மூலஸ்தானப் பிரவேசம்
‘மூலஸ்தானத்தில் எல்லா மக்களும் பிரவேசிக்கக் கூடாது’ என்பது கோயில் சம்பந்தமாக அல்லது ஒரு பொது இடம் சம்பந்தமாக அரசாங்கத்தார் செய்து கொண்ட ஏற்பாடு தானே யொழிய, அது எந்த விதத்திலும் ஒரு மத சம்பந்தமான தத்துவமாகாது; எந்த விதத்திலும் ஒரு புனிதமான காரியமோ, யாருக்காவது மனம் புண்படுவதைத் தடுக்கும் படியான காரியமோ என்று சொல்ல முடியாது; கோயில் பிரகாரத்திற்குள் தாழ்த்தப்பட்ட இன மக்கள் செல்வது’ எவ்வளவு சாதாரண காரியமோ, அதைவிடச் சாதாரணமான காரியமேயாகும்.
கோயிலுக்குள்ளாகவோ, மூலஸ்தானத்திற்குள்ளாகவோ இன்ன மதத்தார்தான் இன்ன சாதியார்தான் செல்லலாம்; இவரிவர் செல்லக் கூடாது என்பதற்கு எந்தச் சட்டமும், மத ஆதாரமும், சரித்திர நியமனமுமில்லை.
இன்ன மொழியில்தான் பூசைக்குச் சொற்கள் சொல்ல வேண்டும் என்கிற கட்டாயமும் இல்லை, கோயில் நிர்வாகத்திற்கு, டிரஸ்டி பதவிக்கு இன்ன சாதியாகத்தானிருக்க வேண்டும் என்பதற்கு ஒரு நிர்ப்பந்தமுமில்லை. மத விரோதமும், சாஸ்திர விரோதமும், சட்ட விரோதமுமில்லை.
நான் சுமார் 20 ஆண்டு ஈரோடு தாலுக்கா தேவஸ்தானக் கமிட்டிச் செயலாளனாகவும் தலைவனாகவும் இருந்திருக்கிறேன்; ‘சாத்தாணி’ இனத்தாரை அர்ச்சகராக நியமித்து இருக்கிறேன்; நான் கடவுள் நம்பிக்கையில்லாதவனாக (நாத்திகனாக) இருந்து கொண்டேதான் இந்தத் தாலுக்கா தேவஸ்தானக் கமிட்டித்தலைவனாக, செயலாளனாக இருந்திருக்கிறேன்; மற்றும் ஈரோடு, பவானி, திருப்பூர், கோபி தாலுக்கா கமிட்டித் தலைவனாகவும் இருந்திருக்கிறேன். இது பற்றிக் கலெக்டருக்கு சிலர் நான் நாத்திகன் என்று புகார் எழுதி, அவர் என்னை அதியமாக ‘நாயக்கரே! நீர் நாத்திகரா! என்று கேட்டார். ஆம என்று சொன்னேன்; அவர் சிரித்துக் கொண்டே, ‘இந்துதானே! என்று, தானே கேட்டுக் கொண்டு சும்மா இருந்துவிட்டார்.
இதை நான் 20, 30 ஆண்டுகளுக்கு முன் குடிஅரசிலும் விடுதலையிலும் எழுதியிருக்கிறேன்.
இன்றும் வி·ணூ கோயில்கள் பலவற்றில் மூலஸ்தானத்திற்கும், மற்றவர்கள் நிற்குமிடத்திற்கும் இடையில் கதவு நிலைதான்-வாயிற்படிதான்-அதாவது சுமார் ஒரு அடி அளவு இடம் தூரம் தானிருக்கிறது. பிரசாதம் வாங்கக் கையை, கதவைத் தாண்டி உள்ளே நீட்டலாம். படுத்திருக்கும் 10, 12 அடி நீளமுள்ள சிலையின் தலையையும் காலையும் பார்க்க-பக்தர்கள் தலையையும் கழுத்தையும் கதவு நிலையைத் தாண்டி உள்ள நீட்டலாம். பூசாரிக்குக் கூட நெற்றியில் நாமம், விபூதிதான் இருக்க வேண்டுமேயொழிய, அவன் ஸ்நானம் செய்துவிட்டு வர வேண்டுமென்றோ, சுத்தமான வேட்டி கட்டிக் கொண்டு வர வேண்டுமென்றா திட்டம் கூடக் கிடையாது.
அவர்களில் அனேகர் ‘மாமா’வாக இருப்பார்கள் என்பதோடு, தாசிகளிடம் சங்கமம் இதழ் அமுதம் பருகுபவர்களாகவும் இருப்பார்கள். மாலையில் நாம் கோயிலுக்கு அணுப்புகிற சண்பகப் பூ, மனோரஞ்சிதப் பூமாலையில் உள்ள பூ-இரவு 10 மணிக்குத் தாசி வீட்டிற்குப் போனால் அந்தத் தாசியின் தலையில் பார்க்கலாம். (அந்தக் காலத்தில் இந்தப் பூக்கள் எங்கள் நந்தவனத்தில் மாத்திரம்தான் உண்டு). ஆக மூலஸ்தானப் பிரவேசத்திற்கும், கர்ப்பக் கிரகப் பிரவேசத்திற்கும் சட்டம். சாஸ்திரம் ஒன்றும் கிடையாது. ஆச்சாரம் அணு·டானம் என்பதற்கும் எந்தத் திட்டமும் கிடையாது -இந்து மதம் என்பதற்கே கிடையாது.
நெற்றிக் குறி என்பதும் அதிகாரத்தாலும். செல்வாக்காலும் ஏற்பட்டதேயொழிய அதற்குச் சட்டமோ, சாஸ்திரமோ, நிர்ப்பந்தமோ கிடையாது.
ஆகவே, சாதிபேதம், மத பேதம் என்பவை அணு·டாத்திலும் இல்லை; சட்டத்திலும் இல்லை. சாஸ்திரத்திலும் இல்லை.
உண்பன, தின்பன வகையிலும் பெண் கொடுப்பன, கொள்வன என்பவைகளிலும் சட்டப்படியே தடை நீக்கப்பட்ட பிறகு-‘ஒரு நிலக் குறிப்பான இடத்திற்கு-மூலஸ்தானத்திற்கு’ மட்டும் உண்டு என்றால், இது எவ்வளவு பைத்தியக்காரத்தனம் என்பதோடு, இதனால் சமுதாய இழிவும் அமுல் படுத்தப்படுவதென்றால் எவ்வளவு மானக் கேடான காரியம் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
எனவே, ஆட்சியாளர் இதைப் பகுத்தறிவோடு கவனிக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறேன். (விடுதலை-18-10-1969)
No comments:
Post a Comment