்று அதை நடத்தி வந்தேன். இந்த நிலையில் காங்கிரசானது, அரசியல் ஆதிக்கத்தில் பிரவேசிப்பதில்லை என்றும் , சமுதாயத் தொண்டேதான் காங்கிரசின் பிரதான கொள்கையென்றும் சொல்லி, நிர்மாணத் திட்டம் என்ணும் பேரால் பொய் நடிப்பு நடித்து மக்களை ஏமாற்றி வந்த (காங்கிரஸ்) தனது வேடத்தை மாற்றிக் கொண்டு அரசியல் ஆதிக்கத்தைக் கைப்பற்றத் துணிந்து, வெளிப்படையாகவே அரசியலில் புகுந்து ஆட்சியைக் கைப்பற்றற முன் வந்து விட்டதையும் உணர்ந்தேன்.
பிறகு எனது நிலை மேலே குறிப்பிட்டபடி கடவுள், மதம்,சாதி, தர்ம, சாத்திர சம்பிரதாய, பார்ப்பன சமுதாய ஒழிப்பு வேலைகளுடன், அரசியலில் பார்ப்பனர் நுழையாதபடியும், ஆதிக்கம் பெறாமல் இருக்கும் படியும் தொண்டாற்றவேண்டிய அவசியத்திற்கு ஆளாக நேரிட்டுவிட்டது. அதாவது, இவ்வளவு துறையிலும் பாடுபட வேண்டியதே எனக்குச் சமுதாயத் தொண்டாக ஆகிவிட்டது. இதன் பயனாய் எனது வேலை இரட்டித்து விட்டதுடன், எதிர் நீச்சல் போல் மிக மிகக் க·டமான காரியமுமாகிவிட்டது. எப்படி எனில் நான் கடவுள், மத, சாஸ்திர, சம்பிரதாய, சாதித் துறையில் பாடுபட்டால் எதிரிகள் (பார்ப்பனர்) அரசியல் துறையில் முன்னேறிவிடு கிறார்கள். அரசியல் துறையில் பாடுபட்டால் எதிரிகள் கடவுள், மத சாஸ்திர, சம்பிரதாய சாதித் துறையில் முன்னேறிவிடுகிறார்கள். ஆதலால், இரு துறை களில் மூட நம்பிக்கையுள்ள பாமர மக்கள் இடையில் வேலை செய்வ தென்பது எனக்கு மேற்சொன்னபடி மிகமிகக் க·டமாகவும் காட்டு வெள்ளத்தில் எதிர் நீச்சல் போடும் வேலை போலும் திணற வேண்டி யதாகிவிட்டது.
இதற்கிடையில் எனக்கேற்பட்ட மற்றொரு மாபெரும் தொல்லையென்ன வென்றால், என் தொண்டுக்கு ஆதரவாகச் சேர்த்து எடுத்து அணைத்துப் பக்குவப் படுத்திவந்த தோழர்கள் எல்லாம் 100-க்கு 100 பேரும் பக்குவம் அடைந்தவுடன், விளம்பரம் பெற்றுப் பொதுமக்கள் மதிப்புக்கு ஆளானவுடன் அத்தனைபேரும் எதிரிக்குக் கையாள்களாகவே (எதிரிகளால் சுவாதீனம் செய்யப்பட்டு) எதிரிகளுக்குப் பலவழிகளிலும் பயன்படுபவர்களாகி விட்டதோடு. எனக்கும் எனது தொண்டிற்கும் எதிரிகளாக, முட்டுக்கட்டை களாகப் பலர் விளங்க வேண்டியவர்களாகிவிட்டார்கள். இதற்குக் காரணம் (பிரகலாதன், விபீஷணன் போல்) நமது `சாதிப்பிறவி’த் தன்மைதான் என்று சொல்ல வேண்டியதைத் தவிர எனது 40வருட பொதுத் தொண்டின் அணுபவத்தில் வேறொன்றும் சொல்ல வேண்டியதைத் தவிர, எனது 40 வருட பொதுத்தொண்டின் அணுபவத்தில் வேறொன்றும் சொல்ல முடிய வில்லை.
இந்த நிலையில், நான் 40 ஆண்டுகளாகத் தொண்டாற்றிவந்து இன்றுள்ள நிலையில் எனது தொண்டின் பயணும், நிலையும் இருக்கிறதென்றால் என்னைப் பற்றி அறி…ர்கள்தான் விலைமதிக்க வேண்டும்.
என்னை விட்டு விலகி எதிரிகளானவர்கள், எதிரிகளின் கையாள் களானவர்கள்-ஒழுக்கத்தில் என் மீது குற்றமிருந்து என் நடத்தையில் கோளாறு இருந்து விலகி இருப்பார்களேயானால் அதற்காக நான் வெட்கப்பட வேண்டியதுதான் நியாயமாகும். ஆனால், விலகியவர்கள் அத்தனை பேரும் எதிரிகளோடு சேர்ந்தார்கள் என்பது மாத்திரமல்லாமல், எந்தக் கொள்கைக்காக என்ணுடன் இருப்பதாக நடித்தார்களோ அதை அடியோடு விட்டுவிட்டு நேர் எதிரிடையான கொள்கையை மேற்கொண்டும், அதற்கு ஆக்கமளிக்கும் எனக்கு முட்டுக்கட்டை போட்டு வருவதுதான் நமது சமுதாயத்திற்கென்றே ஏற்பட்ட கெட்ட வாய்ப்பாகும் என்று மறுபடியும் சொல்ல வேண்டி இருக்கிறது. இந்தநிலை ஒரு புறமிருக்க,
இந்தியாவிற்குச் சமீபத்தில் வந்துபோன ஒரு ர·யப் பிரமுகரை ஒரு பார்ப்பனர் `இந்தியாவிற்கு யார் வந்தாலும் சங்கராச்சாரியாரைப் பார்த்துவிட்டுப் போவதுதான் முக்கிய காரியம்’ என்று சொல்லி, சங்கராச்சாரியாரிடம் அழைத்துப்போனாராம்!. அந்த ர·யர் சங்கராச்சாரி யாரிடம் பல விஷயங்கைப் பற்றிப் பேசிவிட்டுக் கடைசியாக,`உங்கள் நாட்டில் உங்கள் மத சம்பிரதாயத்திற்கும் உங்கள் சம்பிரதாயத்திற்கும் விரோதமாக பெரியார் ஒரு இயக்கம் நடத்துகிறாரே, அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்று கேட்டாராம். அதற்குச் சங்கராச்சாரியார் `ஆமாம். அப்படி ஒரு இயக்கம் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது என்றாலும் அது இன்றைக்குப் பதினேழு வருடங்களுக்கு முன் வரையில் நாங்கள் மிகக் கவலை கொள்ள வேண்டிய அளவுக்கு நடந்தது. ஆனால், இந்தப் பதினேழு வருடமாக (1948 ல் இருந்து) எங்களுக்கு அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லாதநிலை ஏற்பட்டுவிட்டது. அதன் பாட்டுக்க அது நடைபெறுகிறது என்றாலும் இன்று அதனால் எங்களுக்கு எந்தவிதத் தொந்தரவும் இல்லை’ என்று சொன்னாராம்.
`இப்படி அவர் சொல்லக் காரணம் என்ன?’ என்று அந்த ர·யர் என்னிடம் வந்து கேட்டார். அவர் இப்படி என்னைக் கேட்கும் போத ஒரு பார்ப்பனரும் கூட இருந்தார். அதற்கு நான் சொன்ன பதில்: `அது ஒரு நல்ல அளவுக்கு உண்மைதான். அது பார்ப்பனருக்கு வந்த சுதந்திரமேயாகும் என்பதோடு அதன் பயனாய் நம்மிலிருந்து விளம்பரம் பெற்ற, மக்களிடம் செல்வாக்குப் பெற்ற ஒரு கூட்டம் பார்ப்பனருக்கு (நல்ல நிபந்தனையற்ற) அடிமைகளாகக் கிடைத்துவிட்டது. இந்த இரண்டின் ஆதரவில், பார்ப்பனர்கள் இழந்ததையெல்லாம் பெற்றுக் கொண்டதோடு மேலேறவும் அவர்களுக்கு நல்ல வசதி ஏற்பட்டுவிட்டது.
இது மாத்திரமல்லாமல், நாணும் இப்படிப்பட்ட பார்ப்பன சுதந்திரத்தை எதிர்க்கும் வேலையை விட்டுவிட்டு, இராஜாஜியை ஆட்சியை விட்டு வெளியேற்றி விட்டோம் என்ற ஆணவத்தாலும் காமராசரிடத்தில் வைத்த அளவுக்கு மீறிய நம்பிக்கையாலும் `சுதந்தரத்தை’, காங்கிரசை, அரசாங்கத்தை ஆதரிக்கும் பணியில் தீவிரமாக நிபந்தனையற்றுப் பாடுபட்டு வந்ததாலும், காமராசர் ஆட்சியை விட்டுப்போய்விட்டதாலும், அதற்குப் பிறகு `அசல் பார்ப்பனிய’ ஆட்சியே தங்குதடையின்றி நடந்து வருவதாலும் இதன் பயனாய்ச் சமுதாயத் துறையிலும் மதத் துறையிலும் உத்தியோகத் துறையிலும் கல்வித் துறையிலும் யாதொரு குறைவுமில்லாமல் மேலே போகும்படியான நிலையில் அவர்கள் (பார்ப்பனர்கள்) நிலை இருப்பதாலும் சங்கராச்சாரியார் அவ்விதம் கூறி இருக்கிறார். மற்றும் இன்றைய ஆட்சியின் பயனாய் நம் சமுதாயத்திற்கு எவ்வளவு கேடும் இழிவும் ஏற்பட்டாலும் அதை மனதார வெளியில் சொல்லி அழுது திருப்தியடையக் கூட வாய்ப்பில்லாத நிலையில், நான் காங்கிரசை ஆதரித்துத் தீரவேண்டியவனாய் இருக்கிறேன். இது பார்ப்பனர்களுக்கு இலாபகரமான விஷயமாகிவிட்டது’ என்று பதில் சொன்னேன். ர·யப் பிரமுகர் இது கேட்டுப் புன்சிரிப்புடன் பரிதாபப்பட்டார்.
நிற்க, இன்றைய `சுதந்திர’ ஆட்சி ஒரு மதப் பாதுகாப்பு ஆட்சியாகவே ஆட்சி நடத்துகிறது. இதைப் பயனனிக்கும் படியான அளவுக்குக் கிளர்ச்சி செய்யவோ கண்டிக்கவோ தக்கபடி எதிர்ப்பிரச்சாரம் செய்யவோ கூட தொண்டாற்ற முடியவில்லை. பத்திரிக்கைகள் யாவும் கூண்டோடு பார்ப்பன ஆதிக்கப் பிரச்சாரத்தில் இறங்கி விட்டன. ரேடியோ, சினிமா, ஜோசியம், புராணம், உற்சவம், காலட்சேபம் ஆகியவைகளையே விளம்பரம் செய்யும் சாதனங்களாக, ஒன்றுகூட விலக்கில்லாமல், எல்லாப் பத்திரிகைகளும் விளங்குகின்றன. இரா·டிரபதி, கவர்னர் உட்பட எல்லா மந்திரிகளும் கோவில், பக்தி பிரச்சாரம் செய்து வருகின்றார்கள்! அதிகாரிகள் நியமனம் பெறவும் தங்கள் குற்றங்களை மறைத்துக் கொள்ளவும், பிரமோஷன்கள் பெறவும் மந்திரிகளையேதான் பின்பற்றுகிறார்கள். காங்கிரசிலுள்ள மெம்பர்கள், காங்கிரஸ்காரர்கள் 100-க்கு 90-க்கு மேற்பட்டவர்கள் தங்களின் உண்மை நிலையையும், நிறத்தையும் மறைத்துக் கொள்ள மந்திரிகளைப் பின்பற்றுவதுடன் பக்தகோடிகளாக விளங்குகிறார்கள். சமுதாய நலம் காரணமாகவே பார்ப்பனர்கள் கூண்டோடு காங்கிரசை ஒழித்துக் கட்ட, தோல்வியடையச்செய்யப் பாடுபட்டாலும், அப் பார்ப்பன சமுதாய நலத்திற்கேற்ப எல்லாக் காரியங்களையும் நமது ஆட்சி மூலம் நிறைவேற்றிக் கொள்ள மந்திரிகளும், அதிகாரிகளும், காங்கிரஸ்காரர்களும் தெரிந்தோ,தெரியாமலோ அவர்களுக்கு எல்லாவித உதவியான காரியங்களையும் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் எனது தொண்டு இப்படிப்பட்ட காங்கிரசை-மந்திரிகளை-அதிகாரிகளை `பாதுகாப்பதற்கு’ எனபதல்லாமல் வேறு எதற்குப் பயன்படக் கூடுமென்பது எனக்கு விளங்கவில்லை. இந்த நிலையில் எனக்குள்ள ஆறுதல் என்னவென்றால், இவ்வளவு எதிர்ப்பிலும், ஏமாற்றத்திலும் எனது தொண்டுக்குச் சாதனமாகவிருக்கும் சுயமரியாதை இயக்கத்திலும், திராவிடர் கழகத்திலும் சுயநலமற்று தன்னலத் தியாகத்துடன் எவ்விதப் பிரதிபிரயோஜனத்தையும் எதிர்பாராமல், ஒழுக்கம், நாணயம் என்பதில் இருந்து ஒரு சிறிதும் வழுவாமல், தமிழ் நாட்டில் சென்னை முதல் குமரிவரை ஒவ்வொரு குறிப்பிட்ட இடங்களிலும் ஆர்வமும் முயற்சியும் உள்ள தோழர்கள் நல்ல அளவுக்கு இருந்து எனக்கு ஆதரவளித்து உற்சாகமூட்டு வதுடன், நெறி தவறாமல், படிந்து தொண்டாற்றுவதுதான் எனக்கு உயிரூட்டி, சலிப்படையாமல் உழைக்கச் செய்து வருகிறது. மேலும், நமது இயக்கத்தால், உழைப்பால் மனித சமுதாயத்தின் நடத்தையில் பெரிய மாறுதல் ஏற்பட்டு விடவில்லை என்றாலும் பெரவாரியான மக்களுக்கு மனமாற்றம் ஏற்பட்டி ருப்பதை உணருகிறேன். மற்றும் நம் எதிரிகளாக பார்ப்பனர் `எங்கள் நிலைமை இப்போது சீரடைந்த விட்டது. இனிப் பயப்படத்தேவையில்லை’ என்று சொன்னாலும் அது வாயளவில் கொள்ளும் தைரியமே அல்லாமல் மன அளவில் அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் நடத்தையில், முயற்சியிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
இன்று என்றுமில்லாத அளவுக்குக் கோவில் திருப்பணி, கோவில் உற்சவம், கோவில் கும்பாபிஷேகம், புதுக்கோவில் உண்டாக்குதல், புராணப்பிரச்சாரம் செய்தல்; கவர்னர், மந்திரி முதலியவர்களை ஸ்தலயாத்திரை செய்யச் செய்தல்; இவைகளைப் பற்றிய விளம்பரங்களைப் பெரிய அளவில் செய்தல்; பத்திரிகைகளில் எல்லாம் கடவுள் பிரச்சாரம் கடவுள் கதைப் பிரச்சாரம், மதப்பிரச்சாரம், சாஸ்திர தர்மப் பிரச்சாரம், பஜனை, காலட்சேபம் செய்தல் முதலிய காரியங்களில் எப்போதையும் விட அதிகமாக-மிகமிக அதிகமாக ஈடுபட்டிருக்கிறார்கள். அரசாங்கத்திலும், இன்று மக்களின் மூடநம்பிக்கையால், முட்டாள் தனத்தால் சமுதாயத்தில் மிகமிகச் சிறுபான்மையாராகிய `பெரிய சாதியாரும்’ பணக்காரர்களும் `பெரிய படிப்புக்காரர்’ என்பவர்களும் சூழ்ச்சியால் பெரிதும் மந்திரிகளாக இருக்கிறார்கள். ஆனால், இவர்களுக்கு ஓட்டுச் செய்பவர்கள் இவர்களைப் போல் 30 பங்கு அதிகமான சமுதாயத்தில் கீழ் நிலையிலிருக்கும் மக்களாக இருக்கிறார்கள். ஆனதால் , மக்களை மூட நம்பிக்கையிலிருந்து ஈடேறாமல் செய்து, மேலும் மேலும் மடையர்களாக ஆக்கி, இன்றுள்ள நிலைமையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்பதற்காகவே செய்கிறார்கள் என்றால், மேல் நிலையிலுள்ள சிறுபான்மையோருக்குப் பயம் வந்துவிட்டது; பயத்தால் துடிக்கிறார்கள் என்றுதானே ஏற்படுகிறது.
நாட்டில் படிக்காத நல்ல படிப்பு வாசனை அற்ற மக்கள் 100-க்கு 80 பேர் இருக்கிறார்கள். அது போலவே உழைப்பாளி, ஏழை மக்கள் 100-க்கு 80 பேர் இருக்கிறார்கள்.சமுதாயத்தில் கீழ்சாதி மக்கள் எனப்படுவோர் 100-க்கு 90-க்கு மேற்பட்ட மக்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் மேல்சாதிக்காரர்களும் பணக்காரர்களும், படித்தவர்கள் என்று சொல்லப்படுபவர்களும் ஆட்சியிலும், ஆதிக்கத்திலும் இருக்கிறார்கள் என்றால் இந்த நிலையை ஜனநாயக சுதந்திரமென்றால், மேலே குறிப்பிட்டப்படி இதற்கு மக்களின் முட்டாள் தனமும் மூட நம்பிக்கையுமல்லாமல் வேறு என்ன காரணம் சொல்ல முடியும்? ஆதலால்தான் மக்கள் அறிவு பெற்றுச் சுயமரியாதைக்காரர்களாகி விட்டால் தங்களின் இன்றைய நிலை என்ன ஆவது என்கின்ற பயம் ஆதிக்ககக் காரர்களுக்கு ஏற்படும் அளவுக்காவது நமது தொண்டு பயன்பட்டிருக்கிறது என்று சொல்லித்தானாக வேண்டும். என்றாலும், செய்ய வேண்டிய அளவுக்கு நாம் செய்ய வேண்டியதைச் செய்யவில்லை. இமயமலை பனிக்கட்டி யால் குளிரில் அவஸ்தைப்படுகிறது என்று கருதி சால்வையை மலைக்குப் போர்த்துகிறவனைப் போல், நாம் காங்கிரஸைக் `காப்பாற்றுகிற’ வேலையில் ஈடுபட்டு, சமயத்துறையில் பெரிய அளவுக்கு ஏற்பட்டிருக்க வேண்டிய நன்மையை-மாறுதலை இழந்து விட்டோம் என்பதை நாம் ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும்.
நாம் காங்கிரசைக் `காப்பாற்றும்’ தொண்டில் இறங்காமலிருந்து, இந்த 10,12 வருடத்தில் காங்கிரசை எதிர்த்து இரண்டு மூன்று முறை பதினாயி ரக்கணக்கில் சிறை சென்றிருந்தால் `வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ’ முறையில் கண்டிப்பாய் நல்ல அளவிற்கு வெற்றி பெற்றிருப்போம். கல்வித் துறையில் மேலும் முன்னேறி இருப்போம். சமுதாயத்துறையில் சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும்படியாகவும், முழு ஆலயப் பிரவேசம் முதலிய உரிமை பெறவுமான பல உரிமைகள் பெற்றிருப்போம். நீதித்துறையில் வக்கில்களின் தொல்லையை நல்லஅளவுக்குக் குறைத்துக் கொண்டிருப்போம். இந்த காரியங்கள் ஈடேறாமல் இருப்பதற்குக் காரணம், நமது கவனத்தை வேறு வழியில் திருப்பிக் கொண்டது பெரும் காரணமாகும். இப்போதும் நாம் இனியும் ஒன்றரையாண்டு காலத்திற்க -18 மாதங்களுக்கு இந்தப் போக்கிலேயே இருக்க வேண்டியவர்களாய் இருப்பதால் அதற்குள் நமது வெகுதூரம் பாதிக்கப்பட்டு எதிரிகள் மிகவும் வளர்ந்து விடுவார்களே என்று அச்சப்பட வேண்டியவர்களாகத்தான் இருக்கிறோம். நமது தொண்டுக்காக நமக்கு-நமது இலட்சியத்திற்குச் செய்யாவிட்டாலும், நன்றி காட்டாவிட்டாலும் நமது இலட்சியத்துக் கேடு பயக்கும் பணியையாவது காங்கிரஸ் ஆட்சி செய்யாமல் இருக்கலாம். ஆனால், அப்படிக்கல்லாமல் நம்மால் காங்கிரசுக்கு-ஆட்சிக்கு `ஒரு பயணுமே ஏற்படவில்லை,தொல்லைகள் தாம் ஏற்படுகிறது’ என்று காங்கிரஸ் கட்சி கருதுகிறபோது, நமது நிவர்த்தி இல்லாத முட்டாள்தனத்தைப் பற்றி வெட்கப்பட வேண்டியதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்?
இன்று காங்கிரசுக்கு எதிராக எப்படியாவது காங்கிரசை-காங்கிரஸ் ஆட்சியை ஒழித்துக் கட்டுவது என்கின்ற இலட்சியத்தில் பொதுமக்களுக்கும் ஆட்சிக்கும் எவ்வளவோ கொடுமைகளையும், துரோகங்களையும் நாசங்களையும், நட்டத்தையும் கொடுத்துவரும பல வசதிகளையும் நடப்புரிமைகளையும் பெற்றுவருகிறார்கள். எனவே, நமது தொண்டு-எனது தொண்டு எதிரிகள் நகைக்கும் படிதான் பலனளித்தது என்று சொல்லி வெட்கப்படுகிறேன்.
ஆகவே, இனி நமது தொண்டு அடுத்து வரும் தேர்தலில் காங்கிரசுக்கு நல்ல வெற்றி கிடைக்கும் படி செய்யவேண்டியது பெருங்கடமையானாலும் அதோடு அதைவிடப் பெருங்கடமைக் கொண்டும் தொண்டாற்ற வேண்டியவனாக இருக்கிறேன்-இருக்கிறோம் என்பதைக் கழகத் தோழர் களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
(87வது பிறந்தநாள்விழா மலர்- 17.9.1965)
No comments:
Post a Comment