Thursday, November 28, 2019

பாவேந்தர் பாரதிதாசன்

பாவேந்தர் பாரதிதாசன் - கவி

ஏப்ரல் 29, 1891-இல் பிறந்தார் தன்மானப் புலவர் பாவேந்தர் பாரதிதாசன். அவருடைய பெற்றோர்  கனகசபை-இலக்குமி அம்மையார் இட்டப் பெயர் சுப்புரத்தினம்.

தனது இயற்பெயரை பாரதிதாசன் என ஏன் வைத்துக் கொண்டேன் என்பது பற்றி அவரே கூறுகிறார், நான் அப்போது பாண்டிச்சேரியில் வாத்தியார் வேலையில் இருந்தேன். அப்போதே சில பத்திரிக்கைகளுக்கு கட்டுரைகளும் பாட்டுகளும் எழுதியனுப்புவது வழக்கம். யாராவது தொல்லை தருவார்கள் என்று கருதி நான் ஒரு புனைப்பெயர் வைத்துக்கொள்ள விரும்பினேன். அப்போது என் கண் முன்னே, சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச்சோற்றுப் பார்ப்புக்கு ஒரு நீதி என்று கேட்ட பாரதியார்- பார்ப்பானாயிருந்தும் பயப்படாத, தீமை வரும் என்று தெரிந்திருந்தும் திகைக்காது,தமிழில், புரியும் படி சொல்லிய பாரதியார் தான் நின்றார். உடனே பாரதிதாசன் என்று புனைப்பெயர் வைத்துக்கொண்டேன்.

1906 ஆம் ஆண்டு புதுவைக்கு அடைக்கலம் தேடி வந்த பாரதியாருடன் 13 ஆண்டுகள் நெருக்கமாகப் பழகினார் பாரதிதாசன்.

புதுவையில் புதுவை முரசு என்ற பெயரில் திராவிடர் கழகத் தலைவர் ம. நோயல் அவர்கள் இதழைத் தொடங்கிய போது குத்தூசி குருசாமி அவர்களும் பாரதிதாசன் அவர்களும் இணைந்து பணிபுரிந்தனர். ம. நோயல் அவர்கள் முதன் முதலாக பாரதிதாசன் பாடல்களைத் தொகுத்து தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு மற்றும் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் ஆகிய நூல்களை வெளியிட்டார்.

1929 முதல் குத்தூசி குருசாமி அவர்களுடன் பாரதிதாசன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டாலும் 1938‡இல் கடலூரில் குத்தூசி குருசாமி குடியேறிய, புதுவை முரசில் ஆசிரியராக  செயல்படத் தொடங்கிய பின்னர் பாரதிதாசன் நெருக்கமாக பழகினார்.

குத்தூசி குருசாமி அவர்களின் மனைவி குஞ்சிதம் அவர்கள் பாரதிதாசனின் கவிதைகளைத் தொகுத்து முதல் தொகுதியை வெளியிட்டார். கடலூர் நாராயணசாமி அவர்கள் பணஉதவி புரிந்தார்கள்.

1954 - இல் பிரஞ்சு அரசு புதுவை மாநிலத்திற்கு சுதந்திரம் அளித்த பின்னர் அதனை இந்தியாவுடன் இணைக்கும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து  உடன்பாட்டில் கையயழுத்து இட மறுத்தார் பாரதிதாசன்.

1946-இல் தமிழாசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், அவரது நல் வாழ்விற்கு  நிதி வழங்க பேரறிஞர் அண்ணா முடிவு செய்து நிதி திரட்டினார். ரூபாய் இருபத்திநான்காயிரமும் பொற்கிழியும் வழங்கினார். இத்தொகையைக் கொண்டு குயில் இதழைத் தொடங்கினார் பாரதிதாசன்.

குயில் இதழ் உரிமைத் தொடர்பான சிக்கல் இவருக்கும் நிர்வாக ஆசிரியாராக இருந்த டி.என். இராமனுக்கும் இடையே ஏற்பட்டது. இவ் விதழை சென்னையிவிருந்து நடத்த அரசும் தடைவிதித்தது. இது குறித்து பொன்னி இதழ்,
புதுச்சேரியிலிருந்து குயில் என்றொரு கவிதை இதழ் புரட்சிக்கவிஞரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்து கொண்டிருக்கிறது. புரட்சிக்கவிஞரின் கவிதை வளம் யாவரும் அறிந்தது. நிகர் யாருமில்லையயனச்  சிறப்புற்று விளங்கும் கவிஞர் கோமான் பாரதிதாசனார். அவர் தம் கவிதைகள் மக்களை ஆட்கொண்டன என்பதற்குச் சான்று சென்னையில் பெருந்திரளிடையே நடந்த நிதியளிப்பு விழாவேயாகும். அத்தகைய கவியரசரின் கவிதை இதழுக்குத் திங்கள் தோறும் தித்திக்கும் கவிதைகளைத் தந்து வரும் ஏட்டுக்குச் சென்னை ஆட்சி தடை விதித்துள்ளது என்றால் இதைவிடவேறு கொடுமை என்ன வேண்டும்? என்று எழுதிற்று.

இதனைத் தொடர்ந்து புதுச்சேரியிலிருந்து குயில் இதழை நடத்தினார் பாவேந்தர். பத்தாண்டுகளுக்கு பின் மீண்டும் 1.6.1958 இல் புதுவை பழனியப்பா அச்சகம் மூலம் அச்சடிக்கப்பட்டு குயில் வெளிவந்தது.

குயில் இதழின் நோக்கமாக, தமிழின் தொன்மையை, சிறப்பை, பெருமையைக் காப்பாற்றும் வகையிலும் வடமொழி ஆதிக்கத்தை எதிர்க்கும் வகையிலும் , சாதி, சமயம், கடவுள் மற்றும் மூட நம்பிக்கைகளை எதிர்ப்பதையும், தொழிலாளர் இயக்கம், பெண்ணுரிமை இயக்கம் ஆகியவற்றை ஆதரிப்பதாகவும் கொண்டு செயல்படும் என்று குறிப்பிடுகிறார்.

பாரதிதாசன் பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளைப் பரப்பும் போர் முரசாக விளங்கியவர். புதுவையின் முதல் திராவிடர் கழகத் தலைவராகவும் விளங்கியவர். திராவிடர் கழகம் ஒன்றே தமிழ் , தமிழர் நலங்கோரி உழைப்பது. அவ்வியக்கம் ஒன்றாலேயே தமிழ், தமிழர் நன்னிலை அடையச் செய்ய முடியும் என்ற உண்மையை எடுத்துக் காட்டி வந்துள்ளது என்று குயில் இதழில் எழுதினார்.

தமிழின் சிறப்பு குறித்து எழுதிய தமிழ் என்ற கட்டுரையில்,
நம் தாய்மொழியாகிய தமிழ் மொழி, மிகப் பழமை வாய்ந்தது. அம்மொழி பலமொழிகளுக்குப் பெற்றத் தாயாகவும் வளர்ப்புத் தாயாகவும் இருந்து வந்துள்ளது. தமிழ் மொழி, இங்கு வந்து புகுந்த எதிரிகள் பலரால் சாகடிக்கப்பட்டதோ என்ற நிலையிலும் சாகாத மொழி மறைக்கப்பட்டுவிட்டதோ என்று எண்ணிய நிலையிலும் மறையாது வாழும் மொழி. தமிழ் மொழி எண்ணிலாத நல்ல இலக்கிய வளமுடைய மொழி என்று தமிழ் மொழியின் சிறப்பைக் கூறுகிறார்.

தமிழுக்குச் சிறப்பு அதன் இலக்கணம்.  இலக்கணம் என்பதை இலக்கு அணம் எனப் பிரித்து அதன் பொருள், இலக்கணம் என்றால் இலக்கை நெருங்குவது என்பதாம். அணம் என்றால் அணுகுவது என்று பொருள் கூறினார் பாவேந்தர்.
தமிழே தமிழகத்தில் ஆட்சிமொழியாகவும் அலுவல் மொழியாகவும், பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று பாவேந்தர் குயில் இதழில் எழுதிவந்தார். ஆங்கிலக் கலைச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களைக் கண்டறிந்து அவற்றை மக்கள் மனதில் நிலைக்கச் செய்ய வேண்டும் என்று விரும்பினார்.

கலெக்டர் என்பதற்கு தண்டல் நாயகம் என்றார். போலிஸ் ஸ்டேசன் என்பதை காவல் நிலையம் என்றார்.

தமிழிசையை வலியுறுத்தி, குயிலில் வரும் இசைப்பாடல்களுக்கு ஏற்ற இசையமைத்துப் பாடுகின்ற தெருபாடகற் குழு உருவாக வேண்டும் என்று எழுதினார். அதற்குக் காரணம், தெருப் பாடகர்கள்தான் தமிழ் மக்களைச் சந்திப்பவர்கள் என்பது அவரது கருத்து.

இறைவனைத் தமிழிலேயே வழிபாடு செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்தி,  சிவ பெருமானுக்குத் தமிழ் தெரியாது. பிள்ளயாருக்குத் தமிழ் தெரியாது. விஷ்ணுவுக்குத் தமிழ் தெரியாது. இவை போன்ற தெய்வங்களுக்குத் தமிழ்ப்பற்றிப் பரிந்துரை வழங்க அருச்சகர்கள் தேவை. அவன் வடமொழியால் வழிபாடு செய்ய வேண்டும் என்ற இந்தக்கல்வி இங்கு வேண்டாம் அந்தக் கல்விதான் இருக்கும் என்றால் கல்வி தேவையில்லை என்றார். தமிழ் ஒலியால் செவித்தகடு கிழியும் சிவம் நமக்கு எதற்கு? என்றார்.
தமிழ் தந்த சிவனார்க்கு வடமொழியில் சிபாரிசா என்ற குன்றக் குடிகளாரைப் பாராட்டி தமிழறிஞர் குன்றக்குடியார் என்று எழுதினார்.

தமிழில் இல்லாதது இல்லை என்பதும் தமிழ் சிறந்தால் தமிழர் வாழ்வு சிறப்படையும் என்பதும் தமிழ் பிறமொழிகளின் தாய் என்பதும் தமிழைக் காட்டிக் கொடுப்பவன்  கயவாளிப் பையன் என்பதும் தமிழை விட்டு ஆங்கிலத்தைப் போற்றுவோன் முடிச்சுமாறிப் பையன் என்பதும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று எழுதினார். தமிழை எதிர்க்கும் நிறுவனங்கள் எதுவாய் இருந்தாலும் நாம் எதிர்த்து ஒழிக்க வேண்டும். தமிழை எதிர்ப்பவன் தமிழைக் கெடுப்பவன் எவனாயிருந்தாலும் அவனைத் தலைதூக்க ஒட்டாமல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வாழ்நாள் முழுக்க பெரியார் கொள்கைகளுக்காகப் போராடிய பாவேந்தர்,

பெரியாரின் தொண்டைப் பாராட்டி,
தொண்டு செய்து பழுத்தப் பழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
அவர்தான் பெரியார்.
என்று எழுதினார்.

ஏப்ரல் 21, 1964 இல் பாவேந்தர் மறைந்தார்.

பெரியார் தனது இரங்கல் உரையில்,
நமது இயக்கத்தின் சமுதாயப் புரட்சிக் கருத்துக்களை கடந்த 35 ஆண்டுகளாகவே பரப்பி வந்த கவிஞர் மறைந்தது தமிழ்நாட்டிற்கே மிகப் பெரிய இழப்பாகும். நஷ்டம் என்பதோடு நமது இயக்கத்திற்குப் பெரிய இழப்பாகும் என்றார்.


பெரியாரின் மொழியியல் பார்வை குறித்து பெரியார் பார்வை இதழாசிரியர் கவி ஆற்றிய உரை

திருவாரூர் பவுத்திரமாணிக்கம் தெ.வெற்றிச்செல்வன் அவர்களின் வீட்டில் 29.4.2007 அன்று நடந்த பெரியாரியம் குறித்த முக்கூடல் நிகழ்ச்சியில் பெரியாரின் மொழியியல் பார்வை குறித்து பெரியார் பார்வை இதழாசிரியர் கவி ஆற்றிய உரையிலிருந்து...

அனைவருக்கும் வணக்கம். முதலில் முக்கூடல் நிகழ்ச்சியில் என்னை பேக அழைத்த திரு. வெற்றிச்செல்வன் அண்ணன் அவர்களுக்கு எனது நன்றி.
நான் எழுதிய பெரியாரின் மொழிக்கொள்கை அறிவுபூர்வமானது என்ற நூலைப்பற்றி ஒரு விமர்சனக் கூட்டம் வையுங்கள் என்று திரு. வெற்றிச்செல்வன் அவர்களிடம் கூறினேன். அவரும் 10 படிகளை காசு கொடுத்து பெற்றுச் சென்றார். கடைசியில் என்னையே பெரியாரின் மொழியியல் பற்றிப் பேசச் சொல்லிவிட்டார். எனக்கு மேடை பேச்சு அவ்வளவாக வராது. எனது நான் அமர்ந்து கொண்டே பேச அனுமதி வேண்டுகிறேன். (திரு. பொதியவெற்பன் அவர்கள், பெரியார் மாதிரி பேசுங்கள். உட்கார்ந்து கொண்டே பேசுங்கள் என்றார்).

என்னுடைய பெயர் க.விநாயகம். கவி என்று சுருக்கமாக வைத்துக் கொண்டேன். முதலில் இந்திய இலங்கை உடன்பாடு ஏற்பட்ட போது துக்ளக், தினமணி இதழ்களில் வந்த செய்திகளை மறுத்து ஒரு நூல் எழுதினேன். அதன் பிறகு காவிரிச் சிக்கலை மையமாக வைத்து மற்றொரு நூலை எழுதினேன்.
சென்னை பல்கலைக்கழக திராவிட மொழி ஆய்வுக் கருத்தரங்கில் பார்வையாளராக கலந்து கொண்ட போது பாரதிதாசன் திருக்குறளுக்கு உரை எழுதிய சேதி தெரிந்தது. அந்நூலைத் தேடி அலைந்தேன். அதைப்படித்தவுடன்  அந்நூலைச் சுருக்கி சிறிய வடிவில் அச்சிட்டு எனது திருமணத்தன்று அளித்தேன். அதே போல்  வ.உ.சி திருக்குறளுக்கு உரை எழுதிய விவரமும் அறிந்தேன். அந்நூலையும் தேடினேன். திருநெல்வேலி சைவ சித்தாந்த பதிப்பகத்தில் அந்நூலைக் கிடைக்கப்பெற்றேன். அதையும் சுருக்கி சிறு நூலாக வெளியிட்டேன்.

புதுச்சேரியில் பணியாற்றிய போது பல தமிழறிஞர்களின் தொடர்பு கிடைத்தது.  பெரியார் பற்றி ஏதாவது சொன்னால் போது ஏதாவது சொல்லி ஒரு கொட்டு கொட்டுவார்கள். அதற்காவே நான் பெரியார் பார்வை என்ற பெயரில் இதழ் தொடங்கினேன். கடந்த ஏழு வருடமாக நடத்தி வருகிறேன். இதுவரை 42 இதழ்கள் நடத்தியுள்ளேன். டாடாஸ் ரவி, செந்தில் மற்றும் கலைச்செல்வன் போன்றவர்கள் நிதி உதவி அளித்துள்ளார்கள்.  சரி. இப்போது பெரியார் மொழிப் பார்வை பற்றி பேசுவோம். எதிரே ஜீவி இருக்கிறார். எப்போதும் என்னை வேறு பார்வையோடு பார்ப்பவர் . இங்கே இருப்பவர்களில் பெரும்பாலனவர்கள் இடது சாரி சிந்தனைக் கொண்டவர்கள். அறிஞர்கள். உங்கள் முன்னிலையில் எச்சரிக்கையோடு பேசுகிறேன்.

மொழி என்றால் என்ன?  கருத்துக்களை பரிமாறக் கொள்ளப்பயன்படும் ஒரு கருவி. இது எல்லோரும் சொல்கிற ஒரு சேதி. கருவி என்றால் என்ன? ஆயுதமா? அரிவாளா? துப்பாக்கியா? இதற்கு விடையாக பெரியார் இத்துடன் கூடுதலாக ஒன்றைச் சொல்கிறார். மொழி என்பது சப்தம் (ஒலி) என்கிறார். விலங்குகளும் ஒலியை எழுப்புகின்றன. அது ஒலிக்குறிப்பு என்கிறார். அதற்கு உதாரணம் தருகிறார், கோழி தன் குஞ்சுக்கு கருடன், கழுகு போன்றவைகளால் ஆபத்து வரும் போது ஒரு வகையா ஒலியை எழுப்புமாம். உடனே கோழிக்குஞ்சுகள் தாய்க்கோழியிடம் தஞ்சமடைகின்றன என்கிறார். இங்க பெரியார் மற்றவர்களைப் போல் நூல்களில் படித்திருக்கிறேன் என்று சொல்லவில்லை. நான் நேரில் பார்த்திருக்கிறேன் என்கிறார்.

இன்னொன்றையும் கூறுகிறார். குரங்கு, தன் குட்டி குரங்கை அழைக்கும் போது பற்களைக் காட்டி, மேல் உதட்டையும் கீழ் உதட்டையும்  சேர்த்து ஏதோ முணுமுணுப்பது போல் செய்யும். உடனே குட்டி குரங்கு தாய்குரங்குடன் வந்து சேரும் என்கிறார் பெரியார். அடுத்து காக்காவுக்கு சோறு வைத்தால் எல்லா காகங்களையும் கூப்பிட்டு தானும் உண்ணும் என்று சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் பெரியார் சொல்கிறார், அந்த காகம் அந்த சோற்றை உண்டு பார்த்து, அதனால் ஆபத்தில்லை என்றவுடன் மற்ற காகங்களை கூவி அழைக்கிறது என்கிறார் பெரியார்.
மொழி என்றால் சப்தம் என்று கூறிய பின், பல மொழி எப்படி ஏற்பட்டது? என்ற கேள்விக்கும் பெரியார் விடை கூறுகிறார். மக்களிடையே போக்குவரத்து தொடர்பின்மை, மலைகள், ஆறுகள் போன்றவைகளால் பிரிக்கப்படுதல் மற்றும் தட்பவெட்ப நிலை ஆகியவையே காரணம் என்கிறார்.

தட்ப வெப்ப நிலை எப்படி காரணமாக முடியும்?  வடமொழியிலுள்ள ஹ போன்ற எழுத்துக்களை அடிவயிற்றிலிருந்து உச்சரிக்க வேண்டியுள்ளது. இது குளிர் பிரதேசங்களில் உள்ள ஆரிய பார்பனர்களுக்கும் வெள்ளைக்காரர்களுக்கும் எளிதாகிறது. அவர்கள் கொஞ்சி பேசினால் கூட சண்டை போடுவது போலத் தெரிகிறது என்கிறார் பெரியார்.

ஒரு மொழி எவ்வாறு சிறப்படைகிறது என்ற கேள்விக்கு, அம்மொழியில் கிடைக்கும் அறியக் கருத்துக்களாலும் முன்னேற்றக் கருத்துக்களாலும் என்கிறார் பெரியார். ஒரு மொழி எவ்வாறு இருக்க வேண்டும் என்கிற போது பெரியார் சொல்கிறார், அது நமது தன்மானத்திற்கு, முன்னேற்றத்திற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும் என்கிறார்.

தமிழை ஏன் சிறந்த மொழி என்பதற்கு பெரியார் சொல்கிறார், அது தகைமைசால் மொழி என்று குறிப்பிடுகிறார். இங்கு தமிழிறஞர்கள் கூடியுள்ளீர்கள். இந்த தகைமைசால் என்ற சொல்லுக்கு பொருள் கூற வேண்டும். பெரியார் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதை மட்டும்  அந்த ஒரு சொல்லை மட்டும் உருவி வைத்துக் கொண்டு பேசுகிறவர்கள் இந்த தகைமைசால் என்ற சொல் குறித்தும் விளக்க வேண்டும்.

தமிழ் மொழி தொன்மையான நாகரிகம் உடைய மொழி. இயற்கையான நமது பழக்க வழக்கத்திற்கு ஏற்றதாக உள்ளது என்று கூறுகிறார். வட மொழி சொற்களை நீக்கிவிட்டால் நம்முடைய பழந்தமிழ் தானாகவே கிடைக்கும் என்கிறார். இங்கு தூய தமிழ், தனித் தமிழ் என்றும் கூறுகிறார்.

ஆரியப்பார்பனர்கள் தங்களது கருத்துக்களைத் திணிப்பதற்கு வடசொற்களை புகுத்தினர். அதனால் தமிழ் மொழி சீரழிந்தது என்கிறார் பெரியார்.
சாதி, திவசம், திதி, கலியாணம் என்று பண்பாட்டு சீரழிவைக் குறிக்கும் சொற்களை கூறுகிறார். அடுத்து மோட்சம், நரகம், ஆத்மா என்ற மூடநம்பிக்கைச் சொற்களை வகைப்படுத்துகிறார் பெரியார். இன்று வரை நாம் இந்தச் சொற்களைதான் பயன்படுத்தி வருகிறோம். அந்த அளவிற்கு ஆரிய பண்பாட்டையும் நாகரிகத்தையும் புகுத்திவிட்டனர்.

தாய்ப்பால் என்ற கருத்தையும் உடைக்கிறார் பெரியார். ஒரு தாய்க்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒன்றை தமிழ்நாட்டிலும் மற்றொன்றை வெளிநாட்டிலும் வளருங்கள். தமிழ் நாட்டில் வளர்ந்த குழந்தை தமிழிலும் மத வாதியாகவும் இலண்டனில் வளர்ந்த குழந்தை ஆங்கிலத்திலும் அறிவியல்பூர்வ அறிவைக் கொண்டதாகவும் வளருகிறது என்கிறார். எனவே ஒருவர் சிறப்படைவதற்கு சுற்றுபுறச் சூழலும் காரணம் என்கிறார் பெரியார்.
பெரியாரைப் பற்றிய இன்னொரு குற்றச்சாட்டு 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போரில் இந்தி திணிப்புக்கு ஆதரவாக நடந்து கொண்டார் பெரியார் என்பது. இது அயோக்கியத்தனமான குற்றச்சாட்டு.

அப்போது பெரியார் கூறுகிறார், எந்த பார்ப்பானாவது இந்தி சமஸ்கிருதம், இந்தி வேணும் என்று சொல்கிறானே தவிர அதில் கல்வி படிக்க விரும்புகிறானா? என்று கேட்டுவிட்டு, தமிழையும் இந்தியையும் கூறி சண்டையை ஏற்படுத்தி விட்டு, அவன் ஆங்கிலம் படித்து மேலே மேலே முன்னேறுகிறான் என்கிறார் பெரியார். 1965 இந்தி எதிர்ப்பு போரில் இதுதான் பெரியாரின் நிலைப்பாடு.பேராசிரியர் சுப. வீரபாண்டியன் எழுதிய பெரியாரின் இடது சாரி தமிழ்த் தேசியம் என்ற நூலில் நடுநிலை என்ற பெயரில் இந்த தவறான செய்தியை பதிவு செய்கிறார். இதனால் சோலை மாரியப்பன் கோபித்துக்கொள்ளக் கூடாது.

தமிழ்ப்புலவர்களின் மீதும் தமிழறிஞர்களின் மீதும் பெரியாருக்கு பெருங்கோபம் இருந்தது.  1920 வரை என்னிடம் வாதம் செய்யாத,  கைநீட்டாத புலவர் இல்லை. எனக்கு மீனாட்சி சுந்தரம்பிள்ளையை தெரியாது. ஆனால் எனக்கு உ.வே.சாமிநாதஅய்யரைத் தெரியும். தமிழ்த்தென்றல் திரு.வி.க. வை தெரியும். மறைமலையடிகளைத் தெரியும்.

தமிழைக் கெடுத்தவர்கள், தமிழன் அறிவுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள், சொந்த புத்தி இல்லாதவர்கள், புளுகர்கள் என்பதுதான் தமிழறிஞர்கள் மற்றும் தமிழ்ப்புலவர்களைப்பற்றிய கருத்தாக பெரியாருக்கு இருந்தது. எனவே தமிழறிஞர்கள் பெரியார் சொன்ன தமிழ் காட்டுமிராண்டி மொழி என்ற சொற்றொடரை உருவி எடுத்துக்கொண்டு பெரியார் மீது அவதூறு பேசுகின்றனர்.

தமிழ் எழுத்துக்களைப்பற்றி பெரியார் சொல்வார், ஐ, ஒள ஆகிய இரண்டு எழுத்துகள் நேரடியாக உதவுவதில்லை. இவை உயிர் மெய் எழுத்துக்களாகத்தான் பயன்படுகின்றன என்று ஆய்வு செய்து கூறுகிறார்.தமிழறிஞர்கள் இது குறித்து பேச வேண்டும்.  பெரியாருக்கு தமிழ் எழுத்துக்கள் குறித்து ஒரு கணக்கு இருக்கிறது. மொத்த தனி உருவ எழுத்துக்கள் தமிழில் அதிகம். மொத்த எழுத்துக்களில் 135 எழுத்துக்கள் தனி உருவம் கொண்டுள்ளது. அவற்றை தனியாக ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. இவற்றை எளிமைப்படுத்த வேண்டும் என்கிறார். ங,ஞ ஆகிய எழுத்துக்கள் மெய் எழுத்து உருவத்தைத் தவிர வேற உருவங்கள் பயன்படுவதில்லை. இப்படியயல்லாம் பெரியார் எழுத்துக்களைப்பற்றியும் கூறுகிறார். இதற்கெல்லாம் தமிழ்மணி பதில் கூற வேண்டும்.
தமிழ் எழுத்துக் கூட்டுவதும், உச்சரிப்பும் அதன் இலக்கணமும் இயற்கையை, இயல்பாகக் கொண்டுள்ளது என்றும் கூறும் பெரியார் அதை செம்மைப்படுத்த வேண்டாமா என்று கேட்கிறார்.

தமிழ் நாட்டிற்கு போதனா மொழியாக, ஆட்சி மொழியாக, நீதிமன்ற மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்று கூறுகிறார் பெரியார் இதை புரட்சி பெரியார் முழக்கம் 2001 ஆம் இதழில் வெளியிட்டிருக்கிறது. நானும் எனது பெரியார் பார்வை இதழில் வெளியிட்டிருக்கிறேன் என்று வாய்பளித்தமைக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

நெ,து,சுந்தரவடிவேலு எழுதிய பெரியார் வரலாறு குறித்து வைகோ

வைகோ பேச்சு...

திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி அவர்களின் 73 ஆம் பிறந்த நாள் விழாவில் (2.12.2005) ம.தி.மு.க. பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் பேசிய பேச்சிலிருந்து......

‘எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்த போது நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள் பெரியார் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக எழுதி, தமிழக அரசிடம் தந்து தட்டச்சுப் படிகள் ஒரு கல்வியாளரிடம் சிக்கி இருப்பதாக சொல்லுகிறார்கள். அதுவும் வெளிவரவில்லை’.

‘என்.டி. சுந்தரவடிவேலு சிறு அளவில் பெரியார் பற்றி ஒரு நூல் எழுதினார். அதே போல் புரட்சியாளர் பெரியார் என்று பேராசிரியர் ந. இராமநாதன் அவர்கள் எழுதியிருக்கிறார்’.

‘தந்தை பெரியாரைப் பற்றிக் கவிஞர் கருணாந்தம் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அது முழுமையான வாழ்க்கை வரலாற்று நூல் அன்று. பெரியாரோடு அவருக்கு உள்ள அனுபவங்களையும் இதரச் செய்திகளையும் தந்திருக்கிறார்’.

‘தந்தை பெரியார் அவர்களைப் பற்றியும் அவரது இயக்கத்தைப் பற்றியும் நிரம்ப நூல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் முழுமையாக அவரது வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கக் கூடிய  நூல் ஒன்றும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது மிகுந்த வருத்தத்திற்குரிய செய்தி என்று நான் கருதுகிறேன்’. (விடுதலை 15.12.2005).

பெரியாரின் வாழ்க்கை வரலாறு- கவி

பெரியாரின்  வாழ்க்கை வரலாறு - கவி

‘பெரியாரின்  வாழ்க்கை வரலாறு’ ஒன்று மறைத்து வைக்கப்பட்டி ருக்கிறது என்ற செய்தியை திராவிட இயக்க ஆய்வாeரும் திரு. மா.பொ.சி அவர்களுடனும் முன்னாள் துணை வேந்தரும் கல்வி இயக்குநருமாகிய திரு. நெ.து. சுந்தரவடிவேலு அவர்களுடனும் இணைந்து பணியாற்றியவரும் கடந்த 15 ஆண்டுகளாக ‘இeந்தமிழன்’ என்ற இதழை நடத்தி வருபவருமான அய்யா தி.வ.மெய்கண்டார் அவர்கள் என்னிடம் கூறினார்கள். அதாவது, ‘1979 ஆம் ஆண்டு பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர் அரசு திரு. நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு பெரியார் வாழ்க்கை வரலாற்றை எழுத பணித்தது. திரு. நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள் சுமார் 1000 பக்கங்களில் மூன்று தொகுதிகளாக எழுதி தமிழக அரசிடம் கொடுத்து விட்டார். இப்போது அந்த வரலாறு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை’ என்று என்னிடம் கூறினார்கள். நான் (கவி) அதிர்ந்து போனேன்.

பின்னர் இச்செய்தியை ‘ நந்தன்’ அலுவலகத்தில் திரு. சுப.வீரபாண்டியன் அவர்களிடத்தில் கூறினேன். ‘சங்கொலி’ பத்திரிகையின் அப்போதைய பொறுப்பாசிரியர் க. திருநாவுக்கரசு, தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாeர் விடுதலை இராசேந்திரன் ஆகியோருடன் எடுத்து ரைத்தேன்.  திருச்சி நீதிமன்ற வளாகத்தில் ஒரு நாள் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் திரு. கொeத்தூர் மணி அவர்கçeச் சந்தித்து இந்த விவரங்கçe அளித்தேன். இடையில் புதுச்சேரியில் எனது நண்பர் கோகுல் காந்தி அவர்கள் எழுதிய ‘கருப்புமலர்களின் நெருப்புப் பயணம்’ என்ற நூல் வெளியிட்டு நிகழ்ச்சியில் அய்யா தி.வ.மெய்கண்டார் அவர்கள் கலந்து கொண்டு பேசிய போது, இந்த பெரியார் வரலாற்று நூலைப்பற்றி குறிப்பிட்டார்கள். விடுதலை இராசேந்திரன் அவர்களும் புதுவை சுகுமாரன் அவர்களும் உடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். நான் தி.வ. மெய்கண்டாரின் பேச்சை எனது இதழான  ‘பெரியார் பார்வை’-இல் அச்சிட்டு வழங்கினேன். திராவிட பேரவை பொதுச்செயலாeர் திரு. நந்திவர்மன் அவர்களும் இது குறித்து புதுவை அரசுக்கு மனு அனுப்பினார்.

பின்பு இது தொடர்பாக மேலும் விபரங்கள் கிடைக்கப்பெற்றேன். பெரியார் நூற்றாண்டு விழாவை மாவட்டம் தோறும் அரசு கொண்டாடிய போது திருவாரூர் மாவட்ட விழா தொடர்பாக 16.9.1979  ‘தமிழரசு’ இதழில் நன்னன் அவர்கள்  ‘பெரியார் வரலாறு’ குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். திரு. நெ.து. சுந்தரவடிவேலு அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலான  ‘நினைவு அலைகள்’ முன்னுரையிலும் இது குறித்த ஒரு பதிவைக் கண்டேன். இவை அனைத்தையும் சேர்த்து ஒரு மனு தயாரித்து  ‘தமிழ்ச் சான்றோர் பேரவை’ நிறுவனர் அய்யா ஆனாரூனா அவர்களிடம் நானும் திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாeர் மு. செந்தில் அவர்களும் அளித்தோம்.

மறு நாள் 25.8.2004 அன்று திருவாரூருக்கு நடைபயணம் வந்த திரு. வைகோ அவர்களிடம் இந்த மனுவை எனது முன்னிலையில் ஆனாரூனா அவர்கள் அளித்தார்கள். இம்மனுவை அங்கேயே படித்த வைகோ அவர்கள் வியப்படைந்தார்கள். இத்தோடு இந்நிகழ்வு முடிவடைந்துவிட்டது என்று நினைத்தேன்.

சரியாக ஒரு வருடம் கழித்து பெரியார் திடலில் 2.12.2005 நடந்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட திரு.வைகோ அவர்கள், திரு. நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் எழுதிய பெரியார் வரலாற்று நூலைப் பற்றி விவரமாகப் பேசியிருக்கிறார். அந்நூல் வெளிவர தமிழக அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்.

நினைவு அலைகள்’ - ‘நெ.து.சு’

‘நினைவு அலைகள்’ மூன்றாம் தொகுதி-  ‘நெ.து.சு’ அவர்கள் முன்னுரையில் எழுதியுள்ளவையிலிருந்து....

முதல்வர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் பெரியார் வரலாற்றைச் சிறுவர்களுக்கு வண்ணப்படங்கள் வாயிலாகவும் பெரியவர்களுக்கு எழுத்தில் ஆயிரம் பக்கங்களிலும் உருவாக்கித் தருமாறு என்னைப் பணித்தார். அப்பெரும் பணிகளுக்குத் துணையாக, டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் தக்கார் குழு ஒன்றையும் நியமித்தார். பெரியார் வரலாறு-வண்ணப்படங்கள் என்ற நூலை முடித்துக் கொடுத்து நான்காண்டுகள் ஓடிவிட்டன. பெரியாரின் முழு வரலாற்றில் முதல் இருபகுதிகளை நான் அறுநூறு பக்கங்களில் கொடுத்து சில ஆண்டுகள் கழிந்து விட்டன. முதல் பாகத்தை எழுத்தெண்ணிப் படித்த நாவலர் ஈன்ற ஒப்புதலுக்குப் பின், அப்பகுதியை அச்சகம் ஒன்றிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாகக் கேள்வி.(12.10.1988).

‘நினைவு அலைகள்’ நூலின் மூன்றாம் தொகுதியின் 905‡906 ஆம் பக்கத்தில் எழுதியுள்ளவையிலிருந்து...

பெரியார் நூற்றாண்டு விழா வந்தது. அதைச் சிறப்பாக ஈடுஇணையற்ற முறையில் கொண்டாட ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் அரசு பெரியார் நூற்றாண்டு விழா எடுத்தது. அவ்விழா ஒவ்வொன்றிலும் எனக்கும் பங்கு கொடுத்து முதலமைச்சர் எம்.ஜி.ஆர் என்னைப் பெருமைப்படுத்தினார். பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழாவை யயாட்டி, மாவட்டத் தலைநகரங்களில் பெரியார் நினைவுத் தூண் நிறுவப்பட்டது. அதற்கான விழாக்களிலும் எனக்கு இடம் கொடுத்துச் சிறப்பித்தது தமிழக அரசு.

பெரியார் நூற்றாண்டு விழாவினையயாட்டி பெரியாரின் வாழ்க்கை வரலாற்றினை சிறுவர்களுக்கேற்ற வண்ணப்படங்கள் வாயிலாக வெளியிடுவது என்றும் பெரியோர்களுக்காக ஏறத்தாழ ஆயிரம் பக்கங்களில் வெளியிடுவது என்றும் பெரியாரின் புரட்சி மொழிகள் என்ற நூலினைத் தொகுப்பதென்றும் முடிவு செய்யப்பட்டது. அதற்கு  ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் தலைவர் டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் ஆவார். அக்குழுவின் துணைத்தலைவராக அரசு என்னை நியமித்தது.

வண்ணப்பட நூலையும் முழு வரலாற்றையும் தொகுக்கும் பொறுப்பினை என்னிடம் ஒப்படைத்தது. வண்ணப் படநூலையும் வரலாற்றில் முதல் பாகத்தையும் 300 பக்கங்களுக்கு மேலும் எழுதி முடித்துக் கொடுத்தேன். தம்முடைய பல அலுவல்களுக் கிடையிலும் நாவலர் நேரத்தை ஒதுக்கி வைத்து நான் தொகுத்த நூல்களிரண்டையும் வரி வரியாகப் படித்துப் பார்த்து வெளியிட ஒப்புதல் அளித்தார். பெரியார் வரலாற்றின் இரண்டாவது பகுதியையும் முடித்துக் கொடுத்திருக்கிறேன். 
(பெரியார் பார்வை, (16.12.2006)

பத்மஸ்ரீ டாக்டர் நெ.து. சுந்தரவடிவேலு எழுதிய பெரியார் வரலாறு

பத்மஸ்ரீ டாக்டர் நெ.து. சுந்தரவடிவேலு எழுதிய
பெரியார் வரலாறு

புரட்சித்தலைவர் மாண்புமிகு எம்.ஜி.ஆர் அவர்கள் தலைமையில் அமைந்த தமிழக அரசு பெரியார் அவர்களின் நூற்றாண்டையயாட்டி (1879‡1979) 1979‡ இல் ஒரு குழு அமைத்தது.

இக்குழுவிற்கு டாக்டர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் தலைவராகவும் சென்னைப்பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பத்மஸ்ரீ டாக்டர் நெ.து. சுந்தரவடிவேலு துணைத் தலைவராகவும் மற்றும் அறுவரை உறுப்பினர்களாகக் கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவின் பணிகளாக 1) பெரியார் வரலாற்றை உருவாக்குவது 2) பொன்மொழிகளைத் திரட்டி நூலாக வெளியிடுவது 3) சிறுவர்களுக்கான வரைபட வரலாற்றை உருவாக்குவது 4) கல்வெட்டு பணியைச் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

இப்பணிகள் 1979 மே திங்களில் தொடங்கப்பெற்றது.
பெரியார் வரலாறு தவிர மற்ற பணிகள் செய்து முடிக்கப்பட்டது.

இப்பணி மேற்கொள்ளப்பட்ட காலத்தில் பெரியார் வைக்கம் போராட்டத்தில்  ஈடுபட்டதை அறிந்திருந்த குரூர் நீலகண்டன் நம்பூதிரி, பெரியாரின் நெருங்கிய நண்பர்  ஈரோடு அங்கப்பன் செட்டியார், பெரியாரை முற்றிலும் அறிந்திருந்த சுயமரியாதை வீரரும் , ‘தேசபக்தன்’ ஆசிரியருமான சிதம்பரம் தண்டபாணிப் பிள்ளை முதலியோர் உயிருடன் வாழ்ந்து வந்தனர்.

அவர்கள் மூலம் உண்மைச் செய்திகளை அறியவும் திட்டமிடப்பட்டது. நவசக்தி, மெட்ராஸ் மெயில், இந்து, சுதேசமித்திரன் முதலிய இதழ்களி லேயிருந்தும் தமிழ்நாடு தவிர்த்த இந்தியாவின் வெளிமாநிலங்கள் மட்டுமின்றி மலேயா, இலங்கை, சிங்கப்பூர், லண்டன், ரஷ்யா போன்ற வெளி நாடுகளிலிருந்தும் தமிழ்நாடு மற்றும் மற்ற மாநிலங்களின் ஆவணக் காப்பகங்களிலிருந்தும் அக்கால வார மாத இதழ்கள் மற்றும் புத்தகங்களி லிருந்தும் பெரியார் பற்றிய செய்திகளைத் திரட்டவும் தீர்மானிக்கப்பட்டது.
இப்பணிக்குரிய எம்.ஏ., எம்.பில், படித்த ஆறுபட்டாதாரிகள் நல்ல ஊதியத்துடன் அமர்த்தப்பட்டனர். இதற்காக தமிழக அரசு இலட்சக்கணக்கில்  பணத்தைச் செலவிட்டது.

முதலில் நெ.து. சுந்தரவடிவேலு அவர்களிடம் சிறுவர்களுக்கான பட வரலாற்றை ஒப்படைத்த இக்குழு, பின்னர் மாற்றம் செய்து, பெரியார் வாழ்கை வரலாற்றை எழுதும் பொறுப்பினை அவரிடம் ஒப்படைத்தது. இப்பணி நிறைவு பெற சில ஆண்டுகள் ஆயிற்று.

இவ்வரலாறு, பெரியாரின் இளமைக்காலம் முதல் காங்கிரசிலிருந்து வெளியேறும் வரை உள்ள பகுதி 300 பக்கங்களில் முதல் தொகுதியாக எழுதப்பட்டு குழுவால் ஏற்கப்பட்டது. பின்னர் இப்பகுதி அச்சிடுவதற்காக அச்சகம் ஒன்றிடம் அப்போதே ஒப்படைக்கப்பட்டது.

இரண்டாவது தொகுதி இந்தி எதிர்ப்புப் போராட்டம்- திராவிடர் கழகம் பிறந்த வரலாறு‡ கருஞ்சட்டை மாநாடு முதலிய விவரங்களுடன் 1948 வரை எழுதப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

எஞ்சிய வரலாற்றுப் பகுதி, மூன்றாவது தொகுதியாக எழுதப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

பத்மஸ்ரீ டாக்டர் நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள் தலைசிறந்த நிர்வாகி என்பதைத் தமிழகம் நன்குணர்ந்திருப்பது போலவே, அவர் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர் என்பதையும் தமிழகம் உணர்ந்திருக்கிறது. இவர் பெரியவர் களுக்காக 30 நூல்களையும், ‘வள்ளுவர் வரிசை’ என்னும் தலைப்பில் , சிறுவர்களுக்காக 13 நூல்களையும் எழுதி உள்ளார். இவர் படைத்த பெரியார் பற்றிய அரிய நூலொன்றும் வெளிவந்துள்ளது.

இவர் தம்முடைய வாழ்க்கை வரலாற்றை 2300 பக்கங்களில் மூன்று பகுதிகளாக எழுதி வெளியிட்டுள்ளார். இந்நூல் இவருடைய பத்தாண்டுகாலப் பணியின் விளைவால் உருவானதாகும். இந்நூல் தமிழ்நாட்டின் அரை நூற்றாண்டு கால கல்வி வளர்ச்சியையும் சமுதாய அரசியல்  சூழ்நிலைகளையும் விளக்குவதாகும். இந்நூலை தமிழ் நாட்டின், புகழ் வாய்ந்த புத்தக வெளியீட்டு நிறுவனமான ‘வானதி பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. இவர் இந்நூலை எழுதி, நூல் வடிவில் வெளிவர, இவர் என்னை அன்புடன் கேட்டுக்கொண்டதின் பேரில் இவருக்கு நான் உதவி செய்தேன். இப்பணி ஏழு ஆண்டுகாலம் நீடித்தது.

இந்தப் பெரியவருக்கு தம் வாழ்நாளின் இறுதிக்காலத்தில் ஒரு பெருங்கவலை நெஞ்சை வாட்டி வதைத்தது. தாம் எழுதிய தம்முடைய வரலாறு 2300 பக்கங்களில் வெளி வந்தும் தாம் தமிழக அரசுக்காக எழுதித் தயாரித்த ‡தம்மால் பெரிதும் மதிக்கப்பெற்ற - தந்தை பெரியார் அவர்களுடைய வரலாறு இன்னும் நூல் வடிவில் வரவில்லையே என்பதே அக்கவலையாகும்.
நான் அவருடைய இறுதிக் காலத்தில் அவரைச் சந்தித்த போது, என் கைகளைப் பிடித்துக் கொண்டு, என் வாழ்நாளில் நான் எழுதிய தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை என் கண்களால் காண்பேனோ என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார்.

இறுதி வரை காண முடியாமலேயே மறைந்து விட்டார்.

பெரியாருக்கு 125 ஆம் ஆண்டு நிறைவு விழாவும் நடந்து முடிந்து விட்டது. சுந்தரவடிவேலு எழுதி அரசிடம் ஒப்படைத்த வரலாறு என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை. இதற்காக யாரும் கவலைப்படவில்லை.

95 வயது வரை வாழ்ந்த ஒரு சமுதாயச் சீர்திருத்தத் தலைவரின் வாழ்க்கையை எழுதுவதென்பது சாதாரண வி­யமல்ல. பத்மஸ்ரீ நெ.து.சுந்தரவடிவேலு போன்று, தந்தைபெரியாருடன் அரை நூற்றாண்டு காலம் நெருங்கிப் பழகி‡அவர் வழியில் வாய்மையுடன் நடைபோட்டு பெரியாரை முற்றிலும் உணர்ந்த‡ இலக்கியம், சமுதாயம், அரசியல் அறிவுடன் முற்போக்கு சிந்தனையையும் கொண்ட-இன்னொருவர் இனி பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதக் கிடைப்பாரா? இப்பொழுது உள்ளவர்களால் அவருக்கு இணையாக எழுத முடியுமா?

பத்மஸ்ரீ சுந்தரவடிவேலு தாம் எழுதிய பெரியார் வரலாற்றின் இறுதித் தொகுதியைக் கொடுக்கும் போதுதான் நான் அவருக்கு நெருக்கமானேன்.
அந்த நேரத்தில் ஒரு பிரதியை நாம் வைத்துக் கொண்டு இன்னொரு பிரதியை அரசுக்குக் கொடுங்கள் என்று அவரிடம் சொல்ல எனக்குத் தைரியமில்லை. காரணம், அவரைப்பற்றி உணர்ந்தவர்களுக்குத் தெரியும். அவரிடம் பேசவே அஞ்சுவார்கள். இந்நிலையில் அவருக்கு நான் போய் ஆலோசனை கூற முடியுமா? பிற்காலத்தில் நெருக்கம் அதிகமான பிறகு எவ்வளவோ வி­யங்கள் பேசி இருக்கிறோம் என்பது வேறு வி­யம். பிரிட்டிஷ் அரசாங்கத்தில் வேலை பார்த்தவர் நெ.து. சுந்தரவடிவேலு. உயர்ந்த நெறிமுறைகளைக் கடைப் பிடித்தவர்.

எனவே பெரியார் வாழ்க்கை வரலாறு, அதுபற்றிய குறிப்புகள் , திரட்டிய விவரங்கள் , துண்டுத் துணுக்குகள், படங்கள்  அனைத்தையும் கட்டி அரசிடம் ஒப்படைத்துவிட்டார். அதை அரசின் சொத்து என்று அவர் கருதினார். அது சம்பந்தமாக பிரதியோ குறிப்போ அவர் வீட்டில் கிடையாது. தமிழக அரசு இதைப்பற்றி விசாரித்து, உரிய நடவடிக்கை எடுத்து பத்மஸ்ரீ சுந்தரவடிவேலு எழுதிய தந்தைபெரியாரின் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டு தமிழக மக்களுக்கு வழங்க வேண்டுமென்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
- தி.வ. மெய்கண்டார். (இளந்தமிழன், மார்ச் 2006)

(பெரியார் பார்வை, 16.12.2006)

ஆகம பக்தியா ? சுயசாதி உணர்வா?

ஆகம பக்தியா ? சுயசாதி உணர்வா? -    ந. சேதுராமசாமி

விவேகானந்தர் பார்ப்பனப் புரோகிதர்களைப் பற்றிக் கூறியவை......
துர்த்தர்களும் ஏமாற்றுக்காரர்களும் ஆகிய புரோகிதர்கள் எல்லா வகையான மூடநம்பிக்கைகளையும் வேதம் மற்றும் இந்து மதத்தின் சாரம் என்று மக்களுக்குக் கற்பிக்கின்றனர். இந்த போக்கிரித்தனம் மிக்க புரோகிதர்களும், அவர்களுடைய முன்னோர்களும் கடந்த நானூறு தலைமுறைகளாக வேதத்தின் ஒரு பகுதியைக் கூட பார்த்ததில்லை. மூடத்தனமிக்க ஆச்சாரங்களைக் கடைப்பிடித்து, அவர்கள் தம்மைத் தாமே அழிநிலைக்குக் கொண்டு வந்துவிட்டனர். கலியுகத்தில்  பிராமணர்களின் வேடத்தில் இருக்கும் இராட்சதர்களிடமிருந்து, மக்களையும், இந்த நாட்டையும் அந்தத் தெய்வம்தான் காப்பாற்ற வேண்டும் (விவேகானந்தரின் முழுப் பேச்சுக்கள் தொகுதி 8, பக்கம் 290, கல்கத்தா 1971)

சட்ட நெறிமுறைகள் கெட்டுக்கிடையன்று. அவை காலத்தின் தேவைக்கேற்ப புதுப்பிக்கப்பட வேண்டும் என்பது மேலோர்கள் ஏற்றுக் கொண்ட மரபாகும். ஆகமங்கள் எந்தக்காலத்தில், யாரால் எழுதப்பட்டு, அவற்றை  காலகாலமாக மக்கள் அனைவரும் மாற்றமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆணையிட்டது யார்?

