Tuesday, January 14, 2025

அவதூறு பரப்பு வோருக்கு மறுப்பு (1) - கொளத்தூர்மணி


பெரியார் முடிவெய்தி 50 ஆண்டுகள் கழிந்த பின்னரும் பெரியார் பற்றிய நினைவுகளும், அதனால் ஏற்படும் அதிர்வுகளும் தாக்கங்களும் ஒவ்வொருநாளும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

பாரதிய ஜனதாகட்சி, நாம்தமிழர் கட்சி, தோழர் அல்லது அய்யா பெ.மணியரசன் (நோக்கம் வேறு வேறாகக்கூட இருக்கலாம்) போன்ற விபீசண, அனுமார் கூட்டங்கள் சில வரிகளை உருவிஎடுத்தும், திரித்தும் எப்படியேனும் பெரியாரை, திராவிடத்தை கொச்சைப்படுத்த வேண்டும் என்று செயல்பட்டவண்ணம் உள்ளனர். இவர்களுக்கு தரவுகளைத் தேடும் சிரமத்தை இவர்களது முன்னோடிகளான ரவிக்குமார், குணா, ம.பொ.சி, வ.வே.சு அய்யர் போன்ற பலரின் அன்றைய பதிவுகள் பயன்படுகின்றன.

ஒருமுறை பார்ப்பன பேச்சு அடியாள் எச்.ராஜாவிடம் “பெரியாரைப் படித்திருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு “நான் மணியரசன் எழுதிவருவதைப் படிக்கிறேன்; அதுவே போதும்”என்றான்.

அப்படித்தான் பல வாழ்க்கை வரலாறுகளும்கூட எழுதப்பட்டு வருகின்றன. 

ஓர் எடுத்துக்காட்டாக தோழர் ‘பாலசிங்கம் இராஜேந்திரன்’என்பவர் எழுதி ‘நீலம்’ வெளியீட்டில் “இளையபெருமாள் வாழ்க்கைசரித்திரம்”என்ற நூலும் வெளிவந்துள்ளது. நான் கடந்தமாதம் மதுரையில் கலந்து கொண்ட ஒரு கருத்தரங்கிற்கு முன்னதாக இந்நூலை எழுதிய ஆசிரியருக்குப் பாராட்டுவிழா நடந்தது. அந்த நாளில் அந்த நூல் எனக்குக் கிடைக்கவில்லை, அதன்பின்னர் தோழர் ஒருவர் வழியாக இந்தநூல் அண்மையில்தான் எனக்கு கிடைத்தது.

‘அரசியல் தலைவர்களுடனான உறவும் முரணும்’என்ற தலைப்பிட்ட அந்நூலின் 13வது அத்தியாயத்தில் ஈ.வெ.ரா. பெரியார் என்ற உட்தலைப்பில் சிலசெய்திகள் பதிவாகியுள்ளன.

1948ஆம் ஆண்டு சிந்தாதிரிப்பேட்டையில் இருந்த பெரியார் வீட்டில் அவரை சந்தித்து “எங்களது சமூகம் அனுபவித்து வரும் கொடுமைகளுக்கு இழிதொழில் செய்ய நிர்பந்திப்பதும் ஒரு முக்கியக்காரணமாகும். ஆகையால் எங்களின் இழிதொழில் ஒழிப்புப் போராட்டங்களுக்கு தங்களது ஆதரவைத் தரவேண்டும்”என்று கேட்டார் இளையபெருமாள். 

இதற்கு பெரியார், “உங்களுடைய சமூகத்தவர்கள் இந்த தொழில்களை செய்யவில்லை என்றால், யார் செய்வார்கள்?' என்று கேட்டார்.

(அதன்மீது நூலாசிரியர் தன் கருத்தாக, “பிராமணர்களுக்கு எதிராக அனைத்து சமூகத்தவர்களும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று சொன்ன பெரியார், நடைமுறையில் இப்படிப்பட்ட சாதி இந்துக்குரிய குணத்தையே பெற்றிருந்தார்”என்றும் குறிப்பிட்டுள்ளார்.)

இவை எந்த ஆதாரத்தின்மீது எழுதப்பட்டுள்ளது என்பதற்கு எந்த குறிப்பும் அதில் இல்லை, ஆனாலும் பிற்சேர்க்கையாக “பயன்பட்ட ஆவணங்கள்”என்ற பட்டியல் உள்ளது. அதில் முதலாவதாக குறிப்பிடப்பட்டுள்ள ரவிக்குமார் எழுதிய ‘இளையபெருமாள் – வாழ்வும்பணியும்’ என்ற  2010ஆம் ஆண்டில் வெளியிப்பட்டிருந்த நூல்.

அது என்னிடமே இருந்தது, அதில் தேடினேன். அந்நூல் முழுவதும் இளையபெருமாள் அவர்களின் வரலாற்றை அவரே சொல்வது போன்று எழுதப்பட்டுள்ளது.

நூலாசிரியர் தோழர் ரவிக்குமார் தனது முன்னுரையில் “அவரது 75வது பிறந்தநாளின் போது அவரிடம் பதிவுசெய்யப்பட்ட அவரது சுருக்கமான தன் வரலாற்றை ‘சித்திரைநெருப்பு’ என்ற பெயரில் சிறுநூலாக வெளியிட்டேன்”என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 இந்நூலின்தொடக்கமும்  ‘சித்திரைநெருப்பு’ என்று தான் தலைப்பிடப்பட்டுள்ளது. ஒருவேளை தோழர் ரவிக்குமார் அவர்கள் முன்னர் வெளியிட்டிருந்த ‘சித்திரைநெருப்பு’ என்ற சிறுநூலின் மறுபதிப்பாக இந்நூல் இருக்கக்கூடும். நூலின் தலைப்பை மட்டும் ‘எல்.இளையபெருமாள் வாழ்வும் பணியும்’என்று மாற்றியிருக்கலாம்.

எப்படியோ, அந்நூலில் உள்ள “பறை அடிப்பது பற்றி”என்ற உட்தலைப்பில் உள்ள பகுதியில் பெரியார் பற்றி அவதூறு பதிவாகியுள்ளது.

“சமூகத்தில் இழித்தொழிலாய் இருக்கின்ற இந்த தொழில்களை ஒழிப்பதற்கு அரசியல்வாதிகள் முன்வரவில்லை. சமூகசீர்திருத்தவாதிகளும் முன்வரவில்லை. ஏன் பெரியார் அவர்களிடமே கேட்டேன். ‘இந்தத் தொழில்களை வேறு யார் செய்வது? இளையபெருமாள், நீயே ஒருமாற்று கூறு’என்று சொன்னார். 1948, டிசம்பர் 20ம்தேதி சிந்தாதிரிப்பேட்டை வீட்டிலே சந்திக்கும்போது சொன்னார்” என்பதுதான் அந்தபகுதி. 

இது ஒரு புனையப்பட்ட பொய்யே ஆகும். எந்த அடிப்படையில் அதனைப் பொய் என்கிறோம்? 

23.11.1946 அன்று திராவிடர்கழக ஏடான ‘விடுதலை’ இதழில் 

'ஜாதியை ஒழிப்பதற்குக் காங்கிரசில் திட்டமில்லை, ஹிந்துமதஸ்தாபனமே காங்கிரஸ் வாணியம்பாடியில் பெரியார் பேச்சு!                 

பறைகள், தப்பட்டைகள் தீக்கரையாயின!' 

எனும் தலைப்பில் ஒரு செய்தி வந்துள்ளது. 

22.11.1946 அன்று வாணியம்பாடி சந்தைப்பேட்டையில் செட்யூல்டுவகுப்பார் பெடரேசனால் ஏற்பாடு செய்யப்பட்டு ஒருகூட்டம் நடைபெற்றுள்ளது.

அப்போது இந்தியாவில் அமைக்கப்பட்ட இடைக்கால அமைச்சரவையில், (பெரியார் அந்த உரையில் ‘இந்திய மத்திய அதிகாரசபை’யில் என்கிறார்) முஸ்லீம்லீக்குக்கு ஒதுக்கப்பட்ட 5 இடங்களில் ஒருஇடத்தை செட்யூல்டு வகுப்பார் பெடரேசன் தோழர் ஒருவருக்கு முஸ்லீம்லீக் அளித்தது. அதற்காக ஜனாப் ஜின்னா அவர்களை பாராட்டி நடத்தப்பட்ட கூட்டம் அது.

(அவ்வாறு ஒதுக்கப்பட்ட இடத்தில் நியமிக்கப்பட்டவர் வங்காளத்தைச் சேர்ந்த ஜோகேந்திரநாத் மண்டல் என்பவர். இடைக்கால அமைச்சரவை 2.9.1946ல் அமைக்கப்பட்டபோது காங்கிரசுக்கு இணையான இடங்கள் தங்களுக்கும் ஒதுக்கப்படவேண்டும் என்ற முஸ்லிம்லீக் கோரிக்கை ஏற்கப்படாததால் முஸ்லீம்லீக் பங்கேற்க மறுத்துவிட்டது. அதனால் 12 இடைக்கால அமைச்சர்களும் காங்கிரசாராகவே நியமிக்கப்பட்டனர். வைசிராய் வேவல் அவர்களின் முயற்சியில் மீண்டும் அமைச்சரவை புதுப்பிக்கப்பட்டது. அதில் இந்திய முஸ்லீம்லீக்குக்கு 5 இடங்கள் என்றும், காங்கிரசுக்கு 8 இடங்கள் என்றும் முடிவாகிறது. அவ்வாறு முஸ்லீம்லீக்குக்கு ஒதுக்கப்பட்ட 5 இடங்களில் ஒருஇடத்தைதான் செட்யூல்டு வகுப்பார் பெடரேசன் உறுப்பினர் ஜோகேந்திரநாத் மண்டல் அவர்களுக்கு வழங்கி முகமதுஅலிஜின்னா அவரை இந்தியாவின் சட்ட அமைச்சராக்குகிறார்.

ஜோகேந்திரநாத் மண்டல் என்பவர் யார்?

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களால் 1942 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட 'செட்யூல்டுவகுப்பார் பெடரேசனின்' வங்காள மாகாணத் தலைவரே ஜோகேந்திரநாத்மண்டல் ஆவார்.

அவர் வங்காள மாகாண முஸ்லீம் லீக் தலைமையிலான அமைச்சரவையில் நிதி, பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்தவர் ஆவார்.

இந்தியாவின் அரசியல் நிர்ணயசபைக்கு பம்பாய் மாகாணத்திலிருந்து அம்பேத்கர் அவர்கள் தேர்வாக முடியவில்லை.

வங்காளத்தின் செட்யூல்டுவகுப்பினர், பழங்குடி உறுப்பினர் ஆகியோரின் வாக்குகளை முயன்று பெற்று அரசமைப்பு அவைக்கு அம்பேத்கரை அனுப்பிவைத்தவர் இதே ஜோகேந்திரநாத் என்பவர்தான்.

1947ல் பாகிஸ்தான்பிரிந்தபோது இவர் கிழக்கு வங்காளத்தை சேர்ந்தவர் (கிழக்குபாகிஸ்தான்) என்பதால்,  பாகிஸ்தான் அரசமைப்பு அவையின் தற்காலிகத் தலைவராகவும், பின்னர் பாகிஸ்தானின் சட்டம், நீதித்துறை அமைச்சராகவும், கூடுதல் பொறுப்பாக தொழிலாளர் நலத்துறை, காமன்வெல்த், காஷ்மீர் விவகாரத்துறை அமைச்சராகவும் இருந்தவர். அந்த ஜோகேந்திரநாத் மண்டல் இந்திய இடைக்கால அமைச்சரவையில் சட்டஅமைச்சராக 25.10.1946 அன்று பதவிஏற்றார். பாகிஸ்தான் பிரிவினைவரை அப்பதவியில் தொடர்ந்தார்).

அவ்வாறு செட்யூல்டு வகுப்பார் பெடரேசன் உறுப்பினரான ஜோகேந்திரநாத் மண்டலுக்கு அமைச்சர் பதவியை வழங்கிய ஜனாப் முகமது அலிஜின்னாவை பாராட்டவே நடத்தப்பட்டது அக்கூட்டம்.

அவ்வாறு 22.11.1946 அன்று வாணியம்பாடியில் செட்யூல்டுவகுப்பார் பெடெரேசனால் ஏற்பாடு செய்யப்பட்ட அக்கூட்டத்திற்கு தோழர் ஏகாம்பரம் தலைமை தாங்கினார். தொடர்ந்து செட்யூல்டு வகுப்பார் பெடரேசனின் மாநில செயலாளர்கள் தளபதி பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி, ஆதிமூலம் ஆகியோரின் உரையைத் தொடர்ந்து பெரியார் உரையாற்றியுள்ளார். 

அவ்வுரையில் 'இழிவைத் துடைக்க இஸ்லாமியராவதே சிறந்தவழி' என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கூட்டத்தின் முழுஉரையும் 23.11.1946  நாளிட்ட 'விடுதலை' ஏட்டில் வெளிவந்துள்ளது. 

இறுதியில் ‘பறைகள் தீக்கிரை’என்ற உட்தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது.   

பெரியார் (மேடையில் இருந்து இறங்கி மேடையின் எதிரில்) உட்கார்ந்தவுடன் செட்யூல்டுவகுப்புத்  தோழர்கள் தப்பட்டைகள், தாசாக்கள், மத்தளங்கள்  முதலிய பலதரப்பட்ட தோற்கருவிகளுடன் சுமார் 100 பேர்கள் திடீரென்று மேடை அருகே வந்தார்கள். வந்தவுடன் கூட்டத்தில் தடபுடல்  ஏற்பட்டது. பெரியார் அமைதியாய் இருக்கும்படி வேண்டி, அமைதி ஏற்படுத்திய பிறகு, பெரியாரின் முன்னிலையில் அவைகளை போட்டு குவித்துவிட்டு ஒருவர் மேடைமீது ஏறிநின்று, “நாங்கள் பறை அடிப்பதால்தானே பறையர்கள் என்று அழைக்கப்படுகிறோம். இனிமேல் பறை அடிப்பதில்லை. சாவுவீட்டிற்கும், வாழ்வு வீட்டிற்கும், சாமிவீட்டிற்கும் கண்டிப்பாக பறைஅடிப்பதில்லை என்று இப்போது உறுதிசெய்து கொண்டோம்.  அதற்காக அந்தக்கருவிகளை இதோகொளுத்திவிடுகிறோம்”

என்று சொல்லி 4,5  புட்டி மண்ணெண்ணையை ஊற்றி நெருப்பு வைத்தார். நெருப்பு திகு,திகு என்று எரிந்தது. யாவரும் ஆரவாரித்தார்கள்.

“டாக்டர் அம்பேத்கர் அனுமதி வந்ததும் நாங்கள் பெண்டுபிள்ளைகளுடன் மதம் மாறுவோம்”என்று ஒலித்துக் கொண்டு கலைந்து சென்றார்கள் என்பதுவே அந்த செய்தி.

நாடு முழுவதும் பறைகளை எரிக்க பெரியார் வேண்டுகோள் விடுத்த வரலாற்றை  அடுத்த இதழில் பார்ப்போம்.                

(தொடரும்)  நன்றி 'புரட்சி பெரியார் முழக்கம்' 7.9.2023

குடிஅரசு 100


தந்தை பெரியார் 2.5.1925 இல் தொடங்கிய குடி அரசு இதழுக்கு இது நூறாம் ஆண்டு. 

"இதழாளர் பெரியார்" என்ற தலைப்பில் பேரா. அ.இறையன் அவர்கள் எழுதிய நூலிலிருந்து சில பக்கங்கள்...

“குடிஅரசு என்னும் பத்திரிகையை ஆரம்பிக்க வேண்டும் என்பதாக முதன்முதல் நானும் எனது நண்பர் தங்கப்பெருமாள் பிள்ளையும் 1922-இல் கோயம்புத்தூர் ஜெயிலில் சிறைவாசம் செய்யும்போதே நினைத்தோம்"

என்று தெரிவிக்கும் பெரியார், மூன்றாண்டுகள் கழிந்தபின் தன் நினைப்பை நடப்பாக்கினார். ஆம். 2.5.1925 அன்று குடிஅரசு பிறந்தது, கொடுமைகள் களைய புதுமைகள் விளைய!

தம் புரட்சிக் கருத்துகளை வெளியிட்டுப் பரப்புதற்கும் பயன்கள் குவிப்பதற்கும் கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு "ரைனிஷ்" இதழ், "ஜெர்மன் ஃப்ரெஞ்ச்" வரலாற்றேடு ஆகிய இதழ்களும் லெனின் அவர்களுக்கு, "இஸ்க்ரா", "ஸார்யா", "ரயோச்சயா கஸேத்தா" ஆகிய இதழ்களும் ஹோ-சி-மின் அவர்களுக்கு "வியத்லாப்" என்ற இதழும் அம்பேத்கார் அவர்களுக்கு "ஜனதா", "பகிஷ்கிரத்", "பாரத்" ஆகிய இதழ்களும் பெருந்துணையாய் அமைந்திருந்தன என்பதையும் அவ்விதழ்களில் அச்சேறிய எழுத்துகள் இன்று வரை உலக மக்களுக்குப் பயன்பட்டு வருகின்றன என்பதையும் நாம் தெரிந்திருக்கி றோம்.

அவ்வாறே பெரியாருக்குக் 'குடிஅரசு' அமைந்தது. 

எனவே 'குடி அரசின்' தோற்றம் முழுக்க முழுக்க ஒரு வரலாற்றுக் கட்டாயம்.

'குடிஅரசு' என்று தம் இதழுக்குப் பெயரிட்டது ஏதோ தற்செயலாக நடந்துவிட்ட ஒன்றல்ல. அது திட்டமிட்ட செயல். 19.1.1923 அன்றே அய்யா 'குடிஅர'சைப் பதிவு செய்து விட்டார். அது நடப்புக்கு வர 2 ஆண்டுகள் ஆயின. (குடிஅரசு: 1-5-1927).

"ஜனநாயகம் என்பது வடமொழிச் சொல். அதை வேண்டாமென்று ஒதுக்கி, 'குடிஅரசு' என்ற பெயரை வைத்தேன்" என்று அவரே வெளியிட்டிருக்கிறார். தூய தமிழ்ப் பெயர் சூட்டுவதில் அவருக்கிருந்த நாட்டத்தை இது காட்டுகிறது.

சிறையிலிருந்தபோது திட்டமிட்ட வண்ணமே, ஈரோடு கருங்கல் பாளையத்தைச் சேர்ந்த கற்றறிந்த வழக்குரைஞரும் பண்பாடு நிரம்பிய பேராயக் கட்சி முன்னோடியும் பெரியாரின் நடவடிக்கைகளுக்குத் தோள் கொடுக்கத் தயங்காதவரு மாகிய திரு. தங்கப்பெருமாள் அவர்களையும் இதழ் தொடங்கும் தம் முயற்சிக்குத் துணையாக வைத்துக் கொண்டார். இதழாசிரியர்களாக ஈ.வெ. இராமசாமி, வ.மு. தங்கப் பெருமாள் என இருவர் பெயர்களும் சாதிப் பின்னொட்டுகளுடன் இடம் பெற்றிருந்தன.

"மாலை-க; மலர்-க; குரோதன வருடம் சித்திரை மாதம் (2-5-1925) சனிக்கிழமை" என்றும் இனி ஞாயிறுதோறும் வெளிவரும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்த முதற் 'குடிஅரசு' இதழின் முகப்பு அட்டையின் மேற்பகுதியில் துறவி ஒருவர், மூன்று மதங்களின் கோவில்கள், இந்தியத் தாய், நெசவு செய்யும் காந்தியார், உழவு இயற்றும் உழைப்பாளி, கைராட்டை சுழற்றும் பெண், மரத்தச்சுத் தொழிலாளி, மூட்டை சுமக்கும் பாட்டாளி ஆகிய படங்களும்,

 "எல்லாருமோர் குலம் எல்லாருமோரினம் எல்லாருமோர் விலை, எல்லாரு மிந்நாட்டு மன்னர் (பாரதி)" என்றும்,

 "சாதிகளில்லையடி பாப்பா - குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம், நீதி உயர்ந்த மதி கல்வி அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்' (பாரதி) என்றும் அச்சியற்றப்பட்டிருந்தது.

அட்டையின் கீழ்ப் பகுதியில், "சிறந்த தமிழ்ப் பத்திரிகை, வருட சந்தா மூன்றுதான்” என்றும்,

 “தமிழ் மக்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேற்றமடைய உழைக்கும் பத்திரிகை இது. ஆகையால் இதனை ஆதரிக்க வேண்டியது உங்கள் முதற்கடன் ஆகும். உடனே சந்தாதாரராய்ச் சேருங்கள்" என்றும் பெரிய எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

மேலும் முகப்பட்டையின் வலதுமேல் மூலையில் "தனிப்பிரதி விலை அணா ஒன்று" என்றும் ஆங்கிலத்தில் 'KUDI ARASU' என்றும் அச்சிடப்பட்டிருந்தது.

இதழின் உள்ளே ஆசிரியவுரைப் பக்கத்தின் முதற்கலத்தின் மேற்பகுதியில் கைராட்டையின் படமும், 

"பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்", 

"ஒழுக்க முடைமை குடிமை; இழுக்க மிழிந்த பிறப்பாய் விடும்", 

"வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின்" 

எனும் மூன்று குறட் பாக்களும் பொறிக்கப்பட்டிருந்தன.

சில காலஞ்சென்று 23.8.1925ஆம் நாளிட்ட 'குடிஅரசு' இதழிலிருந்து குறட்பாக்களுக்கு மாற்றாக, "அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி அரும்பசி எவர்க்கும் ஆற்றி மனத்துளே பேதாபேதம் வஞ்சகம் பொய் களவு சூது சினத்தையும் தவிர்ப்பா யாகில் செய்தவம் வேறொன் றுண்டோ? உனக்கிது உறுதியான உபதேசம் ஆகுந் தானே"

என்ற பாடல் இராட்டைப் படத்தின் கீழே இடம் பெற்றது. 

ஆசிரியர்களில் ஒருவராகத் தொண்டாற்றிய அறிஞர் தங்கப் பெருமாள் அவர்கள் உடல்நலப் பாதிப்புக்கு இலக்காகி, பொறுப்பிலிருந்து விலக நேரிட்டது.

பின்னர் 26.7.25 ஆம் நாளையக் 'குடிஅரசி'லிருந்து ஆசிரியராகப் பெரியார் பெயர் மட்டுமே இருந்து வந்தது.

காலப்போக்கில், கைராட்டைப் படமும் 'அனைத்துயிர் ஒன்று' எனும் பாடலும் முறையே 16.2.30, 27.7.30ஆம் நாள்களில் நீங்கிவிட்டன.

இன்னொன்றையும் இங்கே குறிப்பிட வேண்டும். 'குடிஅரசி'ன் முகப்பு அட்டையின் மேல்பகுதியில் இடம் பெற்றிருந்த படங்களும் சொற்களும் 25.12.97ஆம் நாளிட்ட இதழிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டன. அதே நாளிட்ட இதழிலிருந்து ஆசிரியர்:

 ஈ.வெ.இராமசாமி நாயக்கர் என்ற பெயரின் சாதிப் பட்டப் பின்னொட்டு இல்லாதொழிந்தது.

அக்காலத்தின் செய்தியேடுகளுக் கென உருவாக்கப்பட்ட தாளில்தான் 'குடிஅரசு' அச்சாகியது. பக்கத்திற்கு மூன்று கலங்களெனப் பத்தி பிரிக்கப்பட்டு, 12 பக்கங்கள் கொண்டதாய் ஒவ்வோர் இதழும் அச்சடிக்கப் பெற்றது. இதழின் அளவு 12" x 15" அக்காலத்திய அளவு முறை குறிப்பிடப்பட்டுள்ளது.

தலையங்கம் எனும் ஆசிரியவுரை, பல்துறைக் கட்டுரைகள், அரசியல் - குமுகாயம் இலக்கியம் பண்பாடு தொடர்பான நிகழ்ச்சிகளின் செய்திகள், பெட்டிச் செய்திகள், பிற இதழ்கள் பற்றிய திறனாய்வுகள், 'ஆசிரியர்க்கு மடல்கள்', சுயமரியாதை இயக்கத் தோற்றத்திற்குப் பிறகு - குறிக்கோள் மொழிகள், அவ்வப்போது கவிதைகள், விளம்பரங்கள் முதலிய பல்வகைக் கூறுகளும் அடங்கிய அழகிய அரியதோர் இதழாகக் 'குடிஅரசு' மிளிர்ந்தது.

'குடிஅர'சின் உயர்ந்த தரத்தினைப் பறைசாற்றவல்ல வேண்டுகோள் துண்டமொன்று இதோ:

"குடிஅரசு நேயர்களுக்கு ஓர் வேண்டுகோள் நிருபர்கள் குடிஅரசு 'பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டிய கட்டுரைகள் செய்திகளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் காகிதத்தின் ஒரு பக்கத்தில் இடது ஓரத்தில் ஓர் அங்குல இடம் (மார்ஜின்) விட்டு, வரிகட்கு இடையில் குறைந்தது. அரை அங்குல இடம்விட்டு

எழுதியனுப்புவதுடன், தங்களின் முழு விலாசத்தையும் தெரியப்படுத்த வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறோம்.

தனிப்பட்ட நபர்களைக் குறித்து அனுப்பப்படும் கண்டனங்களும் 'ஊர்வம்பு விஷயங்களும்' பிரசுரிக்கப்படமாட்டா. பிரசுரிக்கப் படாத விஷயங்கள் திருப்பி அனுப்பப்படமாட்டா.

எப்படி, குடிஅரசின் தனிச்சிறப்பு பார்த்தீர்களா? செய்தியாளர்கள் பொதுத்தன்மை வாய்ந்த செய்திகளையே முறைப்படி அனுப்ப வேண்டும். தனிப்பட்டவர்களைப் பற்றிய ஊர் வம்புச் செய்திகளுக்கு இடமில்லை. புரட்சிக் கருத்துக்களைத் தாங்கி வரும் தம் இதழ் தரம் வாய்ந்ததாகவும் இருக்க வேண்டும் என்பதில் குறியாய் இருந்தார் பெரியார். அவரின் பண்பாடே அதுதான்.

பக்கங்களைக் குறிக்கப் பெரியார் பயன்படுத்தி வந்த தமிழ் எண்களை மாற்றிவிட்டு 16.6.1929ஆம் நாளிலிருந்து 1, 2, 3, 4, என்று எண்கள் இட்டார்.

சிறந்த அறிஞர்களின் உண்மை நாட்டும் கட்டுரைகளும் உண்மை காணும் கட்டுரைகளும் 'குடிஅர'சில் வெளிவருமாறு செய்தார் பெரியார். அந்நாள்களில் தாம் வெளிப்படுத்தக் கருதிய செய்திகள்பற்றி விரித்துரைக்கவே பெரியாருக்குத் தம் இதழில் இடம் போதவில்லை." 

ஆரம்பத்தில் ஒவ்வொரு வாரமும் 12 பக்கமும் நாமே எழுதி வந்திருக்கின்றோம்" என்பது அவரின் கூற்று.

ஆனால் அதே நிலை தொடர்ந்து நீடிக்கவில்லை. பேராயக் கட்சியின் அக்காலத்திய நடவடிக்கைகள் தொடர்பாகவும், தாம் மேற்கொண்ட நிலைப்பாடுகள் பற்றியும் இன்றியமையா முகாமைச் செய்திகளையும் அடிப்படைக் கருத்துகளையும் 'நாட்டு மக்களின் முன் வைக்க வேண்டுமென்ற கடமையைப் பெரியார் நிறைவேற்றியதோடு, கற்றுத் துறைபோகிய கைவல்லிய சாமி, சந்திரசேகரப் பாவலர், ஈழத்துச் சிவானந்த அடிகள், சாமி சிதம்பரனார், பண்டித முத்துச்சாமி, கே.எம். பாலசுப்பிரமணியம், மா. சிங்கார வேலர், சீனி. வேங்கடசாமி முதலிய புலவர்களையும், ஆய்வுத்திறன் படைத்த கோவை அய்யாமுத்து, ஜனக சங்கர கண்ணப்பர், சா. குருசாமி, ப. ஜீவானந்தம் முதலிய அறிஞர்களை யும் தரமுயர்ந்த முற்போக்குக் கட்டுரைகளைக் 'குடிஅர'சில் எழுத வைத்ததோடு, பாரதிதாசன், எம்.ஆர்.. மத்திரன், ஜீவானந்தம் ஆகியோரின் உணர்ச்சிப் பாக்களையும் பெற்று வெளியிட்டார். அறைகூவலாய் அமைந்த அவர்களின் படைப்புகள் ஆரிய வைதிகத்தை அலற வைத்தன; தேசியங்களைத் திணற அடித்தன.

கட்டம் கட்டி வெளியிடப் பெற்ற பகுத்தறிவு - இனமான முழக்கங்கள் சில:

"மனுநீதி போன்ற அதர்ம நீதி உலகில் மற்றொன்று இல்லை!"

"சூத்திரன் என்று உன்னைச் சொல்லிக் கொள்ளாதே! சூத்திரன் என்றால் வேசிமகன் என்று பொருள்"

"இறந்தவர்களைத் திருப்தி செய்யப் பார்ப்பனர் வயிற்றை நிரப்பாதே"

இதழின் அட்டைக்காகப் பச்சைநிற வழுவழுப்புத் தாளை 13.4.1930ஆம் நாளிலிருந்து பெரியார் பயன்படுத்தினார். அதிலிருந்து தமிழ் மக்கள் 'பச்சை அட்டை 'குடிஅரசு' என்றே வழங்கும் நிலை உருவானது.

பெரியார் - அம்பேத்கர் உறவைப் பாராட்டிய இளையபெருமாள்


 - கொளத்தூர்மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.

அம்பேத்கர் பிறந்தநாளைக் கொண்டாடியதற்காக பெரியார் தொண்டு வீராசாமியை கட்சியை விட்டு நீக்கினார் என்று இளையபெருமாள் குற்றம்சாட்டுவது அபத்தமானது என்று ‘எஸ்.வி.ஆர்’ எழுதினார். அதற்காக எஸ்.வி.ஆர் மீது கடும் தாக்குதலை தொடுக்கிறார் ஸ்டாலின் இராஜாங்கம்.

அந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரம் தேவையில்லை என்கிறார்  ‘அறிவு ஜீவி’ ஸ்டாலின் இராஜாங்கம், ஆனால் தொண்டு வீராசாமி தனிப்பட்ட வெறுப்பால் விலகினார் என்ற எஸ்.வி.ஆர் குற்றச்சாட்டுக்கு மட்டும் ஆதாரம் கேட்கிறார்.

அம்பேத்கரைப் பாராட்டி பெரியார் பல நிகழ்ச்சிகளில் பேசினார்.

இளையபெருமாள் அவர்களே பெரியாருடன் மேடைகளை பகிர்ந்து கொண்டு  அம்பேத்கர்மீது பெரியார் கொண்டிருந்த மதிப்பை விளக்கி யிருக்கிறார்.

சென்னை பெரியமேட்டில் கொண் டாடப்பட்ட டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பற்றிய ஒரு செய்தியை எடுத்துக் காட்டுவது பொருத்தமாக இருக்கும். இந்தசெய்தி 14.4.1966 ஆம் நாளிட்ட ‘விடுதலை’யின் முதல் பக்கத் தலைப்பு செய்தியாகவும், உரை இரண்டாம், மூன்றாம் பக்கங்களிலும் வந்துள்ளதாகும்.

பற்றற்ற பகுத்தறிவாளரே சமூகக் குறைகளை நீக்க இயலும்!

மனித குலத்தை திருத்திய நான்கு தியாகச் சீலர்களில் டாக்டர் அம்பேத்கர் ஒருவர்!

அறிவு தெளிவுக்கு புத்த மார்க்கமே சிறந்தது!

தாழ்த்தப்பட்டவர்களின் இரட்சகர் அவரே!

சென்னை அம்பேத்கர் விழாவில் பெரியார் பேருரை....

சென்னை ஏப்ரல் 14 :

 “டாக்டர் அம்பேத்கர் உலகினரின் சொத்தானவர்; செயற்கரிய செய்த மனித குலத்தை திருத்திய தியாக சீடர்கள் நால்வரில் ஒருவர்; 

அறிவு தெளிவுக்கு புத்தமார்க்கமே சிறந்ததென கண்டு தானும்புத்தர் ஆனார்;  

லட்சக்கணக்கில் புத்தர்களை உண்டாக்கினார்; தாழ்த்தப்பட்ட மக்களின் இரட்சகர் ஆவார்;

அம்பேத்கர் வகுப்புரிமை வாங்கித் தந்தவர்; மடமையை ஒழித்து அறிவுத் தெளிவடையச் செய்தவர்;

லட்சக்கணக்கில் புத்தமார்க்கத்தில் சேர்ந்த மக்கள் வழிகாட்டி ஆவார்” என்று  தந்தைபெரியார் அவர்கள் பெரியமேட்டில் நடந்த டாக்டர் அம்பேத்கர் 75 ஆம் ஆண்டு விழாவில் விளக்கவுரை ஆற்றினார்கள். 

சென்னை பெரியமேட்டில் 13.4.66 அன்று மாலை 6:30 மணி அளவில் டாக்டர் அம்பேத்கர் நினைவு ட்ரஸ்ட் சார்பாக தாழ்த்தப்பட்ட மக்களின் தனிப்பெரும் தலைவரும் உலகம் போற்றும் ஒப்பற்ற பேரறிஞருமான காலஞ்சென்ற டாக்டர்அம்பேத்கர் அவர்களின் 75 ஆம் ஆண்டு விழா வானது மிக்கசீரும் சிறப்புடனும் நடைபெற்றது.

வரவேற்புரை: ஆரியசங்காரன், விழாக்குழு செயலாளர். 

திரு ஆரிய சங்காரன் அவர்கள் வரவேற்பு உரைநிகழ்த்தினார்.

விழாவிற்கு பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் திரு இளையபெருமாள் அவர்கள் தலைமை வகித்தார்.

திரு இளையபெருமாள் எம்.பி, தமது தலைமை உரையில் குறிப்பிட்ட தாவது:

“டாக்டர் அம்பேத்கர் அவர்களைப்பற்றி நாம் பேசுவதைவிட தலைவர் பெரியார் அவர்கள் பேசுவதுதான் சாலச் சிறந்ததாகும்.

அம்பேத்கர் விழாவினை ஒரு குறிப்பிட்ட சமுதாயம் மட்டும்தான் கொண்டாட வேண்டும் என்ற கேடுகெட்ட நிலை இந்த நாட்டில் ஏற்பட்டு உள்ளது, அம்பேத்கர் அவர்கள் ஒருதனிப்பட்ட சமுதாயத் திற்கு மட்டும் சொந்தமானவர் அல்ல; இந்த தேசத்தின் பொதுசொத்து ஆவார். நான் கூறவில்லை காந்தி யாரே கூறியிருக்கின்றார். நேரு அவர்களும் கூறி இருக்கின்றார்கள்.

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் நினைவுச் சின்னமாக அவர் உருவம் பொறித்த தபால் தலைகள் வெளியிட முன்வந்த சர்க்காரை நாம் பாராட்டவேண்டும்.

பெரியார் அவர்கள் டாக்டர்அம்பேத்கர் அவர்களுடன் நீண்டநாள் தொடர்பு கொண்டவர் ஆவார். அவர்கள் வாயினால் நாம் அம்பேத்கர் அவர்களின் சிறப்புகளை அறியவேண்டும்.

அம்பேத்கர் நினைவு டிரஸ்ட் என்பது எந்த ஒரு அரசியல் கட்சியையும் சார்ந்தது அல்ல. தேர்தலுக்காக எந்த கட்சிக்கும் பணம் சேர்த்து கொடுக்க இருக்கின்றதும் அல்ல. அப்படிப்பட்ட எண்ணம் உடையவர்கள் யாராவது ட்ரஸ்டில் இருந்தால் தயவுசெய்து அவர்கள் விலகிவிடுவது நல்லது என்று கூறிக்கொள்ளுகின்றேன்.

அம்பேத்கர் டிரஸ்ட் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடுவது, அவரது நூல்களைப் பரப்புவது, அவரது தீவிர கருத்துக் களை புத்தகங்களாக வெளியிட்டு மக்களிடையே பரப்புவதும் ஆகும்”என்று எடுத்துரைத்தார்.

அடுத்து வழக்கறிஞர் பஞ்சாட்சர மூர்த்தி உரையாற்றியதைத் தொடர்ந்து பெரியார் நீண்டதொரு உரையினை ஆற்றியுள்ளார்.

அறிவர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாக்களைக் கொண்டாடுவது, கொண்டாடச் செய்வது, அவரது நூல் களைப் பரப்புவது, அவரது தீவிரக் கருத்துகளை டிரஸ்ட்டே வெளியிட்டுப் பரப்புவது போன்ற நோக்கங்களைக் கொண்ட தேர்தல் அரசியலில் இல்லாமல் கட்சி சார்பற்று அம்பேத்கரி யத்தைப் பரப்புவதையே நோக்கமாகக் கொண்டு இயங்குகிற ஓர்அமைப்பு நடத்திய டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா அது.

1966ஆம் ஆண்டில் நடந்த அவ்விழா வில், “டாக்டர்அம்பேத்கர் அவர்களைப் பற்றி நாம் பேசுவதைவிட தலைவர் பெரியார் அவர்கள் பேசுவதுதான் சாலச் சிறந்ததாகும், என்றும், “பெரியார் அவர்கள் டாக்டர்அம்பேத்கர் அவர்களுடன் நீண்டநாள் தொடர்பு கொண்டவர் ஆவார். அவர்கள் வாயினால் நாம் அம்பேத்கர் அவர்களின் சிறப்புகளை அறியவேண்டும்” என பேசிய இளையபெருமாள் அவர்கள், அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடியதற்காக  ‘தொண்டு’ வீராசாமி அவர்களைக் கழகத்தி லிருந்து பெரியார் நீக்கினார் என்று பழி சுமத்தியதை விளக்க தோழர் எஸ்.வி.ஆர் அவர்கள் பயன்படுத்திய சொற்களைப் பிழையானதாகப் பார்க்க முடியவில்லை.                                                            

(புரட்சி பெரியார் முழக்கம் -12.10.2023)

பறைக்கருவிகளை எரிக்கச் சொன்னவர் பெரியார் - திரிபுவாதங்களுக்கு ஆதாரத்துடன் மறுப்பு (2) - கொளத்தூர்மணி


பெரியார் முடிவெய்தி 50 ஆண்டுகள் கழிந்தபின்னரும் பெரியார் பற்றிய நினைவுகளும், தாக்கங்களும் ஒவ்வொருநாளும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அதன் தொடர்ச்சியாக மற்றொரு செய்தியையும் பார்ப்போம்.  

அது 21.12.1946 நாளிட்ட ‘குடிஅரசு’ இதழில் துணைத் தலையங்கமாக “தாழ்த்தப்பட்டோரும் தப்பட்டை வாசித்தாலும்” என்ற தலைப்பில் வந்துள்ள வேண்டுகோள் அறிவிப்பு.

“சென்ற சில மாதங்களுக்கு முன்பு (கடந்த நவம்பர் மாதம் என்பதே சரி) பெரியார் ஈ.வெ.ராமசாமியவர்கள் வாணியம்பாடியில் சொற்பொழிவு நிகழ்த்தும்போது (சொற்பொழிவு முடிந்தவுடன் என்பதேசரி)  அக்கூட்டத்திலேயே “பறையர்கள்” எனப்படுவோர் தமது இழிவுக்கு காரணமான தப்பட்டைகளைக் கொளுத்திவிட்டனர் என்ற செய்தி யாவரும் அறிந்ததே.  இந்நிகழ்ச்சியை அப்பகுதியில் பல இடங்களில் பலர் தமது பறைகளைக் கொளுத்தி வருகின்றனராம். 

தாழ்த்தப்பட்ட வகுப்பினரில் ஒருவரான “பறையர்” எனப்படுவோர் தமது தொழிலின் காரணமாகவே பறையர் என்று அழைக்கப்படுவதும், அதனாலேயே இழிவாக எண்ணப்படுவதும், நடத்தப்படுவதும் யாவரும் நன்கு அறிந்த செய்திகளே யாகும்.  எனவே, வாணியம்பாடி தோழர்களைத் தொடர்ந்து எல்லா ஊர்களிலுள்ள பறையர் என்றழைக்கப்படும் தோழர்களும் தம்பரம்பரை இழிவுக்கே காரணமானதும் வேண்டிய வருவாய் கொடுக்க வழியற்றதுமான இத்தொழிலைக் கைவிடுவதற்கு அறிகுறியாக தமது தப்பட்டைகளை கொளுத்தி தமது வெறுப்பை வெளிப்படையாய் தெரிவித்துக் கொள்வார்களாக!

“இதற்கான ஒத்துழைப்பையும், ஆதரவையும் தருமாறு ஆங்காங்குள்ள உள்ள திராவிடர்கழகத் தோழர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.”  

இதுவே அந்த வேண்டுகோள் அறிவிப்பாகும்.

மேற்கண்டவாறு 1946ஆம்ஆண்டு நவம்பர் மாதத்தில் தன் முன்னிலையில் பறைகள் எரிக்கப்பட்டதை அனுமதித்த பெரியார் - 1946 டிசம்பர் மாதத்தில் இவ்வாறான எரிப்புகளை நடத்துமாறும், நடத்துவதற்கு திராவிடர் கழகத் தோழர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டு தனது ஏடான குடிஅரசு ஏட்டில் வேண்டுகோளை வெளியிட்ட பெரியார்தான்,  இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 1948 டிசம்பரில் தன்னை சந்தித்து ஆதரவுகேட்ட இளையபெருமாள் அவர்களிடம் “ பறையடிப்பதை நீங்கள் செய்யாவிட்டால் யார்செய்வார்கள்?” என்று கேட்டாராம்.

'கேழ்வரகில் நெய்வடிகிறது' என்று 2010ல் ரவிக்குமார் எழுதியுள்ளதை சரிபார்த்தல் ஏதுமின்றி பாலசிங்கம் ராஜேந்திரன் 2023இல் மீள்பதிவு செய்துள்ளார்.

புத்திஉள்ளவர்கள் புரிந்துகொள்ளவே இவ்விளக்கங்கள்:

ஆனால் தோழர் ரவிக்குமார் எழுதியுள்ள நூலில் 1948ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் தேதி சிந்தாதிரிப்பேட்டை பெரியார் அவர்கள் இல்லத்தில் சந்தித்த இளையபெருமாள் அவர்கள் குறிப்பிட்டுள்ளதை மட்டும் ஏனோ தோழர் பாலசிங்கம் ராஜேந்திரன் பதிவுசெய்யவில்லை. தேதி, மாதம் ஆகியவற்றை அப்படியே மீள்பதிவு செய்யாமல் 1948ஆம்ஆண்டு என்பதோடு நிறுத்திக் கொண்டிருக்கிறார். 

இதற்கும் ஒரு உள்நோக்கம் இருக்கிறது. 1948ஆம் ஆண்டின் பிற்பகுதியில்தான், சுதந்திரம் பெற்ற இந்தியாவில் சென்னை மாகாண அரசாங்கம் மீண்டும் இந்தியைத் திணிக்க எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிராக இரண்டாம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்த காலக்கட்டம் அது.

 20-6-1948 அன்று சென்னை மாகாணத்தில் ’கட்டாயஇந்தி’ என்ற அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.  தமிழ்பேசும் பகுதிகளில் இந்திமொழி விருப்பப் பாடமாகவும், தெலுங்கு, மலையாளம், கன்னடம்பேசும் மக்கள் வாழும்பகுதி யில் கட்டாயப் பாடமாகவும் அரசின் அந்த அறிவிப்பு கூறியது. 

அதனைக்கண்டித்து 17.7.1948 அன்று சென்னை புனிதமேரிமண்டபத்தில் “இந்தித்திணிப்பு எதிர்பாளர்கள் மாநாடு” திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்பில் மறைமலை அடிகள் தலைமையில் நடைபெற்றது. அம்மாநாட்டில் பெரியார், திரு.வி.க., பாரதிதாசன், ம.பொ.சி, அண்ணா, நாரண. துரைக்கண்ணன், டாக்டர் தருமாம்பாள், அருணகிரி அடிகள் ஆகியோரும் பங்கேற்றனர். 

தொடர்ந்து பலமாநாடுகள், புலவர் மாநாடு,  மாணவர் மாநாடு, பெண்கள் மாநாடுகளும்,  கவர்னர்ஜெனரல் ராஜாஜிக்கு கருப்புகொடி,  அமைச்சர்களுக்கு கருப்புகொடி,  கண்டன ஊர்வலங்கள் என பலவகைப் போராட்டங்கள் தொடர்கின்றன.

 22 8 1948 அன்று சென்னையில் திராவிடர்கழகத்தின் மத்திய நிர்வாகக்குழு இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்து ஆலோசிக்கக் கூடியபோது பெரியார், அண்ணா, தி.பொ. வேதாச்சலம், குத்தூசி குருசாமி உள்ளிட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அனைவரும் (சுமார் 100 பேர்கள்) கைது செய்யப்பட்டு ஐந்து நாட்கள் சிறையில் வைத்திருந்து 27.8.1948  அன்று விடுவிக்கப்படுகின்றனர்.

ஐதராபாத் சமஸ்தானத்தில் இந்தியப்படைகள் நுழைந்துள்ள போர்ச்சூழலைக் கருத்தில் கொண்டு இந்திஎதிர்ப்புப்போர் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு,  மீண்டும் 2.11.1948 முதல்தொடங்கியது. 

இந்தகட்டத்தில்தான் காவல்துறை யின் வெறியாட்டங்கள் தொடங்குகின்றன.  2.11.1948 அன்றே 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது. தடையை மீறி கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள் நடக்கின்றன.  தூத்துக்குடி, மதுரை, கோவில்பட்டி, திருக்கோவிலூர்,  திருவாரூர், நன்னிலம், குடவாசல், பேரளம், கள்ளக்குறிச்சி, வேலூர்,  விழுப்புரம் ஆகிய இடங்களில் 144 தடையைமீறி ஊர்வலங்கள் நடந்த போது காவல்துறை கண்மூடித்தனமாக தோழர்களைத் தாக்கி எலும்புமுறிவு, மண்டை உடைப்பு என்ற அளவுக்கான காவல்துறை அத்துமீறல்கள் நடந்தேறின.  

அதனால் பெரியார் 144 தடைஆணை உள்ள கும்பகோணத்தில் 18.12.1948 அன்று மறியலில் ஈடுபடுகிறார். அன்று நள்ளிரவு 2:30 மணிக்கு கைது செய்யப்பட்ட பெரியார் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்படுகிறார்.  அங்கு வந்த சப்கலெக்டர்  “144 சீக்கிரத்தில் எடுக்கப்பட்டுவிடும்; நீங்கள் ஊர்வலத்தை நிறுத்திவிடுங்கள்” என்று கேட்க, பெரியார் “ சீக்கிரம் என்றால் எனக்கு ஒருகுறிப்பு வேண்டும், ஒருவாரத்தில் எடுத்து விடுவீர்களா?” என்கிறார்.

அதற்கு சப்கலெக்டர் "அரசாங்கத்தோடு கலந்தாலோசிக்க வேண்டும் என்கிறார். “அதற்கு இரண்டுநாள் போதுமே!  அதுவரை நிறுத்துகிறேன்“ என்கிறார் பெரியார்.  ஆனால் நாள்குறிப்பிடாமல் நிறுத்துங்கள் என்று வேண்டுகிறார் சப்கலெக்டர். “என்னுடைய முடியாமையைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முடித்துக்கொள்கிறார் பெரியார்.

19.8.1948 இரவு எட்டுமணிக்கு 9 நாட்கள் ரிமாண்ட் என்று அறிவிக்கிறார்கள்.  இரவு 10 மணி வரை அழைத்துபோகப்படாததால் அங்கேயே படுத்து அனைவரும் தூங்கிவிடுகிறார்கள்.  அடுத்தநாள் காலை பெரியார் மட்டும் திருச்சி சிறைக்கு அழைத்து செல்லப்படுவார் என்று கூறி ஒரு லாரியில் ஏற்றிக்கொண்டு அழைத்துச் செல்லப்படுகிறார்.  திருச்சி சிறைக் கண்காணிப்பாளரோ “151 பிரிவில் கைது செய்யப்பட்டவர்களை அரசின் ஆணையின்றி சிறையில் வைக்க முடியாது“ என்று மீண்டும் கும்பகோணத்திற்குத் திருப்பி அனுப்பிவிடுகிறார்.  தஞ்சை வந்து காவல்துறை கண்காணிப்பாளர் தஞ்சை சப்ஜெயிலில் ஒன்பது நாட்களுக்கு வைக்குமாறு ஆணைவழங்குகிறார்.  ஆனால் தஞ்சை சப்மாஜிஸ்திரேட் கும்பகோணம் சப்கலெக்டர் கொடுத்த ரிமாண்டை ஏற்றுக்கொள்ளமுடியாது உள்ளூர் அதிகாரி கொடுத்தால்தான் ஒத்துக்கொள்வேன் என்று திருப்பி அனுப்புகிறார். பின்னர் தஞ்சை அடிசனல் மேஜிஸ்திரேட்டிடம் ஆணைபெற்று வந்து தஞ்சை கிளைச்சிறையில் அடைக்கப்படுகிறார் பெரியார். (20.12.1948) அன்றுமாலை 4 மணியளவில் ஒரு உளவுத்துறை காவலர் பெரியாரின் அறைக்குவந்து உங்களுக்கு இப்போது எங்கு செல்ல ஆசை என்று கேட்கிறார்.  பெரியாரும் எந்த சிறைக்கு செல்கிறீர்கள் என்று கேட்பதாக கருதிக்கொண்டு சென்னைக்கு அனுப்புங்கள் என்று கேட்கிறார்.  அவர் சென்ற சிறிது நேரத்தில் சப்மாஜிஸ்திரேட் வந்து உங்களை விடுதலை செய்யச் சொல்லி ஆணைவந்துவிட்டது. ஆனால் அவ்வாணையில் அடிஷனல் மாஜிஸ்ட்ரேட் கையெழுத்து இல்லாததால் மீண்டும் அனுப்பியுள்ளேன் என்று கூறுகிறார்.

மாலை 5 மணிஅளவில் பெரியாரைக் காண பெரியகூட்டம் வெளியே கூடிவிட்டது. பெரியாரும் பயணத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கும்போது காவல்துறை 6.30 மணிக்குதான் விடவேண்டும் என்று சொல்லிவிட்டதாக பெரியாருக்குத் தெரிவிக்கப்படுகிறது.  அதுபோலவே 6.30 மணிக்கு காவல் துணை கண்காணிப்பாளர், ஒருசார்ஜண்ட், ஒருஉதவிஆய்வாளர், நான்கு காவலர்கள், ஒரு கார், லாரியுடன் வந்து பெரியாரைவெளியே அழைத்துச் செல்கிறார்கள். 

வெளியேமக்களும் தோழர்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொடிகளுடன் முழக்கம் எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் அவர்களிடம் பேசக்கூட முடியாதவாறு பெரியார் காரில் ஏற்றப்பட்டு காவல்துறை லாரி ஒன்று பின்தொடர மக்கள்கூட்டத்தை விரட்டித் தள்ளிகொண்டு வெளியேசெல்கிறது. 

பத்துமைல் தூரத்திலிருந்த அய்யம்பேட்டை ரயில்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.  தஞ்சையில் கட்டுப்படுத்த முடியாத அளவு மக்கள் இருந்ததால் இங்கு அழைத்துவரவேண்டியதாகிவிட்டது என்று துணைகண்காணிப்பாளர் விளக்கம் கொடுத்துவிட்டு 20.12.1948 அன்று இரவு அங்கிருந்து தொடர்வண்டியில் ஏற்றி அனுப்பிவைக்கிறார்கள். 

21.12.1948 அன்று காலை 5.40 மணிக்கு தொடர்வண்டி சென்னை எழும்பூர் வந்து சேர்ந்துள்ளது.

அன்றே சென்னை டாக்டர்சடகோபன் அவர்களிடம் பெரியார் அவர்களுக்கு உடல்நிலை பரிசோதனை செய்யப்படுகிறது.

மேற்கண்டசெய்திகள் 21.12.1948, 22.12.1948  நாளிட்ட விடுதலை இதழில் வெளிவந்துள்ள செய்திக்குறிப்பிலும்,  பெரியார் எழுதியுள்ள “ எனது அரஸ்ட் வேடிக்கை” என்ற நீண்டகட்டுரையிலும் காணக்கிடக்கின்றன (இந்தி எதிர்ப்புப் போராட்டம் 31.12.1948 இல் நிறுத்திக் கொள்ளப்பட்டது. 1949ஆம்ஆண்டில் இந்தித்திணிப்பு ஆணைதிரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.

பெரியார் 18.12.1948 இரவு கைது செய்யப்பட்டு 20.12.1948 அன்று மாலை தஞ்சையில் விடுதலை செய்யப்பட்டு தொடர்வண்டியில் அனுப்பப்பட்டு 21.12.1948 காலையில் சென்னை வந்து சேர்ந்துள்ளார் என்பதை எடுத்துக் கூறுவதே இவற்றை விரிவாக எழுதவேண்டி வந்ததன் நோக்கம் ஆகும்.

தோழர்ரவிக்குமார் 2010ஆம் ஆண்டில் வெளியிட்ட “எல். இளையபெருமாள் வாழ்வும்பணியும்” என்ற நூலில், இளையபெருமாள் அவர்களின் கூற்றாக (21.12.1948 அன்று காலை சென்னை வந்து சேர்ந்த பெரியாரை) 20.12.1948 அன்று சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் சந்தித்து பெரியாரிடம் பறைஒழிப்புக்கு ஆதரவுகேட்டபோது “ நீங்கள் செய்யாவிட்டால் யார் செய்வார்கள்?”  என்று பெரியார் எதிர்க்கேள்வி எழுப்பியதாக குறிப்பிட்டுள்ளது தவறானதாகும், பொய்யானதாகும்.

பொய்யை உருவாக்கியவர் இளையபெருமாளா? ரவிக்குமாரா? அவரவர் யூகித்துக் கொள்ள வேண்டியதுதான்.  - (தொடரும்)

நன்றி : புரட்சி பெரியார் முழக்கம்      14-9-2023

பெரியார் மீதான விமர்சனங்களுக்கு மறுப்பு (3)

 

நேர்காணலா? நேர்மையற்ற காணலா? 

                                                                       - - -கொளத்தூர்மணி

பெரியார் முடிவெய்தி 50 ஆண்டுகள் கழிந்தபின்னரும் பெரியார் பற்றிய நினைவுகளும், தாக்கங்களும் ஒவ்வொருநாளும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

 இதே ரவிக்குமாரை ஆசிரியராகக் கொண்டு, நெய்வேலியில் இருந்து வெளிவந்த ‘தலித்’ இதழில் இதே இளையபெருமாள் என்ன சொல்லியிருக்கிறார் என்பதையும் பார்ப்போம்.

‘தலித்’ எண்.1 இதழ் ஏப்ரல்,1997 இதழில் ஒருநேர்காணல்:

“தற்கொலைப் படையாக மாறுங்கள்!  

தலைவர் எல்.இளையபெருமாளிடம் ஒருபேட்டி..."என்ற தலைப்பில் பக்கம் 11  முதல் பக்கம் 17 முடிய ஏழு பக்கங்களைக் கொண்ட பேட்டி அது. 

 நாம் விவாதிக்கும் பொருள் குறித்த செய்தி பக்கம் 15இல் உள்ளது.

கேள்வி: கே.பி.எஸ்.மணியோடு உங்களுக்கு எப்போது இருந்து பழக்கம்? 

பதில்: 1945 முதல் அவரோடு பழக்கம்.  முதலில் அவர் பெரியார் கட்சியில் இருந்தார். பெரியார் கூட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முழுமனசோடு பாடுபடவில்லை. அம்பேத்கர் பிறந்தவிழா நடத்தியதற்காக 'தொண்டு' வீராசாமியை பெரியார் கட்சியைவிட்டு நீக்கினார்.  'பறைமேளம் அடிக்கக்கூடாது' என்று கே.பி.எஸ்.மணி பிரச்சாரம் செய்தார். 

'பறை மேளம் அடிப்பதால் என்ன தவறு' என்று பெரியார் அவரிடம் கேட்டார். 'நம் கட்சிக்காரர்கள் அனைவரும் மேளம் அடிக்கலாமென உத்தரவு போடுங்கள். நான் அதை எதிர்க்கவில்லை.  ஆனால் எங்கள் சாதி மக்களை மட்டும் அடிக்கச் சொன்னால் அதை நான் எதிர்ப்பேன்' என்று பெரியாரிடம் கே.பி.எஸ்.மணி சொல்லிவிட்டார். தன்னை எதிர்த்துப் பேசியது பிடிக்காமல் அவரைப் பெரியார் கட்சியைவிட்டு நீக்கிவிட்டார்... "என்ற பகுதியே அது.

பூவிழியன் என்பவரால் எழுதப்பட்டு 2005 ஆம் ஆண்டு வெளியிட்ட ”கே.பி.எஸ்.மணி :  ஒரு போராளியின் வரலாறு” என்றொரு நூல்.

 எல்.இளையபெருமாள் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய கே.பி.எஸ். மணி என்பவரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல் அது. 

அந்நூலின் 110,111 ஆகிய பக்கங்களில் உள்ள செய்தி ஒன்றினைக் காண்போம்.

ராணுவத்திலிருந்து 1946-ல் திரும்பியப் பிறகு ‘விடுதலை’ பத்திரிக்கையை கையில் எடுத்துக் கொண்டு “நான் இந்தகட்சியை இங்கு ஆரம்பிக்கப்போகிறேன்”என கே.பி.எஸ்.மணி அலைந்துள்ளார்.  தந்தையை ஒருநாள் நள்ளிரவில் எழுப்பி இதனைக்கூறியும் இருக்கிறார்.  தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு பற்றி பெரியார் விடுதலை பத்திரிக்கையில் எழுதியதாலும், இவைகளைப்பற்றி கிராமங்கள் தோறும் பிரச்சாரம் செய்து வருகின்றார் என கேள்விப்பட்டதன் வாயிலாகவும் இவரின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டவராக இரண்டு வருடங்கள் இருந்தார் கே.பி.எஸ்.மணி.

அப்பொழுது பெரியார் சிதம்பரத்தில் திராவிடர்கழகக் கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ளவரும்போது அதில் கே.பி.எஸ்.மணி கலந்து கொண்டார்.  கூட்டம் நிறைவு பெற்றபின் கே.பி.எஸ்.மணி ஒரு வேண்டுகோளை பெரியாரிடம் கூறினார்.  அதாவது தாங்கள் தீண்டாமை மற்றும் சாதி ஒழிப்பிற்காக மிகக் கடுமையான முறையில் பாடுபட்டு வருகிறீர்கள்.  அதனால், தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே செய்கின்ற பிணம் புதைத்தல், பறை அடித்தல்,  பிணக்குழி வெட்டுதல், இறந்த மாடுகளைத் தூக்குதல் போன்ற வேலைகளை இனிசெய்யக்கூடாது.  அவரவர் வகுப்பில் உள்ளவர்களே அவர்களுக்கான இவ்வேலையை செய்து கொள்ளவேண்டும் என 'விடுதலை'யில் ஒருநாள் தலையங்கம் எழுதுங்கள் என்று கேட்டார்.

உடனே பெரியார் “மணி, என் கட்சியையும், என் பத்திரிக்கையையும் ஒரே அடியாகக் கெடுக்கிறதா நீ முடிவுபண்ணிட்டியா,  இந்தத் தொழில் எல்லாம் தாழ்த்தப்பட்ட மக்கள் செய்யக் கூடாதுன்னா,  அப்புறம் யார் தான் செய்யுறது” எனக்கேட்டார். 

இதற்கு பதில் கூறவிரும்பாத கே.பி.எஸ்.மணி அன்றைய தினத்தில் இருந்து பெரியாரின் உறவையும், அவரின் கொள்கைகளையும் விட்டுவிலகினார்.

கே.பி.எஸ்.மணி 1946-இல் இராணுவத்தில் இருந்து திரும்பிய பின்னர் திராவிடர்கழகத்தில் இணைந்தார். இரண்டு ஆண்டுகள் இருந்தார். பெரியார் பறைஒழிப்பை ஏற்கவில்லை; அதனால் திராவிடர்கழகத்திலிருந்து விலகினார். இதுவே அவரது வாழ்க்கை வரலாற்று நூல்சொல்லும் செய்திகளின் சாரம்.

இவற்றின் உண்மைத்தன்மையை ஆராய்வோம்.  1947 முதல் 1948 முடிய பெரியார் இரண்டு முறை மட்டுமே சிதம்பரம் வந்துள்ளார். முதல்முறை 1947 மார்ச் 8ஆம்நாள். இரண்டு ஆண்டுகள் திராவிடர் கழகத்தில் இருந்துள்ளார் கே.பி.எஸ்.மணி. 

 எனவே சந்திப்பும் விவாதமும் நடந்தது அந்த நாளில் இருக்க முடியாது.  அடுத்ததாக சிதம்பரம் வந்தது 29.9.1948 அன்று நடந்த பொதுக் கூட்டத்திற்காகத்தான்.  அன்று நடந்த சிதம்பரம் நிகழ்வை குறித்து 30.9.1948 விடுதலை கீழ்காணும் செய்தியை வெளியிட்டுள்ளது.

சிதம்பரம், செப் 29 :  கழகக்கொடி தாங்கிய ஆயிரக்கணக்கான கருஞ்சட்டைத் தோழர்கள் முன்னே அழகுற அணிவகுத்துச் செல்ல, பல்லாயிரக்கணக்கான மக்கள் இயக்க ஒலிமுழக்கம் செய்துகொண்டு பின்செல்ல, பெரியார் அவர்களும் தோழர் மதியழகன் அவர்களும் காரில் அமர்த்தப்பட்டு இவ்வூர் மேலவீதி அஞ்சல் நிலையத்திலிருந்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப் பட்டனர்.  மாலை 5 மணிக்கு ஊர்வலம் தொடங்கி தெற்குவீதி, ரயிலடித்தெரு இவற்றின் ஊடேசென்று 5:45க்கு டவுன்ஹால் மைதானத்தை அடைந்தது. பெரியார் அவர்கள் காரைவிட்டு இறங்கவும், ஏற்கனவே மைதானத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் “பெரியார் வாழ்க, பெரியார் வாழ்க” என்று வாழ்த்தொலி முழக்கம்செய்து பெரியார் அவர்களை வரவேற்றனர். ஆங்காங்கு மின்விளக்குகளும், ஒலிபெருக்கிகளும் அழகுற அமைக்கப்பட்டிருந்தன.

கூட்டத்தில் உள்ளூர் வெளியூர் தோழர்கள்   15 ஆயிரம் மக்கள் கலந்துகொண்டனர்.  பெரியார் அவர்கள் மேடைமீது அமரவும் தோழர்கள் இன்னிசைபாடினர்.  பிறகு மதியழகன் தலைமையில் பொதுக்கூட்டம் இனிது தொடங்கியது.  தில்லை திராவிடர் கழகத் தலைவர் தோழர் கிருஷ்ணசாமி அவர்கள் அனைவருக்கும் நல்வரவு கூற, தோழர் திருநாவுக்கரசு அவர்கள் தில்லை திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியார் அவர்களுக்கு வரவேற்புரை வாசித்தளித்தார்.  பிறகு செல்வம் வாசகசாலை, அவ்வையார் கல்விக் கழகம், தெற்கிருப்பு மக்கள்கழகம், அண்ணாமலைநகர் இளைஞர்கழகம், புவனகிரி நெசவு தொழிலாளிகள் சங்கம், அண்ணாமலைநகர் திராவிடமாணவர்கழகம், கூத்தன் கோயில் திராவிடர்கழகம் ஆகிய கழகங்கள் சார்பாக மலர்மாலைகள் அணிவிக்கப்பட்ட தோடு,  கூத்தன் கோயில் திராவிடர்கழகத்தின் சார்பாகவும், திருவிடைமருதூர் திராவிடர்கழகத்தின் சார்பாகவும் முறையே 101 நாலணாக்கள் கொண்ட பணமுடிப்புகள் இந்தி எதிர்ப்பு நிதிக்காக நன்கொடையாக அளிக்கப்பட்டது.

தோழர் மதியழகன் தலைமை உரைக்குப் பின்பு தோழர்ஏ.பி. ஜனார்த்தனம் அவர்கள் சிறிதுநேரம் பேசினார்.  பிறகு பெரியார் அவர்கள் நீண்ட கைத்தட்டலுக்கிடையே எழுந்து, காந்தியார் மறைவுகுறித்தும், ஜின்னாமறைவு (11.09.1948)  குறித்தும் வருத்தம் தெரிவித்துக் கொண்டதோடு இவர்கள் மறைவால் நாட்டுக்கேற்பட்ட நஷ்டத்தைப் பற்றியும் குறிப்பிட்டு விட்டு திராவிடர்கழகத்தின் வளர்ச்சி, திராவிடர்கழகத்தால் சாதிக்கப்பட்ட அருஞ்செயல்கள்,  காங்கிரசின் பிற்போக்கு, பார்ப்பனிய வர்ணாசிரம தர்மம் அழிக்கப்பட வேண்டியதன் அவசியம்,  இந்திஎதிர்ப்பின் நேர்மை, மாணவர்கடமை, பெண்கள் முன்னேற்றம் என இன்னோரன்ன பலவிஷயங்கள் பற்றியும் மிகத் தெளிவாக சுமார் 3:15  மணிநேரம் பேசினார்.

கூட்டத்திற்கு வந்திருந்த பல்லாயிரக் கணக்கான மக்களும் பெரியார் அவர்களது சொற்பொழிவை மிக அமைதியாகக்கேட்டனர். 

தாய்மார்களும், குறிப்பாக கல்லூரி மாணவிகளும் பெரும்அளவுக்கு கூட்டத்தில் வந்து கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.  இரவு 10:30 மணிக்கு கூட்டம் இனிது முடிவுற்றது.

பெரியார் அவர்கள் அனைவருக்கும் நன்றியும் வணக்கமும் தெரிவித்துக் கொண்டு, தோழர் பொன்ராமலிங்கம் அவர்கள் அழைப்புக்கிணங்கி அவருடன் புதுவை வந்து இரவு 1  மணிக்கு உணவு எடுத்துக்கொண்டு திண்டிவனம் வழியாக 30ஆம்தேதி காலை சென்னை வந்து சேர்ந்தார்கள்.

இவ்வாறு முழுசெய்தியையும் எழுதவேண்டிவந்ததற்குக் காரணம் இல்லாமல்இல்லை.

”பெரியார் சிதம்பரத்தில் கழகக்கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ளவரும்போது அதில் கே.பி.எஸ்.மணியும் கலந்து கொண்டார்.  கூட்டம் நிறைவுபெற்ற பின் கே.பி.எஸ்.மணி ஒரு வேண்டு கோளை பெரியாரிடம் கூறினார்” என்கிறது கே.பி.எஸ்.மணியின் வாழ்க்கைவரலாறு.

29.9.1948 அன்று கூட்டம் முடிவுற்றதும், ‘பெரியார் அவர்கள் அனைவருக்கும் நன்றியும் வணக்கமும் தெரிவித்துக் கொண்டு தோழர் பொன்.ராமலிங்கம் அவர்கள் அழைப்புக்கிணங்கி அவருடன் புதுவைபுறப்பட்ட செய்தியை ‘விடுதலை’ஏடு கூறுகிறது. 

அவ்வாறாக கூட்டமைதானத்தில் இருந்து புதுவை தோழருடன் புறப்பட்டு விட்ட பெரியாரிடம் கே.பி.எஸ்.மணியின் வாழ்க்கை வரலாற்றுநூல் கூறுவது போன்ற (கூட்டம் நிறைவுபெற்ற பின் கே.பி.எஸ்.மணி ஒருவேண்டுகோளை பெரியாரிடம் கூறினார் ) நீண்ட உரையாடலை நிகழ்த்துவதற்கான வாய்ப்பெதுவும் இருந்திருக்கமுடியாது என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

தொகுத்துப்பார்ப்போம்.

ரவிக்குமார் இளையபெருமாள் அவர்களின்  “75வது பிறந்தநாளின் போது அவரிடம் பதிவு செய்யப்பட்ட அவரது சுருக்கமான தன் வரலாற்றை    ‘சித்திரைநெருப்பு’என்றபெயரில் சிறுநூலாக வெளியிட்டேன்.  அந்த ஆண்டுதான் தமிழகஅரசின் ‘ அம்பேத்கர் விருது’ அவருக்கு வழங்கப் பட்டது“ என்று அவரது 2010ஆம் ஆண்டு பதிப்பின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். (இளைய பெருமாளுக்கு தமிழக அரசின் ‘அம்பேத்கர்விருது’ வழங்கப்பட்டது 24.12.1998 அன்று ஆகும்)

அந்த ‘சித்திரைநெருப்பு’ நூலின் 56ஆவது பக்கத்தில் பறைஒழிப்புக்கு ஆதரவு கேட்டபோது “இந்ததொழிலை வேறுயார் செய்வது?  இளைய பெருமாள் நீயே ஒருமாற்றுக்கூறு” என்று 20.12.1948  அன்று சிந்தாதிரிப் பேட்டை வீட்டில் சந்தித்து கேட்டபோது சொன்னதாக குறிப்பிட்டுள்ளார். 

 20.12.1948   அன்று இரவுதான் சிறைபடுத்தப்பட்ட பெரியார் தஞ்சையில் விடுதலை செய்யப்பட்டார் என்ற செய்தியை முன்னரே கூறியுள்ளோம். 

அதே தலைவர் இளையபெருமாள் நெய்வேலிஇருந்து அதே ரவிக் குமாரின் தொகுப்பிலும் தயாரிப்பிலும் வெளிவந்த ‘ தலித்’ஏட்டின் முதல் இதழில் (1997, ஏப்ரல்)  ரவிக்குமாரும் உடன் இருந்துபதிவு  செய்த நேர்காணலில் “பறைமேளம் அடிக்கக்கூடாது” என்று கே.பி.எஸ்.மணி பிரச்சாரம் செய்தார்.

பறைமேளம் அடிப்பதால் என்ன தவறு என்று பெரியார் அவரிடம் கேட்டார்,  அனைவரும் மேளம் அடிக்கலாம் என்று உத்தரவு போடுங்கள் நான் அதை எதிர்க்கவில்லை, ஆனால் எங்கள் சாதிமக்களை மட்டும் அடிக்கச் சொன்னால் அதைநான் எதிர்ப்பேன் என்று பெரியாரிடம் கே.பி.எஸ்.மணி சொல்லிவிட்டார்“என்று கே.பி.எஸ். மணி வாதிட்டதாக உள்ளது.

1997 ‘தலித்’ ஏட்டில் கே.பி.எஸ்.மணி பறை அடிப்பதை தடுக்க வேண்டும் என்று வாதிட்டதாக ரவிக்குமார் எடுத்த நேர்காணலில் கூறியுள்ளார் இளைய பெருமாள்.

1998ஆம்ஆண்டு இளையபெருமாளின்  75ஆவது பிறந்தநாளை ஒட்டி ரவிக் குமார் பதிவு செய்த நேர்காணலில் (‘சித்திரைநெருப்புநூல்’) இளைய பெருமாளே பெரியாரிடம் கேட்டதாகவும் பெரியார் மறுத்ததாகவும், அதே இளையபெருமாள் கூறியுள்ளார்.

இரண்டில் எது உண்மை? 

இரண்டு நேர்காணலையும் பதிவு செய்த ரவிக்குமார்தான் விளக்கவேண்டும் அல்லது இரண்டுமே பொய்யா? 

ரவிக்குமார் இதில் முரண்பட்டு நிற்கிறார். 

ஒருநேர்காணல் பதிவில் கே.பி.எஸ்.மணி பெரியார் பறைஅடிப்பது குறித்து கேள்விக்கேட்டார் என இளையபெருமாள் கூறினார் என்கிறார். அடுத்த ஆண்டு இளையபெருமாளே பெரியாரிடம் பறைஅடிப்பது குறித்து கேட்டதாக இளையபெருமாள் கூறினார் என்கிறார்.

தொடரும் 

நன்றி : புரட்சி பெரியார் முழக்கம் 21-09-2023

Sunday, January 12, 2025

சீமானுக்கு துக்ளக் சோவும் குருமூர்த்தியும் நாம் தமிழரை சிவந்தி ஆதித்தனிடம் இருந்து வாங்கி கொடுத்த வரலாறு

நமது NAMATHU.blogspot.com . . . . . . . 

வெள்ளி, 3 ஜனவரி, 2020

சீமானுக்கு துக்ளக் சோவும் குருமூர்த்தியும் நாம் தமிழரை சிவந்தி ஆதித்தனிடம் இருந்து வாங்கி கொடுத்த வரலாறு

T.பாலசுப்ரமணிய ஆதித்தன். :

சீமான் , நெல்லைக் கண்ணன்...

2011 ஆம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளக் கூடாது என்று கம்யூனிஸ்ட் நல்லக்கண்ணு தடை ஆணை பெற்ற நேரம் அவருக்கு ஒரு பாராட்டு விழா தாமிரபரணி அமைப்பின் சார்பில் திருநெல்வேலி மார்கெட் திடலில் நடத்தினேன்...

அதில் எனது ஆசான் V.சுந்தரம் IAS அவர்கள் தலைமை தாங்கினார்.

நம்மாழ்வார் ஐயா உள்பட பலர் வந்து இருந்தாலும் வேகமாக பேச ஒரு ஆள் தேவை என்று என் நண்பர்கள் இருவரை சொன்னார்கள்.

அது சீமானும், நெல்லை கண்ணனும்.

சீமானைப் பற்றி அன்று எனக்கு தெரியாது. அவர் நாடார் சமுதாயம் என்றும் அப்போது எனக்கு தெரியாது.

குருமூர்த்தி, சோ பின்னணியில் தினத்தந்தியில் பேசி நாம் தமிழர் இயக்கத்தை இவர் மூலமாக நடத்துகிறார் என்றும் தெரியாது.

அப்போது சீமான் வைத்து இருந்தது நாம் தமிழர் இயக்கம். கட்சி அல்ல.

நானும் எனது நண்பரும் வளசரவாக்கம் சீமான் வீட்டுக்கு திருநெல்வேலி நண்பர் மூலமாக நிகழ்ச்சிக்கு பேச காலை 11 மணி சென்றோம். என் பெயரை சொன்ன உடன் சீமான் வீட்டில் ஒவ்வொரு அறையாக திறந்து மாடி ஹாலில் அமர வைத்தார்கள்.

சீமான் குளிக்கிறார்.

அமருங்கள் என்றனர்.

நாங்கள் இருவர் மட்டுமே ஹாலில் இருந்தோம்.

நான் உட்கார்ந்து இருந்த சோபாவின் கீழ்,எதிரில் சுற்றிலும் புத்தம் புதிய 3 அடி வீச்சு அரிவாள் கட்டு கட்டாக, ஏராளமான துப்பாக்கிகள்,ரிவால்வர்கள் இருந்தன.

ஒரு சினிமாகாரனாக இருந்தவருக்கு இது ஏன்? எப்படி ? என எனக்குள் கேள்விகள். என் நண்பர் என்னை பார்க்க,நான் அவரை பார்க்க...

அப்போது ஒருவர் டீ கொண்டு வந்தார்.

இவைகள் எல்லாம் எதற்கு என்று கேட்டேன் அவரிடம். நம்ம பசங்க எதாவது தேவைன்னா அவங்களுக்கு உடனே கிடைக்காது. அதான் மொத்தமாக வாங்கி வச்சிருக்கோம் என்றார்.

சிறிது நேரத்தில் சீமான் வந்தார்.

விஷயத்தை சொன்னேன்.

நல்லக்கண்ணு விழாவுக்கு வராமல் இருக்க இயலுமா?!. கட்டாயம் வருகிறேன். எனது பெயரை போட்டுக் கொள்ளுங்கள்.சரியாக வந்து விடுகிறேன் என்றார்.

நல்லது என்று அங்கு இருந்து 5 நிமிடத்தில் கிளம்பிச் சென்றோம்.

இரவில் தூக்கம் வரவில்லை.

அப்போது சீமான் யார்?

தினத்தந்திக்கு, குருமூர்த்தி, சோவுக்கு என்ன உறவு என்று சிலரிடம் விசாரித்த பிறகு மனம் ஆறுதல் அடையவில்லை.

சிவந்தி ஆதித்தன் அவர்களிடம் பேசினேன்.காலை அவர்கள் வீட்டுக்கு வரச் சொன்னார்கள். காலை 7.30 சென்றேன்.

இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்துகிறேன் என்று சொல்லி சீமானுக்கும், தினத்தந்திக்கும் தொடர்பு உண்டா?.

ஏன் சி.பா.ஆதித்தனார் தொடங்கிய நாம் தமிழர் இயக்கத்தை அவருக்கு கொடுத்து இருக்கிறீர்களே! அதற்கு காரணம் ஏதும் உண்டா என்று கேட்டேன்.

சோ எனது நண்பர்.

குருமூர்த்தி தினத்தந்தி ஆடிட்டர், ஆலோசகர்.

இருவரும் ஒரு நாள் என்னை சந்திக்க வந்து தமிழில் ஈடுபாடு உள்ள ஒரு பையன் சீமான் என்று நடிகராக இருக்கிறார். சினிமாவில் நடிப்பது அவருக்கு சரியாக வரவில்லை. அதனால் தமிழை வளர்க்க முயற்சி செய்கிறான்.

நாங்களும் உதவி செய்கிறோம், தங்களது அப்பா சி.பா.ஆதித்தனார் தொடங்கிய நாம் தமிழர் பெயரை எங்களுக்கு கொடுங்களேன் என்று கேட்டனர்.

எனது அப்பாவின் நாம் தமிழர் இயக்கம் பெயரை உபயோகப்படுத்தி கொள்ளுங்கள்.அதில் எனக்கு ஆட்சேபனை இல்லை என்று சொல்லி விட்டேன். 

உடனே சீமான் வெளியில் இருந்தவரை வரச் சொன்னார்கள்.

பார்த்தேன். என் காலில் விழுந்து ஆசி வாங்கினார்.

ஒரு சில நாடார் சமுதாய விழாவில் அவனை பார்த்து உள்ளேன். அவரின் வளர்ச்சிக்கு பணம் செலவு செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். எல்லாம் செய்தேன் என்றார் அண்ணன் சிவந்தி ஆதித்தன்.

இந்த சீமானின்,துப்பாக்கி,வீச்சு அரிவாள் என் மனதில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியது.

உடனே என் உடன் வந்தவரிடம் திருநெல்வேலியில் சீமான் அப்பாயின்ட்மென்ட் வாங்கி தந்த நண்பரிடம் சீமானை நிகழ்ச்சிக்கு வர வேண்டாம் என்று சொல்லி விடுங்கள் என்றேன். 

என்ன அண்ணாச்சி இப்படி சொல்றீங்க என்று அவர் கேட்டார்.

இனி வேண்டாம் என்று தீர்க்கமாகவே சொல்லி நடிகர் சீமானை தாமிரபரணி விழாவுக்கு கேன்சல் செய்து விட்டேன்.

எனக்கு அப்போது சோ,குருமூர்த்தி மேசானிக் கன்ட்ரோலர் என்றும் பத்திரிக்கை டிரஸ்ட் நடத்த அண்ணன் சிவந்தி ஆதித்தன் அவர்கள் அதில் மேசானிக் மெம்பர் என்பதும் எனக்கு அப்போது தெரியாது.

சென்னையில் இருந்தே நெல்லைக் கண்ணனை அழைக்க நம்பர் வாங்கி அலைபேசியில் அழைத்தேன்.

தன்மையாகதான் என்னிடம் பேசினார்.

நிகழ்ச்சிக்கு வருகிறேன் என்றார்.

கட்டணம் எவ்வளவு தர வேண்டும் என்று கேட்டேன். தாமிரபரணி விழா என்பதால் உங்கள் விருப்பம் என்றார். சரி ஐயா...

ஊருக்கு வந்து தங்களை பார்க்கிறேன் என்றேன். இறுதியில் யார் எல்லாம் வருகிறார்கள் என்று கேட்டார் !

நான் உடனே V.சுந்தரம் IAS, நடராஜ் IPS என்று வரிசையாக கூறிய அடுத்த நிமிடம் நல்லக்கண்ணு விழாக்கு பாப்பாரப் பயல்களை கூட்டி உட்கார வைக்கிறீர்களே என்று போனில் பேச அந்த திமிர் பிடித்த,வயதுக்கு மரியாதை தெரியாத கயவன் நெல்லை கண்ணனையும் தாமிரபரணி நிகழ்ச்சியில் இருந்து புறக்கணித்து விட்டேன்.

4000 பேர் இருக்கையும் நிறைவு ஆகி 1000 பேர் சேர் இல்லாமல் நின்று இரு பக்க டாஸ்மாக் கடைகளை பற்றி கவலை படாமல் தாமிரபரணி நிகழ்ச்சி >அருமையாக நடைபெற்றது.

ஐயா நம்மாழ்வார் வந்திருந்து என்னை ஆசி அளித்தது மறக்க இயலாத ஓர் அனுபவ நிகழ்வு.

இதே நெல்லைக் கண்ணன்தான் இன்று பாரத பிரதமர் மோடிக்கு ஆண்மையற்ற எச்சரிக்கை விடுகிறார். இதனால் பிரச்சனை கூடுமா? குறையுமா ?.

குருமூர்த்தி பாணியில் சொன்னால் தமிழக பாஜக ஆண்மை அற்ற முண்டங்கள் ஆண்டாளை பேசிய போது இருந்த மாதிரியே இப்போதும் வாயில் பிளாஸ்டர் ஒட்டிக் கொண்டு உள்ளார்கள் என்றால் விஷயம் புரிகிறதா ?

நெல்லைக்கண்ணன், சீமான் இருவரையும் நான் அப்போதே கணித்த மதிப்பீடு சரியாகி விட்டது.

சினிமாவில் பேசுபவர்களும், அரசியலில் பேசுபவர்களும் இன்று மேசானியர்களின் எச்சில் பணத்திற்காகதான் வெட்கம் இன்றி வாழ்கிறார்கள் என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள்

அன்புடன்

T.பாலசுப்ரமணிய ஆதித்தன்.

Saturday, January 11, 2025

சீமானின் சில்லறைத்தனம்

ஆய்வறிஞர்  பொ.வேல்சாமி  அவர்களின் பதிவு:

கடந்த இரண்டு நாட்களாக பொதுவெளியில் சீமானுடைய பொறுப்பற்ற பொறம்போக்கான பேச்சுக்கு பலரும் பலவகைகளில் எதிர்வினைகள் புரிந்து வருகின்றார்கள். மனசாட்சியே இல்லாமலும் எவ்விதமான சான்றையும் காட்டாமலும்  “தந்தைப் பெரியார்” மீது அக்கிரமமானதும் அவதூறு நிறைந்ததுமானதுமான பழிச்சொல்லை அள்ளி வீசியிருக்கிறார். இவ்வாறான சீமானின் பழிச் சொல்லுக்கு ஆதாரம் காட்டுவதாக அவருடைய அடிவருடிகளில் ஒரு சிலர் 02.06.1945 குடியரசில் வெளிவந்துள்ள ஒரு கட்டுரையை எடுத்துக் காட்டுகின்றனர். 

இவர்களால் சுட்டிக் காட்டப்படுகின்ற “அந்தக் கட்டுரையில்” தந்தைப் பெரியாரின் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டிற்கான ஆதாரம் எங்கே உள்ளது ?  அந்த அல்லக்கையர்கள் இக்கட்டுரையின் இறுதிபாராவில் கையாளப்பட்டுள்ள    “சமயோசிதம்”     என்ற சொல்லுக்குள் தங்களுக்கான ஆதாரம் “மறைந்து”ள்ளது என்கின்றனர்.   இவ்வாறான எத்தகைய அபத்தத்தையும் எளிதில் நம்பிவிடும் முட்டாள்கள் தங்களிடம் நிறைந்திருப்பதாக அவர்கள் நினைத்துக் கொள்கிறார்களா ? 

இவர்கள் குற்றம் சுமத்துகின்ற இந்தக் கட்டுரையில் (02.06.1945) எங்கே இவர்கள் சொல்வது போன்று எழுதப்பட்டுள்ளது ? அப்படி ஒரு வாசகம் இல்லவே இல்லை. உண்மையில் அந்தப் பேச்சானது ஒரு சிறப்பான மானிடவியல் சார்ந்த ஆய்வுக் கட்டுரையாகத்தான் எழுதப்பட்டுள்ளது. மார்க்சிய மூலவர்களில் ஒருவரான “எங்கல்ஸ்” எழுதிய “குடும்பம் தனிசொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்”  என்ற நூலிலும்    “சிக்மெண்ட் பிராய்டு” அவர்களுடைய மனித உளவியல் பற்றிய சிந்தனைகளிலும், தர்ஸ்டனுடைய “தென்னிந்திய குலங்களும் குடிகளும்” ( 7 தொகுதிகள் ) தொகுதிகளிலும்   அவரே எழுதியுள்ள இன்னொரு முக்கியமான நூலான “தென்னிந்திய மானிடவியல்” ( மணிவாசகர் நூலகம் வெளியீடு ) போன்ற சமூக மானிடவியல் சார்ந்த  ஆராய்ச்சி நூல்களின் பிழிவாகாத்தான் தந்தைப் பெரியாரின் இந்தக் கட்டுரை அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறான சமூக மானுடவியல் ஆய்வுக் கட்டுரையாக எழுதப்பட்டுள்ள இந்தக் கட்டுரையைப் புரிந்து கொள்ளக்கூடிய “அறிவற்ற மனிதர்களான” இத்தகையவர்கள் இந்த நூலில் சொல்லாத ஒரு விசயத்தை தந்தைப் பெரியார் சொன்னதாகக் கதைகட்டி கதறுவதை “சுய அறிவுள்ளவர்கள்” அறிந்து கொள்ளாமல் இருப்பார்கள் என்று நினைத்து விட்டார்களா ? 

குறிப்பு

அவர்கள் சுட்டிக்காட்டுகின்ற அந்தக் கட்டுரையை இத்துடன் இணைத்துள்ளேன். 


குடும்பம் தனிச்சொத்து அரசு

https://archive.org/details/m000017_202401


தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் தொகுதி ஒன்று

https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2lup6&tag=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88#book1/

தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் தொகுதி – 2

https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl1l8yy&tag=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20-%202#book1/

தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் தொகுதி – 3

https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl1kMyy&tag=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20-%203#book1/

தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் தொகுதி – 4

https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl1jxyy&tag=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20-%204#book1/

தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் தொகுதி – 5

https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl2lhyy&tag=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20-%205#book1/

தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் தொகுதி – 6

https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl2l8yy&tag=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20-%206#book1/

தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் தொகுதி – 7

https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl1kxyy&tag=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20-%207#book1/