Sunday, April 26, 2026

தமிழ் நாடு பெயர் மாற்றப் போர் - பெரியார்

 தமிழ் நாடு பெயர் மாற்றப் போர்

சாதாரணமாக இன்று நம் நாட்டில் நடந்து வரும் பார்ப்பன (ஆரிய ஆதிக்க) பாதுகாப்புத் தீவிர முயற்சியானது நாமறிய சுமார் 60,70 ஆண்டுகளாக நடந்திருக்காத அளவில் வெகு வேகமாகவும் வெகு தீவிரமாகவும், மிக்க பரவலாகவும் நடந்து வருகிறது. இம் முயற்சிக்குத் தமிழ் நாட்டில் உள்ள எல்லாப் பார்ப்பனர்களும் கட்டுப்பாடாக ஒற்றுமையாக ஒரே மூச்சாக முனைந்து நின்று பாடுபடுகிறார்கள்.

அரசியல் வேஷம் போட்டுக் கொண்டு இராஜாஜி ‘தர்மங்களைக் காக்கப் போகிறேன்; தனி மனிதனின்  உரிமையைக் காப்பாற்றப் போகிறேன். இத்துறைகளில் மக்களுக்கு முழு சுதந்திரமும் தேடித் தருவதே எனது (‘சுதந்திரா’ ) கட்சியின் நோக்கம்’ என்று வெளிப்படையாகவே சொல்லிக் கொண்டு ஆகா வழிகளையும், வாழா வெட்டிகளையும் வாழ்வில் வழுக்கி விழுந்தவர்களையும் சேர்த்து வைத்துக் கொண்டு பெரும் போராட்டம் நடத்தத் துணிந்து விட்டார். அவருக்கு காந்தியாரால் ஏற்பட்ட ஷௌசல்வாக்கு இதற்குப் பெரும் ஆதரவளிக்கிறது என்பதுடன் பார்ப்பனர்-அவர்களது பத்திரிகைகள் பெரும் ஆதரவு தருகின்றன.

அடுத்தாற்போல், வைதீக முறையில் அடியோடு எல்லாப் பார்ப்பனர்களும் சேர்ந்து அரசாங்க அலுவலகங்களில்-பெரிய பதவிகளில் மாதம் ரூ. 3000, 4000 சம்பளம் வாங்கிக் கொண்டு உத்தியோகம் பார்த்து ஓய்வெடுத்து பென்ஷன் வாங்கிக் கொண்டு இருக்கும் பார்ப்பனர்களின் தலைமையில் ஊர்தோறும் வைதீக ஸ்தாபனங்கள் ஏற்படுத்திக் கொண்டும் மாநாடு நடத்திக் கொண்டு பெரும் பிரச்சாரங்கள் செய்து வருகிறார்கள்.

இதை தவிர, பார்ப்பன மடாதிபதிகள், சங்கராச்சாரி, மத்துவாச்சாரி, வைணவாச்சாரி, இஸ்மார்த்தாச்சாரி முதலான எல்லா மடாதிபதிப் பார்ப்பனர்களும் தினமும்-  நாள் தோறும் ஊர் ஊராய்ச் சுற்றித் திரிந்த, ஆங்காங்குள்ள பார்ப்பன அதிகாரிகளைக் கண்டு ஆள் சேர்க்கச் செய்தும் பணம் சேர்த்துக் கொடுக்கச் செய்தும் இமாலயப் பிரச்சாரம் செய்து, ஆரிய வைதீகக் கருத்துக்களைப் புகுத்திப் பார்ப்பனருக்குப் பொருளாதார உதவி, கல்வி உதவி ஆகியவைகளை அளித்தும் வருகிறார்கள்.

இவையெல்லாம் தவிர வெள்ளையன் போன பின்பு வியாபாரத் துறையிலும், தொழில் துறையிலும், பஸ் நடத்தும் துறையிலும் பிரவேசித்துக் கோடீஸ்வரர்களான பார்ப்பனப் பிரபுக்கள், ஆச்சாரி முயற்சி முதல் மற்ற எல்லாப் பார்ப்பனர் முயற்சிகளுக்கும் ஏராளமான பொருள் உதவி, வேலை உதவி, மற்றும் ஆள் மாகாண உதவி முதலியவைகள் செய்து. ஆதரித்து, உற்சாகப்படுத்தி, ஊக்குவித்து,  பிரச்சார காரியங்கள் நல்லபடி நடக்கச் செய்து வருகிறார்கள்.

மற்றும் மத்திய மகாண ஆகிய இரு சர்க்கார் அலுவலகங்களிலும் குறிப்பாகத் தபால், ரயில்,சுங்கம், வருமானவரி , அக்கவுண்டஸ், அய்க்கோர்ட் இலாக்கா அலுவலகங்களிலும் பொறுப்பான பெரிய பதவிகளிலும் பார்ப்பனர்கள்-அதிலும் வைதீக வெறிப்பார்ப்பனர்களே குவிந்து கிடப்பதால், அவர்களும் கட்டுப்பாடாகத் தங்கள் இன உயர்வுக்குப் பாடுபடுவதிலும் இத்துறைகளில் நம்மவர்கள் தலையெடுக்க முடியாதபடி அழுத்தி வைத்தும் ஒழித்துக் கட்டுவதற்கு ஏற்ற கொடுமைகளைத் துணிந்து செய்வதுமான காரியங்களிலும் முனைந்து நிற்கின்றார்கள்.

மற்றும் பொது வாழ்வில் அரசியலில் பிழைப்பை ஏற்படுத்திக் கொண்டு யார் எந்தக் கட்சி தோன்றினாலும் அவர்களுக்கு விளம்பரமும் தேர்தலில் வெற்றியும் கொடுக்கக் கூடிய அளவுக்குப் பார்ப்பனர்கள் ஆதரவு தேவை இருக்கின்றபடியால், எல்லாக் கட்சிகாரர்களும் -காங்கிரஸ்கார்களில் பெரும்பாலோர் உள்பட -பார்ப்பனர்கள் காலடியில் கிடந்து உழவ வேண்டியவர்களாக இருப்பதால் சர்வ கட்சிகளும் பார்ப்பனர்களுக்கு அணுகூலமாகவே இருந்து, பார்ப்பன ஆதிக்கத்திற்கு அணு கூலமாகவேப் பார்ப்பனப்  பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

பத்திரிகைகள் எல்லாம் பார்ப்பனர்களிடத்தில் இருப்பதாலும் திராவிடர்கள் நடத்தும் பத்திரிகைகளும் பார்ப்பனர்களுக்குப் பயந்து நடத்தப்பட வேண்டி இருப்பதாலும் மேற்கண்ட பார்ப்பன ஆதிக்க வைதீக முயற்சிக் காரியங்கள் எதற்கும் எதிர்ப்பு நடத்த எந்தத் திராவிடணுக்கும் எந்த ‘எதிர்க்கட்சி’க்கும் வசதியோ வாய்ப்போ இல்லாமல் போய்விடுவதோடு, வாழ வேண்டியவன் வளர வேண்டியவன் ஆன மந்திரிகள் உட்பட எந்தத் திராவிடணும் வைதீகப் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்க வேண்டியவனாகவே ஆகி விடுகிறான்.

திராவிட நாட்டில் திராவிடர்களுக்குச் செல்வாக்கு இருக்கும் படியான தன்மையில் திருந்திய திராவிட அரசர்களைக் கொண்ட அரசுகள் பல அண்மையில் இருந்தன. வெள்ளையன் போன உடனே“அந்தப் பிராந்தியங்கள் அந்தந்த அரசுடனேயே சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அந்தந்தப் பிராந்திய அரசுக்குப் பூரண சுய ஆட்சி உரிமைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்’ என்று சுதந்திரம்- சுய ஆட்சி என்ணும் பேரால்-அதிலும் ஒரு பெரும் மோசடியாக ஜனநாயகம் என்ணும் பேரால் ஜனங்களோடு சம்பந்தமே இல்லாத ஒரு சாதி பிரிவுப் பார்ப்பனரே ஜனநாயகத்திற்கு மணுதர்மம் போல் சட்டம் செய்து கொண்டு, அச் சட்டப்படியான ஜனநாயக முறையில் சாதாரணத் தன்மையில் பார்ப்பானே-ஆரியனே ஆட்சித் தலைவனாக ஆகும் படியான நிலையில் ஆட்சி நடக்க வகை செய்துக்கொண்டதோடு, அக் கால முடி அரசர்கள் எல்லாம் பார்ப்பன அரசுக்குச் சிப்பந்திகளாக ஆக்கப்பட்டு விட்டார்கள். இதனால் திராவிடர்கள் பார்ப்பனர்களுக்கு அடிமைக் குடிகளாகத்தான் என்றும் இருக்க வேண்டியதைத் தவிர ஆட்சியாளராக இருக்க முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுவிட்டது.

மற்றபடி, திராவிடர்களே பெரிய நிலக்கிழார்களாக இருந்த ஜமீன், மிட்டாதாரர்கள் எல்லோரும் ஒழிக்கப்பட்டு, அவர்கள் ஒரு சாதாரணக் குடியானவர்களாக ஆக்கப்பட்டு விட்டார்கள்.

இவர்கள் இரு கூட்டத்தினருக்கும் இருந்த பரம்பரைப் பெருமை பாத்தியதை-அதாவது தனிப்பட்டவர்களுக்கு இருந்த உரிமை அடியோடு-ஒருநாள் அய்ந்து பார்ப்பனர் கூடி ‘சட்டம்’ செய்து ஒரு வரி உத்தரவினால் பறிக்கப்பட்டுவிட்டது.

ஆனால்,  பார்ப்பனர்களேயே பெரிதும் கொண்ட மாடதிபதிகள், அவர்களது உரிமைகள், செல்வங்கள், பொருமைகள் முதலியவை ஒரு சிறிதும் ஒரு துரும்பும் அசைக்கப்படவில்லை, அரசர்கள் ஒழிக்கப்பட்டதன் பயனாகத்தான், உஞ்சவிருத்திப்பார்ப்பனர்கள் ஒரே அடியாக சக்கரவர்த்தி-ஏகபோக சர்வாதிகார ஆட்சிக்குத் திடீரென்று எட்டிக் குதித்து சர்வ பவுமன் என்று சொல்லத்தக்க ஏக சக்ராதிபதிகளாக ஆகிவிட்டார்கள். இன்றைய ஆட்சிக்கு ஜனநாயகம் என்று பெயர் சொல்லப்பட்டாலும் வேசிக்குத் தேவதாசி என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதுபோல், என்றும் சர்வாதிகாரியாக ஒரு பார்ப்பானே இருந்து வரும்படியான ஆட்சித் தன்மைக்கு ‘ஜனநாயகம்’ என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது.

விளக்கிச் சொல்ல வேண்டுமானால், இன்றைய ஜனநாயகத்தில் ஒரு பார்ப்பான்தான் பிரதம (மந்திரி) ஆட்சி ஆளனாகவும், ஒரு பார்ப்பான் தான் பிரஸிடென்டாக - ஆட்சியாளனாக வரமுடியுமே அல்லாமல் இந்த இந்தியக் கூட்டாட்சி என்பது உள்ளவரையில் ஒரு தமிழணும் ஒருவரும் ஆட்சிக்கு வரமுடியாது. தமிழன் சுதந்திர ஆட்சிக்கு வரும்வரை தமிழன், தமிழ்நாடு ஒரு நாளும் சூத்திரத்தன்மையிலிருந்து அடிமைக் குடியாய் இருப்பதிலிருந்து கடுகளவும் மாற்றமடையமுடியாது.

ஆகவே இந்தப் பெருங்கேட்டிலிருந்து தமிழ்நாடும். தமிழணும் தப்பிப் பிழைத்து விடுதலை பெற வேண்டுமானால் இந்தியக் கூட்டாட்சி என்கின்ற பார்ப்பன ஏகபோக சர்வாதிகார ஆட்சியிலிருந்து விலகி, தமிழ்நாட்டைச் சுதந்திரத் தமிழ்நாடு ஆக ஆக்கிக் கொண்டாலன்றி, வேறு எக்காரணத்தாலும் எக்கிளர்ச்சியாலும் முடியவே முடியாது என்பதைத் தமிழ் மக்கள் உணர வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன். தியாகம் என்பது சிறைத் தண்டனை அணுபவிப்பதுதான் என்று பலர் கருதிக் கொண்டு இருக்கிறார்கள். தியாகம் என்பது தன்னலமறுப்பு என்ற பொருளைக் கொண்டதாகும். 

தன்னலமறுப்பு என்பது தனது உயிரைப் பலிகொடுப்பது என்பதை இறுதியாகக் கொண்டதாகும்..

இப்படிப்பட்ட தன்னலமறுப்பு கொண்ட ஒரு ஆயிரம் வீரர்கள் முன்வந்தால்தான் தமிழ்நாடு சுதந்திரத் தமிழ்நாடாக ஆக முடியம்.

இளை…ர்கள் இதை நல்லபடி சிந்தித்து முடிவு செய்து கொண்டு செயலில் ஈடுபட வேண்டிக் கொள்கிறேன். சிந்திக்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது என்பதற்குதான் இந்த அபாயச் சங்கை ஊதுகிறேன். (விடுதலை- 12-5-1960)

No comments: