Sunday, April 26, 2026

தீபாவளி - 1 பெரியார்

 தீபாவளி-1

நமது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் குருட்டுப் பற்றுதலால், தீபாவளியின் போது ஏராளமான பொருள்கள் நமது நாட்டில் வீண் விரயமாக்கப்படுகின்றன.

அப்படிப்பட்ட வீண் செலவுகளில் பட்டாசு முதலிய வெடிகள் சுடுதல், பலகார வகைகளை அளவுக்கு மிஞ்சிச் சாப்பிடுதல்,புதுத் துணிகள் வாங்குவதில் தன் நிலைமைக்கு அதிகமாகச் செலவு செய்தல் முதலியன முக்கியமாகும். இவற்றில் வெடிகள் சுடுவதன் மூலம் நமது நாட்டுப்பொருள் சீனா முதலிய அன்னிய நாடுகளுக்கு அணுப்பப்பட்டு அவ்வன்னிய நாடுகளில் நமது நாட்டிலுள்ள மூட மக்கள் தேவைக்கு வெடிகள் செய்வதென்று மனித நன்மைக்கு உபயோகமில்லாத ஒரு தொழில் வளர்க்கப்பட்டு வருகிறது. தீபாவளியில் தின்பண்டங்கள் தின்ன வேண்டும் என்றிருக்கும் வழக்கத்தால் மக்களிடையே நோய் விருத்தியாகிறது. தின்பண்டங்களை ஒவ்வொருவரும் தனது தேக நிலைக்குத் தகுந்த அளவு நிரந்தரமாகப் புசித்துவர வேண்டுமெயொழிய-வருஷத்தில் சில தினங்களில் மாத்திரம் பண்டிகைகள் கொண்டாடும் விசேஷ தினங்களென ஏற்படுத்திக் கொண்டு –அந்த நாட்களில் மாத்திரம் அதிகமாகப் புசித்தால் நோயடைவது நிச்சயம். தமிழ்நாட்டில் அஜீரணத்தால் ஏற்படும் ‘காலரா’ என்ணும் தொத்து நோய் ஒவ்வொரு வருஷமும் ஆரம்பமாவது தீபாவளி காலத்தில்தான் என்பதை அனைவரும் அறிவர்.

தீபாவளியில் புதுவஸ்திரம் கட்டியாக வேண்டியிருக்கும் வழக்கம் மேற்கண்ட மற்ற இரண்டு தீங்குகளைவிட மிகவும் பாதகமானது, மக்களுக்குத் துணி அவசியம் எனக் கொண்டாலும் ஒவ்வொருவரும் தனக்கு வேண்டிய துணிகளை நாளடைவில் அந்தந்தச் சமயத்திலுள்ள தேவைக்குத் தக்கவாறும், தனது பொருள் நிலைமைக்குத் தக்கவாறும், வாங்கிக் கொள்ள வேண்டும். பழைய துணிகள் கிழியாமல் வேண்டிய அளவு இருக்கும் போது, புதிதாய் வாங்க வேண்டியதில்லை. பொருள் க·டம் ஏற்படும் காலத்தில் கிழிந்த ஆடைகளைக் கூடிய வரையில் மறுபடியும் செப்பனிட்டுத் தைத்து உபயோகப்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டுமேயொழிய, புதுப் புதுத் துணி வாங்கித்தான் ஆக வேண்டுமென்ற நியதியைக் கைக் கொள்ளக் கூடாது. ஆனால் தீபாவளிக் கொண்டாட்டம் என்ணும் மூட சம்பிரதாயத்தின் காரணமாய் ஒருவன் தன்வசத்தில் ஏராளமான ஆடைகள் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த போதிலும்-தற்சமயம் அவசிய செலவுக்கே பணமில்லாமல் திண்டாடிக் கொண்டிருந்த போதிலும், பண்டிகை காலத்தில் புத்தாடை வாங்கி உடுத்த வேண்டுமென்று கட்டாயப்படுத்தப்படுகிறான். இதன் பயனாய் ஏழை மக்கள் தங்களுக்கு வேண்டிய துணிகளைத் தீபாவளிச் சமயத்தில் தவிர வேறு சமயங்களில் வாங்காமலிருக்கிறார்கள். துணி வியாபாரத்தில் ஒரு வருஷத்திய வியாபாரம் முழுவதும் ஒரு தினத்தில் நடத்த வேண்டியிருப்பதால் ஒரு நெருக்கடி ஏற்பட்டுத் துணிவிலை அதிக விலை அதிகப் பட்டு, ஏழைகளுக்கு ந·ட முண்டாகிறது. ஆகையால், நமது நாட்டு மக்கள் இவ்வித நெருக்கடியிலும், க·டத்திலும் பட்டு உழலாமலிருக்க வேண்டுமானால் தீபாவளிப் பண்டிகையைக் கைவிட வேண்டியதவசியம். தேச நலத்தை விரும்புகிறவர்களும்-ஏழை மக்களின் அறியாமையை அகற்றப்பாடுபடுபவர்களும் தங்கள் செய்கையில் தீபாவளியைக் கொண்டாடாமல் மற்றவர்களுக்கு வழிகாட்டுவதிலும்-தீபாவளியைப் பகி·கரிக்க வேண்டுமெனப் பொது மக்களிடையே தீவீரப் பிரச்சாரம் செய்வதிலும் முன்னிற்க வேண்டியது அவசியமாகும். பொது நன்மையைக் கோரும் அறிவாளிகளிடத்தில் இவ் விஷயத்தைப் பற்றி அபிப்பிராய பேதமிருக்க வேண்டியதில்லை. (குடியரசு 1-11-1931)