நீண்ட நெடுங்காலமாக மநுதர்மத்தின் வர்ணாஸ்ரமத்தை ஏற்றுக்கொள்ளாத கம்மாளர்கள் எனப்படும் விஸ்வகர்மா வகுப்பினருக்கும், பிராமணர்களுக்கும் போராட்டம் நடைபெற்று வந்துள்ளது. புரோகித்தில் பிராமணர்களின் மேலாதிக்கத்தை, பாஞ்சாலர்கள் எனப்படும் அய்ந்தொழிலாளர்களாகிய கம்மாளர்கள் ஏற்றுக்கொள்ளாததை சில மாவட்டங்களில் கண்டதாக ஆபி டியுபே தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் . விஸ்வகர்மா சமூகத்தினர் தங்களை விஸ்வபிராமணர்கள் என்று அழைத்துக் கொண்டதுடன், வேத சாஸ்திரங்கள் கற்று, தங்களுக்கு வேண்டிய யாகங்கள், புரோகிதங்களை அவர்களே செய்து கொண்டனர். இதனை வடமொழி நூற்களின் வழி ஆராய்ந்து திரு டி.எம். தெய்வசிகாமணி ஆச்சாரி, அவரது ‘விஸ்வகர்ம பிராமண வம்சப் பிராகாசிகை’ என்ற நூலில் விரிவாகப் பதிவு செய்துள்ளார். கம்மாளர்கள்,  ‘ஆச்சாரி’ மற்றும் ‘செகத்குரு’ பட்டங்களை பெற்றிருந்தனர் என்று குறிப்பிட்டதுடன், கம்மாளர்களின் புரோகிதம் செய்யும் உரிமையை நிலைநாட்ட , பஞ்சாங்கம் குண்டய்யருக்கு எதிராக, சித்தூர் அதாலத் நீதிமன்றத்தில் மார்க்க சகாய ஆச்சாரி தொடர்ந்த வழக்கைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். விஸ்வ பிராமணர்கள் வேதாதிகாரங்களுக்கு உரிமை/தகுதி பெற்றவர்கள் என்றும் அவர்கள் தாங்களே புரோகிதம் செய்து கொள்ளலாம் என்றும், 15.12.1818 இல் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் கி.பி. 1885 இல் 78வது காலண்டர் (கிரிமினல்) வழக்கு எண்கள் 421, 422 இல்  விஸ்வ பிராமணர்கள் எந்தக் கோவிலின் கருவறைக்குள்ளும் சென்று ருத்ராபிஷேகம் செய்வதற்கும் பூசிப்பதற்கும் தகுதி/உரிமை படைத்தவர்கள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கி.பி. 1894 இல் நடைபெற்ற மசூலிப்பட்டினம் வழக்கில் சிவகோடி வீரபத்ரன் என்னும் விஸ்வ பிராமணன், மகா சிவராத்திரி அன்று காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நுழைந்து லிங்காபிஷேகம் செய்ததால், லிங்கம் பரிசுத்தமிழந்தது என்ற வாதம் ஏற்கப்படாமல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையும் திரு.டி.எம்.தெய்வசிகாமணி ஆச்சாரி குறிப்பிட்டுள் ளார். இவ்வழக்கு விசாரணையின் போது, வீரபத்ர ஆச்சாரி அபிஷேகம் செய்யும் போது ஏன் தடுக்கவில்லை என வினா தொடுத்த போது அது வித்தியாசமாகத் தெரியவில்லை என்றே வழக்குத் தொடர்ந்த பிராமணர்கள் தெரிவித்தனர். அதைவிட வேடிக்கை, வீரபத்ர ஆச்சாரி கருவறைக்குள் நுழையும் போதே ஏன் தடுக்க வில்லை என வினா தொடுக்கப்பட்ட போது , அவர்கள் அதற்கு முன்பே இவ்வாறு செய்வது வழக்கமே என பதில் வந்துள்ளது. ஆகவே வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இது போன்று பதிமூன்று  வழக்குகளை தனது ஆய்வுப் புத்தகத்தில் திரு. டி.எம். தெய்வசிகாமணி ஆச்சாரி (பின்னாளில் புகழப்பெற்ற மேடைத் தமிழை எழுதியவர்) பட்டியலிட்டுள்ளார். இன்றைக்கும் விஸ்வகர்ம வம்சா வழியினர் புரோகிதம் செய்து வருகின்றனர். யாகம் மற்றும் கும்பாபிஷேகம் செய்கின்றனர். போளூர் வட்டம் காந்தபாளையம் சீனந்தல் மடாலயத்தின் சார்பில் விஸ்வகர்ம மடாதிபதி,  இதற்கென வைதீக பாடசாலையை நடத்திக் கொண்டிருக்கின்றார். மொத்ததில் ஆகம விதிப்படி, வம்சாவழி சிவாச்சாரிய பிராமணர்களே பூஜை செய்து வந்துள்ளனர் என்பது புரட்சிக் கவிஞர் நடையில் ஏமாந்த காலத்தில் ஏற்றங்கொண்டோர் புலிவேடம் போட்ட இடைக்கால வரலாறு என்பது விளங்கும். வம்சா வழி பிறவித் தத்துவத்தைப் பல முனைகளிலும் முன்னிலைப்படுத்திய மனுதர்மமே புறக்கணிக்கப்பட்ட பின்னர், அந்த மனுதர்ம வம்ச வழியாக வந்த ஆகமங்களும் புறக்கணிக்கப்பட வேண்டியவையே.15.12.1818-இல் சித்தூர் அதாலத் நீதிபதி டெக்கர் அளித்த தீர்ப்பில் விவரம்  தெரியாதவர்கள் அவர்களை (பிராமணர்களை) உயர்ந்த சாதி என ஏற்றுக்கொண்டுள்ளனர். பாமர மக்களையும் அறிவுத் தெளிவற்ற அரசர்களையும் ஏமாற்றி தங்களை புரோகிதர்களாக நியமித்துக் கொள்வதில் வெற்றிக்கொண்டுள்ளனர். இப்போது உண்மையைக் கண்டறிந்து அதற்கேற்ப ஆட்சி நடத்த வேண்டியது அரசின் கடமையாகும் என அறிவுறுத்தியுள்ளார். (உண்மை,சூன் 16-30, 2006)(பெரியார் பார்வை 16.02.2007)