Sunday, April 26, 2026

பார்ப்பன தர்மம் - பெரியார்

 பார்ப்பன தர்மம்

இந்து மதத்தைப் பற்றிப் பார்ப்பன குருவான சங்கராச்சாரியார் கூறியது என்னவென்றால்-(27.2.1969 தினமணி பத்திரிகையில் உள்ளது)

‘இந்து மதம் பழமையானது. உலகம் தோன்றிய காலத்திலேயே தோன்றியது. இந்து மதத்தின் தர்மம் அவரவருக்கு விதித்தபடி நடந்து சனாதன தர்மத்தை நிலை நிறுத்த வேண்டியது’ என்று சொன்னார்.

மேலும், மதம் என்றால் ஒருவர் தனக்கென்று நிச்சயித்துக்கொண்ட சித்தாந்த (கருத்து) முடிவு. இந்து மதத்திற்கு ஆதி கிடையாது. இதர மதஸ்தர்கள் அவர்கள் மதங்களைக் கடவுள் மகன் உண்டாக்கினார் என்றும் கூறுவர்; தூதர் உண்டாக்கினார் எனறும் கூறுவர். ஆனால், இந்துமதம் எப்பொழுது உண்டானது என்று கூறமுடியாது. வேதம் உண்டான காலத்தில் ஏற்பட்டது. வேதம் எப்பொழுது உண்டாயிற்றென்று சொல்ல முடியாது. வேத காலத்தைப் பற்றிப் பலர் பல விதமாகச் சொல்லுவார்கள்’ என்றும் சொல்லி இருக்கிறார்.

ஆகவே இந்துமதம் யாரால், எப்போது உண்டாயிற்றென்று சொல்ல முடியாது என்பதை சங்கராச்சாரியாரே ஒப்புக் கொள்வதோடு, அது உலகம் உண்டான காலத்திலேயே உண்டானது என்றும் சொல்லுகிறார்.

உலகம் உண்டான காலம் எவ்வளவு காட்டுமிராண்டிக் காலமாக இருந்திருக்க வேண்டும்?

‘அந்தக் காலத்தில் ஏற்பட்ட தர்மங்கள்,முறைகள், நடப்புகள் இன்றும் நடைபெற வேண்டும். அந்தப்படி நடக்காவிட்டால் பாவம், கேடு ஏற்படும்’ என்றால் இதில் அறிவு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். எனவே இந்து மதம் என்பது பெரிய புரட்டு. இந்துமதம் என்பதாக எந்த ஆதாரமும் இல்லை. அதற்கு எந்த முறையும் எந்தத் திட்டமும் கிடையாது. 

பார்ப்பனர் சக்திக்கு ஏற்ப-பார்ப்பனரல்லாதவர்களின் முட்டாள் தன்மைக்கும், மானமற்ற தன்மைக்கும் ஏற்ப அவ்வப்போது உண்டாகும்-உண்டாக்கிக் கொள்ளும் திட்டங்களும், கருத்துக்களுமேயாகும்.

அதுவும் தேசத்திற்கு ஒருவிதம், நாட்டுக்கு ஒரு விதம், ஊருக்கு ஒருவிதம், சமயத்திற்கு ஒருவிதம், சந்தர்ப்பத்திற்கு ஒரு விதம், ஆளுக்கொருவிதம் என்றெல்லாம் சொல்லலாம்.

இராஜாஜி ‘பஞ்சமர்’ வீட்டில் சாப்பிடுவார்; சங்கராச்சாரி பஞ்சமனைக் கண்டதற்குக் குளிப்பார். சிலர் நிழல் பட்டதற்குக் குளிப்பர். சிலர் தொட்டதற்குக் குளிப்பர். சிலர் ‘பஞ்சம’ஆனையோ, பெண்ணையோ திருமணம் செய்து கொண்டு பார்ப்பனராகவே இருப்பார்கள்.

‘பலித்தவரை’ என்பதுதான் பார்ப்பனீயமும், இந்து மதமுமாகும்.

கடவுளும் அப்படித்தான். ஒரே கடவுள் கோயிலுக்குள் இருந்தால் பார்ப்பானைத் தவிர யார் தொட்டாலும், கிட்டேபோனாலும் தீட்டு ஆகிவிடும். அதே கடவுள் ஆலமரத்தடியிலோ, தெருவிலோ, திண்ணையிலோ இருந்தால் யார் வேண்டுமானாலும் தொடலாம். நாய்கூட நக்கிச் சுவைக்கலாம். கோயிலுக்குள் இருந்தாலும் எலி, கரப்பான் பூச்சி, பூனை உலாவலாம், மேலேறி விளையாடலாம்.

தமிழ்நாட்டு சிவணும், தமிழ்நாட்டு வி·ணூவும், உலகில் ‘சிறந்த’ ஸ்தலங்களான காசியிலும் பண்டரிபுரத்திலும் ஜகநாத்திலும் இருந்தால் யாரும் தொட்டுக் கட்டித் தழுவிக் கும்பிடலாம்.

பஞ்சாப்பில் உள்ள ஆரிய சமாஜத்தார் வேதத்தை ‘பஞ்சமர்’ உட்பட நாய், கழுதை,குதிரைகளுக்கெல்லாம் கேட்கும்படி வரட்டுக் கத்து கத்தலாம். தமிழ்நாட்டில் வேத சப்தம் நம் காதிலேயே விழக்கூடாது என்பார்கள்.

பார்ப்பன ஆச்சாரம் 1900-இல் ஒரு விதம்; 1940-இல் ஒருவிதம்; 1940-க்குப் பின் ஒரு விதமாகத்தான் இருக்கிறது.

1930 இல் கோயிலுக்குள் பஞ்சமர் போகக் கூடாது. மலையாளத்தில ‘நாலாவதர்’ களிலும் சிலர் போகக் கூடாது. அங்கு, இன்று எல்லோரும் ‘செரமர்’ உட்பட எல்லா மக்களும் போகலாம்’ இதனால் எந்தக் கடவுளும் ஓடிப் போய்விடவில்லை.

இன்றைய தினமும் சில ஸ்தலங்களில் கலவி சுகம் கொடுக்கப் பார்ப்பனப் பெண்களும் இருந்து வருகிறார்கள். அதற்குப் பார்ப்பன இளை…ர்களே தரகர்களாக இருக்கிறார்கள். சில இடங்களில் அர்ச்சகர்களில் சிலர் தங்களுக்கென்று ஒரு மனைவியும், பக்தர்களுக்கென்று ஒரு மனைவியும் உடையவர்களாக இருக்கிறார்கள். அர்ச்சகர்கள் என்றால் அவர்களைப் பார்ப்பனர்கள் இழிவாய் நினைத்த காலம் ஒன்று இருந்தது. இன்று அவர்கள் ‘சரியான’பார்ப்பனர்களாகவே ஆகி விட்டார்கள்.

வைணவ அர்ச்சகர்களும், சைவ குருக்களும் கொஞ்ச காலத்திற்கு முன்பு மலையாளிகளைப் போல் முன் குடுமிகள் வைத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது அந்தப் பேதமே போய்விட்டது.

இன்று பார்ப்பனருக்கு எது எப்படிப் போனாலும் தங்களுக்குப் பெரிய சாதி என்கின்ற பட்டம், அந்தஸ்து இருந்தால் போதும். அதற்காக எந்தக் காரியத்தையும், எப்படியும் நடத்திக் கொள்ளலாம் என்பதை உயர் தர்மமாகக் கொண்டிருக்கிறார்கள். (விடுதலை 4.3.1969)

No comments: