Sunday, November 12, 2023

சிலம்பு பற்றி பெரியார்

 சிலம்பு பற்றிய பெரியாரின் பார்வை

“இந்த அம்மாளின் ( கண்ணகி ) கற்பைப் பற்றிச் சொல்வதாயி ருந்தால், தேவடியாள் வீட்டுக்குக் கணவன் போனதை அறிந்த போது, அந்தத் தேவடியாளை ஏதாவது செய்திருக்க வேண்டும். தாசி மாதவி, கோவலன் கண்ணகியின் கணவன் என்று தெரிந்து அவனை அனுபவிக்கிறாள். தேவடியாளுக்கு இதுவா தர்மம்? அப்படிப் பட்டவளுக்குக் கண்ணகி பொருள் கொடுக்க வசதி செய்யலாமா? கோவலன் ஒழுக்கமற்றவன். தாசி ஒழுக்கமற்றவள். கண்ணகி மடப்பெண்” என்று கடிந்து கொள்கிறார். சிலப்பதிகாரத்தின் சிறப்புகளைப் புகழ்ந்திட முனைவோரைப் பார்த்து “இந்தப் பிரச்சார பிரம் மாக்களின் மாப்பிள்ளைமார்கள் தேவடியாள் வீட்டில் போய் இருந்தால் இவர்கள் பெண்கள் தாசி வீட்டிற்குப் பணம் நகை எல்லாம் அனுப்பச் சம்மதிப்பார்களா?” 

கண்ணகி மதுரையை எரித்ததைப் பற்றிச் சொல்லும் போது, “இந்த அம்மாளுக்குக் கோபம் வந்ததும் தன் மார்பைத் திருகி எறிகிறாள். இது என்ன புத்தி! மார்பைக் கையால் திருகினால் அது வந்துவிடுமா? இந்தப்படி நடந்த சங்கதியும் அனுபவமும் சிலப்பதிகாரம் தவிர வேறு எதிலும் எங்கும் காணக் கிடைக்கவில்லை. அந்தப்படி திருகிப் பிடுங்கின மார்பு (முலை) வீசி எறிந்தால் அது நெருப்புப் பற்றிக் கொள்ளுமா? அதில் பாஸ்பரஸ் இருக்குமா? இந்த மூடநம்பிக்கைக் கற்ப னையானது என்ன பயனைக் கொடுக்கிறது? இதனால் கண்ணகிக்கு வீரம் இருந்ததாகக் கூறமுடியுமா?”

“இராமன் பார்ப்பான் - ஆகவே சூத்திரனைக் கொன்றான் என்பது இராமாயணம். பார்ப்பானை மட்டும் காப்பாற்ற வேண்டும் என்பது சிலப்பதிகாரம். எவ்வளவு முட்டாள் தனமான கொடுமை செய்தாலும் பார்ப்பனர்களைக் காப்பாற்றினால் அவள் பதிவிரதை ஆகிவிடுவான் என்பது சிலப்பதிகாரம். பாண்டியன் விசாரணை செய்து அவனுக்குக் கிடைத்த உண்மையின் மீது கோவலனுக்குத் தண்டனை விதித்தான். ஆனால் கண்ணகி ஒரு விசாரணையும் செய்யாமல் ஒரு குற்றமும் காணாமல் நிரபராதிகளான மக்களை, பெண்களைச் சுட்டு எரித்துக் கொன்றாள். அவள் வணங்கத்தக்கவள், கற்புக்கரசி தெய்வமானவள். பாண்டியன் குற்றவாளி. இதுதானே சிலப்பதிகாரக் கதை. இதுதான் தமிழர் பண்பாம்! எவ்வளவு முட்டாள்தனம் ?

Saturday, November 11, 2023

சமரச சன்மார்க்கம் - பெரியார்

 சமரச சன்மார்கம்.

                           புரட்சியாளர் பெரியார்.

அக்கிராசனர் அவர்களே! சகோதரிகளே! சகோதரர்களே!

சமரச சன்மார்க்கம் என்பது வாயால் சொல்லக்கூடியதே தவிர காரியத்தில் நடக்க முடியாததாகும். ஏனெனில், எது எது சமரச சன்மார்க்கம் என்கிறோமோ அவற்றிற்கு நேர் விரோதமாகவே மனித வாழ்க்கை அமைக்கப்பட்டிருக்கின்றது. இது நம் நாட்டில் மட்டுமல்ல; உலகம் முழுவதிலும் இவ்வாறே அமைக்கப் பட்டிருக்கின்றது.

முதலாவது கடவுள், மதம், விதி, சாதி, பணம், தொழில் முதலியவைகள் இயற்கைக்கு மாத்திரமான சமரச சன்மார்க்கமல்லாமல் - நியாய பூர்வமான சமரச சன்மார்க்கத்திற்கும் விரோதமாய் அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் ஒருவன் சமரச சன்மார்க்கத்தைப் பற்றிப் பேசவேண்டுமானால் மேற்கண்ட கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டு சமரச சன்மார்க்கம் ஏற்படவேண்டும் என்கின்ற முறையில் யோக்கியர்களாலோ, அறிவாளிகளாலோ பேசமுடியாது. ஏனெனில், அவை ஒன்றுக்கொன்று முரண்பட்ட தத்துவத்தில் அமைக்கப்பட்டிருப் பவைகளாகும்; அதோடு மாத்திரமல்லாமல், சமரசமும் சன்மார்க்கமும் கூடாது என்னும் தத்துவத்தின்மீதே அமைக்கப் பட்டுள்ளவைகளாகும்.

மேற்கண்டவை சம்பந்தமான கட்டுப்பாடுகளையெல்லாம் அடியோடு அழிப்பதுதான் சமரச சன்மார்க்கம் என்று சொல்வேன். இது உங்களில் பலருக்கும் உங்கள் பாதிரிமார்கள், எஜமானர்கள், அக்கம் பக்கச் சாதியார்கள், சாமிகள், மதக்காரர்கள் ஆகியவர்களுக்கு வருத்தமாயும் விரோதமானவைகளா யும் இருக்கும். நான் உண்மையான சமரச சன்மார்க்கம் அடைந்த தேசத்தார் - அடைந்த சமூகத்தார் அடைந்த தனிமனிதர்கள் யார்யாரைக் கருதுகின்றேனோ அவர்கள் எல்லாம் மேற்கண்ட இடையூறானவைகளைத் தகர்த்தெறிந்துதான் சமரச சன்மார்க்கம் அடைந்தார்கள்; இவைகளில் சிறிது தாட்சண்யப்பட்டவர்கள் கூட தோல்வியடைந்து விட்டார்கள்.

கடவுளையும், மதத்தையும், பணக்காரனையும் வைத்து சமரச சன்மார்க்கம் செய்ய முடியாதென்று கருதித்தான் இரஷியர்கள் பாதிரிமார்கள் தொல்லைகளை யும், சர்ச்சுகளையும் பணக்காரத் தன்மைகளையும் அழித்துத்தான் சமரசம் பெற்றார்கள்.

தற்போதைய இரஷியச் சரித்திரத்தில் சமரசத்திற்குப் பாதிரிமார்கள் எதிரி களென்றே தீர்மானிக்கப்பட்டு, அவர்களை அழித்துவிட்டார்கள். அழித்து விட்டார்கள் என்றால் கொன்றுவிட்டார்கள் என்பது கருத்தல்ல. ஏதோ சிலரை, அதாவது சமரசத்திற்கு எதிர்ப்பிரச்சாரம் செய்தவர்களில் சிலரைத்தவிர மற்றவர்களைப் பட்டாளத்தில் சேரச் செய்தார்கள்; சிலரை விவசாயத்தில் போட்டார்கள்; சிலரை வைத்தியத்தில் போட்டார்கள்; வேறு காரியங்களுக்கு உதவாதவர்களைக் காவல் காக்கப் போட்டார்கள். அது போலவே, சர்ச்சுகளைத் தொழிற்சாலை, பள்ளிக் கூடம் முதலியவைகளாக மாற்றினார்கள். இவைகளுக்கு உதவாத போக்குவரத்துக்கு இடையூறான வைகளை இடித்தார்கள். பணக்காரர்களின் சொத்தைப் பிடுங்கிப் பொதுஜன சொத்தாக்கி, பூமி இல்லாதவர் களுக்குப் பூமி, தொழிலில்லாதவர்களுக்குத் தொழில்; படிப்பில்லாதவர் களுக்குப் படிப்பு முதலாகியவைகள் கொடுப்பதற்கு உபயோகப்படுத் தினார்கள். கலியாண முறையை ஒழித்துப் பெண் அடிமையை நீக்கினார்கள். கண்டபடிப் பன்றிகளைப் போல் பிள்ளை பெறும் முறையை நிறுத்தச்செய்து, அளவுபடுத்தி ஆண் பெண் இன்ப வாழ்க்கைக்கு வழி செய்தார்கள். இன்னும் பல காரியங்கள் செய்தார்கள்.

 ஆனால், நமக்கு இவை பொருந்துமா என்று சிலர் கேட்பார்கள். யார் கேட்பார்களென்றால், பணக்காரன், பாதிரி, உயர்ந்த சாதிக்காரன், அரசன் ஆகியவர்கள்தான் கேட்பார்கள். இவர்கள் நமது நாட்டு ஜனத் தொகையில் 100க்கு 5 அல்லது 6 பேர்களே இருப்பார்கள். ஆதலால் குறைந்த எண்ணிக்கை யுடையவர்கள் - அதிலும் தங்கள் சுயநலத்திற்கு என்று சில கட்டுப்பாடுகள் இருக்கவேண்டுமென்றால் யார் சம்மதிப்பார்கள்? முதலாவது, இவர்கள் ஆதிக்கத்தை ஒப்புக்கொள்ளுகிறீர்களா? இருக்கவேண்டும் என்று சொல்லு கின்றீர்களா? என்ன சொல்லுகின்றீர்கள்?

 ஆகவே, கடவுள், மதம், பணக்காரன் இம்மூன்றும் இன்றே ஒழிய வேண்டும் என்கின்ற ஆத்திரமுமில்லை. ஏனெனில், இன்னும் அனேக நாடுகள் இருக்கின்றன அவை இப்போதுதான் முயற்சிக்கின்றன. ஆகையால், வரிசைக் கிரமத்தில் அந்த முறை நமக்கு வரும் என்கின்ற தைரியம் உண்டு. ஆனால், இங்கு மற்ற நாட்டில் இல்லாத சாதி முறை என்பது இச் சன்மார்க்கத்திற்கு விரோதமாய் இருக்கின்றது. அதை அழித்தே ஆகவேண்டும். நீங்கள் இவற்றிற்கெல்லாம் எத்தனைக் காலமாய் அடங்கி வந்திருக் கிறீர்கள்? என்ன பலன் அடைந்துள்ளீர்கள்? இன்றைய நிலையேதான் உங்கள் வாழ்க்கையின் பலன் என்று நினைத்தால், எதற்காக நாளைய தினம் வரை உயிருடன் இருக்கின்றீர்கள்?

மனிதன் வாழ ஏதாவது இலட்சியம் இருக்கவேண்டும். சும்மா அரைத்த மாவை அரைத்துக் கொண்டிருப்பதுபோல், வெறும் ஆகாரம் உட்கொள்ளவும் உண்டதை மலமாக்கவும் என்பதற்காகவும் அறிவற்ற உயிர்கள் இருக்கின்றனவே! இவை போதாவா? இனி, மனிதன் பகுத்தறிவுள்ளவன் என்றும் பண்டிதன் என்றும், பணக்காரன் என்றும் சொல்லிக்கொண்டு கடவுளை அடையும் மார்க்கங்களையும் பின்பற்றி, கடவுளென்று பணத்தையும் நேரத்தையும் ஊக்கத்தையும் செலவு செய்கின்ற மனிதனும் - நல்ல ஆகார வஸ்துக்களை மலமாக்குவதற்காக வாழவேண்டுமா? இவ்வித மனித சமூகம் அழிந்து போவது ஜீவகாருண்யத்தை உத்தேசித்தாவது மிகவும் அவசியம்.

உங்கள் இலட்சியங்களை அடைய முயலுங்கள்; மற்றொரு பிறவிக்கு என்று அயோக்கியர்களின் வார்த்தைகளை நம்பி எதிர்பார்த்துக்கொண்டு வீணாய் ஏமாந்து போகாதீர்கள். முன்பிறவி சங்கதி ஏதாவது ஒன்று, உங்கள் சரீரத்திலிருந்து உதிர்ந்த ஒரு மயிர்த்துண்டாவது உங்களுக்கு இந்தப் பிறப்பில் ஞாபகமிருந்தால் அல்லவா இந்தப் பிறவியின் காரியங்களை அடுத்த பிறவியில் அனுபவிக்க முடியப் போகின்றது? அன்றியும், கடவுள் உங்களை இப்படிச் செய்துவிட்டார் என்று முட்டாள்தனமாய்க் கருதி உங்கள் துன்பத்தை நிலை நிறுத்தாதீர்கள்! உணர்ச்சியும் அறிவும் அற்ற சோம்பேறிகளுக்குத்தான் கடவுள்செயல் பொருத்தமாக இருக்கும். நீங்கள் ஏன் சோம்பேறியாய் இருக்கின்றீர்கள்!

 கடவுளுக்குக் கோயில்கட்டி, உருப்படிகளை அதிகமாக்கி நமது குறைகளையும் கஷ்டங்களையும் முறையிட்டு, முறையிட்டு அழுதுவந்ததுபோதும். இனி அந்தப்பக்கம் திரும்பிப் பாராதீர்கள். உங்கள் அறிவையும் மனிதத் தன்மையையும் திரும்பிப் பாருங்கள்; அது சொல்கின்றபடி நடவுங்கள்; அதனிடம் நம்பிக்கை வையுங்கள். ஆகையால், மற்றநாட்டு வர்த்தமானங்களை உணர்ந்து நீங்கள் நடுநிலைமையில் இருந்து உங்கள் அறிவுக்கே பூசை போட்டீர்களானால், வந்துவிட்டது அன்றே சமரசம்! சன்மார்க்கம்! விடுதலை! இதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை.

(பெருந்துறை சமீபம் கிரேநகரில், 26.1.1931இல் சொற்பொழிவு. குடிஅரசு, 19.2.1931)

Friday, November 10, 2023

'நிர்வாணம்' குறித்து பெரியார்

 நிர்வாணம் என்பது என்ன? பெரியாரின் விளக்கம் ஆக முக்கியமான ஒன்று

- பேரா. அ. மார்க்ஸ்

(தந்தை பெரியார் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்தபோது நிர்வாண சங்கம் ஒன்றில் பங்கேற்ற  முழு நிர்வாணப் புகைப்படம் ஒன்று உண்டு. அது குறித்து அல்ல இந்தப் பதிவு.  இது ”நிர்வாணம்” என்கிற தத்துவார்த்தக் கோட்பாடு குறித்த பெரியாரிய விளக்கம்.)

பெரியார் ஈ.வெ.ரா அவர்களை எல்லோரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கடவுள் மறுப்பாளர் (Atheist) என்று மட்டுமே நினைத்துக் கொண்டுள்ளனர். அது மிகவும் தவறு. அது அவரைச் சுருக்கிப் பார்ப்பது.          அவர் கடவுள் மறுப்பாளரும்தான். ஆனால் அவரின் பரிமாணங்கள் இன்னும் பல. கற்பு, தேசியம், ஒழுக்கம், சாதி, மதம், கடவுள் எனப் புனிதமாகக் கட்டமைக்கபட்ட அனைத்தையும் எதிர்த்தவர். பல்லாயிரக் கணக்கான மக்கள் என்ன நினைப்பார்களோ என எண்ணாமல் அவற்றை விமர்சித்தவர். 

தன்னை அவர் ஒரு “நிர்வாணமான” சிந்தனையாளன் என்றார். இந்திய அவைதிக மதங்களான பௌத்தம், சமணம் முதலானவை முன்வைத்த “நிர்வாணம்” எனும் கருத்தை அவர் , 

"ஏற்கனவே சமூகம் நம் சிந்தனையிலும், நம்பிக்கைகளிலும் திணித்துள்ள அபத்தங்களை நீக்கி நிர்வாணம் ஆக்கிக் கொள்வது” 

எனும் கருத்தில் மொழிந்தார். அதாவது “நிர்வாணமான சிந்தனை” உடன் ஒவ்வொன்றையும் அணுக வேண்டும் என்றார். அதாவது சமூகம் நம் மீது திணித்துள்ள (மூட) நம்பிக்கைகளை ஒதுக்கிவிட்டு ஒவ்வொன்றையும் (எடுத்துக்காட்டாகக் ‘கற்பு’) உன் சுய சிந்தனையுடன் அணுக வேண்டும் என்றார்.

”பற்றறுத்தல்” – என்பதற்கும் அவர் புதிய பொருளை முன்மொழிந்தார்: மூன்று பற்றுக்களை நாம் விட்டொழிக்க வேண்டும் என்றார். அவை : 

”தேசாபிமானம், பாஷாபிமானம், மதாபிமானம்” – 

அதாவது தேசப்பற்று, மொழிப்பற்று, மதப் பற்று – இவற்றை விட்டொழிக்க வேண்டும் என்றார். மொத்தத்தில் அவர் எந்தப் பற்றையுமே ஏற்கவில்லை.

தேசம் என்பதை அவர் ஒரு “கற்பிதம்” என்றார். Nation என்பதை ஆண்டர்சன் போன்ற நவீன சிந்தனையாளர்கள் சில ஆண்டுகளுக்கு முன் “Imagined Community” எனச் சொன்னதை அறிவோம். ஒரு முக்கியமான கருத்தாக்கமாக இன்றளவும் உலகெங்கும் கருதப்படுகிறது. ”தேசம் ஒரு கற்பிதம்” என்பதன் ஊடாகப் பெரியார் அதை ஒரு நூற்றாண்டுக்கு முன்பே சொன்னார். “நான் ஒரு தேசத் துரோகி” என்றும் சொல்லிக் கொண்டார். 

இந்த நாட்டுக்கு “காந்தி தேசம்” என்று பெயர் வைக்க வேண்டும் எனச் சொன்னர். ஆம். காந்தியை மிகச் சரியாக மதிப்பிட்டார்.

காலமெல்லாம் ”பகுத்தறிவு” பற்றிப் பேசி வந்த அவர் 

அதையும் de-construct பண்ணத் தயங்கவில்லை. 

‘'பகுத்தறிவு, ஒழுக்கம், தியாகம், பொது நன்மை, பொது நோக்கு… எல்லாமே வெங்காயங்கள்தான்” - -என்றும் அவர் கூறியது உண்டு. 

தமிழை அவர் ”காட்டுமிராண்டி மொழி” என்றதை நீங்கள் அறிவீர்கள். 

காலமெல்லாம் பகுத்தறிவு குறித்துப் பேசிய அவர்தான்: “ இந்தப் பகுத்தறிவை வைத்துக் கொண்டு மனிதன் என்ன பண்ணினான்?” – என்றும் கேட்டார்.

“தன் பிள்ளை குட்டி, பேத்தி, பிதுர் ஆகிய பிந்திய சந்ததிகளைப் பற்றிய முட்டாள்தனமான கவலை பகுத்தறிவுள்ள மனிதனுக்குத்தான் இருக்கிறதே ஒழிய பகுத்தறிவு இல்லாதவைகளுக்கு இல்லை…. பகுத்தறிவில்லாத எந்த ஜீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தின் உழைப்பில் வாழ்வதில்லை (அதாவது சுரண்டுவது இல்லை), தன் இனத்தின் மீது சவாரி செய்வது இல்லை.”

--- தோழர்களே! பெரியார் நாம் நினைப்பதுபோல அத்தனை எளிதானவர் இல்லை. அவர் ஒரு Philosopher, அதே நேரத்தில் களத்தில் இருந்தவர்.

Wednesday, November 8, 2023

“நாஸ்திகத்”திற்கு முதல் வெற்றி தந்தை பெரியார் நமது மாகாணச் சுயமரியாதை மகாநாடு செங்கற்பட்டில் நடந்த பிறகு நமது பார்ப்பனர்கள் அம்மகாநாட்டுத் தீர்மானங்களைத் திரித்துக் கூறியும், பல கூலிகளை விட்டு விஷமப் பிரசாரம் செய்யச் செய்தும் வருவதோடு அதையே இவ்வருஷத்திய தேர்தல் பிரசாரமாக வைத்துக் கொள்ளலாம் எனவும் கருதி சில காலிகளுக்குப் பணஉதவி செய்து உசுப்படுத்திவிட்டு வேடிக்கை பார்ப்பது யாவரும் அறிந்ததாகும். இந்தப்படி காலிகள் மூலம் செய்யப்படும் விஷமப் பிரசாரம் இப்பார்ப்பனர்களுக்கு எவ்வளவு தூரம் பயன்பெறும் என்பதற்குச் சமீபத்தில் ஒரு சரியான பரீiக்ஷ நடத்திப் பார்த்தாகிவிட்டது. அதாவது, சென்னைப் பச்சையப்பன் தர்ம ட்ரஸ்டிகளில் ஒரு பார்ப்பன ட்ரஸ்டியின் ஸ்தானம், அதாவது ‘சுதேசமித்திரன்’ ‘இந்து’ ஆகிய பத்திரிகைகளில் பத்திராதிபரான திரு.ஏ.ரங்கசாமி அய்யங்கார் என்கின்ற ஒரு பார்ப்பனரின் ஸ்தானம் காலாவதி ஆனதும் அந்த ஸ்தானத்திற்கு மறுபடியும் திரு.ஏ.ரங்கசாமி அய்யங்கார் போட்டி போட தைரியமில்லாமல் விட்டுவிட்டதால் மற்றொரு பார்ப்பனராகிய அதாவது காலித்தனத்திலும், திரு.ரங்கசாமி அய்யங்காரை விட பார்ப்பனத்திமிரிலும், சூழ்ச்சியிலும் தலைசிறந்து விளங்கும் திரு.புர்ரா சத்தியநாராயணா அய்யர் என்ற பார்ப்பனரை நிறுத்தி வேலை செய்தார்கள். ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக திரு.ஏ. இராமசாமி முதலியார் நின்றார். இந்தத் தேர்தலில் முக்கியமாகப் பார்ப்பனர்களே பெரும் பான்மையான ஓட்டர்களாயிருந்தும், ஒருபக்கம் பார்ப்பனரல்லாத பிரமுகர்களில் ஒருவரான திரு.சி. டாக்டர். நடேச முதலியாரும் அவரது சகபாடிகளும் திரு.புர்ரா அய்யருக்கே தங்கள் ஓட்டுச்செய்தும் மற்றவர்களின் ஓட்டுகளைச் சேகரித்துக் கொடுத்தும், மற்றொரு பக்கம் சில பார்ப்பனர்கள் செங்கற்பட்டு மகாநாட்டுத் தீர்மானங்களைப் பற்றிக் காலித் தனமாய்க் கூலிகளை விட்டு, திரு. ராமசாமி முதலியாருக்கு எதிரியாய் இழிபிரசாரம் செய்தும் கடைசியாக திரு.ராமசாமி முதலியாரே வெற்றி பெற்றார். ஏனென்றால் இந்தக் காலிப் பிரசாரத்தையும் சூழ்ச்சியையும் சென்னைக் கார்ப்பரேஷன் மீட்டிங்கில் திரு.புர்ரா நடந்து கொண்ட மாதிரியையும் பார்த்த பிறகே சில பார்ப்பனர்கள் தைரியமாக வெளிவந்து வெளிப்படையாகவே திரு.ராமசாமி முதலியாருக்குத் தங்கள் ஓட்டுகளைக் கொடுத்தார்கள். இதிலிருந்து சுயமரியாதைப் பிரசாரமும் அதன் எதிர் பிரசாரமும் அநேக பார்ப்பனர்களை யோக்கியர்களாகும்படி செய்து கொண்டும் வருகின்றது என்பதும் வெளிப்படை. எனவே சுயமரியாதை இயக்கத்தாலும் செங்கற்பட்டு மகாநாட்டுத் தீர்மானங்களாலும் “நாஸ்திகம் ஏற்பட்டுவிட்டது,” “கடவுள்கள் ஒழிந்து போய்விட்டன” என்று சொல்லிக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்கக் கூலி வாங்கிக் கொண்டு புறப்பட்ட வீரர்களும், அவர்களுக்குக் கூலி கொடுத்த தலைவர்களும், இதிலிருந்தே பாடம் கற்றுக் கொண்டிருக்கவும், அதாவது ஜஸ்டிஸ் கட்சியின் “ஜீவநாடி” என்பவராகிய திரு.ராமசாமி முதலியார் அவர்கள் பார்ப்பனத் தொகுதி என்று சொல்லப்பட்ட, “செனட்” தொகுதியில் ஒரு சரியான பார்ப்பனரோடு நின்று பல பார்ப்பனரல்லாதார் விரோதமாய் நடந்தும், வெற்றி பெற்றார் என்றால் “நாஸ்திக”த்திற்கு, அதாவது செங்கற்பட்டுத் தீர்மானத்திற்கு முதல் வெற்றி அதுவும் சென்னையிலேயே ஏற்பட்டுவிட்டது என்பதிலிருந்து ஆஸ்திகப் பூச்சாண்டியின் மிரட்டல் இனிப் பலிக்காது என்பதை உணர்ந்து கொள்ளலாம். குடி அரசு - கட்டுரை - 07.04.1929 #நாஸ்திகத்திற்குமுதல்வெற்றி.

“நாஸ்திகத்”திற்கு முதல் வெற்றி

-தந்தை பெரியார்

நமது மாகாணச் சுயமரியாதை மகாநாடு செங்கற்பட்டில் நடந்த பிறகு நமது பார்ப்பனர்கள் அம்மகாநாட்டுத் தீர்மானங்களைத் திரித்துக் கூறியும், பல கூலிகளை விட்டு விஷமப் பிரசாரம் செய்யச் செய்தும் வருவதோடு அதையே இவ்வருஷத்திய தேர்தல் பிரசாரமாக வைத்துக் கொள்ளலாம் எனவும் கருதி சில காலிகளுக்குப் பணஉதவி செய்து உசுப்படுத்திவிட்டு வேடிக்கை பார்ப்பது யாவரும் அறிந்ததாகும். இந்தப்படி காலிகள் மூலம் செய்யப்படும் விஷமப் பிரசாரம் இப்பார்ப்பனர்களுக்கு எவ்வளவு தூரம் பயன்பெறும் என்பதற்குச் சமீபத்தில் ஒரு சரியான பரீiக்ஷ நடத்திப் பார்த்தாகிவிட்டது.

அதாவது, சென்னைப் பச்சையப்பன் தர்ம ட்ரஸ்டிகளில் ஒரு பார்ப்பன ட்ரஸ்டியின் ஸ்தானம், அதாவது ‘சுதேசமித்திரன்’ ‘இந்து’ ஆகிய பத்திரிகைகளில் பத்திராதிபரான திரு.ஏ.ரங்கசாமி அய்யங்கார் என்கின்ற ஒரு பார்ப்பனரின் ஸ்தானம் காலாவதி ஆனதும் அந்த ஸ்தானத்திற்கு மறுபடியும் திரு.ஏ.ரங்கசாமி அய்யங்கார் போட்டி போட தைரியமில்லாமல் விட்டுவிட்டதால் மற்றொரு பார்ப்பனராகிய அதாவது காலித்தனத்திலும், திரு.ரங்கசாமி அய்யங்காரை விட பார்ப்பனத்திமிரிலும், சூழ்ச்சியிலும் தலைசிறந்து விளங்கும் திரு.புர்ரா சத்தியநாராயணா அய்யர் என்ற பார்ப்பனரை நிறுத்தி வேலை செய்தார்கள். ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக திரு.ஏ. இராமசாமி முதலியார் நின்றார். 

இந்தத் தேர்தலில் முக்கியமாகப் பார்ப்பனர்களே பெரும் பான்மையான ஓட்டர்களாயிருந்தும், ஒருபக்கம் பார்ப்பனரல்லாத பிரமுகர்களில் ஒருவரான திரு.சி. டாக்டர். நடேச முதலியாரும் அவரது சகபாடிகளும் திரு.புர்ரா அய்யருக்கே தங்கள் ஓட்டுச்செய்தும் மற்றவர்களின் ஓட்டுகளைச் சேகரித்துக் கொடுத்தும், மற்றொரு பக்கம் சில பார்ப்பனர்கள் செங்கற்பட்டு மகாநாட்டுத் தீர்மானங்களைப் பற்றிக் காலித் தனமாய்க் கூலிகளை விட்டு, திரு. ராமசாமி முதலியாருக்கு எதிரியாய் இழிபிரசாரம் செய்தும் கடைசியாக திரு.ராமசாமி முதலியாரே வெற்றி பெற்றார். 

ஏனென்றால் இந்தக் காலிப் பிரசாரத்தையும் சூழ்ச்சியையும் சென்னைக் கார்ப்பரேஷன் மீட்டிங்கில் திரு.புர்ரா நடந்து கொண்ட மாதிரியையும் பார்த்த பிறகே சில பார்ப்பனர்கள் தைரியமாக வெளிவந்து வெளிப்படையாகவே திரு.ராமசாமி முதலியாருக்குத் தங்கள் ஓட்டுகளைக் கொடுத்தார்கள். இதிலிருந்து சுயமரியாதைப் பிரசாரமும் அதன் எதிர் பிரசாரமும் அநேக பார்ப்பனர்களை யோக்கியர்களாகும்படி செய்து கொண்டும் வருகின்றது என்பதும் வெளிப்படை.

எனவே சுயமரியாதை இயக்கத்தாலும் செங்கற்பட்டு மகாநாட்டுத் தீர்மானங்களாலும் “நாஸ்திகம் ஏற்பட்டுவிட்டது,” “கடவுள்கள் ஒழிந்து போய்விட்டன” என்று சொல்லிக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்கக் கூலி வாங்கிக் கொண்டு புறப்பட்ட வீரர்களும், அவர்களுக்குக் கூலி கொடுத்த தலைவர்களும், இதிலிருந்தே பாடம் கற்றுக் கொண்டிருக்கவும், அதாவது ஜஸ்டிஸ் கட்சியின் “ஜீவநாடி” என்பவராகிய திரு.ராமசாமி முதலியார் அவர்கள் பார்ப்பனத் தொகுதி என்று சொல்லப்பட்ட, “செனட்” தொகுதியில் ஒரு சரியான பார்ப்பனரோடு நின்று பல பார்ப்பனரல்லாதார் விரோதமாய் நடந்தும், வெற்றி பெற்றார் என்றால் “நாஸ்திக”த்திற்கு, அதாவது செங்கற்பட்டுத் தீர்மானத்திற்கு முதல் வெற்றி அதுவும் சென்னையிலேயே ஏற்பட்டுவிட்டது என்பதிலிருந்து ஆஸ்திகப் பூச்சாண்டியின் மிரட்டல் இனிப் பலிக்காது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

குடி அரசு - கட்டுரை - 07.04.1929


Thursday, October 26, 2023

இந்தியாவில் நவீன கல்விமுறை உருவான பின்னணி - பேரா.அ.மார்க்ஸ்

இந்தியாவில் நவீன கல்வி முறை உருவானதன் பின்னணியும்  : சில வரலாற்று நினைவுகளும்!

******************************

நாளந்தா, விகரம ஷீலம் முதலான பௌத்த கல்விமுறை இன்றைய மிக நவீனமான கல்விமுறையின் முன்னோடி.  பன்னாட்டு / பல்துறை அறிஞர்களும் ஒரு மையத்தில் கூடி பன்முக அறிவு வளர்ச்சியை சாதி, மதக் கொடூர வேறுபாடுகள் இன்றி அனைத்து மக்கட் பிரிவினரும் கற்கும் கல்வி முறை அது. சனாதன இந்தியாவில் அது அழித்தொழிக்கப்பட்டது.  மேல் வருணத்தாருக்கே கல்வி. சூத்திரர்களாயின் அவர்கள் இக் கல்விமுறைக்குள் நுழைய முனைந்தால் என்ன நிகழும் என்பதற்கு ஏகலைவன் வரலாறு ஒரு சான்று.  இந்தியக் கல்வி முறையில் இந்த நிலையில் பெரும் புரட்சி எப்போது ஏற்பட்டது?- சற்றே வரலாற்றைப் பின்னோக்கிப் பார்ப்போம்!

***********************************

ஏற்கனவே இது குறித்து சனாதனிகளால் இங்கு புகுத்தப்பட்டுள்ள கருத்துக்களைக் கொஞ்சம் நம் மூளையிலிருந்து கழற்றி எறிந்துவிட்டுத் திறந்த மனத்துடன் நாம் மெக்காலேயின் (தாமஸ் பேபிங்டன் மெக்காலே 1800 – 1859) காலகட்டத்திற்குச் செல்வோம். அவர் இந்தியாவிற்கு வந்து முக்கிய பொறுப்புக்களை ஏற்றுச் செயல்பட்ட காலம் 1834- 1838. அப்போது கப்பல் பயணம்தான். வருவதற்கும் போவதற்கும் பயணக் காலம் குறைந்த பட்சம் 6 மாதங்கள் என வைத்துக் கொண்டாலும் அவர் இங்கிருந்த காலம் சுமார் மூன்று அல்லது மூன்றரை ஆண்டுகள்தான். இந்த மூன்றான்டுகளில் அவர் இங்கு மேற்கொண்ட முக்கிய பணிகள் மூன்று. அவை:

1.புதிய ஆங்கிலக் கல்விச் சட்டம் (1935) இயற்றியது.

2.குற்ற நடைமுறைச் சட்டம் (Criminal Procedure Code) உருவாக்கியது.

 3.ஆங்கிலேயர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டிருந்த வழக்குகளில் மேல்முறையீடு செய்யும் உரிமையை இந்தியர்களுக்கும் அளிக்கும் வகையில் சட்டம் ஒன்று (கறுப்புச் சட்டம்) இயற்றியது ஆகியனவே அவர் இங்கு செய்த பணிகள்.

அவர் வந்த காலகட்டதில் இங்கு கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகம்தான் நடந்து கொண்டிருந்தது. முதல் சுதந்திரப்போர் எனக் கூறப்படும் 1857 பிரிட்டிஷ் எதிர்ப்புப் போருக்கு முந்திய காலகட்டம் அது. அப்போது இங்கு நேரடியான பிரிட்டிஷ் அரசியின் ஆட்சி நடைபெறவில்லை. இந்தியத் துணைக் கண்டம் முழுமையும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவும் இல்லை. ஆங்காங்கு பல்வேறு மொழிகள், பண்பாடுகள், தேச வழமைகள் என்பதாக இந்தியா தொடர்ந்தது.

மெக்காலே இங்கு வருவதற்கு முன்பே ஆங்கிலக் கல்விச்சட்டம் உருவாக்குவதற்கு இங்கொரு குழு உருவாக்கப்பட்டிருந்தது. 10 உறுப்பினர்களைக் கொண்ட அக்குழு இரு சரிபாதிகளாகப் பிரிந்து இரு எதிர் எதிர்க் கருத்துக்களைக் கொண்டிருந்தது. ஒரு குழு அப்போதுள்ள நிலை தொடர்ந்தால் போதுமானது என்றது. அப்போதுள்ள நிலை என்றால் ஒரு பக்கம் சமஸ்கிருதக் கல்வி, இன்னொறு பக்கம் முகலாய ஆட்சிகள் இருந்த பகுதிகளில் பெர்சியன் மற்றும் அரபிக் கல்விகள். மற்றொரு குழு ஆங்கிலக் கல்வியை முன்மொழிந்தது. கல்வித் திட்டம் வகுக்கும் பொறுப்பை ஏற்குமுன் மெக்காலே முதலில் இதற்கொரு முடிவு காணுதல் அவசியம் என்றார்,

இப்போது அன்றைய உலகக் கல்விச் சூழல் எவ்வாறு இருந்தது என்பதைச் சற்றுக் காண்போம். நவீனத்துவம், மறுமலர்ச்சி என்றெல்லாம் சொல்லும் புதிய விழிப்புணர்வு உலகெங்கும் ஏற்பட்டுக் கொண்டிருந்த காலம் அது. அப்படியான ஒரு விழிப்புணர்வு உருவாகாத மூட நம்பிக்கைகளின் நாடாக இந்தியா இருந்தது என்பதைத் தனது எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் பலமுறை, ஆம் பலமுறை தந்தை பெரியார் சுட்டிக் காட்டி இருப்பதை நாம் அறிவோம். தத்துவ வளர்ச்சியின் வரலாற்றில் மேலை நாடுகளில் உருவான “அறிவொளிக்காலம்” (Enlightenment) எனப்படும் தத்துவ மறுமலர்ச்சி இங்கு உருவாகவே இல்லை. சங்கரர், இராமானுஜர், மத்வர் ஆகியோருடைய காலத்தோடு இங்கு தத்துவ வளர்ச்சியில் ஒரு தேக்கம் ஏற்பட்டது. பௌத்த தத்துவ வளர்ச்சிகளும் காஞ்சி மற்றும் அமராவதி காலத்துடன் தேக்கமுறுகிறது.

கல்வி வளர்ச்சியைப் பொருத்தமட்டில் குருகுலக் கல்விக்கு மாற்றாக பௌத்தம் உருவாக்கிய நாளந்தா, விக்ரமஷீலம் முதலான பல்கலைக் கழகங்களும் அழிக்கப்பட்டன.

ஆனால் மேலை நாடுகளில் உருவாகியிருந்த அறிவொளிக்கால விழிப்புணர்வு கல்வித்துறையில் மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கியது.

முதல் முதலாக நவீன மாதிரியான பல்கலைக் கழகம் என்கிற கருத்தாக்கம் அங்குதான் உருவானது. ஜெர்மனி இதில் முக்கிய பங்கு வகித்தது. புகழ்பெற்ற தத்துவ ஞாநிகள் ஃபிச்டே , ஹம்போல்ட் முதலானோர் அதற்கான Blue Print ஐ உருவாக்கித் தந்த வரலாற்றை லியோடார்ட் விரிவாக விளக்கியுள்ளார் (பார்க்க :எனது பின் நவீனத்துவம் தொடர்பான கட்டுரைகள்).

பல்வேறு புதிய கல்வித்துறைகள் உருவான இச்சூழலில் ஏற்கனவே கல்வி என்றால் லத்தீன் / கிரேக்க மொழிகளில்தான் பயிற்றுவிக்கப்பட வேண்டும் எனும் நிலை அங்கு இவ்வாறு தகர்ந்தது. பதிலாக நவீன மொழிகள் கல்வி மொழிகளாயின.

இங்கும் அப்படியான ஒரு புதிய கல்விமுறை உருவாவது தவிர்க்க இயலாத ஒன்றாக இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சி இங்கு அறிமுகப்படுத்திய நவீன மாற்றங்களின் ஊடாக அது நிகழ்ந்தது. ஆங்கிலேயர்களின் வணிகத் தொடர்பு மற்றும் அதை ஒட்டி மதம் பரப்ப இங்குவந்த கிறிஸ்தவப் பாதிரிமார்கள் உருவாக்கிய கல்விக்கூடங்களின் வழியாக நவீன கல்வி வளர்ச்சி இங்கே அரும்பத் தொடங்கியது. அது சமஸ்கிருதம், பெர்சியன் மொழிகளைத் தவிர்த்து ஆங்கில மொழியை ஊடகமாகக் கொண்டு நவீன கல்வியை இங்கே பெரிய அளவில் அறிமுகப் படுத்தியது.கல்வி முறையில் இங்கு பாரம்பரியமாக இங்கே நிலவிய சாதி, மத வேறுபாடுகள், தீண்டாமை முதலான ஒடுக்குமுறைகள் ஆகியன நிபந்தனையாக்கபடாத ஒரு கல்வி முறையாகவும் அது இருந்தது.

மெக்காலே இந்த இரண்டாவது போக்கை ஆதரித்தார். உயர் கல்வி ஆங்கிலத்திலும் அடிப்படைக் கல்வி ஆங்காங்குள்ள தாய்மொழிகளிலும் இருக்க வேண்டும் என்றார். ஆங்கிலத்தில் கற்கும் கல்வியை அவ்வாறு கற்கும் இந்தியர்கள் தத்தம் தாய்மொழிக்குக் கொண்டு வருவார்கள் எனும் நம்பிக்கையையும் அவர் தெரிவித்தார்.

“இந்திய மக்களை எப்போதுமே நமக்கு அடிமைகளாக வைத்துக் கொள்வதற்காக அவர்களை நாம் எப்போதுமே அறிவிலிகளாகவும் தற்குறிகளாகவும் வைத்துக் கொள்ள வேண்டுமா? அல்லது அவர்கள் மத்தியில் உயர் குறிக்கோள்களை நோக்கி ஆசைப்படாத ஒரு அறிவை மட்டும் அவர்களுக்குத் தந்தால் போதும் என்கிறோமா? அல்லது அவர்கள் மத்தியில் உயர் குறிக்கோள்களை விதைத்துவிட்டு அதற்கு வழி இல்லாமல் செய்யப்போகிறோமா? இந்தக் கேள்விகளில் யாதொன்றுக்காவது ‘ஆம்’ என யார் பதிலளிக்கப் போகிறார்கள்? எனினும் இந்த நாட்டு மக்களை உயர் பதவிகளிலிருந்து நிரந்தரமாக விலக்கி வைக்க விரும்பும் யாரும் இதில் ஏதேனும் ஒன்றிற்காகவாவது ‘ஆம்’ எனப் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். எனக்கு அச்சங்கள் இல்லை. கடமையின் பாதை இதோ தெளிவாக நம் முன்… அதுவே பேரறிவின் பாதை…தேசச் செழுமையின் பாதை.. தேசப் பெருமையின் பாதை..”- என்பதாக அவர் உரை அமைந்திருந்தது.

அன்று உருவாகியிருந்த ஒருவகை உலகளாவிய (utilitarian liberal universalism -Rudolphs) போக்குடன் இசைந்ததாக நமது கல்வியை நவீனப்படுத்துவது என்பதாக அவரது பார்வை அமைந்தது என்பது இங்கே கவனத்துக்குரியது. “சுவையிலும், ஒழுக்கத்திலும், கருத்துக்களிலும், மதிப்பீடுகளிலும் ஆங்கிலேயத் தன்மை மிக்க” இந்தியர்களையும் இந்தியாவையும் உருவாக்குதல் குறித்து மெக்காலே பேசியதை நாம் இப்படியும் புரிந்து கொள்ள வேண்டும். சாதி, தீண்டாமை, மதம், பல கண்மூடிப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றால் அடையாளம் காணப்பட்ட இந்தியாவை நவீன உலகிற்கு இட்டுச் செல்லுதல் என்பதான ஒரு நோக்கம் அதில் வெளிப்படுவதை நாம் கவனம் கொள்ள வேண்டும்.

ஆனால் 1850 க்குப் பின் இங்கு நிலைமை மாறியது. நவீன இந்தியாவின் முக்கியமான திருப்பப் புள்ளிகளில் ஒன்று 1857. சிப்பாய்க் கலகம், சிப்பாய்கள் மற்றும் விவசாயிகளின் கிளர்ச்சி, முதல் சுதந்திரப் போர் என்றெல்லாம் பலவாறாகச் சித்திரிக்கப்படும் இந்த எழுச்சி கம்பெனி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்ததோடன்றி இந்திய ஆளுகை பற்றிய காலனிய அரசின் அணுகல் முறையில் சில முக்கிய மாற்றங்களையும் ஏற்படுத்தியது. வில்லியம் பென்டிக், மெக்காலே, டல்ஹவுசி முதலானோரால் 1830 -50 காலகட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்தத் தாராளப் பொதுமை என்பதிலிருந்து சற்றே பின்வாங்கும் நிலையை விக்டோரியா மகாராணியின் பிரகடனம் (1858) வெளிப்படுத்தியது. 1857 எழுச்சியை அவர்கள் கொடுங் கரங் கொண்டு ஒடுக்கியபோதும் இந்திய மக்களின் எதிர்ப்பின் வன்மை அவர்களின் ஈரக்குலைகளில் நடுக்கத்தையும் ஏற்படுத்தியது.

இனி இந்தியர்களின் தேச வழமைகளில் தலையிடுதல், வாரிசு இல்லை என்றெல்லாம் சொல்லி வன்முறையாக அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளைக் கைப்பற்றல் (doctrine of lapse) என்பதையெல்லாம் கைவிட்டு, வேறுவகை அணுகல் முறைகளைக் கைக்கொண்டு தங்களின் காலனியச் சுரண்டலைத் தொடர்வது என்கிற நிலைக்கு இட்டுச் சென்றது.

விக்டோரியா மகாராணியின் அறிக்கை,

“இனி மதநம்பிக்கை, மற்றும் (அவை சார்ந்த) வழமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தப் பிரிவினருக்கும் சலுகைகள் காட்டுவதோ, இல்லை அவற்றின் அடிப்படையில் ஒடுக்குமுறைகளை மேற்கொள்வதோ இருக்காது. எல்லோரும் ஒன்றேபோல சமமான, பாரபட்சமற்ற சட்டப் பாதுகாப்புகளைப் பெறுவர். இனி எமது ஆட்சியின் கீழ் அதிகாரத்தில் உள்ள யாரும் மக்களின் மத நம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டு வழமைகளில் தலையிடக் கூடாது என உறுதியாக ஆணையிடப்படுவர்” – எனப் பிரகடனப் படுத்தியது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய பொதுமை என்பதான பயன்பாட்டுவாதிகளின் (utilitarian) அணுகல் முறைகளிலிருந்து சற்றே விலகுதல் என 1957 க்குப் பின் பிரிட்டிஷ் அரசு மேற்கொண்ட இந்த நிலைப்பாடு மக்களின் தனித்துவமான மதம் சார்ந்த ஒழுகல் முறைகள், சாதி முதலான பண்பாட்டு அடையாளங்கள் ஆகியன சட்டப் பாதுகாப்புகளுடன் இங்கு தொடர வாய்ப்பாக்கியது. இந்தியச் சனாதனத்துடன் பிரிட்டிஷ் ஆளுகை சமரசம் செய்து கொண்ட பின்னணி இதுதான்.

எனினும் கல்வித்துறையைப் பொருத்தமட்டில் இங்கு பிரிட்டிஷ் ஆட்சியின் ஊடாக உருவான புதிய கல்விமுறையும், ஏராளமான கல்விக்கூடங்களும் பெரிய அளவில் இதுகாறும் கல்வி மறுக்கப்பட்ட அடித்தள மக்கள் கல்வி பெற்று மேலெழ வாய்ப்பளித்தது.

மெக்காலே குறித்த சங்கிகளின் ‘ஃப்ராட்’ பரப்புரைகள்:

மெக்காலே இந்தியாவில் உலகளவில் உருவாகிக் கொண்டிருந்த அறிவு வளர்ச்சிக்கு உரிய வகையில் ஒரு பொதுக்கல்வி முறையை உருவாக்கினார்.

எனினும் சிப்பாய்கள் மற்றும் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட முதல் (1857) புரட்சிக்குப் பின் இந்தியர்களைக் கையாள்வதில் பிரிட்டிஷ் ஆட்சி சில எச்சரிக்கைகளைக் கடை பிடித்தது. அவ்வாறான எச்சரிக்கைகள் எல்லாமே பாராட்டுக்குரியவை அல்ல. குறிப்பாக இங்குள்ள சாதி, தீண்டாமை முதலான தேச வழமைகளில் பிரிட்டிஷ் அரசு தலையிடுவதில்லை என எடுத்த முடிவு அடித்தள மக்களைப் பொருத்த மட்டில் பெரிய இழப்பாகவே இருந்தது.

எனினும் கல்வித்துறையைப் பொருத்தமட்டில் இங்கு பிரிட்டிஷ் ஆட்சியின் ஊடாக உருவான புதிய கல்விமுறையும், ஏராளமான கல்விக்கூடங்களும் பெரிய அளவில் இதுகாறும் கல்வி மறுக்கப்பட்ட அடித்தள மக்கள் கல்வி பெற்று மேலெழ வாய்ப்பளித்தது.

இந்தப் புதிய கல்விமுறைக்கு இணையாக இங்கு இன்னொரு அறிவுப் புரட்சியும் நடந்து கொண்டிருந்தது. வடமொழிகளும் தென்மொழிகளும் முற்றிலும் வெவ்வேறான தனித்தன்மைகள் கொண்டவை என்கிற ஆய்வுகள், சிந்து வெளி அகழ்வுகள் முதலியன இந்திய மக்களிடையே புதிய விழிப்புணர்வுகளை உருவாக்கின.

அச்சுக்கலையின் ஊடாக இதுகாறும் அழிந்துகொண்டும் அழிக்கப்பட்டுக் கொண்டும் இருந்த தமிழ் சிரமண நூல்களில் எஞ்சியவை காப்பாற்றப்பட்டன.

புதிய கல்விமுறை இங்கு ஏற்படுத்திய விழிப்புணர்வுக்குச் சான்றாக ஒரு வரலாற்று நிகழ்வை முந்திய கட்டுரை ஒன்றில் நான் குறிப்பிட்டுள்ளேன். அறிஞர் உ.வே.சாமிநாத அய்யர் அவர்கள் தனது ஆசான் மாயவரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் குருகுலக் கல்வி பயின்றது குறித்து மிக விரிவாக எழுதியுள்ளார். அறுபதாயிரம் பாடல்கள் இயற்றியவர் என அறியப்படும் மீனாட்சி சுந்தரனாரிடம் கல்வி கற்றுத்தேறிய உ.வெ,சா அடுத்து அன்று புதிய ஆங்கில முறை நவீனக் கல்லூரியாக உருவாகியிருந்த குடந்தை அரசு கல்லூரியில் பணியில் சேர்ந்த பின்னர்தான் சீவகசிந்தாமணி முதலான சிரமண மரபில் வந்த பெருங்காப்பியங்கள் முதலானவற்றின் இருப்பையே அறிகிறார். பல ஆண்டுகள் பாரம்பரியக் கல்வியைக் கற்றிருந்தபோதிலும் அவற்றை அவரால் விளங்கிக் கொள்ள முடியவில்லை என்பதை அவரது தன்வரலாற்றிலிருந்து நாம் அறிகிறோம்.


Monday, October 23, 2023

வரலாற்றின் வேர்கள்

 வரலாற்றின் வேர்கள்  -1                          -அண்ணாமலை சுகுமாரன்

கடந்த காலத்தின் இரத்தக்கறை படிந்த அடிச்சுவடுகளைப் பற்றியும் , அவ்வப்போது நடைபெற்ற போர்கள், அதில் அடைந்த வெற்றிகள் ,ஆக்கிரமித்த நாடுகள் இவைகளைப்பற்றி விவரிப்பதும் , வெற்றிபெற்ற மன்னர்களின் கீர்த்தியை சொல்வதும்தான் வரலாறு என்ற பொதுவான புரிதல் இருந்தாலும், வரலாறு (History) என்ற சொல் இறந்த காலத்தைப் பற்றிய தகவல்கள் விவரிப்பது என்னும் பொருளிலேயே பொதுப்படையாகப் பயன்படுகிறது.

ஆயினும் வரலாறு என்பது மன்னர்களைப்பற்றி மட்டும் இல்லாமல், அது அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த சாமான்ய மக்களைப்பற்றியும், அவர்களின் பொருளாதாரம், வாழ்வியல் முறைமைகள், கல்வி, இலக்கியம், பண்பாடு, மொழி என அனைத்தையும் விளக்குவதாக இருக்கவேண்டும். இந்த வரலாற்றை கணிக்க தக்க சான்றுகள் வேண்டும் .

ஆதாரங்கள் எனும் உறுதியான கற்களால் கட்டமைக்கப்பட்டதே வரலாறு .

வரலாறு தற்போது தொல்லியல் என அறிவுப்பூர்வமானதொரு விஞஞானம் போல் ஆகிவிட்டது . அதன் ஆய்வுக்கு இப்போது பல்வேறு துறைசார்ந்த அறிவும் அவசியமாகிவிட்டது .


தொல்லியல் என்பது, வரலாறு ,மானிடவியல், கலாச்சாரம் , பொருளாதாரம் இனவரலாறு, நீரடி தொல்லியல்,என பல்வேறு துறைகளின் அறிவு தேவைப்படுகிறது .

தொல்லியல் எதிர்கால மனித வாழ்க்கைக்கு ஒரு செய்தியை எப்போதும் கூறிவருகிறது. கடந்த காலத்தைப் பொறுத்தே வருங்காலம் அமைகிறது .

இப்போது வாழும் வாழ்க்கையின் விதை கடந்த காலத்தில்தான் இருக்கிறது .வரலாற்றை நிர்ணயிக்க சான்றுகள் மிக அவசியம் .

நமது நாட்டைப்பொறுத்தவரை சான்றுகளை போற்றிப்பாதுக்காக்க நாம் எப்போதும் கவனம் செலுத்தியதில்லை .

மேலும் இந்தியாவின் வரலாறு என்பது முகமதியர்களின் படையெடுப்பிலிருந்துதான் அறியப்பட்டிருந்தது. அதற்கு முன் இந்தப் பகுதியில் என்ன நடந்தது என்பதைப் பற்றி ஒரு தகவலும் இல்லை.

அலெக்சாண்டர், 326 BCயில் இந்தியாவுக்குப் படையெடுத்து வந்தார் என்ற ஒரு குறிப்பு மட்டுமே இருந்தது. அதற்கு முன்னும் பின்னும் ஒன்றும் தெரியாது. தமிழ் நாட்டிலோ இன்னமும் மோசம் தஞ்சை பெரியக்கோயிலே கரிகால் சோழன் கட்டியது என்று ஒரு கதை நிலவிவந்ததாக பொன்னியின் செல்வன் எனும் ஒரு குழுவில் ஆறு ஆண்டுகளுக்கு முன் ஒரு செய்தி விவாதத்தில் இருந்தது நினைவிருக்கிறது .

ஒவ்வொரு கோவிலுக்கும் பின்புலத்தில் ஒரு புராணக் கதை நம்ப முடியாதபடி இருக்கும் . வரலாற்று செய்தி அதில் மறைந்து கிடக்கும் .நெல் மணியை சேர்க்க ஆரபித்த குதிரில் நெல்லை விட பதர்கள் அதிகம் ஆனது போல் புராண கற்பனையில் வரலாற்று உண்மைகள் மறைந்து போயின .நெல் மணிகள் காணாமல் மறைந்து போயின .

திருப்பணி என்றபெயரில் நமது கோவில்களில் இடம்பெற்றிருந்த வரலாற்று ஆதாரங்களான கல்வெட்டுகள் சிதைக்கப்பட்டு வீசியெறியப்பட்டன .இன்னமும் தமிழ் நாட்டில் இதே நிலைதான் தொடருவது தான் வேதனைக்குரியது. மற்றொரு புறம் வேறு பலர் அறியாமையால் அவற்றை அழித்துக்கொண்டும் இருந்திருக்கிறார்கள். இந்த அழிப்பு, ஆங்கிலேயர்கள் இந்தியா வருவதற்கு முன்பாகவே தொடங்கிவிட்டது. இந்தியாவிற்குள் நுழைந்த முகமதியர்கள், நிறைய சேதங்கள் ஏற்படுத்தினார்கள். 

குதூப் மினார் இருந்த இடத்தில் 27 கோயில்கள் இருந்தனவாம். மதுராவில் நிறைய சிற்பங்கள் இருந்ததாகச் சீனப் பயணி சொல்லியிருக்கிறார். 

1857இன் சிப்பாய்க் கலகத்திற்குப் பிறகு ஆங்கிலேயர்கள் தங்கள் பங்கை அழிவில் செய்திருக்கிறார்கள். 

பல பழைய கோட்டைகள் ராணுவக் கிடங்காகவும், சில ராணுவ மருத்துவமனையாகவும், ராணுவ பேக்கரியாகவும், பயன்பட்டிருக்கின்றன. தாஜ் மஹால் விருந்து நடத்தும் இடமாக இருந்திருக்கிறது . தாஜ் மஹாலின் ஒரு பகுதி, தேன்நிலவுக்கு வந்தவர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது. ஆனால், இன்றுவரை இந்த சேதப்படுத்துதல்கள் தொடர்ந்து கொண்டுதானே இருக்கின்றன?

இன்றும் பல கோட்டைகள் சுற்றுலா விடுதிகளாக சுதந்திர இந்தியாவிலும் இருக்கின்றன. (உதயகிரி) தரங்கம்பாடியில் இருக்கும் டேனிஷ் கோட்டை 30 ஆண்டுகளுக்கு முன் அரசாங்க ஒய்வு விடுதியாகப் பயன்பட்டதை நானே பார்த்திருக்கிறேன். பல அரண்மனைகள் தமிழ் நாட்டில் இன்னமும் அரசு அலுவலகங்களாக இருந்து வருகிறது .

இந்த நிலையில்தான் இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்ற வந்த வெள்ளையர்களில் சிலர், இந்தியாவைப் பற்றி அறிந்து கொள்வதில் தீவிரம் காட்டினர். அவர்கள் வந்தது என்னவோ வேறு வேலைக்கு ஆயினும் கம்பெனியின் ஆதரவு என்பதெல்லாம் இத்தகைய ஆய்வுகளுக்கு இல்லை; என்றபோதிலும் , இவர்கள் தங்களுடைய சொந்த ஆர்வத்தின் பேரில் இந்திய வரலாற்று சான்றுகளைப் பற்றிய ஆராய்ச்சியைச் தொடர்ந்திருக்கிறார்கள்.

அப்போது இருந்த காலகட்டத்தில் இந்தியர்களுக்கு நாகரீகம் எதுவும் கிடையாது. பிரிட்டிஷ் வருகைக்குப் பிறகுதான் எல்லாமே என்று எழுதிவைத்ததோடு , இந்தியர்கள் மனதில் ஒருவகை தாழ்வு மனப்பான்மையை குடி கொள்ளச் செய்தார்கள்.

அந்த நிலையில் சில கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்ற வந்த வெள்ளையர்களில் உள்ள மனசாட்சியுள்ள சிலர் தொல்லியல் சான்றுகளை மேலும் அழிவிலிருந்து காத்து இந்தியாவின் வரலாறு எனும் கட்டிடம் எழ உதவி செய்தனர் .

அத்தகையோரை பரவலாக அறியச் செய்வது வரலாற்றை அறிவதில் மிக முக்கியமானதாகும்.முதலில் வரலாறு உருவாக உதவி செய்த அயல் நாட்டினரைப் பற்றியும், அதனைத் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற முக்கிய தொல்லியல் நிகழ்வுகளையும் அதற்கு உறுதுணையாக இருந்த இந்தியா முழுவதும் இருந்த வரலாற்று ஆர்வலர்களைப் பற்றியும் அறிஞர்களையும் அறிமுகம் செய்யும் விதமாகவும் முக்கியமாக தமிழ் நாட்டில் வாழ்ந்த திருவாளர்கள் நீலகண்ட சாஸ்திரி அவர்கள், க. அப்பாதுரை அவர்கள் சதாசிவ பண்டாரத்தார் முதல் ஐராவதம் மகாதேவன் அவர்கள், நாகசாமிஅவர்கள், ராஜமாணிக்கனார்அவர்கள், புலவர் ராசு அவர்கள் ,நடன காசிநாதன் அவர்கள் ,தியாக சத்தியமூர்த்தி அவர்கள் குடவாசல் பாலசுப்ரமணியன் அவர்கள் , குடந்தை சேதுராமன்  அவர்கள், பத்மாவதி அவர்கள் போன்ற இன்னுமும் உழைத்துக் கொண்டிருக்கும் பலரையும், சொல்லாமல் விடுபட்ட இன்னமும் பலரை அறிமுகப்படுத்தும் தொடர் இது .

வாசகர்களாகிய உங்கள் ஆதரவு இருக்கும்வரை இத்தொடர் தொடர்ந்து வரும் .

பகுதி 1- அயல் நாட்டு அறிஞர்கள்

சர் வில்லியம் ஜோன்ஸ்

1746 இல் பிறந்த சர் வில்லியம் ஜோன்ஸ் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் சட்டம் பயின்று வக்கீலானார். வாரன் ஹேஸ்டிங் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தபோது 1783இல் கல்கத்தா உச்சநீதிமனறத்திற்கு நீதிபதியாக இந்தியா வந்தார், 

அவர் கிரேக்கம், இலத்தீன், பாரசீகம், ஹீப்ரு அரேபிய மொழிகளை சிறிய வயதிலேயே கற்றறிந்தார். இந்தியாவிற்கு வந்தபின் இந்தியாவின் பழம் மொழிகளில் ஒன்றான சம்ஸ்கிருதத்தைப் பற்றி அறிந்த பின்பு அதன் மீது ஆர்வம் ஏற்பட்டது.

அவர் அப்போது கல்கத்தாவில் பணிபுரிந்ததால்பெருமைமிகு  தமிழ் பற்றி அறியும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை 

தனக்கு சம்ஸ்கிருதம் போதிக்க ஓர் வங்காள பிராமண சம்ஸ்கிருத ஆசிரியர் ராம் லக்‌ஷ்ன் கவிபூசன் என்பவரை தேர்ந்தெடுத்தார். அந்த கவிபூசன் கல்கத்தாவில் நெருக்கடியான மக்கள் குடியிருப்பில் வசித்துவந்தார். அங்கே சென்று சர்.வில்லியம் ஜோன்ஸ் சம்ஸ்கிருதம் கற்றுவந்தார் . தினமும் வகுப்பு முடிந்ததும் ‘மிலேச்சன்’ உட்கார்ந்த இடத்தை தண்ணீர்விட்டு சுத்தம் செய்வாரம் அந்த ஆசிரியர். இதைப் பார்த்த வில்லியம் ஜோன்ஸ்க்கு அது பெரிய விஷயமாகப்பட வில்லையாம் ஆசிரியர்கள் செய்யும் ஒரு சடங்கு என்று நினைத்துக்கொண்டாராம்.

பின்னர் சம்ஸ்கிருதத்தில் அவர் தேர்ச்சி பெற்றபின்பு பல நூல்களை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். அதில் அபிக்ஞான சாகுந்தலம் என்பது முக்கியமானது. அவருக்கு ஏற்கனவே கிரேக்கம் இலத்தீன் மொழி ஞானம் இருப்பதால் சம்ஸ்கிருதம், கிரேக்கம், இலத்தீன் மொழிகளுக்குள்ள ஒற்றுமையை ஆராய்ச்சி செய்தார். இலத்தீன் மொழியைவிட சம்ஸ்கிருதம் கிரேக்க மொழியுடன் நிறைய ஒற்றுமையிருக்கிறது, இந்த மூன்று மொழிகளிலும் ஒன்றிலிருந்து பிரிந்தவை என்று ஆய்வின் முடிவில் கண்டறிந்தார்.தென்னிந்தியா பற்றி அப்போது அவர்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லை .

வங்காளத்திற்கு நீதிபதியாக வந்த ஜோன்ஸ், அங்கே வந்த பதினாராவது வாரத்தில் 1784இல் ஏசியாட்டிக் சொசைட்டியைத் தொடங்குகிறார். 

சொசைட்டியின் நோக்கம், இந்தியாவில் இருக்கும் சகல விஷயங்களைப் பற்றியும் பதிவு செய்வது. மொழி, வானவியல் சாஸ்திரம், அறிவியல், மருத்துவம், நீதி, வரலாறு, புவியியல், விவசாயம், வணிகம், இசை, கட்டிடக்கலை, கவிதை இப்படி பல விஷயங்களைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை திரட்டுவதே அவர்களுடைய எண்ணம். மனிதனின் கால் பதியாத நாகரீகம் இல்லாத வனம் போன்ற ஒரு அடர்த்தியான இருட்டில் இருந்த பிரதேசமாக அவர்கள் இந்தியாவை நினைத்திருந்தார்கள் . எனவே கிடைத்த அத்தனையையும் ஆவணப்படுத்த – இந்தியாவெங்கும் அங்கங்கே இருந்த வெள்ளையர்கள் தாங்கள் கண்டதை ஏசியாட்டிக் சொசைட்டிக்கு கட்டுரைகளாக அனுப்பினார்கள். ஜோன்ஸ் இதையெல்லாம் தொகுத்து, முதல் தொகுப்பை 1789இல் வெளியிட்டார்.

ஜோன்ஸின் தனிப்பட்ட ஆர்வம் சமஸ்கிருத மொழியில் இருந்தது. அவர் சமஸ்கிருதத்தை இலத்தீன் கிரேக்க மொழிகளோடு ஒப்பிட்டார். சமஸ்கிருதக் கடவுளர்களையும் அவர் கிரேக்க கடவுளர்களுக்கு ஒப்பிட்டார். சமஸ்கிருத காப்பியங்களை ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்தார். காளிதாஸரின் சாகுந்தலத்தை 1788இல் மொழிபெயர்த்து வெளியிட்டார். இந்தியாவுக்கு அவர் கொடுத்த கொடை, மெகஸ்தனிஸின் இந்தியாவைப் பற்றிய குறிப்பை ஆராய்ந்து இந்தியாவின் நீண்ட வரலாற்றை எழுதத் துவங்குவதற்கான ஒரு தொடக்கப் புள்ளியைக் கொடுத்தது.அவரே தென்னிந்தியாவிற்கும் வந்திருந்தால்  வரலாற்றின் பார்வை வேறுமாதிரி அமைந்திருக்கும் .

அலெக்ஸாண்டரின் படையெடுப்புக்குப்பின் மெகஸ்தனிஸ் இந்தப் பக்கம் வந்திருக்கிறார். அவர் தன்னுடைய குறிப்பில், கங்கையை எர்ரானாபொஸ் (Erranaboas) சந்திக்கும் இடமான பாலிபொத்ராவில் சாண்ட்ராகோட்டஸ் என்ற அரசன் இருந்தான் என்று எழுதியிருக்கிறார். இதில் உடனடியாகத் தெரிந்த விஷயம் கங்கை மட்டுமே. ஆனால், அதில் கலக்கும் எர்ரானாபொஸ் என்ற நதி பற்றி எந்தக் குறிப்பும் இந்தியாவில் இல்லை. வேறு ஏதோ ஒரு நதியை அப்படிக் குறிப்பிடுகிறார்.

ஒருவேளை அது சரஸ்வதி போல் தடம் இல்லாமல் போன ஒரு நதியாக இருக்கலாமோ ?

அடுத்தது, பாலிபொத்ரா: அந்தப் பெயருக்கு நெருக்கமான பெயராக இருப்பது பாடலிபுத்திரா என்ற தற்போதைய பாட்னா. ஒருவழியாக அந்தப் பக்கம் முன்பொரு காலத்தில் ஓடிய நதியைத்தான் கிரேக்க மொழியில் எர்ரானாபொஸ் என்று சொல்கிறார் என்று கண்டுபிடித்தாயிற்று. ஆனால், சாண்ட்ராகோட்டஸ்? சமஸ்கிருத மொழியிலிருந்து எடுக்கப்பட்ட அரசர்கள் பட்டியலில் அப்படி ஒரு பெயர் இல்லை. ஆனால் சந்திரகுப்தர் என்ற பெயர் நெருக்கமாக இருப்பதைக் கண்டு, கிரேக்க பயணி சந்திரகுப்தரின் பாடலிபுத்திரத்திற்குத்தான் வந்திருக்க வேண்டும் என்று முடிவாகிறது. ஆசியாவில் அலெக்சாண்டருக்கு பின்னால் வந்த செலூக்கஸின் அரசவையில் இருந்தவர் மெகஸ்தனிஸ். செலூக்கஸ் 312BCயில் பாபிலோன் திரும்பிச் சென்றதாக குறிப்பிருக்கிறது. ஆகவே, சந்திர குப்தரின் காலம் அலெக்சாண்டரின் இந்தியப் படையெடுப்புக்கும் (326 BC), 312 BCக்கும் இடைப்பட்டதாகும் என்று முடிவாகிறது. வரலாறே தெரியாத இடத்தில் இதுவொரு பெரிய முன்னேற்றம்.

இவ்வாறு இந்திய வரலாறுக்கு சர் வில்லியம் ஜோன்ஸ் ஒரு நல்ல துவக்கத்தையும் , உலகின் கவனத்தை இந்திய வரலாற்றின்மேல் திருப்ப ஒரு முக்கிய காரணமாகவும் இருந்தார் .அவரைத்தொடர்ந்து பல ஐரோப்பியர்களுக்கு இந்திய வரலாற்றின் மேல் ஒரு ஆர்வம் தோன்றியது வரலாற்றின் ஆய்வில் பலருக்கு ஆர்வம் எழ சர் வில்லியம் ஜோன்ஸ் முக்கிய காரணமாக விளங்குகிறார்

2) சார்லஸ் வில்கின்ஸ்

சார்லஸ் வில்கின்ஸ் ஒரு சிறந்த சம்ஸ்கிருத அறிஞர் இவர் வில்லியம் ஜோன்ஸ்அவர்களின் நண்பர் இவர் கல்கத்தாவுக்கு 1770 ஆம் ஆண்டு இந்தியா வந்தார் .

சமஸ்கிருதம் பற்றிய ஆழமான புலமை பெற்ற ஆங்கிலேயர்களின் இவரே முதன்மையானவர் எனலாம். குப்தர்களின் கால எழுத்தைக் கண்டுபிடித்ததில் இவரது பணி முக்கியமானது . இது இந்தியாவின் கல்வெட்டு இயலில் மிக முக்கியமானதாக அமைந்தது .

அந்தக்காலகட்டத்தில் உலகில் ஒரு நம்பிக்கை மக்கள் மத்தியில் ஆழமாக இருந்தது அது உலகின் அனைத்து மொழிகளும் ஹீப்ரு மொழியில் இருந்து தோன்றியது என்பதே .

இந்தியாவில் வந்து இவர் செய்த ஆய்வுகளுக்குப்பின் பாரசீகமும் ஐரோப்பிய மொழிகளும் ஒரே மூதாதையரிடம் இருந்து தோன்றியது என நிறுவினார்.

அண்ணாமலை சுகுமாரன்15/12/2016  மீள்பதிவு  15/10/2023

Sunday, October 15, 2023

எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட வரலாறு- தராசு ஷ்யாம்

தமிழகத்தின் இரு பெரும் திராவிடக் கட்சிகளில் ஒன்றான அ. இ. அ. தி. மு. க.வின்  பொன்விழா துவக்கம் 2021 அக்டோபர் 17. 

அதன் அரை நூற்றாண்டு கால திசை வழிப் பயணம் என்ன? இனி அதன் போக்கு எப்படி அமையும்? 

அண்ணா திமுக பிறந்த 1972 அக்டோபர் 17ஆம் தேதிக்கு முந்தைய அரசியல் களம் படு சூடு.  தமிழக சட்ட மன்றத்தைக் கலைத்து 1971 பார்லிமென்ட் தேர்தலுடன் முன்கூட்டியே களம் கண்டார்  திமுக தலைவர் கலைஞர்.  அவர் சென்னையிலிருந்து தெற்கு நோக்கிப் புறப்பட்டுப் பரப்புரையில் ஈடுபட்டார்.  பொருளாளர் எம்ஜிஆர் தென்திசையில் இருந்து புறப்பட்டு வடதிசை நோக்கித் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தார்.  திட்டமிடலும் ஒருங்கிணைப்பும் அந்த அளவுக்குத் துல்லியம். 

இந்திரா காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், பிரஜா சோஷலிஸ்ட், முஸ்லிம்லீக், போன்றவை திமுக கூட்டணி.  கட்சி வேட்பாளர்கள் நிறைய பேருக்கு எம்ஜிஆர் நிதி உதவியும் செய்தார். அவர்கள் பரப்புரை மேடைகளிலும் பேசினார். பிரசாரம்  முடிந்ததும்  "இதயவீணை" படப்பிடிப்புக்காக அவர் காஷ்மீர் சென்றார் 

மார்ச் மாதம் நடந்த 1971 தேர்தலில் திமுக மகத்தான வெற்றி அடைந்தது. அதன் கூட்டணிக்கு மொத்தம் 205  தொகுதிகள் கிடைத்தன. 203 தொகுதிகளில் களம் கண்ட திமுக தனியாக 184 இடங்களில் வென்றது. 

தேர்தல் முடிவுகள் வெளிவரத் துவங்கியதும், எம்ஜிஆர் காஷ்மீரில் இருந்து தனி விமானத்தில் சென்னை திரும்பினார்.  திமுகவின் அமோக வெற்றிக்கு காரணம் யார் என்று பத்திரிகைகள் அலசத் துவங்கின 

எம்ஜிஆர் மந்திரி பதவி கேட்டதாகவும் படங்களில் நடிப்பதை நிறுத்தினால் அவரை அமைச்சராக்குவதாகக்  கலைஞர் சொன்னதாகவும்   சில பத்திரிகைகள் யூகச் செய்தி வெளியிட்டன. திமுகவின் அமோக வெற்றிக்கு எம்ஜிஆர் தான் காரணம் என்று  வேறு சில பத்திரிகைகள் எழுதின. 

சட்டமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரசுக்கு ஒரு இடம் கூட தரப்படவில்லை.  9 எம். பி. தொகுதிகள் மட்டுமே தரப்பட்டன.  எனவே காங்கிரஸ் கட்சியிலும் அதிருப்தி இருந்தது. எம்ஜிஆருக்கு வருமானவரி வழக்குகள் இருந்தன என்றும் அவற்றைப் பயன்படுத்தி இந்திராகாந்தி எம்ஜிஆரைப் பிரித்துத் திமுகவைப் பலவீனப்படுத்த  முயற்சிக்கிறார் என்றும் பத்திரிகைகள் எழுதத் தொடங்கின 

எம்ஜிஆருக்கு வரி பாக்கி என்ற செய்தியைப் படித்த  எம்ஜிஆர் ரசிகர்கள் அவருக்குப்  பணம் அனுப்பத் துவங்கினார்கள் 1972 மார்ச் 3ஆம் தேதி திண்டிவனத்திலிருந்து ஷெரீப் என்ற எம்ஜிஆர் மன்றத் தலைவர் 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தன் வீட்டை விற்று பணத்தைக் கொடுப்பதாகக்  கடிதம் எழுதினார்.  ஒவ்வொரு மன்றமும் 100, 200 என்று பணம் அனுப்பத்  துவங்கின.  அவையெல்லாம் பத்திரிகைச் செய்திகளாக மாறின. எம்ஜிஆருக்கு இவ்வளவு பெரிய ஆதரவா என்ற விவாதம் எழுந்தது. 

மத்திய அரசு தமிழகத்துக்குப் போதிய நிதி வழங்குவதில்லை என்று சொல்லி  25 ஆண்டுகளாகத் தமிழகத்தில் அமலில் இருந்த மதுவிலக்குச் சட்டத்தை நீக்க முடிவெடுத்தார் கலைஞர். அன்றைய தி.மு.க. அரசுஆகஸ்ட் 30, 1971-ல் மதுவிலக்கு ஒழிப்பை நடைமுறைப்படுத்தியது.  

தமிழகமெங்கும் தனியார் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. ராஜாஜி, காமராஜர் போன்ற தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 1971 செப்டம்பர் 15ல் (அண்ணா பிறந்தநாள்)சத்யா ஸ்டூடியோ பணியாளர்களை அழைத்துக்கொண்டு அண்ணா நினைவிடத்துக்குச் சென்று  மது ஒழிப்புக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டார் எம்.ஜி.ஆர். கலைஞருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே பனிப்போர் என்று பத்திரிகைகள் எழுதத் துவங்கின.  

அப்போது 1972 மதுரையில் ஆகஸ்ட் 5 6 ஆகிய தேதிகளில் திமுக மாநாடு நடந்தது. மாநாடு முதல்நாள் நிகழ்ச்சியில் திமுக கொடியுடன் எம்ஜிஆர் ஊர்வலத்தில் வருவார். அதைப் பார்க்க  ஏராளமான ரசிகர்கள் காத்திருப்பார்கள்.  

ஆனால் அந்த மாநாட்டில் மு. க. முத்து திமுக கொடியுடன் யானைமீது வந்தார். அது எம்ஜிஆர் மன்றத்தினர் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியது. மாநாட்டில்  எம்ஜிஆர் பேசி முடித்ததும், அவர்கள் கலைந்து சென்றனர் அது கலைஞர் மனதில் காயத்தை ஏற்படுத்தியது

எம்ஜிஆர் மன்றங்களுக்கு இடைஞ்சல் தரப்படுவதாகவும்,  அவற்றைக்  கலைத்துவிட்டு மு. க. முத்து மன்றம்  துவங்க வற்புறுத்தல் இருப்பதாகவும் எம்ஜிஆர் மன்றத்தினர் புகார் தெரிவிக்கத்  துவங்கினர் எம்ஜிஆருக்கும் கலைஞருக்கும் மன விரிசல் என்று பத்திரிகைகள்  செய்தி வெளியிட்டன. 

அப்போது 1972 செப்டம்பர் மாதம் 15ஆம் நாள் அண்ணா பிறந்தநாள் எம்ஜிஆர் தொகுதியான ஆலந்தூரில் கொண்டாடப்பட்டது.  பேராசிரியர் அன்பழகன் தலைமை.  "மலர் இருந்தால் தான் நார்  மணக்கும்.  நாங்கள் நார்.  நீங்கள் மலர்" என்று எம்ஜிஆரை அவர் புகழ்ந்தார்.  "அண்ணா பாதையிலிருந்து திமுக தடம் மாறிச் செல்வதை அறிந்து நான் வேதனை அடைகிறேன்." என்றார் மக்கள்திலகம். 

இதெல்லாம் கட்சிக்குள் பிரச்னைகளை ஏற்படுத்தியது.  "பொருளாளர் என்ற முறையில் கட்சியின் வரவு செலவுக் கணக்கை ஆய்வு செய்ய வேண்டும்" என்று எம்ஜிஆர் கடிதம் அனுப்பினார்.  "திமுக நிர்வாகப்  பொறுப்பில் இருக்கின்ற அனைவரும் சொத்துக் கணக்கைச்  சமர்ப்பிக்க வேண்டும்"  என்றும் அவர் கூறினார். அது கொதிப்பை மேலும் கூட்டியது. 

இத்தகைய சூழலில் அக்டோபர் முதல் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யா திருமண மண்டபத்தில் (இப்போது அதிமுக தலைமைக் கழகம் அமைந்துள்ள இடம்) சென்னை-செங்கை  மாவட்ட எம்ஜிஆர் மன்ற கூட்டம் நடைபெற்றது.  சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தெய்வசிகாமணி, சிவராமன், அன்றைய சென்னை மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கல்யாணசுந்தரம் ஏற்பாடு. 

எம்ஜிஆர் மன்றத்திற்கான தனிக்கொடி அங்கீகாரம் தான் கூட்டத்தின் நோக்கம். ஆனால்  மக்கள் திலகம் தன் பேச்சில், " நமது கொடி கழகத்தின் இரு வர்ணக் கொடி தான்.  தாய்க்கழகம் வேண்டுமா, சேய் மன்றம் வேண்டுமா என்று கேட்டால் தாய்க்கழகம் தான் வேண்டும் என்பேன். ஒரு தாய் எத்தனை குழந்தைகளை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்." என்று பேசினார் . எவ்வளவோ வற்புறுத்தியும் தனிக்கொடிக்கு எம்ஜிஆர் சம்மதிக்கவில்லை. 

பின்னணியில் அன்றைய புதுச்சேரி முதல்வர் பரூக் மரைக்காயரின்  சமாதான முயற்சி இருந்தது. அவர் ராமாவரம் தோட்டத்திற்கு நேரில் சென்று கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் சமாதான முயற்சியில் ஈடுபட்டார். " திமுகவில் சமாதானம் ஏற்படுகிறது"  என்று பத்திரிகைகள் எழுதின.  ஆனால் அது நடக்கவில்லை. 

அக்டோபர் முதல் தேதி இப்படிப்பட்ட மனநிலையில் இருந்த மக்கள் திலகம் 16 நாட்களில் தனிக் கட்சி கண்டார்.  தனிக்கொடி கண்டார்.  184 இடங்களைப் பெற்று அசைக்க முடியாத ஆளுங்கட்சியாக இருந்த திமுக சுமார் 16 மாதங்களில் பிளவைச் சந்தித்தது.  எப்படி நடந்தது இந்த வேதியியல் மாற்றம்?

அக்டோபர் மாதம் 10ஆம் தேதி சத்யா ஸ்டூடியோவில் "நேற்று- இன்று-நாளை" படப்பிடிப்பு.  மக்கள்திலகம் அதில் இருந்தார். ஆனால் அன்று திமுக செயற்குழு. அதற்குப் பொருளாளர் எம். ஜி. ஆருக்கு அழைப்பு இல்லை. 

திடீரென்று "தி ஹிண்டு"  ஆங்கிலப் பத்திரிகையின் தலைமை நிருபர் கிருஷ்ணசாமி ராமாவரம் தோட்டத்திற்குப்  போன் பேசினார்.  "தி. மு. க,  செயற்குழுவில் மக்கள் திலகத்தை பொருளாளர் பதவியில் இருந்தும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் சஸ்பெண்ட் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது"  என்ற செய்தியை அவர்தான் முதலில் கூறினார்.  

அதற்கு எம்ஜிஆரின் பதில் என்ன என்று தெரிந்து கொள்ள இந்து பத்திரிக்கை விரும்பியது.  சத்யா அரங்கத்தில் மக்கள் திலகம் சாப்பிட மற்றும் இளைப்பாற தனி அறையும், தனித் தொலைபேசியும்  உண்டு.   எம். ஜி. ஆர்.  தான் அந்தப் போனை எடுப்பார்.  

அந்தத்   தொலைபேசியில் தொடர்புகொண்டு திமுகவிலிருந்து எம். ஜி. ஆர். நீக்கப்பட்ட விஷயம் பற்றிச் சொல்லப்பட்டது.  ஆனால் அவர் சத்தமாகச் சிரித்தார்.  "இந்து பத்திரிக்கையில் பதில் கேட்கிறார்கள்"  என்று அவரிடம் கூறியிருக்கிறார்கள்.  

"நான் பாயாசம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன் என்று சொல்"

இதுதான் எம். ஜி. ஆரின் பதில். அக்டோபர் 11-ஆம் தேதி "தி ஹிண்டு" இதை அப்படியே பிரசுரித்தது.  பாயாசம் என்பது தான் அரசியல் குறியீடு. எம்ஜிஆர்  குறியீடுகளின் குரு. 

அக்டோபர் 11-ஆம் தேதி பெரியார் கலைஞரிடம் பேசினார்.  எம்ஜிஆர் பெரியாரை போய்ப் பார்த்தார்.  அவரது அறிவுரைப்படி மறுநாள் அக்டோபர் 12   நாஞ்சில் மனோகரனும், முரசொலி மாறனும்  எம்ஜிஆரைச்   சந்தித்துப் பேசினார்கள்.  பின்னாட்களில் நாஞ்சிலார் பழைய சம்பவங்களைப் பற்றி என்னிடம் அசை போடுவார்.  

எந்த முயற்சியும் பலன்அளிக்கவில்லை. 1972 அக்டோபர் 14ஆம் தேதி எம்.ஜி.ஆர் தி.மு.க-விலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். அக்டோபர் 16ஆம் தேதி, எம்.ஜி.ஆரின் தீவிர ஆதரவாளரான உடுமலைப்பேட்டை இஸ்மாயில் என்பவர் தீக்குளித்து உயிர்நீத்தயார்.  

ஏராளமான எம்ஜிஆர் மன்றத்தினர் தாக்கப்பட்டார்கள்.  திமுக அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். எம்ஜிஆர் மன்றத்தின் தலைமைப்  பொறுப்பில் இருந்த முசிறிப் புத்தன், ஓமப்பொடி பிரசாத் உள்ளிட்ட ஏராளமான மன்றத்தினர் ரத்தம் சொட்டச்  சொட்ட ராமாவரம் தோட்டத்திற்கு வந்தார். எம். ஜி. ஆர். மன்றக் கிளைகளைக் கலைக்கச் சொல்லிக் காவல்துறையே நெருக்கடி கொடுத்த சம்பவங்களும் நடந்தன.  

இந்த நிகழ்வுகள் எல்லாம்  எம்ஜிஆர் மனதை மாற்றின.   அக்டோபர் 17ஆம் தேதி அதிமுக உதயமானது. தொண்டர்கள்  தலைவருக்கு அழுத்தம் கொடுத்து உருவாக்கிய கட்சி அதிமுக என்று  வரலாறு அதனால் தான் குறித்து வைத்திருக்கிறது. 

கலைஞர், எம். ஜி. ஆர். ஆகிய இரு தலைவர்களுமே பெரிய ஆளுமைகள். தத்தம் தனித் திறமைகளால் மக்கள் மனங்களை வென்றவர்கள். அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு திமுக பிளவுபட்டுவிடாமல் காப்பாற்றியதில் இருவருக்குமே சம பங்கு உண்டு. 

அரை நூற்றாண்டுக்குப் பிறகு பெரிய தலைவர்களின் அந்தக் கால அரசியல் நகர்வுகளை விமர்சனம் செய்வது பொருத்தம் அல்ல. ஆனாலும் அதிமுகவின் பொன்விழா துவங்கும் நேரத்தில் இந்த வரலாற்றுச் சம்பவங்களை நினைவு கூர்ந்தால் தான் தமிழகத்தின் அடிப்படை அரசியலைப் புரிந்து கொள்ளமுடியும். 

அதிமுகவின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா 1998 ல் கொண்டாடப்பட்டது.  அதற்கான மலரைத் தயாரிக்கும் பொறுப்பை மறைந்த ஜெயலலிதா ஒரு பத்திரிகையாளானாக எனக்கு வழங்கினார். 

இன்னொரு மலர்க் கமிட்டி நாவலர் நெடுஞ்செழியன்  தலைமையில் இயங்கியது. எனவே நான் தயங்கினேன்.   ஆனால் ஜெயலலிதா கொடுத்த உற்சாகத்தால் மலரைத் தயாரித்தேன். திருநெல்வேலியில் மாபெரும் ஊர்வலம். மறுநாள் வெள்ளிவிழாக் கண்காட்சி. மலரை  நாவலர் நெடுஞ்செழியன் வெளியிட்டார். ஜெயலலிதா பெற்றுக்கொண்டார். 

எதற்காக இதைக் குறிப்பிடுகிறேன் என்றால் எம். ஜி. ஆர், ஜெயலலிதா போன்ற அதிமுகவின் மாபெரும் தலைவர்கள் அந்த அளவுக்கு பல்வேறு திறமைகளை அடையாளப்படுத்தினார்கள். இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள். கலைஞர் முதல்வராக இருக்கும்போது அதிகாலையிலேயே தினத்தாள்களைப் படித்துவிட்டு நேரடியாகப் பத்திரிக்கையாளர்களோடு போனில் பேசுவார். என்னோடும் அவ்வாறு தொடர்பு கொண்டு தகவல் கேட்டிருக்கிறார். 

அதிமுகவின் இன்னொரு சிறப்பு அம்சம், கட்சியின் தலைமை (பொதுச் செயலாளர்) அடிப்படைத் தொண்டர்களால் தான் முடிவு செய்யப்படவேண்டும் என்ற விதி. அதை மாற்றவே முடியாது என்று ஜெயலலிதா பின்னர் சிறப்புச் சேர்த்து வைத்திருந்தார். 

அதற்கும் காரணங்கள் உண்டு. கட்சியின் பொதுக்குழு கபளீகரம் செய்யப்பட்டுவிட்டால் தன்னை நம்பி வந்த தொண்டர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று எண்ணினார் எம். ஜி. ஆர். அவர்களுக்குப் பாதுகாப்புத் தர அவர் விரும்பினார். அவரது எண்ணத்திற்கு வலுச் சேர்ப்பது போல 1975ல் ஒரு சம்பவம் நடந்தது. 

அப்போது சிதம்பரத்தில் அதிமுக பொதுக்குழு-செயற்குழு கூடியது. எம். ஜி. ஆரைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கச் சிலர் முயற்சித்தனர். அதற்குப் பொதுக்குழு-செயற்குழுவில் தீர்மானம் கொண்டுவரப் போவதாகப் பயங்கரமான செய்திகள் அடிபட்டன.  முசிறிப்புத்தான், அய்யம்பேட்டை அஜீஸ், ஷாகுல் ஹமீது, கோவை மருதாச்சலம் உள்ளிட்ட எம். ஜி. ஆர். மன்றத்தினர் முறியடி முயற்சிகளில் இறங்கினார்கள். 

அதிமுகவைப் பிளவுபடுத்தும் முயற்சிகளை முளையிலேயே கிள்ள  முடிவெடுத்தார் எம். ஜி. ஆர். கட்சியின் அமைப்புச் சட்டம் விதி எண் 20 பலப்படுத்தப்பட்டது. அதன்படி கட்சியின் பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். பொதுக்குழுவுக்கு அந்த அதிகாரம் கிடையாது.  திருத்தப்பட்ட அதிமுக அமைப்புச் சட்டம் 1976 நவம்பர் முதல் அமலுக்கு வந்தது. 

சுருக்கமாகச் சொன்னால் அதிமுக அமைப்புச்சட்டத்தின்படி கொடி பிடிக்கும் தொண்டனே முடிவெடுப்பவன். அதுவே கட்சியின் அடிப்படை. எம். ஜி. ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அபிலாஷை.  இந்த அடிப்படை மாற்றவியலாதது. (BASIC STRUCTURE) ஆனால் இன்றைய அதிமுகவில் அந்த அடிப்படை தகர்க்கப்பட்டு விட்டது.  ஒருங்கிணைப்பாளர் (ஓபிஎஸ்)இணை ஒருங்கிணைப்பாளர் (எடப்பாடி பழனிச்சாமி) போன்றோர் கட்சியின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இது குறித்த சிவில் வழக்கு நிலுவையில் உள்ளது. 

அதிமுக, திமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளின் பலம் என்பது அவற்றின் தொண்டர்கள் தான். அதிமுகவின் ஆளுமை இரட்டை இலையும் வசீகரம் மிக்க தலைவர்களான எம். ஜி. ஆரும் ஜெயலலிதாவும் கஷ்டப்பட்டு உருவாக்கி வைத்துள்ள வாக்குவங்கியும் தான் அதிமுக. அதைத் தக்க வைத்துக் கொள்ள ஒற்றுமை அவசியம். வாக்கு அரசியலில் அரவணைப்பு முக்கியம். 

பொன்விழாக் கொண்டாடும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு நமது நல் வாழ்த்துகள்.