தீபாவளி-2

சகோதரர்களே! 

சிறிதும் யோசனையின்றி, யோக்கியப் பொறுப்பின்றி, உண்மைத் தத்துவமின்றி, சுயமரியாதை உணர்ச்சி இன்றி, சுயமரியாதை இயக்கத்தின் மீது வெறுப்புக் கொள்கின்றீர்களேயல்லாமல்-மற்றும் சுயநலப் பார்ப்பனர் வார்த்தைகளையும், மூடப்பண்டிதர்களின் கூக்குரலையும், புராணப் புத்தக வியாபாரிகளின் விஷமப் பிரச்சாரத்தையும் கண்டு மயங்கி-அறிவிழந்து ஓலமிடுகின்றீர்களேயல்லாமல், மேலும் உங்கள் வீடுகளிலும், அண்டை அயல்களிலும் உள்ள கிழங்களுடையவும் ஜீவனற்ற தன்மையான ‘பழைய வழக்கம்’, ‘பெரியோர் காலம் முதல் நடந்து வரும் பழக்கம்’ என்கிறதான வியாதிக்கு இடம் கொடுத்துக் கொண்டு கட்டிப்போடப்பட்ட கைதிகளைப் போல் துடிக்கின்றீர்களேயல்லாமல், உங்கள் சொந்தப் பகுத்தறிவைச் சிறிது கூடச் செலவழிக்கச் சம்மதிக்க முடியாத உலுத்தர்களாய் இருக்கின்றீர்கள்.

பணத்தையும் மானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கத் தயாராயிருக்கின்றீர்கள். ஆனால், உங்கள் பகுத்தறிவைச் சிறிது கூடப் பயன்படுத்தத் தயங்குகிறீர்கள்!. அது விஷயத்தில் மாத்திரம் ஏன் வெகு சிக்கனம் காட்டுகின்றீர்கள்? பார்ப்பனரல்லாதார்களில், சில பண்டிதர்கள் மாத்திரம் வயிறு வளர்த்தால் போதுமா? புராணப் புத்தக வியாபாரிகள் சிலர் மாத்திரம் வாழ்ந்தால் போதுமா? கோடிக் கணக்கான மக்கள் …hனமற்று, மானமற்று கால் வயிற்றுக் கஞ்சிக்கும் வகையற்று அலைவதைப் பற்றிய கவலை வேண்டாமா என்று கேட்கின்றேன்.

புராணக் கதைகளைப் பற்றிப் பேசினால் கோபிக்கின்றீர்கள். அதன் ஊழலை எடுத்துச் சொன்னால் காதுகளைப் பொத்திக் கொள்கின்றீர்கள். ஆனால், காரியத்தில் ஒரு நாளைக்கு உள்ள 60 நாழிகை காலத்திலும் புராணத்திலேயே முழ்கி மூச்சு விடுவது முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் புராணப் புரட்டை உணர்ந்தவர்களாவார்களா? புராண ஆபாசத்தை வெறுத்தவர்களாவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள்.

பண்டித,பாமர, பணக்கார ஏழைச் சகோதரர்களே! எவ்வளவு பண்டிகை கொண்டாடினீர்கள்? எவ்வளவு யாத்திரை செய்தீர்கள்? இவற்றிற்காக எவ்வளவு பணச் செலவும் நேரச்செலவும் செய்தீர்கள்? எவ்வளவு திரேகப் பிராயாசைப்பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால், நீங்கள் புராணப் புரட்டை உணர்ந்து-புராண ஆபாசத்தை அறிந்தவர்களாவீர்களா? வீணாய்க் கோபிப்பதில் என்ன பிரயோசனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச் சொல்லுகின்றவர்கள் மீது  ஆத்திரம் காட்டி அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றிப் பேசுவதால் என்ன பயன்? ‘ நீ மலத்தில் முழ்கி இருக்கின்றாய்?’ என்றால், அதற்கு, ‘நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன்’ என்று பதில் சொல்லிவிட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா? இதைப் பார்ப்பனரல்லாத மக்கள் 1000-இக்கு 999 பேர்களுக்கு மேலாகவே கொண்டாடப் போகின்றீர்கள். பெரிதும் எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள் என்றால், பொதுவாக எல்லோரும்-அதாவது துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும் பண்டிகையை உத்தேசித்துத் துணி வாங்குவது என்பது ஒன்று; மக்கள் மருமக்களை மரியாதை செய்வதற்கென்று தேவைக்கும் யோக்கியதைக்கும் மேலானதாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்துவதற்கு ஏற்றதல்லாததுமான துணிகள் வாங்குவது என்பது இரண்டு;அர்த்தமற்றதும் பயனற்றதுமான வெடிமருந்து சம்பந்தப்பட்ட பட்டாசுவகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று; பலர் இனாம் என்றும், பிச்சை என்றும் வீடு வீடாய்க் கூட்டங் கூட்டமாய்ச் சென்று பல்லைக் காட்டிக் கெஞ்சிப் பணம் வாங்கி அதைப் பெரும் பாலும் சூதிலும், குடியிலும் செலவழித்து நாடு சிரிக்க நடந்து கொள்வது நான்கு; இவற்றிற்காகப் பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது அய்ந்து; அன்று ஒவ்வொரு வீட்டிலும் அமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச் செய்து அவைகளில் பெரும்பாகம் கண்டவர்களுக்குக் கொடுப்பதும், வீணாக்குவதும் ஆறு: இந்தச் செலவுகளுக்காகக் கடன்படுவது ஏழு; மற்றும்  இது போன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவாகின்றது என்பதும், அதற்காகக் கடன் பட வேண்டியிருக்கிறது என்பதுமான விஷயங்களொரு புறமிருந்தாலும்-மற்றும் இவைகளுக்கெல்லாம் வேறு ஏதாவது தத்துவார்த்தமோ ‘சயின்ஸ்’ பொருத்தமோ-சொல்லுவதானாலும் தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண்டாடப்படுகிறது? என்கின்றதான விஷயங்களுக்குச் சிறிது கூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம். ஏனெனில், அது எப்படிப் பார்த்தாலும், பார்ப்பனீயப் புராணக் கதையை அஸ்திவாரமாகக் கொண்டதாகத்தான் முடியுமே ஒழிய, மற்றபடி எந்த விதத்திலும் உண்மைக்கோ, பகுத்தறிவுக்கோ, அணுபவத்துக்கோ சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே முடியாது. பாகவதம், இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங்கள் பொய் என்பதாகச் சைவர்கள் எல்லாரும் ஒப்புக் கொண்டாய் விட்டது. கந்த புராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலியவைகள் பொய் என்று வைணவர்கள் எல்லாரும் ஒப்புக் கொண்டாய்விட்டது. இவ்விரு வட்டத்திலும் பகுத்தறிவுள்ள மக்கள் பொதுவாக இவை எல்லாவற்றையும் பொய் என்று ஒப்புக் கொண்டாய் விட்டது. அப்படியிருக்க, ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பதினாயிரக் கணக்கான சம்பவங்களில் ஒன்றாகிய, தீபாவளிப் பண்டிகைக்கு மாத்திரம் மக்கள் இந்த நாட்டில் இவ்வளவு பாரட்டுதலும் செலவு செய்தலும், கொண்டாடுதலும் செய்வதென்றால் அதை என்னவென்று சொல்ல வேண்டும்? 

தீபாவளிப் பண்டிகையின் தத்துவத்தில் வரும் பாத்திரங்கள் மூன்று. அதாவது நரகாசுரன், கிரு·ணன், அவனது இரண்டாவது பெண்சாதியாகிய சத்தியபாமை ஆகியவைகளாகும். எந்த மனிதனாவது கடுகளவு மூளை இருந்தாலும் இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்தார்கள் என்றாவது, அல்லது இவர்கள் சம்பந்தமான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும்-நமக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இந்த மாதிரியான ஒரு பண்டிகை-தீபாவளி என்று கொண்டாட வேண்டுமென்றாவது ஒப்புக் கொள்ள முடியுமாவென்று கேட்கின்றோம்.

பார்ப்பனரல்லாதார்கள், தங்களை ஒரு பெரிய சமூகக்காரர்கள் என்றும் கலைகளிலும், …hனங்களிலும், நாகரிகங்களிலும் தேர்ச்சிபெற்றவர்கள் என்றும் தட்டிப் பேச ஆளில்லாவிடங்களில் சண்டப்பிரசண்டமாய் பேசிவிட்டு, எவனோ ஒரு மூடனோ அல்லது ஒரு அயோக்கியனோ, ‘காளைமாடு கன்று போட்டிருக்கிறது’ என்றால், உடனே, ‘கொட்டத்தில் கட்டிப் பால் கறந்து கொண்டுவா’ என்று பாத்திரம் எடுத்துக் கொடுக்கும் மடையர்களாகவே இருந்து வருவதைத் தான், படித்த மக்கள் என்பவர்களுக்குள்ளும், பாமர மக்கள் என்பவர்களுக்குள்ளும் பெரும்பாலும் காண்கின்றோமே ஒழிய, ‘காளைமாடு எப்படி கன்று போடும்’ என்று கேட்கின்ற மக்களைக் காண்பது அரிதாகவே இருக்கின்றது. மற்றும், இம்மாதிரியான எந்த விஷயங்களிலும் கிராமாந்தரங்களில் இருப்பவர்களைவிடப் பட்டணங்களில் இருப்பவர்கள் மிகுதியும் மூடத்தனமாகவும்; பட்டணங்களில் இருப்பவர்களைவிட சென்னை முதலிய நகரங்களில் இருப்பவர்கள் பெரிதும் சிகாமணிகளாகவும் இருந்து வருவதையும் பார்க்கின்றோம். உதாரணமாக, தீபாவளி. சரஸ்வதி பூசை, தசரா, பிள்ளையார் சதுர்த்தி, ஆடிப் பதினெட்டு, அவிட்டம் முதிலிய பண்டிகைகள் எல்லாம் கிராமாந்திரங்களை விட, நகரங்களில் அதிகமாகவும் மற்ற நகரங்களை விட சென்னையில் மிக அதிகமாகவும் கொண்டாடப்படுவதைப் பார்க்கிறோம். இப்படிக் கொண்டாடும் ஜனங்களில் பெரும்பான்மையோர் எதற்காக ஏன் கொண்டாடுகின்றோம் என்பதைத் தெரியாதவர்களாகவே இருக்கின்றார்கள். சாதாரணமாக, பயப்பக்தியிலும், குருட்டுப்பழக்கத்தினாலும், கண்ட வழக்கங்களைப் பின்பற்றி நடக்கும் மோசமான இடம் தமிழ் நாட்டில் சென்னையைப்போல் வேறு எங்குமே இல்லையென்று சொல்லிவிடலாம். சென்னையில் எங்குபோய்ப் பார்த்தாலும் ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலும் சரீரமல்லாத ஒருதலை உருவத்தை மாத்திரம் வைத்து-அதற்கு நகைகள் போட்டுப் பூசைகள் செய்து வருவதும், வீடுகள் தோறும் இரவு நேரங்களில் பாரத, இராமாயணக் காலட்சேபங்களும், பெரிய புராண, திருவிளையாடல் புராணக் காலட்சேபங்களும், பொது ஸ்தாபனங்கள் தோறும் சத்கதாகாலட்சேபங்களும் நடைபெறுவதையும் இவற்றில் தமிழ் படித்த பண்டிதர்கள் ஆங்கிலம் படித்த  பட்டாரிகள்-கவுரவப் பட்டம் பெற்ற பெரிய மனிதர்கள் -பிரபலப்பட்ட பெரிய உத்தியோகஸ்தர்கள்-மற்றும் பிரபுக்கள்,‘டாக்டர்கள்’, ‘சயின்ஸ் நிபுணர்கள்’, ‘புரபசர்கள்’ முதலியவர்கள் பெரும் பங்கெடுத்துக் கொண்டிருப்பதையும் பார்க்கலாம். பார்ப்பனரல்லாதார்களில் இந்தக் கூட்டத்தார்கள் தாம்,‘ ஆரியர் வேறு-தமிழர் வேறு’ என்பாரும், ‘புராணங்களுக்கும், திராவிடர்களுக்கும் சம்பந்தமில்லை’ என்பாரும், ‘பார்ப்பனரல்லாத சமூகத்தாருக்கு நாங்கள்தான் பிரதிநிதிகள்’ என்பாரும்,மற்றும் ‘திராவிடர்களின் பழைய நாகரிகத்திற்கு மக்களை அழைத்துச் செல்ல வேண்டும்’ என்பாரும் பெருவாரியாக இருப்பார்கள். ஆகவே, இம்மாதிரியான விஷயங்களில் படித்தவர்கள், பணக்காரர்கள்,உத்தியோகஸ்தர்கள் என்கின்றவர்கள் போன்ற கூட்டத்தாரிடம் அறிவு, ஆராய்ச்சி சம்பந்தமான காரியங்களை எதிர்பார்பபதைவிட, உலக அறிவுடைய சாதாரண மக்களிடம் எதிர்பார்ப்பதும், பிரச்சாரம் செய்வதும் பயன் தரத்தக்கதாகும்.

அன்றியும், இத்தீபாவளிக் கதை எவ்வளவு பரிகாசத்திற்கு இடமாயிருக்கின்றதென்பதை உணரும் பொருட்டு அதனையும் கீழே தருகிறேன்.

தீபாவளியின் கதைச் சுருக்கம்;

ஆதி காலத்தில் நரகாசுரன் என்று ஒரு அசுரன் இருந்தானாம். திருமாலுக்கும், பூமாதேவிக்கும் பிறந்த அவன் தேவர்களையெல்லாம் பலவாறு தூஷித்து இம்சித்து வந்தானாம்.தேவர்கள் இதைப்பற்றி அவன் தகப்பனாகிய திருமாலிடம் முறையிட்டார்களாம். உடனே திருமால் நரகாசுரனைக் கொல்லுவதாக வாக்களித்தாராம். அதற்காக வேண்டி திருமால் கிரு·ணானாகவும், பூதேவி சத்தியபாமையாகவும் அவதாரமெடுத்து உலகத்துக்கு வந்த நரகாசுரனைக் கொன்று விட்டார்களாம்.நரகாசுரன் சாகும் போது தான் செத்த தினத்தை உலகத்தார் கொண்டாட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்களாம். கிரு·ணன், ‘அப்படியே ஆகட்டும்’ என்று வாக்களித்தாரம். அதற்காக வேண்டி மக்கள் எல்லோரையும் கொண்டாடும்படி கடவுள் செய்து விட்டாராம். ஆதலால் நாம் கொண்டாடுகிறோமாம்; அல்லது கொண்டாட வேண்டுமாம்.

இதை நமது பகுத்தறிவுக்குப் பொருத்திப் பார்ப்போம். முதலாவதாக, இந்தக் கதை உண்மையாய் இருக்க முடியுமா?

‘எல்லா உலகங்களையும் உண்டாக்கிய நான்முகனைப் பெற்றவரும், உலகங்களை எல்லாம் காத்து வருபவரும், தேவர்கள் தலைவருமாகிய திருமாலுக்கும் பூமிதேவிக்கும் எப்படிக் குழந்தை பிறக்கும்? (பூமிதேவி என்றால் பூமி அல்லவா?) பிறந்தவன் எப்படி அசுரனானான்? அத்தகைய மேம்பாடுடைய கடவுளுக்குப் பிறந்தவன் எப்படித் தீய செயல்களைச் செய்தான்? அப்படித்தான் செய்தாலும், அவனைப் பெற்றவனாகிய திருமால் தனது மகனைத் திருத்தாமல் ஏன் கொன்றான்?  அப்படி இருந்தாலும் தானே வந்துதான் கொல்ல வேண்டுமா? மேற்படி நரகாசுரனைக் கொன்றபோது, அவன் தாயாகிய பூமிதேவியும் சத்தியபாமையாகப் பிறந்து உடனிருந்ததாகக் கதை கூறுகிறது. என்னே தாயின் கருணை! இவள்தான் உலகத்தையெல்லாம் காப்பாற்றுகிறாளாம்! உலக மக்கள் செய்யும் பாவங்களையெல்லாம் பொறுத்துக் கொள்கின்றாளாம்! ‘பொறுமையில் பூமி தேவிபோல்’ என்று உதாரணத்திற்குக் கூடப் பண்டிதரும் பாமரரும் இந்த அம்மையாரை உதாரணமாகக் கூறிவருகின்றனரே! இத்தகைய பூமிதேவியார் தனது மகனைக் கொல்லும் போது, தாணும் உடனிருக்க வேண்டுமென்று திருமாலைக் கேட்டுக் கொண்டாளாம்! என்னே தாயின் பாசம்!

தமிழர்களாகிய நம்மையே அசுரர்களென்றும் ஆரியராகிய பார்ப்பனர்கள் தாங்களே தேவர்களேன்றும் கற்பித்துக் கதைகட்டியிருக்கிற, தேவ-அசுரப் போராட்டத்தோடு சம்பந்தப்பட்ருக்கிற இந்தக் கதையைத் தமிழ் மக்களாகிய நாமே கொண்டாடுகிறோம்! நாமே சிறந்த நாளாகக் கருதுகிறோம்! அந்தோ என் செய்வது? நம்மை ஏமாற்றி நம்மையே பழிக்கும் பார்ப்பனர்களின் கட்டுக் கதையை உண்மையென நாம் நம்பி, நாமே கொண்டாடி வீண் செலவு செய்வதென்றால், நமது சுயமரியாதையை என்னென்பது? நமது பகுத்தறிவை என்னென்று சொல்வது?

புராணங்களில் கண்டபடியே இந்தக் கதையை உண்மையென்று ஒப்புக்கொண்டு தமது பகுத்தறிவையிழந்து, இந்தத் தீபாவளியைக் கொண்டாடும் நமது தமிழ் மக்களின் அறியாமையை என்னென்று கூறுவது?

சென்றது போக, இனிமேலாவது தீபாவளியை-அர்த்தமற்ற மூடப்பழக்கத்தை-நம் தலையில் நாமே மண்ணைப் போட்டுக்கொள்ளும் செயலைக் குறித்து ஒரு காசாவது, ஒரு நிமிஷ நேரமாவது செலவு செய்ய வேண்டாமென்று திராவிட மக்களாகிய உங்களை மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

(பகுத்தறிவு, மலர் 2, இதழ் 7 கட்டுரை-1936)

No comments: