Sunday, April 26, 2026

இந்திக் கிளர்ச்சி - பெரியார்

 இந்திக் கிளர்ச்சி

கொடி கொளுத்திக் காட்டுவது என்று திராவிடர் கழகம் தீர்மானித்த பிறகு, அரசியல் உலகில் ஒரு பரபரப்பு-‘சென்சேஷன்’ ஏற்பட்டிருக்கிறது. இது பற்றிப் பெரிதும் அரசியல் பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கிறவர்களே அதிகம் பேசுகிறார்கள்.

இதில் சிலருக்கு கொடியைப் பற்றிக் கவலையில்லாமல் வேறு விஷயமாய் மகிழ்ச்சியும் கவலையும் ஏற்பட்டிருக்கலாம். அதாவது, காமராசரின் எதிரிகளுக்கு ஒரு மகிழ்ச்சி என்னவெனில், காமராசருக்குப் பொது மக்களிடம் பெரிய ஆதரவிருந்து வருகிறது. இப்போது இராமசாமி கொடி கொளுத்தப் போவதால் அவன் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்துதான் தீர வேண்டும்; விஷயம் இந்திப் பிரச்சினையானதால் இந்த இந்தி எதிர்ப்பு நாட்டு மக்கள் எல்லோரும் வரவேற்கும்படியான காரியமாகும். இப்போது இராமசாமி மீது எடுக்கும் நடவடிக்கையால் காமராசர் பொதுமக்கள் ஆதரவை இழந்து விடுவார்; செல்லுமிடங்களில் கருப்புக் கொடி (1938 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பில் இராஜாஜிக்குப் பிடித்தது போல்) பிடிக்கும் படியான நிலைமை வந்து விடலாம். ஆனதால், இந்தக் கொடி கொளுத்துவது காமராசரைத் திண்டாட்டத்தில் கொண்டுவந்து வைத்து விட்டது. இது ஒரு நல்ல சம்பவம்’ என்று காமராசரின் எதிரிகள் மகிழ்ச்சிக் கூத்தடிப்பார்கள்.

அதுபோலவே காமராசரின் நண்பர்கள், இது ஒரு சங்கடமான நிலையாக இருக்கிறதே; இது எப்படி முடியுமோ? என்று கவலைப்படுவார்கள். இது தான் பரபரப்புக்கு முக்கியமான காரணம். மற்றபடி. இந்தக் கொடி கொளுத்துவது ஒரு சாதாரண விஷயம். பிள்ளையார் உடைக்கப்பட்டதைவிட இது ஒன்றும் முக்கியமான காரியமல்ல. அது கடவுள் சங்கதி; இது ஆட்சி சங்கதி. அது ஒரு மொத்தைக் களிமண்ணைப் பொறுத்தது-இது ஒரு முழம் அல்லது ஒரு சாண் துணியைப் பொறுத்தது. இந்த இரண்டு காரியமும் யாரிடமும் எவ்வித பலாத்காரம் கொண்டதுமல்ல-நாசத்தைக் கொண்டதுமல்ல.

ஆனால், வெறும் மூடநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட அந்தக் களிமண் பொம்மை எப்படிக் கடவுள் சின்னமோ, அப்படியே, இந்த மேற்படி அளவு துண்டுத் துணி ‘ஆட்சிச் சின்னம்’ என்பதாகச் சொல்லிக் கொள்ளப்படுவதாகுமே ஒழிய, அறிவாளிகள் பிரமாதமாகக் கருதிக் கொள்ளப்பட இடமில்லை. கடவுள் சின்னம் என்பது ‘ஒழுக்கத்தையும் எல்லா மக்களுடைய உள்ளத் திருப்தியையும்’ பொறுத்தது; ஆட்சிச் சின்னம் என்பது நீதியையும் மக்களுடைய திருப்தியையும் பொறுத்தது. அது மத சாஸ்திரத்தைப் பொறுத்தது; இது அரசியல் சட்டத்தைப் பொறுத்தது. இவற்றில் ஒழுக்கம், நேர்மை இல்லாமல் சாஸ்திரத்தையும் சட்டத்தையும் கருதிக்கொண்டு இந்த இரண்டையும் காப்பாற்றப் புறப்படுவது கைபலமே அல்லாமல் நியாய பலத்தைப் பொறுத்தல்ல.

