கொடி எரிப்பு ஒத்திவைப்பு
ஆகஸ்ட் 1 ஆம் தேதி, ‘இந்திய யூனியன் கொடி’ கொளுத்தப்படும் என்கின்ற திராவிடர் கழகத் தீர்மானம் சம்பந்தமாக, சென்னை அரசாங்க முதன் மந்திரி திரு. காமராஜர் அவர்களது அறிக்கையைப் பார்த்தேன்.
அவ்வறிக்கையானது நான் விரும்பியபடி மத்திய அரசாங்கத்திற்காகவும், சென்னை அரசாங்கத்திற்காகவும் வெளியிடப்பட்ட அறிக்கை என்று பொருள் தரும்படியாக விடப்பட்டிருக்கிறது. அதிலிருந்து தமிழ்நாட்டவர் மீது இந்தி கட்டாயப் பாடமாகத் திணிக்கப்பட மாட்டாது என்று அரசாங்கம் வாக்குறுதி கொடுத்து, கொடியைக் கொளுத்த வேண்டாம் என்று விரும்புவதாக உணருகிறேன். ஆகவே, நான் எனது தீர்மானம் அமுல் செய்யப்படாமல் இருக்க வேண்டும் என்று சர்க்கார் விரும்பினால், எப்படிப்பட்ட வாக்குறுதி அளிக்க வேண்டுமென்று எதிர்பார்த்தேனோ அப்படிப்பட்ட வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், நடைமுறையில் இந்த வாக்குறுதியை அமுல் நடத்துவதில் அரசாங்கத்தாரால் இந்தி கட்டாயப்படுத்தப்படவில்லை என்பதாக மக்கள் தெளிவாகக் கருதும்படி நடந்துகொள்ளுமோ, அல்லது இவ்வளவு நாள் நடந்து கொண்ட மாதிரி ஒன்றுக்கொன்று (அறிக்கைக்கும், செய்கைக்கும்) சம்பந்தமில்லாத மாதிரி நடந்த கொள்ளுமோ என்பதை நடைமுறையில் தெரிந்து கொள்ள வேண்டியிருப்பதால்-முதல் மந்திரியாரின் விருப்பத்திற்கு ஏற்பக் கொடி கொளுத்துவதைத் தற்காலிகமாகவே ஒத்திவைத்து, திராவிடர் கழகத்தாரையும் மற்றும் இதில் ஈடுபட இருக்கிற பொதுமக்களையும் ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்றைக்குக் கொடியைக் கொளுத்தாமல் இருக்கும் படி வேண்டிக் கொள்கிறேன்.
மற்றபடி, அவ்வறிக்கையில் கொடி கொளுத்துவோர் மீது தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரியப்படுத்தி இருப்பது பற்றி நானோ, பொது மக்களோ எவ்வித ஆச்சரியமும் படத் தேவையில்லை. மக்கள் ‘அரசாங்கத்திணுடைய கொடி’யைக் கொளுத்தினால், அரசாங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் என்று எந்தப் பைத்தியக்காரணும் நினைத்துக் கொண்டிருக்க மாட்டான். அடக்குமுறையிணுடையவும், தண்டனையிணுடையவும் கடைசி எல்லையை எதிர்பார்த்துத்தான் திராவிடர் கழகம் கொடி கொளுத்தத் தீர்மானம் செய்திருக்கிறது. இதை உலகறியவும் செய்திருக்கிறது. ஆதலால், அந்தச் சொற்களுக்காக அறிவாளிகளுக்கு நான் ஏதும் சமாதானம் சொல்லத் தேவையில்லை.
என்ணுடைய இந்தக் கொடி கொளுத்தும் தீர்மானத்திற்கு எதிர்ப்பாக வீணர்கள் செய்த ஆர்பாட்டம், பூச்சாண்டிகளைச் சிறிதும் மதிக்காமல் செயலில் இறங்க முன்வந்து மடிகட்டிப் பெயர் கொடுத்த-மொழிப்பற்றும், ஆண்மையும், மானமும், துணிவும் கொண்ட பதினாயிரக்கணக்கான வீர சிகாமணிகளுக்கு எனது பாராட்டுதலையும் உளம் நிறைந்த நன்றியையும் தெரிவித்துக் கொண்டு, கொடி கொளுத்தும் படி மறுபடியும் எனது வேண்டுகோள் வரும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கச் சிரம் வணங்கி வேண்டிக் கொள்கிறேன்.
வீண் பொய் கவுரவத்தைப் பார்க்காமல் மிகவும் அறிவுடைமையுடன் நடந்து கொண்ட சென்னை அரசாங்கத்தையும் மனமாரப் பாராட்டுவதுடன், உறுதி மொழிக் கேற்ப நடந்துகொள்ளுமென்றே நம்புகிறேன். வணக்கம். (விடுதலை, 31.7.1955)
தேசியக் கொடி எரிப்பு
தலைவரவர்களே! பெரியோர்களே! தாய்மார்களே!
இந்தப் பார்ப்பனர்கள்தாம் இப்படிக் காலிகளைக் கிளப்பிவிட்டனர் என்றால், மந்திரி கோவிந்த வல்லப பந்த அவர்கள், ‘கொடி கொளுத்துவது பெரிய இராஜத் துரோகக் குற்றத்திற்குச் சமமான குற்றமாகும்’ என்று கூறுகிறாராம். அதன் பிறகுதான் கொடி கொளுத்துவோர் பட்டியலில் ஆயிரக் கணக்கில் பெயர் வந்த வண்ணமிருக்கின்றது. அன்றியும் எந்தச் சட்டப்படி, என்ன குற்றம் என்பதே இதுவரை யாருக்கும் புலப்படவில்லை!
வக்கீல்கள் எல்லாம் சட்டப் புத்தகத்தைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தும், இப்பேர்ப்பட்ட முக்கிய விஷயத்தைப் பற்றிச் சட்டத்தில் ஒன்றுமே தென்படவில்லை. கொடியைக் கொளுத்தினால் என்ன தண்டனை விதிப்பது என்பதைப் பற்றி அரசாங்கமே இன்னமும் சட்டபூர்வமாக ஒன்றும் முடிவு செய்யவில்லை.
அப்படி இருக்க, தெருவில் திரியும் ஆண்டிகளெல்லாம், ‘கொடியைக் கொளுத்தினால் உயிரைக் கொடுத்துக் காப்பேன்’ என்று மிரட்டுகின்றனர்.
இவர்கள் மிரட்டலுக்கும், பூச்சாண்டிகளுக்கும் நான் பயந்தவனா? அப்படித்தான் என் உயிர் போனாலும் ந·டம் என்ன என்று நினைப்பவன். நாணும், இந்நாட்டில் ஒரு மனிதனின் சராசரி வயதைப் போல் மூன்று மடங்கு வயதுடையவன். இதுவரை இருந்தது போதாமல் இன்னமும் உயிருடன் இருக்க ஆசைப்படுபவன் அல்லன். போகிற நேரத்தில் ஏதாவது நல்ல காரியத்தைச் செய்துவிட்டுப் போகலாம் என்பதுதான் பெரிய கவலையே தவிர, என் உயிர் போய்விடுமே என்ற கவலை இல்லை.
நாணும் இப்போராட்டம் நடந்தே தீரும்-அதன் மூலமாவது பெரிய குற்றமென்று சொல்கிறார்களே அதற்காகவாவது சில வருடங்கள் சிறைவாசம் செய்ய வாய்ப்புக் கிடைக்கும் என்று ஆவலோடு இருந்தேன். என் உடல் நிலையைப் பற்றிக் கூடக் கவனிக்காது உடல் நிலையில் பலவிதமான குறைகளிலிருந்தும் டாக்டரிடம் காட்டிச் சரி செய்து கொள்ளாமல் இருந்து விட்டேன். ஏன்? சொந்தச் செலவில் ஏன் காசை வீணாக்க வேண்டும்; சிறைக்குச் சென்றவுடன் அரசாங்கச் செலவிலாவது பார்த்துக் கொள்ளலாம் என்றெல்லாம் ஆசையுடன் இருந்தேன். ஆனால், தற்சமயம் அவ்வித வாய்ப்புக்கு இடமின்றிப் போய்விட்டது.
நான் விரும்பிய படியே சர்க்கார் உறுதிமொழி கிட்டியது. என்ணுடைய விருப்பப்படி சர்க்கார் எப்படிப்பட்ட வாக்குறுதி கொடுத்தால் போதும் என்றேனோ, அதன்படி வாக்குறுதி தந்துவிட்டது. இந்தி மொழி தமிழ்நாட்டார் மீது கட்டாயமாகத் திணிக்கப்படமாட்டாது என்ற ஒரே உறுதிமொழி கொடுத்தால் போதும் என்றேன்.
இவ்வாக்குறுதியை அடைந்த பிறகு, நான்-இக்கிளர்ச்சியை நடத்துவதென்பது சரியல்ல; ஆனால், அரசாங்கமும் இதுவரை அப்படித்தான் கூறிவந்திருக்கிறது. பெரிய தலைவர்களும், மந்திரிகளும் கூட இந்தியை விரும்பாதவர்களிடத்தில் கட்டாயப்படுத்துவதில்லை என்று கூறிவந்துள்ளார்கள். இன்றைக்கு நடைமுறையில் அப்படிக் காணவில்லை. பிரதமர் நேருவிடமும் நிலைமையைத் தெளிவுபடுத்தினார்- முதலமைச்சர் காமராசர்.
நேரு அவர்கள் கூட காமராசரிடம் அப்படித்தான் கூறினாராம். ‘நாங்கள் எத்தனையோ முறை இந்தியைக் கட்டாயப்படுத்துவதில்லை என்று கூறியுள்ளோமே’ என்றாராம். முதலில் காமராசரைக் கண்டவுடனேயே நேரு புன்முறுவல் கொண்டு, கிண்டல் செய்தாராம்., ‘நாயக்கரும், தாங்களும், கட்டிப்புரளுகிறீர்கள் என்று கூறுகிறார்கள். அவ்விதமிருக்க, உங்கள் ஆட்சியிலேயே நாயக்கர் ஏதேதோ செய்யப் போகிறாராமே?’ என்று கேட்டாராம். அதற்கு முதன் மந்திரி அவர்கள், ‘எல்லாம் உங்களால் வருவதுதான்’ என்றாராம். என்ன என்று கேட்டவுடன், ‘இந்தியைக் கட்டாயப்படுத்துவதில்லை என்று பேசிவிட்டு, நடைமுறையில் கட்டாயப்படுத்துவதைப் பார்த்து ஆத்திரம் பொறுக்காமல் இது போன்ற கிளர்ச்சி எல்லாம் செய்கிறார்கள்’ என்றாராம். பிறகுதான், ‘நம்மிடமா குற்றம் உள்ளது? அப்படியானால் உடனே சென்று இனி கட்டாயப்படுத்தப்படாது என்பதாக அறிக்கை வெளியிடுங்கள்’ என்றாராம். அதன்படிதான் காமராசர் அவர்களும் அறிக்கை வெளியிடும்படியாகியது.
அந்த அறிக்கையை வெளியிடுமுன் ஒரு சிலர் என்னிடம் கொண்டுவந்து காட்டி, இப்படி வெளியிட்டால் போதுமா என்று என் சம்மதம் கேட்டனர். நாணும் அதைப்பார்த்து ஒரு சில திருத்தங்களைச் சொல்லி, அதன்படி இருந்தால் போதுமென்றேன். அப்படியே திருத்தங்கள் செய்து அறிக்கையும் வெளியிடப்பட்டது.
நாணும், வெளியிட்ட எனது அறிக்கையை அவர்களிடம் காட்டவும், அவர்கள் போராட்டத்தை விட்டுவிட்டதாகவே வெளியிடச் சொன்னார்கள். ஆனால், நான் அவ்வளவு ஏமாந்தவனல்லன்! எனவே நான் தங்கள் அறிக்கையை நடைமுறையில் பார்க்க வேண்டும்; அதுவரை போராட்டத்தைக் கைவிடுவதாக இல்லை; ஆனால், அதுவரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளேன் என்பதாகத்தான் வெளியிடுவேன் என்பதாகக் கூறி, அதன்படியே போராட்டத்தை ஒத்திவைத்துள்ளதாக இன்றைய அறிக்கையில் வெளியிட்டுள்ளேன்.
இவ்வுண்மைகளை நம் நாட்டுப் பத்திரிகைகள் இருட்டடிப்புச் செய்கின்றன. ‘காமராசர் எச்சரிக்கை’ என்றும், ‘நாயக்கரின் போராட்டம் வாபஸ்’ என்றும் எழுதுகின்றன. நாட்டின் நலணுக்கென்று உண்மைச் செய்திகளை வெளியிட வேண்டும் என்று அறிவாளிகளைக் கொண்ட பத்திரிகைகள் ஒன்றாவது கிடையாது. எல்லாம் பார்ப்பான் நலணுக்கே-பார்ப்பாணுடைய ஆதரவிலேயே-பார்ப்பனர்களாலேயே நடத்தப்படுவதால் பித்தலாட்டமும், பொய்யும், புளுகும், லம்பாடித்தனமுமாகவே நடந்து கொள்கின்றன.
இதனால் நம் நாட்டின் சுதந்திரத்திற்கும் முன்னேற்றத்திற்கும் வழியின்றிப் போய்விடுகிறது. இப்பத்திரிகைகள் அத்தனையும், நம் நாட்டை வடநாட்டவர்களுக்குக் காட்டிக் கொடுப்பவைகளாகத்தாம் உள்ளன. (விடுதலை 3-8-1955)
தமிழ்நாட்டில், வடநாட்டு மொழி எப்படித் தேசிய மொழி ஆகும்? அதைப்போல், தமிழ் நாட்டில் வடவரின் ஆட்சிக் கொடி எப்படி ஆட்சிக் கொடி ஆகும்? தமிழ்நாட்டின் ஆட்சிக் கொடி வேறு; இன்றுள்ள வடவரின் ஆட்சிக் கொடி வேறு.
அது வடநாட்டுக்கு ஆட்சிக் கொடியாகலாம். எங்களுக்கு அக்கொடி ஒரு கையகலத் துணிதானே? கை அகலக் கந்தல் துணிக்குள்ள மதிப்பைத்தானே நாங்கள் கொடுப்போம்.
பாரதமாதா கொடி, பாரத நாட்டின் கொடி என்றால் அது வடநாட்டைப் பொறுத்த மட்டும்தான். நாங்கள் அதற்கு மதிப்புக் கொடுக்கத் தேவையில்லை; அதனிடத்தில் நாணயமிருந்தால், உண்மையான நேர்மை இருந்தால் மதிப்புக் கொடுக்கத்தான் வேண்டும். அதன் அந்தஸ்து எப்படி உயருகிறது? அவனிடம் உள்ள நேர்மை, உயரிய குணம், அறிவு ஆண்மையைப் பெறுத்துத்தானே உள்ளது? இவைகள் இல்லையேல் அவன் வெறும் அடிமுட்டாள், மடையன் என்றுதானே பொருள்? இப்படித்தானே இன்றைய அரசாங்கக் கொடி? ஏன், இன்றைய ஆட்சியாளர்களே அப்படி உள்ளதைப் பார்க்கின்றோம்.
காங்கிரஸ்காரர்கள் என்றால் தாய்நாட்டுப் பற்று, தாய்மொழிப் பற்று, தன்மான உணர்ச்சி, சுயஅறிவு அவைகளை எல்லாம் தத்தம் செய்தாக வேண்டும்? நாம் கேட்பது நம்முடைய நாட்டை, நம் நாட்டில் அன்னிய மொழி கூடாது என்று நான் மறுக்கிறேன்.(விடுதலை 4-8-1955)
No comments:
Post a Comment