அரசியல் சட்ட எரிப்பு ஏன் -2
தோழர்களே!
சட்டத்தைக் கொளுத்துவதென்பது சாதிப் பிரச்சினையை மட்டும் வைத்துத்தான் என்பதல்ல; உத்தியோகம், மற்றும் மத்திய அரசாங்கம் எந்தத் தகுதியும் நியாயமுமில்லாமல் அரசியல் சட்டத்தின் பெயரால் நடத்தும் கொடுமையான அநீதிகள், அத்தனையும் வைத்தே அதைக் கொளுத்த வேண்டும் என்கிறோம்.
மத்திய சர்க்கார் பெயரால்-அரசியல் சட்டத்தின் பெயரைச் சொல்லி எவ்வளவு கொள்ளைகள்? தபால், சுங்கம் முதலியன வருமானமுள்ள சங்கதிகள் பூராவும் அங்கு!
இந்த ஆதிக்கத்திற்கு அரசியல் சட்டம்தானே இடம் தருகிறது? நீங்கள் சரியாகப் படித்துப் பார்த்தால் ஏன் கொளுத்த வேண்டுமென்பது விளங்கும்.
நாம் எவ்வளவு கீழ் மக்களாக ஆக்கப்பட்டிருந்தாலும் அது பற்றி யாருக்கும் கவலை இல்லை; எதிர்த்துப் பேசி மத்திய சர்க்காரின் கொடுமைகளைக் கூறவும் ஆளில்லை. கம்யுனிஸ்ட், சோஷலிஸ்ட் எவராக இருந்தாலும் அரசியல் சட்டத்தைப் பற்றிப் பேசவே கூடாது என்பார்கள். எல்லோரும் இந்தக் கொடுமையான சட்டத்தை ஒப்புக்கொண்டு அதன் படி சட்டசபையில் போய் உட்காருகிறவர்கள். நாம் தாம் இதைச் செய்ய முடியும்.
ஆகவே, காலணாவுக்கு அரசியல் சட்டத்தின் சுருக்கத் தொகுப்பு கிடைக்கும். அதை வாங்கி வைத்து, நெருப்புக் குச்சியைக் கிழித்து வைத்துக் கொளுத்த வேண்டும். தண்டனை 3 வருடேமா, 6 வருடமோ- நீங்கள் ஏன் கவலைப் படுகிறீர்கள்? இது கடமை, செய்ய வேண்டியது அவ்வளவுதான்! தாய்மார்களும் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும். ஜோடி ஜோடியாகக் கொளுத்துங்கள்; அங்கேயே போய்க் குடும்பம் நடத்தினால் போகிறது? 26 ஆம் தேதி வரை வெளியில் இருந்தால் என் பங்குக்கு நாணும் கொளுத்துவேன்.
ஆனால் போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் போலிஸ்காரர்களிடமோ அதிகாரிகளிடமோ முரண்பட்டு நடந்து கொள்ளாமல் காரியம் செய்ய வேண்டும். கட்டுப்பாடாக நடந்துகொள்ள வேண்டும். அதுதான் நமக்குப் பெருமை. குத்துவதாக இருந்தால் கூட எப்படிக் குத்துவோம்-எங்கு குத்துவோம் என்று சொல்லிவிட்டுத்தான் செய்வோமே தவிர, திடீரெனச் செய்து விட மாட்டோம்.
ஆகவே, கலவரமில்லாமல் இராமன் படத்தை எரித்த மாதிரி, அவ்வளவு கட்டுப்பாடாக நடந்து கொள்ள வேண்டும்.
ஆண், பெண் எல்லாரும் கொளுத்த வேண்டும். போலிஸ்காரர்கள் முன் கூட்டியே மிரட்டுவார்கள்; நடக்காமல் செய்ய தந்திரம் செய்வார்கள். ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். தப்பித்துக் கொள்வோம் என்று எதிர்பார்த்து எதையும் செய்யக் கூடாது. வீட்டிலிருந்து கொளுத்தினாலும் போதும். கொளுத்திக் கையில் பிடித்துக் கொண்டு போலிஸின் எதிரில் நில்லுங்கள். ‘கைது செய்கிறேன்’ என்றதும்-பேசாமல் போலிஸ் பின்னால் போய்விடுங்கள். முன் கூட்டியே கைது செய்தாலும் செய்வார்கள். கூப்பிட்டால் போய் விடுங்கள். அரசியல் சட்டம் கொளுத்தும் காரியத்திற்கு இத்தனை பேர் கைதாகி இருக்கிறார்கள் என்ற கணக்குப் போதும். மூன்று வருடம் போடட்டும். குடும்பத்தோடு சிறையில் இருக்கலாம்.
‘சட்டத்தைக் கொளுத்த வேண்டாம்’ என்பவர்கள் இன்ன வழி. இன்ன பரிகாரம் என்று சொல்லட்டுமே-கேட்டுக் கொள்கிறேன்! ‘இதற்கு பரிகாரம் சொன்னால்- மரியாதை குறைந்துவிடும். சட்டம் செய்கிறோம், செக்ஷன் இருக்கிறது’ என்று கருதி அடக்கப் பார்க்கிறார்களே தவிர, எங்களுக்கும் உரிமை இருக்கிறது என்பதைக் கூட யோசிப்பதில்லை. நான் ஏன் தாழ்ந்த சாதி என்று கேட்க உரிமையில்லை என்றால்-இது என்ன சுயராஜ்யம்?
இந்த உணர்ச்சியை-உரிமையை மதிக்க வேண்டும் என்ற எண்ணமே வரவில்லையே. நாங்களும் மனிதர்கள்- இந்த நாட்டு மக்கள்- எங்களுக்கும் உரிமை உண்டு என்பதைக் கூடக் கருதாமல் அடக்குமுறைதான் பதில் என்றால் என்ன நியாயம்? உள்ள படியே ஆத்திரப்பட்டே கேட்கிறோம்-நாங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு, விளம்பரத்திற்காகவே இந்தக் காரியம் செய்கிறோம்? இல்லை-தொல்லை கொடுப்பதற்காக ரகளை செய்கிறோமா? ஆட்சியிலிருப்பவர்களுக்குக் க·டம் தரக் கூடாது என்பதுதானே எங்கள் கவலை! (விடுதலை 13-11-1957)
சட்ட எரிப்பு ஏன் -3
நாங்கள் அரசியல் சட்டம் முதலியன கொளுத்துவது பற்றிச் சென்னை அரசாங்கம் செய்திருக்கும் புதிய சட்டம் விஷயமாய்ப் பொது மக்கள் சிறிதும் கவலைப்பட வேண்டியதில்லை. மற்றும் என் மீது கடுந்தண்டனைக்கு ஏற்ற வழக்குத் தொடர்ந்திருப்பது பற்றியும் பொதுமக்கள் கவலைப் பட வேண்டிய தில்லை.
இவைகளெல்லாம் பார்ப்பனர்களால் எய்யப்படும் அம்புகளே தவிர, சென்னை அரசாங்க மந்திரிகளாகிய அம்புகளுக்குச் சிறிதும் சம்பந்தப்படாததேயாகும். அன்றியும். பார்ப்பான் வெளியேற்றப்படவேண்டும் என்பதற்கும், வடநாட்டான் ஆதிக்க ஆட்சியிலிருந்து (இந்திய யூனியனிலிருந்து) பிரிந்து முழு சுதந்திரத் தமிழ்நாடு ஆட்சிபெற்று ஆக வேண்டும் என்பதற்கும் இவை ( பார்ப்பனர் நடத்தைகளும், அவர்களுக்கு வட நாட்டான் ஆதரவுகளும்) சரியான காரணங்களாகும். அதற்காகத் துரிதமாகவும். தீவிரமாகவும் கிளர்ச்சி செய்யவும் இது வலிமைமிக்க மக்களின் தூண்டலாகும்.
சென்னை அரசாங்க மந்திரிகள் நம் மக்களின் கல்வி சம்பந்தமாக எடுத்துக் கொண்டிருக்கிற முயற்சிகள் நாம் பாராட்டத்தக்கதும் நன்றி செலுத்தத் தக்கதுமாகும்-இம் முயற்சி பார்ப்பனர்களுக்குப் பெரும் கேடானதால். இந்தப் பார்ப்பனர்கள் என் மீது கொண்டிருக்கிற ஆத்திரத்தையும் பழிவாங்கும் எண்ணத்தையும் விட. இன்றைய மந்திரி சபை மீது கொண்டுள்ள ஆத்திரமும் பழி வாங்கும் எண்ணமும்தான் பேயாட்டமாக ஆடி. இப்படிப் பட்ட கொலைகளை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் பொது மக்கள் இச் சம்பவங்களுக்காக இன்றைய மந்திரி சபையிடமோ குறிப்பாக - திரு. காமராசரிடமோ எந்த விதமாக அதிருப்பதியும் காட்டவோ. கொள்ளவோ வேண்டியதில்லை.
புதிய சட்டம் செய்ததன் பயனாகவும், என் மீது வழக்குத் தொடர்ந்திருப்பதன் பயனாகவும் எனக்கு என்ன சம்பவிக்கும் என்பதைவிட மந்திரிகள் மீது பொது மக்களுக்கு ஆத்திரமும் துவேஷமும் ஏற்பட வேண்டுமென்ற கருத்துதான் பார்ப்பனர்களுக்கு முக்கியமானது. ஆதலால், அக்கருத்து வெற்றியடையும்படியாக நடந்து கொள்ளக் கூடாது என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன். புதிய சட்டத்துக்குப் பொதுமக்கள் காண வேண்டிய எதிர்ப்பு என்ன வென்றால், பதினாயிரக்கணக்கான மக்கள் அரசியல் சட்டத்தைக் கொளுத்தி, அத்தாட்சி காட்டுவதுதான்!
இது வரையில் திராவிடர் கழகத் தோழர்களுக்கு இம் மாதிரியான நல்ல வாய்ப்புக் கிடைக்கவேயில்லை. இனியும் கிடைக்குமா என்பதும் சந்தேகந்தான்.
ஆகவே, கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் இதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும் (விடுதலை-16-11-1957)
No comments:
Post a Comment