ஆனால், பொதுமக்கள் இந்த இடத்தில் ஒரு விஷயத்தைப்பற்றிச் சிந்திக்க வேண்டும். அதாவது. உடைப்பவர்களும் கொளுத்துபவர்களும் என்ன எண்ணத்தைக் கொண்டு அப்படிச் செய்கிறார்கள் என்பதைப் பற்றியதாகும்.

பக்தர்களுக்கோ, அரசாங்கத்திற்கோ எந்தவிதமான தொல்லையையும் அவர்களது காரியங்களுக்கு எந்த விதமான தடையையும், ஏற்படுத்துவதற்காக அல்லவேயல்ல. மற்றெதற்கு என்றால், ‘பிள்ளையார் என்பதை நாங்கள் எங்கள் கடவுளாகக் கருதவில்லை. அது போலவே, இந்திய யூனியன் ஆட்சி என்பதை நாங்கள் எங்கள் சர்க்காராக, ஆட்சியாகக் கருதவில்லை, இவை எங்களுக்கு இ·டமில்லாத காரியங்கள்; அதன் காரணங்கள் இன்ன இன்னவைகள் என்று விளக்கி வந்திருக்கிறோம்; விளக்கி வருகிறோம். அந்த எண்ணங்களைப் படிப்படியாக தீவிரப்படுத்திக் காட்டுவதற்காக இப்படிச் செய்கிறோம். இதனால் எங்களுக்குவேறு எவ்வித கெட்ட எண்ணமுமில்லை.

இந்திய யூனியன் ஆட்சியை ஒழித்து, கவிழ்த்து எங்கள் ஆட்சியை இந்தியா மீது சுமத்தவோ, இந்தியாவை நாங்கள் எங்களுக்கு அடிமைப்படுத்திக் கொள்ளவோ அல்ல; அல்லது இந்தியாவை மற்றொரு நாட்டாணுக்குக் கைவசப்படுத்தவோ, காட்டிக்கொடுக்கவோ அல்ல; அதாவது நாங்கள் துரோகிகளுமல்லர்; எதிரிகளுமல்லர்; யுத்தம் தொடங்குகிறவர்களுமல்லர்;

எங்கள் நாட்டு ஆட்சி எங்களுக்கு வேண்டும். எங்கள் நாட்டுக்குள் எங்கள் மொழி அல்லாதது ஆட்சி மொழியாக, தேசிய மொழியாக, கல்வி மொழியாக இருக்கக் கூடாது. இந்தியை வலியுறுத்தும் ஆட்சி எங்கள் (தமிழ்) நாட்டிற்கு வேண்டாம் என்பதை ஆட்சியாளருக்குக் காட்டுவதற்காக-ஒரு கிளர்ச்சி காரியமாக இதைச் செய்கிறோம். அதுவும் ஏன் செய்கிறோம் என்றால், மற்றவிதமாகச் செய்யப்பட்ட காரியங்கள் கவனிக்கப்படவில்லை. கேலி செய்யப்பட்டுவிட்டன. இந்திய யூனியன் ஆட்சி ஜனநாயக ஆட்சி என்று சொல்லப்படுகிறது. அப்படியானால். தமிழ் நாட்டில் இந்தியைப் புகுத்துவது ஜனநாயகமா? இங்கு தமிழர்கள் 100-க்கு 90 பேர்கள் ஆவார்கள்; மீதி 100க்கு-10 பேர். பாக்கியுள்ள மக்களிடம் இந்த ஜனநாயக ஆட்சி, இந்தியைப்பற்றி யோக்கியமான முறையில் ஓட்டுக்கேட்கட்டுமே! மெஜாரிட்டி மக்கள் இந்தியை விரும்பினால் வைத்துக் கொள்ளட்டும். அப்படியில்லாமல்,‘இந்திய யூனியன் அரசாங்கத்திற்குள் தமிழ்நாடு ஒரு இராஜ்யமாக சேர்க்கப்பட்டு இருக்கிறது (என்றென்றைக்கும் விடுபடுவதற்கு இல்லாமல் சட்டம் , ஆட்சியமைத்துக் கொண்டு). ஆதலால் யூனியனிலுள்ள 20 நாடுகள் சொல்லுகிறபடிதான் தமிழ்நாடு கேட்டு ஆக வேண்டும்’ என்றால் நாங்கள் பரிகாரம் தேடிக்கொள்வது எப்படி? (விடுதலை, 21.7.1955)

No comments: