Saturday, October 14, 2023

சேரமா தேவி குருகுலம் - பெரியார் பேச்சு

 சேரமா தேவி குருக்குலம்

  - தந்தை பெரியார்

பெரியோர்களே! தாய்மார்களே!

அந்தக் காலத்து எங்கள் சக்திக்கு ஒரு சிறு உதாரணம் சொல்லுகிறேன் - கேளுங்கள்! நான் காங்கிரசுக் காரியதரிசியாயும், தலைவனாயும் இருந்த காலங்களில் தமிழ்நாட்டு வாலிபர்களை தேசிய வீரர்களாக்கவென்று வி.வி.எஸ். அய்யர் என்னும் ஒரு தேசியப் பார்ப்பனர் காங்கிரசை 10,000 ரூபா கேட்டபோது, அதற்கு நானே பிரதானமாய் இருந்து ரூபா அனுமதித்தேன்.

அந்தப் பணம், குருகுலம் என்று ஒரு ஆசிரமம் வைத்து, அதில் பார்ப்பனப் பிள்ளைகளை வீட்டிற்குள் வைத்தும், பார்ப்பனரல்லாத பிள்ளைகளை வெளியில் வைத்தும் சாப்பாடுபோட்டு வருணாசிரம தருமம் கற்றுக் கொடுக்கப் பயன்பட்டதுடன், அதன்பேரால் தமிழ் மக்களிடம் மற்றும் 20, 30 ஆயிரம் ரூபா வசூல் செய்யப்பட்டது. 

அதற்குத் தமிழ்நாடும், நவசக்தியும் ஆதரவு அளித்தன. 

இந்தச் சூழ்ச்சியான அக்கிரமம் சகிக்காமல் நான், முதலியார் அவர்களிடம் மாயவரத்தில் வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டேன்.

 அப்போது அவர்கள் டாக்டர் நாயுடு அவர்கள் பேரில் புகார் சொல்லி, நாயுடு அவர்கள் 'தமிழ்நாடு' பத்திரிகையில் ஆதரிப்பதால் நான் ஆதரிக்கவேண்டியிருக்கின்றது என்றார். இருவரும் நாயுடு அவர்களிடம் தெரிவித்துக் கொண்டோம். அவ்வளவுதான் சங்கதி.

உடனே டாக்டர், குருகுலத்தின்மீது போர்தொடுத்தார். தமிழ்நாட்டுப் பார்ப்பனர் கள் தோழர்கள் இராசகோபாலச்சாரியார், சீனிவாச அய்யங்கார் உள்பட எல்லோரும் நாயுடு அவர்களுக்கு விரோதமாய் எவ்வளவோ தொல்லைகள் விளைவித்தும் பயன்படாமல், கடைசியில் குருகுலம் அடியோடு அழிந்தும் அதில் இப்போது படைக்கள்ளியும், நெருஞ்சில் முள்ளும் வளரும்படி, பாம்பும் பூச்சியும் வாழும்படி ஆகிவிட்டது.

(ஈரோட்டில், 26.11.1933இல் சொற்பொழிவு, புரட்சி 3.12.1933)

Friday, October 13, 2023

மோகன் சி லாசரஸ்

வெளி நாட்டில் இருந்து வரும் மதம் மாற்ற வரும் பணமும் மோகன் சி லாசரஸ்க்குதான்...

இவருக்கு கிறிஸ்தவ மதத்தில் உள்ளவர்கள் அனைவரும் அவர்கள் சம்பாதிப்பதில் எல்லோரும் 10% லாபத்தையும் கொடுக்கணுமாம். இல்லாட்டி கண் குருடாகும்...அது இது என தன் மக்களை மிரட்டுவார்.

குரும்பூர் ரயில்வே நிலைய வெளி இடம் முழுவதையும் குத்தகைக்கு மத்திய அரசு மூலம் மோகன் சி லாசரஸ்தான் பெற்று உள்ளார் 

அப்பகுதியை சேர்ந்த தூத்துக்குடி மாவட்ட இந்து முன்னணியின் மாநில நிர்வாகி இவரிடம் எச்சில் பணம் பெற்று வலம் வரும் வலது கரம். அவர்தான் ரயில்வே இட நிர்வாகம் பொறுப்பை லாசரஸ்க்கு குரு ஜியிடம் பேசி வாங்கி கொடுத்தவர்.

இரயில்வே வளாகத்தில் 45 வருட பழமையான ஆனந்த விநாயகர் கோவில் உள்ளது.

அதை அப்புறப்படுத்த ரயில்வே நிர்வாகத்தை வைத்து கோர்ட்டில் வழக்கு போட வைத்து உள்ளவர் மோகன் லாசரஸ். இப்போது சர்ச்சை தொடங்கி விட்டது.JCB இயந்திரம் வரை கொண்டு வந்ததை வழி படும் கொதித்தெழுந்து நிறுத்தினர். காரணம் அவர் சர்ச் பக்கத்தில் கோவில் இருக்கிறது.

இப்போ இந்துக்களும்,கிறிஸ்தவர்களும் இந்த நாசக்கார வன்முறை சிண்டிகேட்களால் வன்ம சண்டை போடணும்.

இப்போ இவர்கள் முட்டாளா?.

மக்கள் முட்டாளா?.

நாட்டில் அரசியல் சிண்டிகேட் மட்டும் அல்ல.

பணம் பறிக்கும் எண்ணத்தில் உள்ள மதவாத சிண்டிகேட் ஏமாற்று கூட்டணிகளை ஒழிக்காமல் தமிழகத்தில் எந்த மதங்களும் நிம்மதி பெற்று வாழவே இயலாது.

நீங்கள் எதிரி என எண்ணும் ஒருவரை விட அருகில் உள்ள துரோகியே நம்மை என்றும் அழிப்பார்கள்.

உணர்ச்சிகளை கட்டுப் படுத்துங்கள்.

வில்லை உடையுங்கள்.

தூத்துக்குடி அரசியல் சூப்பரா மக்களே!!.

தமிழக அரசியல் சிண்டிகேட்,மத சிண்டிகேட் இரண்டுமே ஒன்றுதான்.

பாலசுப்பிரமணியம் ஆதித்தன் T

மோகன் சி லாசரசுக்கு ஆதரவாக துக்ளக் குருமூர்த்தி

குரும்பூர் ஆனந்த விநாயகர் கோவிலை உடைக்க மோகன் சி லாசரஸ்க்கு ஆதரவாக செயல் படும் ஆடிட்டர் குருமூர்த்தி...

திருச்செந்தூர் ரயில் நிலையத்திலும், குரும்பூர் ரயில் நிலையத்திலும் அக்காலத்தில் ரயில்வே அதிகாரிகள் துணையோடு பக்தர்கள் சிறு ஆனந்த விநாயகரை வழி பட்டு வருகின்றனர்.

மெகா சர்ச் ஒன்று குரும்பூரில் கட்டி உள்ளார் மோகன் சி லாசரஸ் .லட்சக்கணக்கில் இங்கு வருபவர்களை வைத்து வசூல் செய்வது வழக்கம்.வெளி நாட்டில் இருந்து வரும் மதம் மாற்ற வரும் பணம் கொண்டு வர துடிப்பாக செயல் படுவதில் ஒருவர் மோகன் சி லாசரஸ்.

குரும்பூர் ரயில்வே நிலையத்தின் வெளி இடம் முழுவதையும் Maintenance செய்வதாக குத்தகைக்கு காங்கிரஸ் காலத்தில் மத்திய அரசு மூலம் மோகன் சி லாசரஸ் வகையறாதான் உரிமை பெற்று உள்ளனர். 

இதற்குள் 45 வருட ஆனந்த வினாயகர் பழமையான கோவில் உள்ளது. சிறு வயது முதல் நான் உள்பட இக்கோவிலுக்கு போகாதவர்கள் இப்பகுதியில் இருக்க வாய்ப்பே இல்லை.

மோகன் சி லாசரஸ் சர்ச் க்கு வரும் வாகனங்களை நிறுத்த இந்த ரயில்வே இடங்கள் பயன் படுத்தப் படுகிறது.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வானதி சீனிவாசனை மத்திய ரயில்வே போர்டில் அமர்த்தி இதற்கான காயை நகர்த்திக் கொடுத்தது ஆடிட்டர் குருமூர்த்திதான்.

இதற்கிடையில் பாஜக ஆட்சி வந்த பிறகும் ரயில்வே போர்டு குருமூர்த்தியின் கண் அசைவு செல்வாக்கில் மோகன் சி லாசரஸை அரவணைத்து தொடர்ந்தது.

அது கூட பிரச்சனை இல்லை.

ரயில் நிலைய இடத்தில் ஆனந்த விநாயகர் இருப்பதை கண் உறுத்தவே ரயில்வே நிர்வாகத்தை வைத்தே இதை உடைக்க வழக்கு தொடர வைத்தனர் லாசரஸ் - குருமூர்த்தி மெகா கூட்டணி.

எங்களுக்கு இதற்கும் சம்மந்தம் கிடையாது என்று இந்த வேத விற்பனையாளர்கள் இப்போதும் கூறுவார்கள்.

மோடி ஒழிக என்று குரும்பூர் ரயில்வே நிலைய பார்க்கிங் இடத்தை குத்தகைக்கு எடுத்த ஒருவர் பிரதமர் மோடி ஆட்சியில் பேச இயலும் என்றால் இவரிடம் செல்லம் கொஞ்ச வரும் கில்லாடி ஆடிட்டர் யார் என்று நீங்களே புரிந்தும் கொள்ளலாம்.

பிரதமருக்கே சவால் விடும் இவர்களுக்கு ஆனந்த விநாயகர்தான் முடிவு கட்டுவார் என்று எண்ணுகிறேன்.

கோர்ட் உத்தரவு படி பல நேரங்களில் இக்கோவிலுக்கு இடையூறு வந்தும் ஆனந்த விநாயகர் தன்னைக் காப்பாற்றி உள்ளார்.

நாளை ஆனந்த விநாயகர் கோவிலை உடைப்பதற்காக பல தரப்புகளை தூண்டி JCB வாகனம் வர உள்ளதாக தகவல்கள்.

ஒரு வேளை ஆனந்த விநாயகர் கோவிலுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் ஆடிட்டர் குருமூர்த்தியின் 2000க்கு மேற்பட்ட பினாமி டிரஸ்ட் வண்டவாளங்கள் பிரதமரின் நேரடி பார்வைக்கு கொண்டு சென்று அவரின் இந்தப் பிழைப்புக்கு முற்றுப் புள்ளி வைப்பேன். அதே நேரத்தில் மோகன் லாசரஸின் களவாணித் தனங்கள் அனைத்தும் அலசப்பட்டு அவருக்கு ஆனந்த விநாயகரின் அருளால் முடிவுரை எழுதுவேன் என்று தெளிவாக சொல்லிக் கொள்கிறேன். 

இதை வெற்று வார்த்தைக்காக சொல்லவில்லை.

பணம் பறிக்கும் எண்ணத்தில் உள்ள மதவாத சிண்டிகேட் ஏமாற்று கூட்டணிகளை ஒழிக்காமல் தமிழகத்தில் எந்த மதங்களும் நிம்மதி பெற்று வாழவே இயலாது.

நீங்கள் எதிரி என எண்ணும் ஒருவரை விட அருகில் உள்ள துரோகியே நம்மை என்றும் அழிப்பார்கள். அதற்கு உதாரணம் இவர்கள்.

தமிழக அரசியல் சிண்டிகேட்,

மத சிண்டிகேட் இரண்டுமே ஒன்றுதான்.

முதலமைச்சர் எடப்பாடியார் அமைதி ஏற்படுத்த முயற்சிப்பார் என நம்புகிறேன்.

மீண்டும் சொல்கிறேன்.

குரும்பூர் ஆனந்த விநாயகருக்கு ஏதேனும் தீங்கு ஏற்படின் நீங்கள் இருவரும் எவ்வளவு பெரிய வில்லாளகண்டர்களாக இருந்தாலும் உங்கள் இருவரையும் மக்கள் முன்பாகவும்,பிரதமர் முன்பாகவும்  நிறுத்துவேன். செய்த மர்ம குற்றங்கள் அனைத்தையும் வெளிப்படுத்துவேன்.

விடவே மாட்டேன்.

இது திருச்செந்தூர் முருகன் மேல் ஆணை.

ஓம் ஆனந்த விநாயகரே போற்றி.

வேலும் மயிலும் நமக்கு உற்ற துணை.

ஓம் முருகா

படங்கள் கமென்ட்டில் காண்க.

31.05.2018 எனது பதிவின் லிங்க்

https://m.facebook.com/story.php?story_fbid=1020636528094972&id=100004459025108

ஆனந்த விநாயகரை காக்க பகிருங்கள்.

பாலசுப்ரமணியம் ஆதித்தன், 25.6.2018

Thursday, October 12, 2023

கால்டுவெல்லும் மணியரசனும்- பொ.வேலுசாமி

தமிழுக்குப் பெருமைச் சேர்த்த ஆங்கிலேயேர் கால்டுவெல்லும் அவரை ஆதாரங்களின்றி வசை பாடும் தோழர் மணியரசனும்

நண்பர்களே….

19 ம் நூற்றாண்டு வரை தமிழ்மொழியை  சமஸ்கிருதத்தின் துணையின்றி தனித்துவமாக இயங்கத் தகுதியற்ற மொழி என்று தமிழ்நாட்டுக் கல்வியாளர்களும் உலக அறிஞர்களும் எழுதியும் பேசியும் வந்தனர். இத்தகைய கருத்துக்களை விஞ்ஞானரீதியில் மறுத்து, தமிழ் தனித்துவமாக நிற்கும் தகுதியுடைய மொழி என்பது மட்டுமல்ல. உலகின் மிகச் சிறந்த பழைமையும் பெருமையும்  மிக்க மொழிகளான கிரேக்கம் இலத்தீன் போன்றவற்றுடன் ஒப்ப வைத்து பேசப்படும் தகுதியுடைய மொழியென்று (வெறும் வார்த்தைகளால் சொல்லாமல் ) கோட்பாட்டுரீதியான சமூக விஞ்ஞான ஆராய்ச்சியின் வழியாக உலகினருக்கு உணர்த்தியவர் கால்டுவெல்தான்.    அதனை உலக அறிஞர்களும் பிறமொழிகளைச் சார்ந்த இந்திய அறிஞர்களும்  ஒப்புக் கொண்டதையும் இன்றைய வரலாறு நமக்கு உணர்த்துகின்றது. 

இத்தகைய நிலையில் ஒரு பகுதியை  உங்களுக்கு காட்டுவதற்காகத் தமிழ்நாட்டு மொழியியல் அறிஞர்களும் தமிழர்களும்  கால்டுவெல்லைப் பற்றியும் அவர் எழுதிய நூலான திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் பற்றியும் செய்துள்ள ஆய்வுகளின் பட்டியலை உங்களுக்குக் கொடுத்துள்ளேன். அத்துடன் கால்டுவெல்லின் வரலாற்றை மிகச் சிறந்த முறையில் முதுபெரும் தமிழறிஞர் தஞ்சை பள்ளியக்ரஹாரம் கந்தசாமிபிள்ளை அவர்களால் 1958 இல் தமிழ்ப்பொழில் இதழில் எழுதப்பட்ட கட்டுரையின் இணையதள இணைப்பை உங்களுக்கு கொடுத்துள்ளேன். இந்த அரிய கட்டுரையை தயவுசெய்து வாசியுங்கள். 

தமிழுக்கு உலகளவில் பெருமைச் சேர்த்த இத்தகைய அறிஞரை தோழர் மணியரசன் நியாயமற்ற முறையில் வக்கிரமாக அவதூறு செய்கிறார். 

அந்த அவதூறு செய்திகளை உங்களிடம் உண்மைபோல் காட்டுவதற்கு கால்டுவெல் ஆங்கிலத்தில் எழுதிய ஒப்பிலக்கண நூலின் சில வரிகளை மட்டும் பயங்கரமாக வாசித்துக் காட்டுகிறார். 

இந்தச் செய்திகள் எழுதப்பட்டுள்ள பகுதிகள் தமிழிலேயே மிகச் சிறப்பாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.  இதில் கால்டுவெல் அவர்கள் தென்னிந்திய மொழிகளை யெல்லாம் தொகுத்துச் சொல்லுவதற்கு  “திராவிடம்”  என்ற பெயரை ஏன் தேர்ந்தெடுத்தார் எப்படித் தேர்ந்தெடுத்தார் என்பதை விளக்குவதாக  எழுதப்பட்டுள்ளது. 

 அந்த விளக்கங்கள் அனைத்தும் அழகான தமிழில் 300 பக்கத்திற்கு மேல் உள்ளன. 

 அந்தப் பகுதிகளை நீங்கள் எளிமையாக வாசித்து கால்டுவெல்லைப் பற்றிய சரியான தகவல்களை உங்களுக்குள் உருவாக்கிக் கொள்ளுவீர்கள் என்ற நம்பிக்கையில் அந்த நூலின் இணையதள இணைப்பை இத்துடன் இணைத்துள்ளேன். 

கால்டுவெல்லைப் பற்றிய அவதூறுகளில் ஒன்றாக தோழர் மணியரசன் கூறுவது என்னவென்றால்,  பழந்தமிழர்கள் இலங்கைத் தவிர மற்ற நாடுகளுக்கு வணிகம் நிமித்தமாகச் செல்லவில்லை என்று குறிப்பிடுகின்றார். 

ஒரு விசயத்தைக் கவனத்தில் கொள்ளவேண்டுகிறேன். 

பழந்தமிழர்கள் உலகின் பல நாடுகளுடன் தொடர்புக் கொண்டவர்களாக இருந்தனர் என்பதை முதன்முதலாக ஆராய்ந்து சொன்னவர் கால்டுவெல்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதற்கு முன்னர் அத்தகைய ஆராய்ச்சிகள் நடைபெறவில்லை.  

“அரிசி, இஞ்சி, மயில்தோகை” போன்ற தமிழ்ச் சொற்கள் கிரேக்கமொழியில் உள்ளதை முதன்முதலாகச் சுட்டிக் காட்டியவர் கால்டுவெல்தான்  என்பதை பல அறிஞர்கள் எழுதியுள்ளனர். 

அத்தகைய பகுதிகளும் இந்த தமிழ் முன்னுரையில் உள்ளன என்பதை நீங்கள் படிக்கும்போது புரிந்து கொள்வீர்கள். 

குறிப்பு

1. நண்பர்களே இன்றைய உலக அரசியல், சமூக சூழல் மனிதத் தன்மையற்று வணிகமயமாகி நாளுக்கு நாள் வளர்ந்து வருவதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. 

இத்தகைய சூழலில் எவ்வளவு பெரிய மனிதர்கள் ஆனாலும் அவர்களால் சொல்லப்படுகின்ற கருத்தை சரியான ஆதாரங்களைத் தேடி ஒப்பிட்டுப் பார்த்து உண்மையென்றால் ஏற்றுக் கொள்வதும் பிழையென்றால் தயங்காமல் தள்ளிவிடுவதுமாகிய அறிவு ஆற்றலைப் பெற்றிருந்தால் மட்டுமே நம்முடைய தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். இல்லாவிட்டால் நம்மை மற்றவர்கள் விலங்குகளைப் போன்று அடிமைகளாக்கி ஆட வைத்து வாழ்வைப் பறித்துக் கொள்வார்கள் என்பதை  இன்றைய நிலையிலும் பல நாட்டுச் செய்திகள் தினமும் நமக்கு  உணர்த்திக் கொண்டிருப்பதை நாம்  அனைவரும் அறிவோம். 

2. கால்டுவெல் எழுதிய 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ' என்ற நூல் மிக அண்மைக்காலம் வரையில் ஆங்கிலத்தில் கூட முழுமையாகப் பதிப்பிக்கப்படவில்லை. 

சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட ஆங்கில பதிப்பும் இத்தகைய குறைபாடு உடையதே. 

 அந்நூலை முழுமையாக இப்பொழுது ”உலகத் தமிழராய்ச்சி நிறுவனம்” சிறந்த அறிஞரைக் கொண்டு மொழிபெயர்த்து முடித்துவிட்டது. 

மிக விரைவில் அந்த நூல் விற்பனைக்கு வர உள்ளது. தொல்காப்பியம் பற்றியெல்லாம் கால்டுவெல் எழுதியுள்ள பகுதிகள் இதில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

கால்டுவெல்லின் வாழ்க்கை வரலாற்றை பெரும்புலவர் அறிஞர் பள்ளியக்ரஹாரம் கந்தசாமிபிள்ளை அவர்கள் எழுதி 1958 ல் தமிழ்ப்பொழில் இதழில் வந்த கட்டுரை

https://www.tamildigitallibrary.in/periodicals-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdk0Me&tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+Vol.+34%2C+No.+4+%28%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%2C+1958%29#book1/

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

https://www.tamildigitallibrary.in/book-list-view-book?cid=20&id=jZY9lup2kZl6TuXGlZQdjZl9k0Qy&tag=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D

தோழர் மணியரசன் பேசியது

https://www.youtube.com/watch?v=Wz8OiVXjtVo

இந்து சமய அறநிலையத் துறை - ஓர் அடிப்படைப் புரிதல்

 இந்துசமய அறநிலையத்துறை 

- அடிப்படை புரிதல்

முதலில் இந்து சமய  அறநிலயத்துறையின் தர்கத்தை (logic) புரிந்து கொள்வோம். 

அறநிலயத்துறையின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள எல்லா கோவில்களும் இல்லை.

பண்டைய காலம் முதல் இன்று வரை 

1) ஒரு தனியாரால் கட்டப்பட்ட கோவில்கள் எதுவும் அறநிலயத்துறையின் கீழ் வருவதில்லை

 (உதா: உங்கள் தெரு முக்கில் உள்ள பிள்ளையார் கோவில், சிலரின் முயற்ச்சியால் உருவான சாய்பாபா கோவில்கள், உங்கள் ஊரில் உள்ள குலதெய்வ கோவில், இப்படி). 

2) அதே போல் ஒரு குழுவால், மடத்தால் கட்டப்பட்ட கோவில்களும் வருவதில்லை. (உதா: காஞ்சி மடம், மதுரை ஆதீனம் இப்படி).

3) எந்தெந்த கோவில்கள் எல்லாம் மன்னராட்சியில் அரசர்களால் கட்டப்பட்டு, அரசால் பராமரிக்கப்பட்டதோ அவைகள் மட்டுமே அந்த மன்னராட்ச்சி முடிந்து மக்களாட்சியிலும் அரசின் வசம் உள்ளது. 

தமிழகம் முழுக்க இலட்சக்கணக்கான கோவில்கள் இருக்கும். அதில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்கள் வெறும் 38ஆயிரத்து  சொச்சம் தான்.

இதே தர்கத்தின் அடிப்படையில் தான் வக்ஃபு வாரியங்களும் அரசால் நடத்தப்படுகின்றன.

வக்ப்பு வாரியங்கள் இந்தியா முழுவதும் அந்தந்த மாநில அரசால் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு, மேலான்மை செய்யப்பட்டு வரப்படுகின்றன.

இஸ்லாமிய மன்னர்களால் கட்டப்பட்ட மசூதிகளையும், அது சார்ந்த சொத்துக்களையும் மேலான்மை செய்வது அந்த வக்ஃபு வாரியங்கள் தான்.

ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் மன்னராட்சி இல்லை என்பதாலும், ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் அரசால் இங்கே சர்ச்சுகள் கட்டப்படவில்லை என்பதாலும் (பல மிசினரிகள் இங்கே வந்து அவரவர்கள் செலவில் கட்டப்பட்டவை, நமது மடங்கள் அவர்கள் செலவில் கட்டிய கோவில்கள் போல) சர்ச்சுகளுக்கு இப்படி அரசாங்க அமைப்பு இல்லை.

அறநிலையத்துறையின் கீழ் 17 சமண கோவில்களும் உள்ளன என்பது உபரி தகவல்.

++++++++++++++++++++++++++++++

"கோவில்களில் பக்தர்கள் கடவுளுக்கு காணிக்கை செலுத்துகிறார்கள். அது அந்த கடவுளுக்கு சொந்தம். அதை அரசு எடுத்து கண்டபடி செலவு செய்வதா??"

இது அறநிலையத்துறையின் மேல் ஒரு சில பிற்போக்குவாதிகளால் வைக்கப்படும் ஒரு கேள்வி.

கோவில்களில் இருந்து வரும் வருமானத்தில் ஒரு ரூபாய் கூட அறநிலயத்துறைக்கு அப்பால், வேறு எதற்கும் செலவு செய்யப்படுவதில்லை.

இன்னும் சொல்லப்போனால் ஒரு கோவிலின் வருமானம் கூட மற்றொரு கோவிலுக்கு செல்லாது. 

*Common good fund*  என்று ஒரு பொது fund உருவாக்கப்பட்டு,  அதிக வருவாய் உள்ள கோவில்களில் இருந்து ஒரு தொகை இதற்கு மாற்றப்படுகிறது. 

அந்த தொகையில் இருந்து தான் குறைந்த வருவாய் உள்ள கோவில்களுக்கான செலவுகள் திட்டமிடப்படுகின்றன. 

அதிக வருவாய், குறைந்த வருவாய் என எப்படி கணக்கெடுக்கிறார்கள்?

ஆண்டு வருமானம் 

1) 10,000 ரூபாய்க்கும் குறைவு,

2) 10 ஆயிரம் - 2.5 லட்சம்

3) 2.5 லட்சம் - 10 லட்சம்

4) 10 லட்சத்துக்கும் மேல்

இதில் (4) இல் வரும் கோவில்களின் எண்ணிக்கை 331 மட்டுமே. 

இந்த 331 கோவில்களின் வருமானத்தில் ஒரு சதவிகிதம் அந்த common good fundக்கு மாற்றப்பட்டு அதன் மூலம் மீதமுள்ள மூன்று categoryயிலும் வரும் 38,300+ கோவில்கள் பராமரிக்கப்படுகின்றன.

கோவில்களின் வருமானத்தில் 'assessible income' என்ற ஒரு குறப்பிட்ட தொகைக்கு 14% வருமான வரி உண்டு.

 அந்த வரி மட்டுமே அரசாங்கத்திற்கு போகிறது. 

அந்த வரியும் கூட அறநிலைய அதிகாரிகளுக்கு சம்பளம் போன்ற அறநிலையத்துறை சார்ந்த administrative செலவுகளுக்குத்தான் செலவு செய்யப்படுகின்றது. 

எனவே கோவில் வருமானங்களை, அரசு ஏன் எடுத்துக்கொள்கிறது என்ற கேள்வி திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி....

Wednesday, October 11, 2023

குத்தூசி குருசாமி நினைவு நாள்

குத்தூசி குருசாமி நினைவு நாள் 11.10.2023

குத்தூசி குருசாமி

பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள குருவிக்கரம்பை கிராமத்தில் 1906 ஏப்ரல் 23இல் பிறந்தார்.

 முதன்முதலாக பெரியாரைச் சந்தித்தபோது அவருக்கு வயது 23. பெரியாரின் குடியரசு இதழில் ‘குத்தூசி’ என்ற பெயரில் சமூக சீர்திருத்த, பகுத்தறிவு சார்ந்த கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். 1929இல் தன்னைப் போன்றே பகுத்தறிவுச் சிந்தனை கொண்ட குஞ்சிதம் அம்மையாரை பெரியாரின் தலைமையில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார். 

தமிழ்நாட்டில் பெரியார் நடத்திவைத்த முதல் சீர்திருத்தத் திருமணம் குத்தூசி குருசாமி - குஞ்சிதம் அம்மையார் திருமணம்தான். 

அக்காலத்தில் பல எதிர்ப்புகளுக்கு இடையேதான் அது நடைபெற்றது.

பெரியார் தலைமையில் சுயமரியாதை இயக்கம் வேர்விட்ட காலத்தில், அவருடன் அறிமுகமாகி, இறுதிவரையில் அவரோடு இணைந்து பயணித்தவர் குத்தூசி குருசாமி.

எழுத்துச் சீர்திருத்தத்தின் முன்னோடி

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து முதன்முதலாகப் பேசியவர் குருசாமி. பெரியாருடன் இதுபற்றி விவாதித்து, புதிய தமிழ் எழுத்து வடிவங்களைக் குடியரசில் முதன்முதலாகப் பயன்படுத்தவும் செய்தார். “இது தமிழ் மொழியின் எழுத்து வடிவத்தை மேலும் செழுமைப்படுத்து

வதுடன், தமிழை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும்” என்றார். கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடியான சிங்காரவேலர் 1923இல் விவசாயத் தொழிலாளர் இயக்கத்தைக் கட்டமைத்து, 

இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் மே தினத்தை நடத்தியபோது அதில் குருசாமியும் பங்கேற்றார். அப்போது அவர் பதின்பருவ இளைஞர். இடதுசாரி இயக்கத் தலைவர்களுடன் குருசாமி தனது கடைசிக் காலம் வரையில், நெருக்கமான உறவைப் பேணினார்.

1949இல் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்ட காலத்தில், பல தலைவர்களுக்குத் தன் வீட்டில் அடைக்கலம் அளித்தார். கைது செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலரைச் சிறைக்குச் சென்று சந்தித்தார் குருசாமி. அதற்கு நன்றி தெரிவித்து அவர்கள் எழுதிய கடிதங்களே, கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் மீது அவர் வைத்திருந்த அன்புக்குச் சான்று.

1952இல் முதன்முதலாக நடந்த பொதுத்தேர்தலில், தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிகளை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார் பெரியார். அந்தத் தேர்தலில் இடதுசாரிகள் வெற்றிபெற்றபோதும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ராஜாஜி ஆட்சியமைத்தார். இதனைக் கண்டித்து ‘கொல்லைப்புற வழியில் ஆச்சாரியார்’ என்று விடுதலையில் எழுதினார் குருசாமி. 

இன்று அரசியல்வாதிகள் சரளமாகப் பயன்படுத்துகிற இந்தச் சொல், முதன்முதலாக அப்போதுதான் அச்சில் பயன்படுத்தப்பட்டது.

‘குடியரசு’, ‘விடுதலை’ ,‘அறிவுப் பாதை’ மற்றும் ‘புதுவை முரசு’ பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதினார் குருசாமி.

பாரதிதாசனுடனான நட்பின் காரணமாக அவரின் முதல் கவிதைத் தொகுதியைப் பிரசுரிக்கும் பொறுப்பையும் ஏற்றார். 

குருசாமியின் மனைவி குஞ்சிதம் தான் பாரதிதாசனின் முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

குருசாமி, ஆங்கிலத்தில் இருந்து பல்வேறு நூல்களையும், கட்டுரைகளையும் தமிழில் மொழிபெயர்த்தார். 

ஐரோப்பிய அறிஞரான பெட்ரண்ட் ரஸ்ஸலின் புகழ்பெற்ற நூலான ‘நான் ஏன் கிறிஸ்தவன் அல்ல’ என்பது அவரது முக்கியமான மொழிபெயர்ப்பு. 

தேர்தல் அரசியலில் ஈடுபடுவது குறித்து பெரியாருடன் கருத்து வேறுபாடு கொண்ட அண்ணா, 1949இல் பெரியார் - மணியம்மை திருமணத்தை முன்வைத்து தனி இயக்கத்தைத் தொடங்க முடிவு செய்தார். இதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றபோது, பிரிவைத் தடுக்க சமரச முயற்சிகளை மேற்கொண்டவர் குருசாமி.

குத்தூசி குருசாமி முன்வைத்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை, அவரது மறைவுக்குப் பிறகு 1978இல் எம்.ஜி.ஆர் அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது

தன் வாழ்நாளில் எழுத்துகளிலும், பேச்சுகளிலும் பகுத்தறிவுக் கருத்தியல் சார்ந்து குருசாமி எந்தச் சமரசமும் செய்து

கொண்டதில்லை. சுயமரியாதை இயக்கத்தின் அடையாளமாக இருந்த குருசாமி 1965 அக்டோபர் 11இல் காலமானார்.

இவரின் நூல்களையும், வாழ்க்கை வரலாற்றையும் அவரின் நண்பரான குருவிக்கரம்பை வேலு வெளியிட்டிருக்கிறார். 

Rajamani A.R. அவர்களின் பதிவு

மெக்காலே : பழமைவாதக் கல்வியின் பகைவன்

மெக்காலே: பழமைவாதக் கல்வியின் பகைவன் - முனைவர் இரா. சுப்பிரமணி - சாளரம் வெளியீடு - முதல் பதிப்பு 2023 - பக்கங்கள் 160 - விலை ரூ 180/

*  சமஸ்கிருதமே இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் என்ற போலி பிம்பத்தை 1856ம் ஆண்டு உடைத்தெறிந்தவர் - கால்டுவெல் ! 

அவரது சிறப்பான ஆய்வு நூலான ' திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ' உலகின் கண்களைத் திறந்து வைத்தது ! 

*  சமஸ்கிருதத்தையும், குருகுலத்தையும், வர்ணாசிரத்தையும் நம்பி, உயர் ஜாதி பிள்ளைகளுக்கு மட்டுமே கல்வி என்ற நடைமுறைக்கு 1835ம் ஆண்டு சமாதி கட்டியவர் - மெக்காலே ! 

அவரது ' ஆங்கில வழிக் கல்வி திட்ட முறை ' இந்தியர்களின் கல்விக் கண்ணை திறந்து வைத்தது !

*  யார் இந்த மெக்காலே ?

மெக்காலே அறிமுகப் படுத்திய ஆங்கில வழிக் கல்வி முறை நல்லதை செய்ததா ? அது  குமாஸ்தாக்களை உருவாக்குகின்ற கல்வி முறையா ? இந்தியாவின் அறிவுப் பாரம்பரியத்தை சிதைத்ததா ? அன்றைய இந்தியாவில் கல்வி நிலை என்ன ? ....போன்ற கேள்விகளுக்கு நிறைய நூல்களை ஆராய்ந்து விடை தந்துள்ளார் முனைவர் இரா. சுப்பிரமணி ! 

*  " மெக்காலே என்னும் ஆங்கில அதிகாரியை கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் இந்நூல் உருவாக்கப்படவில்லை. இந்திய தேசத்தின் கல்வி வரலாறு என்பது விருப்பு வெறுப்பற்ற நிலையில் வாசிக்கப்பட வேண்டும் என்பதாக எடுத்துரைக்கவே இந்த நூல் வெளி வந்துள்ளது ! ..." என்று தனது முன்னுரையில் குறிப்பிடுகின்றார் நூலாசிரியர் ! 

*  முதலில் ' யார் இந்த மெக்காலே ? ' என்ற கேள்விக்கு ஒரு சுருக்கமான அறிமுகம் இதோ : 

*  தாமஸ் பாபிங்டன் மெக்காலே ( 1800 - 1859 ).

மெக்காலே இங்கிலாந்தில் பிறந்தவர். பள்ளியில் சிறந்த மாணவர். 1818ல் கல்லூரிப் படிப்பு. சட்டம் பயின்றார். 1826ல் வழக்கறிஞரானார். சிறந்த கட்டுரைகளை எழுதியுள்ளார். 1830ல் நாடாளுமன்ற உறுப்பினரானார். அடிமைத்தனம், மூடநம்பிக்கை போன்றவற்றை தீவிரமாக எதிர்த்தார். மனிதாபிமான மிக்கவர் !

*  கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்ற இந்தியாவுக்கு 1834ல் சென்று ,1838ல் இங்கிலாந்துக்கு திரும்பினார். உலகின் புகழ்பெற்ற நூலான ' இங்கிலாந்தின் வரலாறு ' நான்கு பாகங்களை எழுதி வெளியிட்டார். 1852ல் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்வானார். 

1859ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி மரணமடைந்தார் ! 

*  இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியை நிர்வகிக்கும் பொறுப்பில் ஆண்டு 1834 முதல் 1838 வரை இருந்தார். அப்போது அவருக்கு தரப்பட்ட முக்கியமான இரண்டு பணிகளை செய்து முடித்தார்.

1) இந்தியத் தண்டனைச் சட்டத்தை உருவாக்கியது !

2) இந்திய மக்களுக்கு எந்த மொழியில் கல்வி பயிற்றுவிப்பது என்ற நீண்ட விவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த - ஆங்கில வழிக் கல்வியை சட்ட பூர்வமாக அறிமுகப்படுத்தியது ! 

*  மெக்காலேயின் ஆங்கில வழிக் கல்விமுறையை பரிந்துரைத்த 13 பக்க கல்விக்

 குறிப்பு, இந்தியாவின் கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங் பிரபுவிடம் 02.02.1835 அன்று சமர்பிக்கப்பட்டது . அதை ஆங்கிலேய அரசு 07.03.1835 அன்று ஏற்றுக் கொண்டது ! 

*  ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் கல்வி என்ற பெயரால் நடந்த வெட்கக் கேட்டை , மெக்காலே தனது 13 பக்க கல்விக் குறிப்பில் எழுதப்பட்டதிலிருந்து சில தகவல்கள் : 

*  " இங்கிலாந்திலுள்ள ஒரு இலாடக்காரன் கூட ஒப்புக் கொள்ள வெட்கும்படியான மருத்துவ முறைகளும் ; இங்கிலாந்திலுள்ள பாடசாலைகளில் படிக்கும் சின்னஞ்சிறிய சிறுமியருக்கும் நகைப்பை உண்டாக்கும் விபரீதமான வான சாஸ்திரங்களும் ;  முப்பதடி உயரமுள்ள அரசர்கள் அறுபதாயிரம் வருஷம் ஆண்ட வரலாறுகளைக் கொண்ட சரித்திரமும் ; பாற் கடலும், நெய் கடலும் கொண்ட பூகோள சாஸ்திரமும் இங்குக் காணப்படுகின்றன ! " ....

*  மெக்காலே மேலும் சொல்வதைக் கேளுங்கள் :

" இப்படி பலவிதமான முரண்பாடுகளுடன் இந்தியாவில் நிலவி வந்த சமஸ்கிருதக் கல்வி முறை என்பது திட்ட மிட்டு, இந்தியாவை இருளில் வைக்க சிறப்பாகத் திட்டமிட்ட முறையாகும் ( The Sanskrit system of Education would be the best calculated to keep the country in darkness ) " ....மெக்காலேயை சங்கிகள் வெறுப்பதற்கு இது தானே காரணம் ! 

*  மெக்காலேயின் கல்வித் திட்ட நிலைப்பாட்டில் சில கூறுகள் : 

1)  ஆங்கில வழிக் கல்வியை பயிற்று மொழியாக கொள்ள வேண்டும்.

2)  ஆங்கில பள்ளிகளில் தாய் மொழியும் கற்பிக்கப் படவேண்டும்.

3)  இந்து, முஸ்லிம் சமூகப் பிள்ளைகள் ஒன்றாக கல்வி கற்க வேண்டும்.

4)  இந்து பண்டிகையின் போது இஸ்லாமிய பிள்ளைகளுக்கும், இஸ்லாமிய பண்டிகையின் போது இந்து பிள்ளைகளுக்கும் விடுப்பு அளிக்க வேண்டும்.

5)  ஆங்கிலேயர் பிள்ளைகளும் இந்தியர்களின் பிள்ளைகளும் ஒரே பள்ளியில் படிக்க வேண்டும்.

6)  நிற பேதம், சாதி பேதம், சமய பேதம் கல்வி கூடங்களில் இருக்கக் கூடாது.

7)  30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதம் இருக்க வேண்டும்.

8)  ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பதை தடுக்க வேண்டும்.

9) ‌ ஆசிரியர்களுக்கு நல்ல ஊதியம் வழங்க வேண்டும்.

10) மாணவர்களை மையப்படுத்தியே பள்ளிகளும், கல்வியும், பாடங்களும், கற்பித்தலும் அமைய வேண்டும்.

*  பிராமணர்களின் குருகுல கல்விக்கும், சமஸ்கிருத கல்விக்கும் முடிவுரை கட்டினார் என்பதாலேயே மெக்காலேயை சனாதனிகளும், சாதி வெறியர்களும், சமத்துவத்தை எதிர்ப்பவர்களும், கடுமையாக தொடர்ந்து விமர்ச்சிக்கின்றார்கள் ! 

*  மெக்காலே என்ற அந்த ஆங்கிலேயனின் தீர்க்கமான அறிவின் வெளிச்சத்தின் காரணமாக இந்தியாவில் மத நீக்கல் கல்வி அமலானது ! 

ஒருவேளை அப்படி நடக்காமல் இருந்தால், இந்தியா ஓரு மத வழிப்பட்ட நாடாக மாறி, இன்றைய ஆப்கானிஸ்தான் போல மாறி இருக்கும் என்று சமூகவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள் ! 

*  இந்த சிறந்த ஆய்வு நூலை எழுதி நமக்கு வழங்கியுள்ள முனைவர் இரா. சுப்பிரமணி அவர்களை பகுத்தறிவு உலகம் பாராட்ட கடமைப்பட்டுள்ளது ! 

தொட்டாலே தீட்டு என்று தூரத்தில் நிறுத்தியது - வர்ணாசிரமம் ! 

பட்டாலே நூலை அணிந்த பார்ப்பனரை உயர்த்தியது - 

சனாதனம் ! 

மூக்காலே முணுமுணுக்கும் சமஸ்கிருதம் ஆதிக்கத்தின் மொழியானது - ஆரியர்களால்!

மெக்காலே முன்னெடுத்த ஆங்கிலம் அனைவரின் மொழியானது - ஆங்கிலேயர்களால் !

பொ. நாகராஜன்,

பெரியாரிய ஆய்வாளர்,

சென்னை - 09.10.2023

********************************************