Wednesday, January 24, 2024

வைகோவின் சிறையில் விரிந்த மடல்கள் - 2

 வைகோவின் சிறையில் விரிந்த மடல்கள் - 2

அமெரிக்க நாட்டில் சிகாகோ நகரில் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் நூற்றாண்டு விழா நிகழ்வில் கலந்து கொள்வதற்கு அணியமானார் தலைவர் வைகோ...

வானூர்தியில் அவர் ஏறியவுடனேயே,  செய்திகள் பறக்க தொடங்கின பொடாவில் 'தளை' செய்யபட போவதாக.

29.11.2002  மடலில் வைகோ அவர்கள், 'அடக்குமுறைக்கு அஞ்சிடோம்!' ஆண்டுக்கணக்கில் சிறையில் பூட்டப்பட்டாலும்,

உயிருக்கே இறுதி நேரிடும் எனத் தெரிந்தாலும், அடக்குமுறைக்கு வைகோ அடிபணியமாட்டான்!' என்று எழுதினார்.

அவ்வாறே, ஏற்கெனவே திட்டமிடப்பட்டு இருந்தற்கு இரண்டு நாள்கள் முன்னதாகவே சென்னை வந்து சேர்ந்தார். வானூர்தி நிலையத்தில் வைத்து தலைவர் வைகோ 'தளை' செய்யப்பட்டார். 

காவலில் வைக்கப்பட்டு  நான்கு திங்கள் கடந்த பின்னர் 29.11.2002 நாளிட்ட மடலில் கண்மணிகளுக்கு எழுதுகிறார்.

மடல் இலக்கியத்திற்கு ஏற்ப நயத்துடன் தொடங்குகிறார். அதில், 'நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் பேரறிஞர் அண்ணா அவர்கள் இங்குதான் சிறைவாசம் ஏற்றார். உங்களின் அளப்பரிய அன்பும் வரையற்ற வாஞ்சையும், எல்லையற்ற பாசமும்,  எத்தகைய இன்னல்களை யும் நான் எதிர்கொள்ள இயக்குவிக்கும் உயிர்ச் சக்தி அன்றோ!

ஆயிரமாயிரம் நினைவுகள் இதயக் கபாடத்தில்! எதைச் சொல்வது? எனத்

திகைக்கிறேன். காளிதாசன் மேகத்தைத் தூது அனுப்பினாள். தென்னாட்டுப்புலவன். விண்ணில் சிறகடித்த பறவையிடம் தூது சொன்னான். நான் உங்களின் உணர்வுகளுடன் சங்கமிக்க வாய்த்ததுதாளே நமது "சங்கொலி" என்று தொடங்குகிறார்.

மேலும் ''சிறைப்பிடிப்போம்' என்றா மிரட்டுகிறீர்கள்? குறிப்பிட்ட நாளுக்கு இரண்டு நாள்கள் முன்னரே தமிழகம் வருகிறேன்; 'எச்சரிக்கை' எனக் காட்டுக் கூச்சலிடும் தர்பார் இந்த 'அண்ணாவின் தம்பி'யை மிரட்ட முடியாது; ஓங்கி ஒலிக்கும் எனது

உரிமைக்குரல்'" எனப் பிரகடனம் செய்துவிட்டுச் சிகாகோ நகரில் இருந்து புறப்பட்டேன் என்றார் வைகோ.

வானூர்தி நிலையத்திலேயே தலைவர் வைகோ 'தளை' செய்யப்பட்ட செய்தியினைக் கேட்டுப் பதறித்துடிக்கத் தழலுக்கு தன்னையே தந்து உயிரை மாய்த்துக் கொண்ட அந்த நல்லூர் அறிவழகன், அரவேணு சிவன், நல்லாம்பள்ளி சுப்பன், கீழ்ப்புளியஞ்சை வைகோதாசன் ஆகியோரின் ஈகங்களை  நினைவு கூர்ந்து எழுதுகிறார்.


வைகோவின் சிறையில் விரிந்த மடல்கள் -1

 தலைவர் வைகோ அவர்கள் எழுதிய 'சிறையில் விரிந்த மடல்கள்'....

தலைவர் வைகோ அவர்கள் நூலின் முன்னுரையில், 'நுழைவாயில்' என்னும் தலைப்பில்,

"இனிமை விளையும்; ஏற்படும் இன்னலால்!'

(Sweet are the uses of adversity)

என்றார் ஷேக்ஸ்பியர்,

இந்தச் சிந்தனையுடன்தான் வாழ்க்கையில் எண்ணற்ற போராட்டங்களைச் சந்திக்கிறேன்.

19 மாத கால வேலூர் மத்திய சிறைச்சாலை வாசம் எனக்கு வாய்த்த அற்புதமான அனுபவம், மனத்தாலும், உடலாலும் நான் தவம் இருந்த அந்நாள்களில் நெஞ்சில்

அலைமோதிய நிளைவுகளை, ஊற்றாகப் பெருகிய உணர்வுகளை, எனது ஊனிலும் உதிரத்திலும் இரண்டறக் கலந்து இயக்கிடும் கண்மணிகளுக்குக் கடிதங்களாக

எழுதினேன். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வார ஏடான

"சங்கொலியில்" அம்மடல்கள் வெளிவந்தன.

உன்னதமான தியாகத்தாலும், உழைப்பாலும் கட்டி எழுப்பப்படும் எங்கள் இயக்கம், அதன் கொள்கை கோட்பாடு குறித்து, சிறைப்பட்ட காலத்து அரசியல் சூழலை மனதில் கருதி எழுதி உள்ளேன்.

துன்பங்களையும், துயரங்களையும், தாங்கிக் கொண்டு, மாறாத உறுதியுடன் சிறைவாழ்வை ஏற்று இயக்கத்துக்குப் புகழ் குவித்த தியாக வேங்கைகளான எனது ஆரூயிர்ச் சகோதரர்கள் அ. கணேசமூர்த்தி, புலவர் சே. செவந்தியப்பன், வீர. இளவரசன், புதூர் மு. பூமிநாதன், பி.எஸ். மணியம், க. அழகுசந்தரம், நாகராசன், கணேசன் இக்கடிதங்களை எழுதிட என்னை ஊக்குவித்தனர்.

தமிழ்க்குலத்தின் சகாப்த நாயகனாம் போறிஞர் அண்ணா அவர்கள் எழுதி அச்சேறிய அனைத்தையும், நூல்வடிவம் கண்ட அவரது உரைகள்மு ழுவதையும் இரண்டு திங்கள் ஓய்வு இன்றிப் படித்ததில் என் இதயத்தை ஈர்த்த பகுதிகளை "ஒளி மலர். இருள் அகல..." என்ற தலைப்பில் எழுதி கடிதங்கள் ஆக்கினேன்.


இந்தியத் துணைக்கண்டத்தின் ஈடில்லாம் பகுத்தறிவாளராம் அறிவாசான் தந்தை பெரியார் அவர்களைக் குறித்து அறிஞர் அண்ணா அவர்கள் கூறியவற்றையே ஆங்காங்கு தந்து உள்ளேன்.

இலட்சியங்களுக்காகப் போராடி, தியாகம் எனும் பலிபீடத்தில் தங்கள்

உயிர்களைத் தாரை வார்த்த மாவீரர்களின் வரலாறு எனக்குச் செயல் ஊக்கம் தரும் உந்து சக்தி ஆகும்.

ஸ்பார்டாவின் 'தெர்மாப்பிளே போர்க்களம்;

ஒருவரை ஒருவர் அறிந்திடா நிலையில் வாள்முனையில் தந்தையும், தனயனும் மோதிய பெர்சிய வீரகாவியம் ஆன 'சொகரப்பும், ருஸ்தமும்";

தூக்கு மேடையில் நிறுத்தப்பட்ட உமர் முக்தார்;

மரண பயங்கரம் சூழ்ந்தபோதும் மடியும் நிமிடம் வரை

போராடிய 'சே குவேரா;'

நினைக்கும்போதே உள்ளத்தில் கிளர்ச்சி ஊட்டும் இவையெல்லாம் மடல்கள் ஆயின!

பண்டித ஜவகர்லால் நேரு அவர்களின் "உலக சரித்திரக் கடிதங்கள்" ஏற்படுத்திய வேட்கைதான் "களங்களின் மாவீரன் கரிபால்டி' ஆயிற்று.

அடிமை விலங்கை ஓடிக்க நடைபெற்ற இந்திய விடுதலைப்போரில் வங்கத்துச் சிங்கம் நேதாஜியின் போராட்டமும், துணிச்சலும், தியாகமும்

மெய்சிலிர்க்கச் செய்யும் சரித்திரம் ஆகும் என்பதால்தான் 'நெஞ்சில் நிறைந்த நேதாஜி" யை வரைந்தேன்.

அறைகூவல்கள் அனைத்தையும் சந்தித்து, அவனியைத் திகைக்கச் செய்து சாதனை புரிந்த லிங்கனின் சரிதம் பொதுவாழ்வில் உள்ளோர் பயில வேண்டிய பாடம் என்பதால், "அரசியலுக்கோர் ஆபிரகாம் லிங்கன்” என விவரித்தேன்.

முத்தமிழ் அறிஞர் ஆருயிர் அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்களுடன் நான் கொண்ட பாசப்பிணைப்பினைப் பிரதிபலிக்கும் சம்பவங்களைப் பதிவு செய்து இருக்கிறேன்.

வழிப்போக்கர்களுக்கு வழிகாட்டும் வேலை!

ஒரு நூலக ஊழியனின் பணி!

இவைதாம் எனது கடிதங்கள்! என்று தலைவர் வைகோ எழுதியிருக்கிறார்.

இந்நூலில்,

1. 60 கடிதங்கள்

2. சிக்காகோவில் இருந்து வேலூர் வரை -2 கடிதங்கள்(2,3)

3.சேகுவேரா பற்றிய கடிதம் (7)

4. உமர்முக்தார் பற்றிய மடல் (13)

5. நேதாஜி பற்றிய 3 மடல்கள் (23-25)

6. ஒளி மலர ! இருள் அகல!! அண்ணாவைப் பற்றிய மடல்கள் 7 (29-35)

7. அரசியலுக்கோர் ஆபிரகாம் லிங்கன் பற்றிய மடல்கள் 5 (40 - 44)

8. களங்களின் கரிபால்டி பற்றி 4 மடல்கள் ( 53-56)

9. திரும்பிப் பார்க்கிறேன் ( தன் வரலாறு) மடல் (22)

10. நல்லதோர் கடமை செய்தேன் மடல் ( குட்டிமணி கைது)

ஆகியன குறித்து சுருக்கமாக எழுத விரும்புகிறேன். இந்த திருவள்ளுவர் ஆண்டு 2055 இல் தொடங்குகிறேன்.

Saturday, December 2, 2023

ஸ்டெர்லைட் எதிர்ப்பு - திருமுருகன் காந்தி

 ‘‘ஸ்டெர்லைட் எதிர்ப்பு என்பது ஒரு சர்வதேசப் பிரச்னை. தூத்துக்குடியில் நடந்த படுகொலை ஒரு சர்வதேசக் குற்றம்’’ என்கிறார் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி. ஐரோப்பிய நாடுகளின் அரசியல் கட்சிகளிடமும், அங்கிருக்கும் அமைப்புகளிடமும் தொடர்ந்து பேசி, கோரிக்கைகளை முன்வைத்து இதை ஒரு சர்வதேசப் பிரச்னையாகக் கொண்டுசெல்லும் வேலைகளில் இறங்கியுள்ளது மே 17 இயக்கம். இதற்காக ஜெர்மனியில் இருக்கும் திருமுருகன் காந்தியைத் தொடர்புகொண்டு பேசினோம்.

‘‘வேதாந்தா என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஒரு நிறுவனம். இப்படிப் பதிவு செய்தால், சில முக்கியமான சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமை விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம். ஆனால், வேதாந்தா அதைப் பல நாடுகளிலும் மீறியுள்ளது. ஜெர்மனியில் இருக்கும் ‘டை லிங்க்’ (Die Linke) எனும் முக்கிய அரசியல் கட்சியின் உறுப்பினர் களைச் சந்தித்து ஸ்டெர்லைட் விஷயம் குறித்து எடுத்துரைத்தோம். இந்தப் பிரச்னைகளைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சியடைந்துவிட்டார்கள். உல்லா ஜெல்பெக் (Ulla Jelpke) எனும் ஜெர்மானிய நாடாளுமன்ற உறுப்பினரிடமும் இந்தப் பிரச்னை குறித்து எடுத்துரைத்தோம். இன்னும், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த பல அமைப்புகளிடமும் இந்தப் பிரச்னையைத் தொடர்ந்து கொண்டு செல்கிறோம். இதையெல்லாம் செய்வதற்கு முக்கியக் காரணம், ஸ்டெர்லைட் படுகொலை குறித்து ஐரோப்பிய நாடுகளின் நாடாளுமன்றங்களிலும், பிரிட்டன் பாராளுமன்றத்திலும் விவாதிக்க வேண்டும் என்பதுதான்’’ என்றார் அவர்.

ஸ்டெர்லைட் பிரச்னையைப் புரிந்து கொள்வதற்கு, நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சம்பவம் இது...

 2012 ஆகஸ்ட் 16-ம் தேதி. தென்னாப்பிரிக்காவின் மரிக்கானா எனும் சிறு நகரம். அந்தப் பகுதியில் தங்கம், வைரம், பிளாட்டினம் உள்பட பல சுரங்கங்களும், உருக்காலைகளும் இயங்குகின்றன. அவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சரியான சம்பளம் இல்லை. சூழலுக்கும் உயிருக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் இந்தச் சுரங்கங்களில் சரியான பாதுகாப்பு வசதிகள் இல்லை. எனவே, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சுரங்கத் தொழிலாளர்களும், அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களும் போராடுகிறார்கள். அது லொன்மின் எனும் பிரிட்டிஷ் கம்பெனிக்கு எதிரான போராட்டம். ‘நிறுவனம் இறங்கி வந்து எங்களிடம் பேச வேண்டும். எங்கள் கோரிக்கைகளை ஏற்க வேண்டும்’ என்பதுதான் அவர்களின் குரல். 

ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து போராட்டம் நடந்து வருகிறது. குறிப்பிட்ட அந்த 16-ம் தேதி, மக்கள் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்தபடி போராட்டப் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர். அப்போது, அந்தப் பாடல்களுக்கு நடுவே துப்பாக்கிக் குண்டுகளின் சத்தம் கேட்கிறது. போராட்டம் உக்கிரமாகிறது. மக்களை அணி பிரிக்கிறது காவல்துறை. சிறு சிறு கும்பலாக அவர்களை ஒதுக்கி துப்பாக்கிச்சூடு நடத்துகிறது. பலரைக் குறிவைத்துக் கொல்கிறது. போராட்டத்தை முன்னின்று நடத்திய மெக்சினேனி நொகி என்பவரின் முகத்திலும் கழுத்திலும் 14 குண்டுகள் பாய்ந்தன. மொத்தம் 34 பேர் கொல்லப்பட்டனர். 112 பேர் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தனர்.

சமூக விரோதிகள்’ புகுந்தது காவல்துறையைத் தாக்கினர்... பொதுச் சொத்தை சேதப்படுத்தினர்... என தூத்துக்குடியில் சொல்லப்பட்ட அத்தனை கதைகளும் தென்னாப்பிரிக்கா விலும் சொல்லப்பட்டன. ஆனால், சம்பவம் முடிந்த சில நாள்களில் சில வீடியோக்கள் வெளியாகின. போலீஸாரின் அத்துமீறல்களை அவை அம்பலப்படுத்தின. லொன்மின் நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து ஆங்கிலோ அமெரிக்கன் கோல்டு, ஆங்கிலோ அமெரிக்கன் பிளாட்டினம், ஆங்கிலோ கோல்டு ஆஷாந்தி எனப் பல நிறுவனங்களை எதிர்த்துப் போராட்டம் பரவியது. ஆங்கிலோ அமெரிக்கன் கம்பெனிக்கு எதிரான போராட்டத்திலும் ஒரு பெண் உள்பட சிலர் படுகொலை செய்யப்பட்டனர். 

2012-ம் ஆண்டு முழுக்கவே தென்னாப்பிரிக்காவில் இதுபோன்ற போராட்டங்களும் உயிரிழப்புகளும் அதிகம் நிகழ்ந்தன. ஆப்பிரிக்க தேசிய இளைஞர் காங்கிரஸ் இந்த சம்பவங்களை இப்படிக் குறிப்பிடுகிறது... ‘பெரு நிறுவனங்களின் பொறுப்பற்ற, உணர்வற்ற, மனிதநேயமற்ற தன்மையைத்தான் இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. இந்த நிறுவனங்கள் தொழிலாளர்களின் ரத்தத்தையும் வியர்வையையும் கண்ணீரையும் உறிஞ்சி மிகப் பெரிய லாபம் ஈட்டியுள்ளன. அவர்களின் இந்த வளர்ச்சிக்கு உதவிய தொழிலாளர்களின் உயிரை, அதிகார பலத்தைக் கொண்டு ஈவு இரக்கமற்று பறித்திருக்கின்றன. இந்த நிறுவனங்கள் இந்த தேசத்தின் அவமானம்.’

இங்கு சில விஷயங்களைக் கவனிக்கவேண்டியது அவசியம். ஆங்கிலோ அமெரிக்க நிறுவனத்தின் 21 சதவிகித பங்குகள், ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தும் வேதாந்தா குழுமத்தின் அதிபர் அனில் அகர்வாலிடம் இருக்கின்றன. மிக முக்கியமான விஷயம்... ஆங்கிலோ அமெரிக்கன் கம்பெனியின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஸ்ரீனிவாசன் வேங்கடகிருஷ்ணன், இந்த ஏப்ரல் மாதம் முதல் வேதாந்தா நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிறுவனங்களால் தென்னாப்பிரிக்காவில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கும் தூத்துக்குடி படுகொலைகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

வேதாந்தா குழுமத்துக்கு எதிராக ஜாம்பியா, ஆஸ்திரேலியா, அயர்லாந்து உள்பட உலகின் பல நாடுகளிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தியாவிலும் சட்டீஸ்கர், ஒடிஷா, கோவா உள்பட பல இடங்களிலும் போராட்டங்கள் நடக்கின்றன.

இந்தப் பிரச்னையை ஐரோப்பாவுக்குக் கொண்டுசெல்ல வேண்டிய அவசியம் என்ன’ என்ற கேள்விக்கும் தெளிவான பதில் வைத்திருக்கிறார் திருமுருகன் காந்தி. ‘‘உலக அளவில் வேதாந்தா நிறுவனம் கனிம வளங்களை எடுப்பதில் மிகப் பெரிய நிறுவனமாக இருக்கிறது. அவர்களை எதிர்க்க பெரிய பலம் வேண்டும். இந்தியாவின் அத்தனை அதிகார மட்டங்களும் வேதாந்தாவுக்கு ஆதரவாகத்தான் செயல் படுகின்றன. அதனால், நமக்கு நீதி கிடைக்குமா என்ற கேள்வி எழுகிறது. எனவே, இந்தப் பிரச்னையில் சர்வதேச கவனத்தை ஈர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. 

மேலும், வேதாந்தா பிரச்னை இந்தியாவில் இதோடு முடிந்துவிடாது. ‘நிலங்களுக்கு அடியில் இருக்கும் வளங்களைச் சுரண்டி எடுப்பதுதான் எங்கள் நோக்கம்’ என்பதை ஒரு பேட்டியில் அனில் அகர்வால் வெளிப்படையாகக் கூறியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ‘கெய்ர்ன் லங்கா’ (CAIRN Lanka) எனும் நிறுவனத்தை வாங்கி, இலங்கையில் எண்ணெய் எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது அந்த நிறுவனம். இதேபோல இந்தியாவிலும் ‘கெய்ர்ன் இந்தியா’ (CAIRN India) என்ற நிறுவனம் 2007 முதல் இயங்கி வருகிறது. காவிரி டெல்டா மாவட்டப் பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயுக்களை எடுக்கும் திட்டங்கள், தமிழக கடற்கரைப் பகுதிகளில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைப்பது போன்றவற்றின் பின்னணியில் வேதாந்தாவின் கைகள் இருக்கலாம். தூத்துக்குடியில் திட்டமிட்ட ஒரு படுகொலையை நிகழ்த்தி விட்டு வேதாந்தா நிறுவனம் தப்பிவிட முடியாது. அவர்களை உலகின் மனச்சாட்சிக்கு முன் நாம் நிறுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது’’ என்று கோபத்துடன் சொல்லி முடிக்கிறார் திருமுருகன் காந்தி. 

- இரா.கலைச்செல்வன்

ஜூனியர்  விகடன்

மே 17 இயக்கத்தின் மீது திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறு

மே17 இயக்கத்தின் மீது திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட அவதூறுகளை முன்வைத்து நாம் தமிழரால் பரப்பப்படும் பொய்களை அம்பலப்படுத்த இவ்விவரங்களை வெளியிடுகிறோம்.

ஈழப்படுகொலையில் சர்வதேசத்தின் பங்களிப்பு & ஈழப்படுகொலையை 'இனப்படுகொலையாக வரையரை செய்யலாமா?',  'யாரெல்லாம் இதில் பங்கெடுத்தனர்?', 'அவர்களது நோக்கமென்ன?' என்பது குறித்து 2 சர்வதேச மக்கள் நீதிமன்ற(தீர்ப்பாயம்) அமர்வுகள் நடந்துள்ளன. 

முதல் அமர்வு அயர்லாந்து டப்ளின் நகரில் 2010ல் நடந்தது. ஈழப்படுகொலையில், 'அமெரிக்காவும், இங்கிலாந்தும் பங்கெடுத்தன' என்பது தீர்ப்பாக வெளியிடப்பட்டது.

 'ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலையா?' எனவும், 'இதில் பங்கெடுத்த நாடுகள் எவை?' என்பதை 2ம் தீர்ப்பாயத்தில் விசாரிக்க வேண்டுமென தீர்ப்பானது. இத்தீர்ப்பாயத்தில் இந்தியாவிலிருந்து புகழ்பெற்ற 'நீதிபதி சச்சார்',  'அருந்ததிராய்' போன்றோர் பங்களித்தனர். இத்தீர்ப்பாயத்தில்,

இலங்கை செய்த மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டது. ஆனால்,  'விடுதலைப்புலிகளே கொலைக்குற்றம், கட்டாயக்கருக்கலைப்பை செய்தனர்' என இந்தியாவிலிருந்து சென்ற பால்நியூமென் ஜனவரி 2010ல் பதிவு செய்தார். 2011ல் இவர் நாம் தமிழர் கட்சியின் சர்வதேச செயல்பாட்டாளராகவும், கர்நாடக மாநில பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். இவரது ஆவணங்கள் தீர்ப்பாயத்தின் பதிவுகளில் இன்றும் உள்ளது. இவரது வாதங்கள் ஆதாரமற்றதென நிராகரிக்கப்பட்டது.

இவ்வாறு பொய் அவதூறுகளை முன்வைத்ததால், ஜெர்மனியின் 'ப்ரேமன்'  நகரில் நடந்த 2வது தீர்ப்பாயத்தில் பால்நியூமென் நிராகரிக்கப்பட்டார்.

'வி.பு இயக்கத்தின்' இதழான 'தமிழ்நெட்'டில் வெளியான எனது பேட்டிகளை கண்டபின்,  என்னை அழைத்ததாக தீர்ப்பாய பொறுப்பாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

2வது தீர்ப்பாயத்தில்

'இங்கிலாந்து, அமெரிக்க மீதான குற்றச்சாட்டு', இனப்படுகொலை சாட்சிகள், ஆவணங்கள் ஆகியவற்றையே விசாரிக்க போதுமான கால அவகாசம் இல்லாததால் எமது ஆதாரங்களை விசாரிக்க இயலாமல் போனது. ஆனால் மே17 இயக்கம் முன்வைத்த ஆதாரங்கள் அடிப்படையில் 'ஈழ இனப்படுகொலையில் இந்தியா பங்களித்ததை' உறுதிசெய்து, 2014-15ல் மூன்றாவது தீர்ப்பாயத்தில் 'இந்தியா மீது விசாரணை' நடத்த முடிவு செய்தது. 'உமர்' என்பவர் ஐ.நா பங்களிப்பை பதிவு செய்ய வந்தார். தீர்ப்பாய தலைவரே முன்னாள் ஐ.நா துணை பொதுசெயலாளர் என்பதால் அக்குற்றச்சாட்டை இனப்படுகொலைக் கானதல்ல என விளக்கி நிராகரித்தார். நான் இந்தியா மீதான குற்றச்சாட்டுகளை முன் வைத்தேன்.

'இந்தியா குற்றவாளி' எனும் தீர்ப்பு முதன்முதலாக சர்வதேச அளவில் இந்திய அரசிற்கும், காங்கிரஸ்க்கும் கிடைத்த மாபெரும் பின்னடைவு. இத்தீர்ப்பின் அடிப்படையில், இந்திய அரசை பல தலைவர்கள் (நாம் தமிழர் தவிர்த்து) குற்றம்சாட்டினர்.

இலங்கை அரசு, சாட்சிகளை மிரட்டுவது, விசா கிடைக்காமல் செய்வது, தாக்குவது/கொலை செய்கிற காரணத்தினால் 'தீர்ப்பாய விவரங்கள், பங்கெடுக்கும் நபர்களின் விவரங்களை' அவசியமின்றி தீர்ப்பாயம் வெளியிடாது.

எனவே இந்தியாவின் மீதான விசாரணை விவரங்களையும் ரகசியமாக வைத்திருந்தது. 

ஆனால் இவ்விவரங்களை விசாரணை துவங்கும் முன்னரே, 'உமர்' சமூக வளைதளங்களில் வெளியிட்டார். மேலும் தீர்ப்பாய பணியில் ஈடுபட்டோர் விவரம், அவர்களது மின்னஞ்சல்களையும் யாருடைய அனுமதியின்றி வெளியிட்டார். முக்கிய ஆவணங்களையும் வெளியிட்டார்.  இது அனைவருக்கும் கடும் நெருக்கடியை கொடுத்தது. இதன்பின் 'இந்திய அரசின் மீதான விசாரணைக்கான தீர்ப்பாயம்' நின்றுபோனது.

இதை செய்தபின்னர், தீர்ப்பாயத்தால் ஒதுக்கப்பட்ட பால்நியூமெனோடு கைகோர்த்து, 'உமர்' ஒரு கூட்டத்தில் மே17 மீது அவதூறுகளை வைத்துவிட்டு ஒதுங்கினார்.

ப்ரேமன் தீர்ப்பாயத்தை நடத்திய விராஜ்மெண்டிஸ், ஜூட்லால்பெர்ணாண்டோ ஆகியோர், 'உமர்' பரப்பிய அவதூறுகளை அறிந்த பின், உடனடியாக மறுப்பு அறிக்கை வெளியிட்டனர். உமர் செய்த அவதூறுகள் ஆதாரமற்றவை என்பதை வெளிப்படுத்தினர். மே17 இயக்கம் மீது சேற்றைவாரி இறைப்பதற்கு கண்டனமும் தெரிவித்தனர். 

இவர்களது அறிக்கை ப்ரேமன் தீர்ப்பாய அதிகாரபூர்வ இணையத்தில் இன்றளவும் உள்ளது. 

(இந்த இணைப்பை முதல் கமெண்டில் பதிவு செய்துள்ளேன்)

இந்திய-காங்கிரஸ் அரசு மீதான விசாரணையை தடுத்துநிறுத்த உதவிய உமரின் பொய்களை பரப்புபவர்கள், வி.புலிகளை அவதூறு செய்த பால்நியூமெனுக்கு தம் கட்சியில் பெரும்பதவி கொடுத்தவர்கள்.

*உமருக்கு நிதியுதவிகளை மே17 தோழர்களே செய்தனர்

*ஈழப்படுகொலை குற்றவாளிகளை பாதுகாக்க நடந்த துரோகங்கள் குறித்து மேலதிக விவரங்களை தேவைப்படும் போது வெளியிடுவோம்.

பொய்கள், கட்டுக்கதைகள், வாய்சவடால் களை நம்பி மே17  இயங்கவில்லை. 

உறங்கிக்கிடந்த உண்மைகளை வெளிப்படுத்தவும், துரோகிகளை அடையாளம் காட்ட வாய்ப்பளித்ததற்கு மனமார்ந்த நன்றி!

இவ்வாறான வாய்ப்புகளை மேலதிகமாக  நாம் தமிழர் கட்சியினர் ஏற்படுத்தித்தர வேண்டுகிறோம்.

Monday, November 27, 2023

திருவாரூர் விடயபுரம் பற்றி சாக்கோட்டை மு. இளங்கோவன்

அண்ணன் மு.இளங்கோவன் அவர்களின் பதிவு....

அன்பு கவி,

எனது பெற்றோர்கள் தனலட்சுமி , முனுசாமி , குழந்தை சுமதியுடன் அரசியல் சட்டத்தை எரித்து சிறை சென்றார்கள் .

தந்தையார் பற்றி கவலையில்லை .. அவர் பல்வேறு போராட்டங்களில் அடிக்கடி சிறை சென்ற அனுபவம் உண்டு.

எனது தாயாருக்கு முதல் முறை. அதை விட என் தங்கை சிறுபிள்ளை .மூன்று மாதங்கள் கழித்து வந்த போது உடம்பு கை கால்களெல்லாம் புண் .கைகள் எல்லாம் சீழ்வடிய பாவமாக இருந்தது. பெண்கள் சிறை தான் . 

சுந்தர லீலா அம்மையார், சுப்புலட்சுமிபதி இன்னும் பலர் எல்லோரும் ஆள் அடையாளம் தெரியாத அளவு உருமாரியே இருந்தார்கள் .

 திருவாரூர் விசயபுரத்தில் தான் அரசியல் சட்டம் எரிக்கப்பட்டது. அப்போது நடந்தது எல்லாம் இன்றும் கூட எனக்கு காட்சியாய்த் தான் இருக்கிறது. 

பெரியவர் அய்யா சிவசங்கரன் அவர்களும் கிடாரங்கொண்டான் ,லட்சுமணன் அண்ணன் அவர்களும் தான் சட்டப் பிரிவின் நகல்களைக் எல்லோருக்கும் கொடுத்தார்கள். நிறைய கூட்டம்.

அங்கே எவருக்குமே போலீஸ் , சிறை என்பது போன்ற சிந்தனை இருந்ததாக தெரியவில்லை. எதோ திருமண வரவேற்பு போல மகிழ்ச்சியோடு இருந்தார்கள் . எல்லோரையும் வேனில் ஏற்றும் போதும் கோஷம் போட்டுக் கொண்டே ஏறினார்கள்.

 அப்போதும் கடைசியாக வேனில் ஏறுவதற்காக சுந்தரலீலா – சிங்கராயர் அவர்கள் நின்று கொண்டு மற்ற பெண்களை ஏற்றி விட்டார்கள்.

 அப்போதுதான் எனது தாயார் கேட்டது "எங்களை ஏன் சார் இப்பவேனில் ஏற்றுகிறீர்கள்?"


"உங்களுக்குத் தெரியாதாம்மா ? சட்டத்தை அவமதிச்சா ஜெயிலுன்னு ?" _ 


"அப்ப இந்த போலீஸ்கார அய்யாவையும் ஏத்துங்க . நாங்க நெருப்பு வச்சோம் .இவரு கீழே புடுங்கி போட்டு பூட்ஸ் காலால மிதிச்சுதான நெருப்பை அணைச்சாரு? பூட்ஸ் காலாலமிதிச்சா அதுவும் அவமதிக்கிறது தான?" என்று சொல்லவும் போலிசார் உட்பட அனைவருமே சிரிக்கவும் சூழலில் வருத்தமே காணவில்லை.


அதை விட ,சிறை மீண்டு வீட்டுக்கு வந்த பின்னும் எனது தாயாரின் பேச்சு முழுவதும் எதோ ஒரு பெரியபோரில் ஒரேஒரு வீரன் 100 பேரை வெற்றி கொண்டது போல் அதையே பேசிக் கொண்டிருந்ததுதான் வியப்பாக இருந்தது.

அப்போது என் தந்தையார் சிறையில் இருந்தார் .அதைப் பற்றியெல்லாம் எனது அம்மா கவலைப் பட்டதாகவே தெரியவில்லை. 

இவர்களது " சிறை அனுபவத்தையே "பேச்சாக இருந்தது.

 எனது தங்கையின் புண்கள் ஆறி சரியாக வர நான்கு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. 


எல்லோரும் சிறை மீண்டு வந்த பின்னால் ஒரு நாளில் அய்யா அவர்களே ஒவ்வொரு ஊராகச் சென்று பாராட்டு விழா நடத்தினார்கள். 

மேடையில் எனது அம்மாவின் முறை வந்த போது "வாங்கம்மா தனலட்சுமியம்மா .. நீங்க தான் போலீஸ்காரரையும் ஜெயிலுக்கு கூப்பிட்டதா ?" , என்று சிரிக்கவும் எனது தாயாருக்கு முகம் மகிழ்ச்சியை பார்க்க வேண்டுமே ..அடேயப்பா .

. . எனக்கு நானே மண்டைக் கனத்துடன் மகிழ்ச்சியடையும் செய்திகள் . இப்போது உங்களுடன்  பகிர்வு.

நன்றி!

(உட்கார்ந்து யோசித்தால் ஏராளமான பெயர்கள் வரும். கிட்டத்தட்ட எல்லோருமே பின்னாளில் என்னோடு இயக்கத்தில் இருந்தார்கள். எல்லோருமே என்னை விட மிக மூத்தவர்கள் . )

Saturday, November 25, 2023

வைக்கம் போராட்டம் பற்றி பெரியார்

ஆங்கிலேயர் ஆட்சியில் கேரளாவின் வைக்கம் என்ற ஊரில் கோவிலை சுற்றிய தெருக்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் நடமாட தடை இருந்தது. இந்த சமூக அநீதிக்கு எதிராக டிகே மாதவன் முதன் முதலாக குரல் கொடுத்தார். 1924-ம் ஆண்டு மார்ச் 30-ந் தேதி வைக்கம் போராட்டம் தொடங்கப்பட்டது. பெரும் பிரளயத்தை ஏற்படுத்திய வைக்கம் போராட்டம் வெகுவேகமாக ஒடுக்கப்பட்டும் வந்து. அப்போதுதான் தமிழ்நாட்டு காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த தந்தை பெரியார் வைக்கம் சென்று போராட்டத்துக்கு தலைமை ஏற்று முன்னெடுத்தார்.

வைக்கம் போராட்டம் குறித்து தந்தை பெரியார் எழுதியதாவது:

வைக்கம் போராட்டத்துக்காக நான் வருகிறேன் என்ற விஷயம் தெரிந்து கொண்டு, போலீஸ் கமிஷனர் பிட், இன்னொரு அய்யர் (அவர் பெயர் இப்போது சரியாய் ஞாபகத்திற்கு வரவில்லை. திவான் பேஷ்தாரர் சுப்பிரமணிய அய்யர் என்று நினைக்கிறேன்), ஒரு தாசில்தார் (விசுவநாத அய்யர்) எல்லோரும் என்னைப் படகிலிருந்து நான் இறங்கும் போதே வரவேற்றார்கள். மகாராஜா அவர்கள், எங்களை அவர்கள் சார்பில் வரவேற்று வேண்டிய எல்லா சவுகரியங்களையும் பண்ணித் தரச் சொன்னார் என்று சொல்லி எங்களை வர வேற்றார்கள். இது எனக்குப் பெரும் ஆச்சரியத்தைத் தந்தது என்றாலும், ஏன் மகாராஜா அப்படிச் செய்தார் என்றால் அதற்கு 3 மாதத்திற்கு முன்பு இருந்த இராஜா டெல்லிக்குப் போகிறதற்கு ஈரோடு வழியாக வந்து, ஒரு நாள் ஈரோட்டிலே தங்கிவிட்டு, அடுத்த நாள் டெல்லிக்கு இரயில் ஏறிப் போவது வழக்கம். அப்படி ஈரோட்டிலே தங்கும்போது, அதற்கு வேண்டிய வசதிகளையும், மகாராஜா எங்கள் பங்களாவிலும் தான் தங்க ஏற்பாடு செய்யப்பட் டிருக்கும். அப்படி 3 மாதத்திற்கு முன் வந்தபோது அவருடன் இந்த போலீஸ் அதிகாரி, இன்னும் இராஜாவுக்கு உதவிக்குத் தேவையான எல்லா அதிகாரிகளும் வந்து போனதில் இவர்கள் ஈரோட்டில் என்னை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறவர் களாகவும், நானும் அவர்களை எங்கள் வீட்டிற்கு வந்தபோது, சந்தித்துப் பேசியவர்களாகவும் இருந்திருக்கிறோம். இதனால் மகாராஜா சற்று மரியாதை காட்டினார்.

சத்தியாகிரகத்தைத் தொடர்ந்து நடத்த வந்த என்னை மகாராஜா சார்பில் இந்தப் பெரிய அதிகாரிகளே வரவேற்கின்றார்கள் என்று கண்டதும் இப்பக்கத்தில் பாமர மக்களுக்கு ஒரே மகிழ்ச்சியாக ஆகி விட்டது. என்னை விருந்தினராக மகாராஜா கருதினாலும்கூட நான் பல இடங்களில் சென்று பொதுக் கூட்டம் போட்டு சத்தியாக்கிரகத்தைப் பற்றிப் பேசினேன். காரசாரமாகப் பேசினேன், கீழ்ச்சாதி மக்களான நாம் உள்ளே தெருவில் போவதால் தீட்டுப்பட்டுவிடும், செத்துப் போகும் என்று சொல்லும் வைக்கத்தப்பனைப் போட்டு வேட்டி துவைக்கணும் என்றெல்லாம் கடுமையாகப் பேசினேன். சுற்று வட்டார மக்கள் ஆயிரக்கணக்கில் வைக்கம் வந்து கூடி விட்டார்கள். அது இராஜாவுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. 5, 6 நாள் வரை சும்மா தான் இருந்தார். பலரும் போய் அவரிடத்தில் நான் பேசுவது குறித்து முறையிட்டார்கள். பிறகு இராஜாவினால் சும்மா இருக்க முடியவில்லை.

இப்படி சுமார் 10 நாள் ஆனவுடனேயே, ஒரு போலீசு (சூப்பிரண்ட்) அதிகாரி அவர்கள் அய்யங்கார் - அவர் முயற்சியால் பி.சி.26 படி தடையுத்தரவு போட்டார். அந்நாட்டிலே 26 என்பது இப்போது இங்கே 144 தடையுத்தரவு போன்றது. நானும் சட்டம் மீறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கண்டறிந்தேன். உடனே நான் சட்டத்தை மீறிப் பேசினேன். என்னுடன் (தற்போது காங்கிரசுக்காரராக இருக்கும்) கோவை திரு. அய்யாமுத்து அவர்களும், மற்றும் இருவரும் சட்டம் மீறினோம். எங்களைக் கைது செய்தார்கள். எல்லோருக்கும் ஒரு மாதம் வெறுங்காவல் போட்டார்கள்! என்னை அருவிக்குத்தி என்ற ஊரில் உள்ள ஜெயிலில் (சிறையில்) வைத்தார்கள். அதற்குப் பிறகு என் முதல் மனைவியார் திரு. நாகம்மையாரும் பிறகு நான் வெளியே வந்தவுடன் என் தங்கை எஸ்.ஆர். கண்ணம்மாளும் மற்றும் சிலரும் வந்து நாடெல்லாம் சென்று பிரச்சாரம் செய்தார்கள். நான் விடுதலை ஆகி வந்து அதே மாதிரி மறுபடியும் திட்டம் போட்டேன்.

நான் வெளியே வருவதற்குள் இந்தக் கிளர்ச்சிக்கு ஏராளமான அளவில் ஆதரவு பெருகிவிட்டது. மளமளவென்று ஆட்களும் வந்து சேர ஆரம்பித்தனர். ஏராளமான பேர்கள் பல பகுதிகளிலும் சென்று சுற்றுப் பயணம் செய்து தீவிரப் பிரச்சாரம் செய்தார்கள். எதிரிகளும் அடிதடி, காலித்தனம், கலவரங்கள் முதலியவற்றில் ஈடுபட்டு இதை எப்படியாவது ஒடுக்கிவிட வேண்டுமென்று பலவித முயற்சிகளும் செய்து பார்த்தார்கள்.

ஆனால், போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு பெருகிக் கொண்டேயிருந்தது. வெளிநாடுகளிலிருந்து மலையாளிகளும் சாதிக் கொடுமை என்பதைக் கண்டு மனம் துடித்து, அதற்குத் தங்கள் எதிர்ப்பையும் சாதிக் கொடுமைகளை எதிர்த்துச் செய்யப்படும் போராட்டத்திற்குத் தங்கள் ஆதரவையும் காட்டும் வண்ணம் தினம் ரூ.50-60-100 என்று மணியார்டர் அனுப்பிக் கொண்டேயிருந்தார்கள்.

பெரிய பந்தல் போட்டு தினசரி போராட்ட வீரர்கள் முகாம் செய்திருந்த வீட்டில் 200-300 பேர் சாப்பிடுவார்கள்! தேங்காயும், மற்ற காய்கறிகளும், மலைமலையாகக் குவிந்து கிடக்கும். பெரிய கலியாண வீடு மாதிரி காரியங்கள் நடைபெறும்.

திரு. இராசகோபாலாச்சாரியார் எனக்குக் கடிதம் எழுதினார். நீ ஏன் நம் நாட்டை விட்டுவிட்டு இன்னொரு நாட்டிலே போய் இரகளை செய்கிறாய்? அது சரியல்ல. அதை விட்டுவிட்டு நீ இங்கு வந்து, நீ விட்டு விட்டுச் சென்ற வேலைகளைக் கவனி என்று. அப்போது இருந்த எஸ். சீனுவாசய்யங்காரும் இப்படித்தான் என்னை வைக்கத்திற்கு வந்தே அழைத்தார்; வரச் சொன்னார். அதே மாதிரி பத்திரிகையிலேயும் எழுதினார்கள். ஆனால், இதற்குள் சத்தியாக்கிரக ஆசிரமத்தில் 1000 பேருக்கு மேல் சேர்ந்தார்கள். தினமும் ஊர் முழுவதும் சத்தியாக்கிரக பஜனையும், தொண்டர்கள் ஊர்வலமும் நடந்து உணர்ச்சி வலுத்து விட்டது.

பஞ்சாபில் சுவாமி சிரத்தானந்தா என்பவர் ஒரு அப்பீல் போட்டார். அதன் பிரகாரம் பஞ்சாபிலேயிருந்து சீக்கியர்கள் 20-30 ஆள்களையும், இரண்டாயிரம் ரூபாயையும் கையிலெடுத்துக் கொண்டு நேரே வைக்கத்துக்கு வந்தார்கள். தாங்கள் சாப்பாட்டுச் செலவை ஏற்றுக் கொண்டு ஆதரவு தருவதற்காக. உடனே இங்கிருந்த பார்ப்பனர்கள் எல்லாரும் சீக்கியர்கள் வந்து, இந்துமதத்திற்கு எதிராகப் போர் தொடுக்கிறார்கள் என்றெல்லாம் காந்திக்கு எழுதினார்கள்.

உடனே அதன் பேரில் காந்தியார் துலுக்கன், கிறிஸ்தவன், சீக்கியன் ஆகிய பிற மதக்காரன் எவனும் இதில் கலந்து கொள்ளக் கூடாது என்று எழுதி விட்டார்கள்.

காந்தி எழுதினவுடனே இதில் கலந்திருந்த சீக்கியன், சாயபு, கிறிஸ்தவன் எல்லாரும் போய் விட்டார்கள். அதுபோலவே, தீவிரமாக இதில் ஈடுபட்டு முன்னோடியாக உழைத்த காலஞ்சென்ற ஜோசப் ஜார்ஜீக்கும் இராஜகோபாலாச்சாரியார் கடிதம் எழுதினார். இந்து மதச்சார்புள்ள இந்தக் காரியத்திலே நீ சேர்ந்திருப்பது தப்பு என்றார்.

அதை ஜோசப் ஜார்ஜ் அவர்கள் இலட்சியம் பண்ணாமல் திருப்பி எழுதினார். நான் என் சுயமரியாதையை விட்டுவிட்டு இருக்க மாட்டேன். வேண்டுமானால் என்னை விலக்கி விடுங்கள் என்றார். தற்போதைய நாகர்கோயில் பயோனீர் டிரான்ஸ் போர்ட்டைச் சேர்ந்த சேவு என்பவரும் அண்மையில் காலஞ்சென்ற டாக்டர் எம்.இ. நாயுடு அவர்களும் என்னுடனேயே இருந்து தொடர்ந்து நடத்துவது என்று முடிவு செய்தார்கள். அவர்கள் இதை விட்டுப் போக மாட்டேன் என்று உறுதியாகத் தெரிவித்து விட்டார்கள் என்றாலும், காந்தி சத்தியாக்கிரகத்திற்கு விரோதமாக எழுதிப் பணத்தையும் ஆளையும் தடுத்து விடுவாரோ என்று சிலர் பயப்பட்டார்கள்.

அந்தச் சமயம் சாமி சிரத்தானந்தா அவர்கள் வைக்கம் வந்து தான் பணத்துக்கு வகை செய்வதாகச் சொன்னார். பிறகு காந்தி கட்டளைக்கு விரோதமாவே சத்தியாக்கிரகம் நடந்து வந்தது.

இதற்கிடையில் நடந்த ஒரு நிகழ்ச்சியும் கவனிக்கத்தக்கது. எங்கள் போராட்டத்துக்குப் பெரிய மரியாதையையும், செல்வாக்கையும், தேடிக் கொடுத்துவிட்டது, இந்தக் காந்தி கட்டளை. இந்த சமயத்தில் என்னை மறுபடியும் பிடித்து 6 மாதக் கடினக் காவல் விதித்து ஜெயிலில் போட்டு விட்டார்கள். பிறகு சத்தியாகிரகத்தை நிறுத்து வதற்காகவும், எங்களை அழிப்பதற்காகவும் என்று நான் ஜெயிலில் இருக்கிற சமயத்தில் இந்த நம்பூதிரி பார்ப்பனர்களும், சில வைதீகர்களும் சேர்ந்து கொண்டு சத்துரு சங்கார யாகம் என்னும் ஒன்றை வெகு தடபுடலாக ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து நடத்தினார்கள். ஒரு நாள் நடுச்சாமத்தில் தொடர்ந்து வேட்டுச் சத்தம் கேட்டது. நான் ஜெயிலில் விழித்துக் கொண்டிருந்தேன். ரோந்து வந்தவனைப் பார்த்துக் கேட்டேன், என்ன சேதி? இப்படி வெடிச் சத்தம் கேட்கிறது? இந்தப் பக்கம் ஏதாவது பெரிய திருவிழா நடக்கிறதா? என்று கேட்டேன். அதற்கு அவன் சொன்னான், மகாராஜாவுக்கு உடம்பு சவுக்கியமில்லாமல் இருந்தது. மகாராஜா நேற்று இராத்திரி திருநாடு எழுந்துவிட்டார் என்றான்.

அதாவது ராஜா செத்துப் போனார் என்று சொன்னான். அவ்வளவுதான், மகாராஜா செத்தார் என்றவுடன் எங்களுக்கு ஜெயிலுக்குள்ளாகவே ரொம்ப பெருமை வந்துவிட்டது. அவர்கள் பண்ணிய யாகம் அங்கேயே திருப்பி மகாராஜாவைக் கொன்றுவிட்டது என்றும், அந்த யாகம் சத்தியாக் கிரகக்காரர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும், மக்களிடையே இது ஒரு தனி மதிப்பை ஏற்படுத்திவிட்டது. அதன் பிறகு அரசாங்கம் எங்களையெல்லாம் ராஜாவின் கருமாதியை முன்னிட்டு விடுதலை செய்தனர். எதிரிகள் குரலும், கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிவர ஆரம்பித்தது.

ராணியும் கூப்பிட்டு எங்களோடு ராஜி பண்ணி ஒரு உடன்பாட்டுக்கு வர விருப்பம் தெரிவித்தவுடன், அப்போது சமஸ்தானத்தில் திவானாக இருந்த ஒரு பார்ப்பான் என்னிடத்தில் நேரே ராணி பேசக் கூடாது என்று கருதி திரு. இராஜகோபாலாச்சாரிக்குக் கடிதம் எழுதினார். இராகோபாலாச்சாரியும் எங்கே என்னிடத்தில் ராஜி பேசி உடன்பாட்டிற்கு வந்தால் எனக்கு மரியாதையும், புகழும் வந்து விடுமே, அந்த மாதிரி வரக்கூடாது என்று கருதி, இதைக் காந்தியாருக்கே அந்த வாய்ப்பு அளித்து காந்தியின் மூலமே காரியம் நடந்ததாக உலகுக்குக் காட்ட வேண்டுமென்று தந்திரம் செய்து காந்திக்குக் கடிதம் எழுதினார். எனக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. எப்படியாவது காரியம் வெற்றியானால் போதும்; நமக்கு பேரும் புகழும் வருவது முக்கியமல்ல என்ற கருத்தில் நானும் ஒப்புக் கொண்டேன்.

காந்தியும் புறப்பட்டு வந்தார். ராணியோடு காந்தி பேசினார். ராணி காந்தியோடு பேசியபோது ராணி தெரிவித்தார்கள், நாங்கள் ரோடுகளைத் திறந்து விட்டுப் போகிறோம். ஆனால், அதை விட்டவுடன் நாயக்கர் கோயிலுக்குள் போக உரிமை வேண்டும் என்று கேட்டு ரகளை செய்தால் என்ன செய்வது? அதுதான் தயங்குகிறோம் என்றார்கள். உடனே காந்தி டி.பி.யில் தங்கியிருந்த என்னிடத்தில் வந்து ராணி சொன்னதைச் சொல்லி என்ன சொல்லுகிறாய்? இதை ஒப்புக் கொண்டு விடுவது நல்லது என்றார். நான் சொன்னேன் பப்ளிக் ரோடு திறந்து விடுவது சரி! ஆனால் அதை வைத்துக் கொண்டு கோயிலைத் திறந்து விடும்படி கேட்க மாட்டோம் என்று எப்படி நாம் உறுதியளிப்பது? கோயில் பிரவேசம் என்பது காங்கிரசின் இலட்சியமாக இல்லாவிட்டாலும் எனது இலட்சியம் அதுதானே! அதை எப்படி விட்டுக் கொடுக்க முடியும்? வேண்டுமானால் ராணிக்கு ஒரு வார்த்தை சொல்லுங்கள். இப் போதைக்கு அது மாதிரி கிளர்ச்சி எதுவுமிருக்காது. கொஞ்ச நாள் அது பற்றி மக்களுக்கு விளங்கும்படி பிரச்சாரம் செய்து, கலவரத்திற்கு இடமிருக்காது என்று கண்டால்தான் கிளர்ச்சி ஆரம்பிக்கப்படலாம் என்று சொல்லுங்கள் என்று சொன்னேன். அதைக் காந்தி ராணியிடம் சொன்னவுடன் ராணியார் ரோட்டில் யார் வேண்டுமானாலும் நடந்து செல்லலாம் என்று உத்தரவு போட்டு பொது சாலையாக ஆக்கினார்கள். இவ்வாறு பெரியார் எழுதி இருக்கிறார்.

 (புரட்சி பெரியார் முழக்கம், பிப்ரவரி 2019).

Tuesday, November 14, 2023

பெரியார் என அழைத்த பினாங்கு ஜானகி அம்மையார்

 1930 ஆம் ஆண்டிலேயே  “பெரியார்” என்றழைத்த பினாங்கு ஜானகி அம்மையார்.

(முரசொலி பாசறைப்பக்கத்தில் வெளியான என் கட்டுரை-வழக்கறிஞர் அருள்மொழி)

‘கல்வியே பெண்களுக்கு கம்பீரத்தை வழங்கும் ‘ என்ற கருத்தை விடாமல் வலியுறுத்திய பினாங்கு ஜானகி, “ பெண்களுக்கு வேண்டிய சீதனம் யாது ? “ என்ற தலைப்பில்,6.4.1930 அன்று வெளியான குடி அரசு ஏட்டில்  கல்வியின் மேன்மையையும், தந்தை பெரியார் அவர்களின்  ஒப்பற்ற அன்பையும் மனம் நெகிழும்படி எழுதினார் பினாங்கு ஜானகி.

“ உதாரணமாக, நம் திரு.ராமசாமி பெரியார் அவர்கள் இந்நாடு வருவதாக பெரிய ஆர்ப்பாட்டமாக இருந்த காலத்தில் பெரியார் அவர்களைக் காண பெரும் ஆவல் கொண்டிருக்கும் பொழுது,பெரியார் வர இரண்டொரு தினத்திற்கு முன் பிரசவ வேதனையால் நான் ஆஸ்பத்திரி செல்ல நேர்ந்தது.பெரியாரைப் பார்க்க கொடுத்து வைக்காது எங்கு எனது உயிர் போய்விடுமோ! வென்றஞ்சி சஞ்சலப்பட்ட பட்டுக் கொண்டிருக்கையில், பெரியார் அவர்கள் பினாங்கில் இறங்கிய நாளன்று என்னை விசாரித்து எனது ஷேமலாபங்களைக் கேட்டு,ஈப்போவிற்கு அவசரமாகப் போக வேண்டியதிருப்பதால், திரும்புவாயில் என்னைப் பார்ப்பதாய்ச் சொல்லிவிட்டுச் சென்றார் என்றே சேதி கிடைத்தது.இதனிடையில் ஆண்குழந்தை பிறந்து நற்சுகமடைந்தேன். திரும்ப பெரியார் பினாங்கு வந்தவுடன்,பெரியார் அவர்களும் ஶ்ரீமதி மணியம்மையார் அவர்களும் என்னைச் சந்தித்து வாரியெடுத்து, மார்போடணைத்து என் ஷேமங்களைக் கேட்டார்கள். அதன்பின் சுவாமி சிதம்பரனார், திரு பொன்னம்பலனார், ஶ்ரீமான் நடராஜன் இவர்களெல்லோரும் வந்து என் நற்ஷேமங்களைக் கேட்டார்கள்.

 இவர்களெல்லாம் என்னை எதற்காக மதித்து என்ஷேமங்களைக் கேட்க வேண்டும். நான் அவ்வளவு பெரிய பணக்காரியுமல்ல. என் தாய் தகப்பனார்கள் கருணை வைத்து ஏதோ சிறிது கல்வி என்ற ஆபரணத்தை கற்க வைத்ததினால் அன்றோ இப்பெரியார்கள் என்னை மதித்தார்கள்.நானும் ஏதேனும் பித்தளைப் பாத்திரங்களைசீதனமாய்க் கொண்டு சட்டி சுரண்டவும்,அடுப்பூதும் தொழில்களில் மட்டும் இருப்பேனாகில்என்னை அடுப்பங்கரையைத் தவிர வேறு ஒருவரும் மதியார். ஆனபடியால்,பெண்கள் நன்மதிப்பு பெறவேண்டுமானால்,கல்வி என்ற கண்ணிறைந்த ஆபரணத்தை அணியவேண்டும். “

கல்வியின் தேவை பற்றிய இந்தச் சிந்தனை அவரது மனதில் எவ்வளவு ஆழமாக இருந்ததென்றால்  1929 ஆம் ஆண்டு மலேயா சுற்றுப்பயணத்தில்,  தந்தை பெரியாருக்கு எத்தனையோ பேர் பரிசுப் பொருள்களைக் கொடுத்தார்கள். ஆனால் பினாங்கு ஜானகியோ சிறிய எழுத்துக்களைப் படிக்க உதவும்  ‘ஒரு கைப்பிடி போட்ட பூதக்கண்ணாடியை’ தந்தை பெரியாருக்கு வழங்கினார். அதேபோல் நாகம்மையாருக்கு ஒரு் சிறிய  பவுண்டன் பேனா பென்சில் அடங்கிய பெட்டியும் வழங்கினார்.

இக்கட்டுரையில் நமக்கு இன்னொரு செய்தியும் கிடைக்கிறது. 1938 ,நவம்பர் 13 அன்று தந்தை பெரியாரை  ‘பெரியார்’ என்று மட்டுமே அழைக்க வேண்டும்  என்ற தீர்மானத்தை  தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு நிறைவேற்றியது என்பது வரலாறு. அதற்கு பல ஆண்டுகள் முன்பே அவர் ‘பெரியார்’ என்றும் ராமசாமிப் பெரியார் என்றும்  அழைக்கப்பட்டார் என்பதை பினாங்கு ஜானகி அவர்களின் கட்டுரை உறுதி செய்கிறது. 

1940 களில் நடந்த இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் மலேசியாவைக் கைப்பற்றியது. பின்னர் அவர்களை வெளியேற்றி மீண்டும் பிரிட்டிஷ் ஆட்சி வந்தபோது சீன மக்களில் ஒரு குழுவினர் அரசை எதிர்த்து கிளர்ச்சியும் கொரில்லா யுத்தமும் நடத்தினர். அதனால்1948  ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசு மலேசியாவில் அவசர நிலையை அறிவித்தது. அது 1960 ஆம் ஆண்டு வரை நீடித்தது. மக்கள் கடுமையான சட்ட திட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் எதிர்கொண்டார்கள். அந்த சூழ்நிலையில் திடீரென்று அப்பாவு பண்டிதரும் ஜானகி அம்மையாரும் நேரில் விசாரணைக்கு வரவேண்டுமென்று அரசு அதிகாரிகள் அழைத்தனர். விசாரணையில் அவர்கள் எதிர்கொண்ட கேள்வி “ எதற்காக உங்கள்  மகனுக்கு சன்யாட்சென் என்று பெயர் வைத்தீர்கள் ?” என்பதுதான்.

“ நாங்கள் பகுத்தறிவாளர்கள். சமூக சீர்திருத்தவாதிகள்.அதனால் எங்கள் மூத்த மகனுக்கு சமரசம் என்றும் மகளுக்கு சம தர்மம் என்றும்   பெயரிட்டோம்.மூன்றாவது மகனுக்கு, இந்தியாவில் பெண்கள் கணவனின் சிதையிலே  உடன்கட்டை ஏற்றப்பட்ட கொடுமையை எதிர்த்துப் போராடிய  இராஜாராம் மோகன்ராய் பெயரை வைத்தோம். கடைசி மகனுக்கு சீனத்து சீர்திருத்தவாதியும் புதிய சீனத்தின் தந்தை என்று  பாராட்டப்பட்டவருமான சன்யாட்சென் பெயரை வைத்தோம். “ என்று ஜானகியும் அப்பாவு பண்டிதரும் கொடுத்த விளக்கத்தை ஏற்று அவர்களை தொல்லை செய்யாமல் விட்டது பிரிட்டிஷ் ஆட்சி. எந்த ஆதிக்கத்திற்கும் அஞ்சாத அப்பாவு ஜானகி இணையர்கள் தொடர்ந்து இயக்கப்பணியை ஆற்றினார்கள். 

1954 ஆம் ஆண்டு தந்தை பெரியார்,அன்னை மணியம்மையார் மற்றும் தோழர்களுடன் மலேசிய நாட்டில் கொள்கைப் பிரச்சாரம்  மேற்கொண்டபோது மிகச் சிறப்பாக கூட்டங்களை நடத்தி தந்தை பெரியாருக்கும் உடன் வந்த தோழர்களுக்கும் மிகப்பெரிய வரவேற்பை வழங்கினர் அப்பாவு பண்டிதரும்  ஜானகி அம்மையாரும் . 

சித்த வைத்தியம் செய்வதில் புகழ்பெற்றவராக விளங்கிய அப்பாவு பண்டிதர் தமிழகத்தில் சிலகாலம் தங்கி இருந்தார். அப்போது அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவர்களின் முயற்சிகளைத் தாண்டி உடல் நலிவுற்று  26.1.59 அன்று  இறந்துவிட்டார். சென்னையில் நடைபெற்ற அவரது இறுதி நிகழ்வில  தந்தை பெரியார் அவர்கள் பங்கேற்று ஜானகி அம்மையாருக்கு  ஆறுதல் கூறினார்.

அப்பாவு பண்டிதரின் மறைவு ஜானகி அம்மையாருக்கு மிகப்பெரும் இழப்பு., ஒத்த கொள்கையால் இணைந்த முப்பதாண்டுகால சுயமரியாதை மணவாழ்வு முடிவுற்ற பின்னும் ஜானகி அம்மையார் திராவிட இயக்க வீராங்கனையாகவே வாழ்ந்தார். தன்  பிள்ளைகள்  பகுத்தறிவு நெறியுடன் வாழவேண்டும் என்று வலியுறுத்தினார். தாயும் தந்தையுமாய் தானே பிள்ளைகளுக்கு வழிகாட்டினார்.அனைவருக்கும்  சுயமரியாதைத் திருமணமே நடத்தினார். முதுமையிலும் இயன்றவரை கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

அவரது தொண்டினை மறவாது, 2004 ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் திராவிடர் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்க மலேசியா சென்றிருந்தபோது ஜானகி அம்மையாரை நேரில் சந்தித்து அவரை நலம் விசாரித்தார்.. முதுமையினால் சோர்வுற்ற போதும் தளராத கொள்கை உறுதியுடன் அவருடன் உரையாடினார் ஜானகி அம்மையார்.  கல்வியே பெண்ணுக்கு கம்பீரம் என்று இளம்வயதிலேயே எடுத்துரைத்த ஜானகி அம்மையாரின் வாழ்வு 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முடிவுற்றது. அந்த வாழ்க்கை தரும் படிப்பினைகளுக்கு முடிவேது .?