Tuesday, July 5, 2022

அம்பேத்கர் பார்ப்பனப் பெயரா?

 அம்பேத்கர் பார்ப்பனப் பெயரா?

       -கவிஞர் கலி.பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

“அம்பேத்கர் என்ற பார்ப்பன ஆசிரியர், பீமாராவ் ராம்ஜி என்ற மாணவன் கல்வியில் மிக உயர்ந்த நிலை அடைவதற்கு மிகப்பெரிய உதவிகளைச் செய்தார். அவருடைய உதவிகள் இல்லாமல் போய் இருந்தால் பீமாராவ் ராம்ஜி உயர்ந்த நிலைக்கு வரவே முடிந்து இருக்காது.

அந்த நன்றியின் வெளிப்பாடாகத்தான் அந்தப் பார்ப்பன ஆசிரியரின் பெயரை தன் குடும்பப் பெயராக பீமாராவ் ராம்ஜி இணைத்துக் கொண்டார்” என்ற ஒரு கருத்து மக்களிடையே வலுவாகப் பரவி உள்ளது. இக்கருத்தைப் பார்ப்பனர்கள்தான் உருவாக்கி, பரப்பி நிலைபெறச் செய்து இருக்கிறார்களே ஒழிய இதில் இம்மி அளவும் உண்மை இல்லை.

இதில் உச்சபட்சக் கொடுமை என்னவென்றால் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களேகூட இதை வலுவாக நம்புகிறார்கள். எவ்வளவு வலுவாக நம்புகிறார்கள் என்றால்  இதைப் பற்றிக் கூறினால் “பார்ப்பன எதிர்ப்பு என்ற பெயரில் உண்மைச் செய்தி களைக்கூட மறுப்பது / எதிர்ப்பது சரி அல்ல” என்று வலு வாக எதிர்வாதம் செய்யும் அளவுக்கு நம்புகிறார்கள்.

இப்படிப்பட்ட பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் “பார்ப் பனர்கள் அம்பேத்கர் போன்ற திறமைசாலிகளை மதிக் கவும் வளர்க்கவும் தவறுவதே இல்லை. பார்ப்பனர்களின் கருணையினால்தான் அம்பேத்கர் இவ்வளவு உயர்ந்த நிலைக்குச் செல்ல முடிந்து இருக்கிறது. ஆகவே பார்ப்பன எதிர்ப்பு என்பது தவறான / நன்றி கொன்ற செயலாகும்” என்ற கருத்தைப் பரப்பி ஜாதியக் கொடு மைகளை நிரந்தரப்படுத்த அவாள்கள் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.

உண்மையில் அண்ணலின் குடும்பப்பெயர் (Surname)  சக்பால் (Sakpal)  என்பது ஆகும். அவரு டைய சொந்த ஊர் (பிறந்த ஊர் அல்ல) மகராட்டிர மாநிலத்தில், இரத்தினகிரி மாவட்டத்தில் உள்ள அம் பாதவே (Ambadawe) என்ற கிராமம் ஆகும்.இதை அம்பேத் (Ambed)  என்று சுருக்கியும் சொல்வார் கள்.

அண்ணலின் தந்தை அண்ணலைப் பள்ளியில் சேர்க்கும்போது, குடும்பப் பெயரைக் கூறவேண்டிய இடத்தில் தன் சொந்த ஊரின் பெயரைக்கூறி இருக்கிறார். பள்ளி நிர்வாகத்தினரோ அம்பாதவே என்று பதிவு செய்வதற்குப் பதிலாக அம்பேத்கர் என்று பதிவு செய்து விட்டனர். இவ்வாறுதான் அம்பேத்கர் என்ற பெயர் அண்ணலுக்கு ஏற்பட்டது, நிலைபெற்றது. 

ஆனால் அம்பேத்கர் மிக உயர்ந்த நிலையை அடைந்த உடன், அவருடைய அத்தனைப் புகழுக்கும் பார்ப்பனர் கள்தான் மூல காரணம் என்று பார்ப்பனர்கள் கொஞ்சம்கூடக் கூச்சமில்லாமல் இரண்டு விதக் கதைகளைக் கட்டி விட்டு உள்ளனர்.

முதல் கதை அண்ணலின் அத்தனை முன்னேற்றத் திற்கும் அம்பேத்கர் என்ற பார்ப்பனர்தான் காரணம் என்றும், அந்த நன்றிக் கட.னுக்காகத்தான், அவருடைய பெயரை தன் குடும்பப் பெயராக அண்ணல் ஏற்றுக் கொண்டார் என்பது. இது நகைப்புக்கு உரிய கற்பனை. 

அண்ணல் தன் முன்னேற்றத்திற்கு உதவிய “அந்தப்” பார்ப்பன ஆசிரியருக்கு நன்றி தெரிவிக்க அப்பெயரை தன் குடும்பப் பெயராக ஏற்றுக்கொண்டு இருந்தால், அது அவர் வளர்ந்து நிலைபெற்றபிறகு அல்லவா நடைபெற்று இருக்கும்? ஆனால் அம்பேத்கர் என்ற பெயர் தொடக்கப்பள்ளிப் பதிவேடுகளிலேயே உள்ளதே? 

அப்படி இருக்கையில் தன் முன்னேற்றங்களுக்குக் காரணமான பார்ப்பன ஆசிரியரின் பெயரை தன் பெயராக ஏற்றுக்கொண்டார் என்று கூறுவது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்?

இரண்டாவது கதை என்னவென்றால் கிருஷ்ண கேசவ் அம்பேத்கர்  (Krishna Keshav Ambedkar) என்ற பார்ப்பன ஆசிரியர் அண்ணலின் அறிவாற்ற லைக் கண்டு, மெச்சி, அன்பின் உச்சத்தில் இருந்து கொண்டு, தன் குடும்பப்பெயரை அண்ணலின் குடும்பப் பெயராக இணைத்தார் என்பது தான். 

ஒரு மாணவனைப் பள்ளியில் சேர்க்கும்போதே தன் குடும்பப் பெயரைக் “கொடையாக” அளிக்கவேண்டும் என்று தோன்றும் அளவுக்கு அவனுடைய அறிவின் ஆழத்தைப் புரிந்து கொண்டு விடமுடியுமா?   

அதுமட்டுமல்ல மகாராட்டிர மாநிலத்தில் உள்ள குடும்பப் பெயர்களில் அம்பேத்கர் என்ற குடும்பப் பெயரே இல்லை என்று தெரியவருகிறது. இல்லாத குடும்பப் பெயரை எப்படி ஒருவர் வைத்துக் கொண்டு இருந்தார் என்ற புதிருக்கு விடை காணவே முடியவில்லை.

ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் அறிவுத்திறன் பார்ப்பனர்களின் அறிவுத்திறனுக்குச் சற்றும் குறைந்தது அல்ல. சொல்லப் போனால் மக்களுக்குத் தேவையான தொழிலைச் செய்வதில் பட்டறிவு இல்லாததால் பார்ப் பனர்களின் அறிவுத்திறன், உழைக்கும் வகுப்பு மக்க ளின் அறிவுத்திறனுக்கு அருகில் நெருங்கி வரவும் முடி யாது. 

ஆகவே ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் அறிவுத் திறன்தான் உயர்ந்ததாக இருக்கும். பார்ப்பனர்களின் அறிவுத் திறன் என்பது வெறும் ஏமாற்று வித்தையே. இந்த ஏமாற்று வித்தையின் வெளிப்பாடுதான் அம்பேத்கர் என்பது பார்ப்பனக் குடும்பப் பெயர் என்று கதைகட்டி இருப்பது. 

அம்பேத்கரின் குடும்ப பெயர் சக்பால். அவருடைய சொந்த ஊர் மகாராட்டிரா மாநிலத்தில் இரத்தினகிரி மாவட்டத்தில்  உள்ள அம்பாதவே. அதை அம்பேத் என்று சுருக்கி வழங்கி வந்துள்ளனர்.

துக்ளக் சில விளக்கங்களைத் தர வேண்டும்

மகாராட்டிராவில் அம்பேத்கர் என்ற குடும்பப் பெயர் கொண்ட பார்ப்பனர்கள் எங்கு உள்ளனர்? அம்பேத்கர் என்ற குடும்பப் பெயரில் மகாராட்டிராவில் யாருமே இல்லை. இருந்தால் அந்தப் பட்டியலை வெளியிடுவார்களா? 

என்றோ எழுதிய பொய்யை தொடர்ந்து எழுதினால் அது உண்மையாகிவிடுமா? அம்பேத்கர் என்ற பெயரில் பார்ப்பனர்களின் குடும்பப் பெயர் இருந்தால் இன்று அதை ஒரு கூட்டம் பெருமையாக பயன்படுத்தி இருக்குமே - ஏன் பயன்படுத்தவில்லை?

பள்ளியில் சேர்க்கும் போதே அவரது தந்தை அம்பேவத் என்றுதான் பெயரோடு சேர்த்துள்ளார், ஆனால் அப்போது பதியப்பட்டபோது தவறுதலாக "கர்" சேர்க்கப்பட்டு பின்னர் அது அம்பேத்கர் என்று ஆகிப் போனது. அதாவது ஒரு மாணவன் பள்ளியில் சேர்க்கும் போதே ஒரு ஆசிரியர் எப்படி தனது குடும்பப்பெயரை அடுத்தவரது பெயருக்குப் பக்கத்தில் போட ஒத்துக் கொள்வார்?

கவிஞர் கலி.பூங்குன்றன்

துணைத் தலைவர்,

திராவிடர் கழகம்

Wednesday, June 29, 2022

1920 ஆம் ஆண்டு திராவிடர் இயக்கக் குறிப்புகள்

திராவிடர் இயக்கக் குறிப்புகள்

1920

மாண்டேகு - செம்ஸ் போர்ட் அறிக்கை தொடர்பாக, சட்டமன்றத்தில் பார்ப்பனர் அல்லாதாருக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்த சமரசப் பேச்சு, கவர்னர் வெல்லிங்டன் ஏற்பாடு செய்தபடி ஜனவரி 13-இல் நிகழ்ந்தது. 

இக்கூட்டத்தில் பார்ப்பனப் பிரதிநிதிகளும், நீதிக்கட்சி உறுப்பினர்களும் சென்னை மாகாண சங்கத்தினரும் கலந்துகொண்டு நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாட்டுக்கும் வர இயலாததால் நடுவர் தீர்ப்புக்கு விட முடிவு செய்யப்பட்டு, லார்ட் மெஸ்டன் நடுவராக நியமிக்கப்பட்டார்.

நடுவர் லார்ட் மெஸ்டன், தீர்ப்பின் படி, பார்ப்பனரல்லாதாருக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

1919 ஆம் ஆண்டு மாண்டேகு - செம்ஸ் போர்ட் சட்டபடி, சென்னை மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் 132 ஆகவும், அதில் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய தொகுதிகள் 98 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்படக்கூடிய தொகுதிகள் 98 இல் 65 தொகுதிகள் பொதுத் தொகுதிகள் எனவும், 33 தொகுதிகள் சிறப்பு தொகுதிகள் எனவும் பிரிக்கப் பட்டன. 

இந்த பொதுத் தொகுதிகள் 65 இல், லார்ட் மெஸ்டன் தீர்ப்புப்படி, 28 தொகுதிகள் பார்ப்பனரல்லாதாருக்கு ஒதுக்கப்பட்டு மீதி தொகுதிகளிலும் பார்ப்பனரல்லாதார் போட்டியிடலாம் என்று நிர்ணயிக்கப்பட்டது. 

இந்த அடிப்படையில் முதல் பொதுத் தேர்தல் நவம்பர் 20 இல் நடை பெற்றது. 

இதில் நீதிக்கட்சியினருக்கும், ஹோம்ரூல் இயக்கத்தினருக்கும் கடும் போட்டி நிலவியது. 

இரட்டை ஆட்சிமுறையை எதிர்த்து காங்கிரஸ்  தேர்தலில் கலந்துகொள்ளவில்லையாயினும் வாக்காளர்களைத் தடுத்தல், கழுதைகளின் கழுத்தில் ‘எனக்கு ஓட்டு போடு’ என்ற எழுதிய அட்டைகளைக் கட்டி அதன் வாலில், காலில் டின்களைக் கட்டி விரட்டிவிட்டு, காலித்தனம் செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டனர்.

சென்னை மாகாணத்தின் 98 தொகுதிகளில் பெரும்பான்மை பெற்று நீதிக்கட்சியினர் வெற்றி வாகை சூடினர். 

சட்டமன்ற பெரும்பான்மைக் கட்சித் தலைவர் என்ற முறையில், கவர்னர் லார்ட் வெல்லிங்டன் முதன் மந்திரி பதவியேற்று, அமைச்சரவை அமைக்குமாறு தேர்தலில் நின்று பெருவெற்றி பெற்றவரும், நீதிக்கட்சித் தலைவருமான தியாகராயரைக் கேட்டுக்கொண்டார்.

ஆனால், தியாகராயர் பதவி ஏற்க மறுத்துவிட்டு, தனது கட்சிப் பிரமுகர்கள் மூவரின் பெயரைப் பரிந்துரை செய்து அமைச்சரவை  அமைக்கச் செய்தார். 

தாம் பதவி ஏற்காமைக்கு (தனிப்பட்ட முறையில் தமக்குப் பதவி ஆசை இல்லை என்பதை நிருபிக்க) அவர் கவர்னருக்கு எழுதிய கடிதத்திலும், நேரிலும் சந்தித்துக் கூறிய கருத்துகளின் சாரம் வருமாறு:

‘இந்திய வரலாற்றிலேயே முன் எப்போதும் இல்லை எனும்படி, அரசியல் ஞானமற்ற பாமர மக்களைத் தட்டி எழுப்பிய ‘பாவத்துக்’காக என்னையும், அகால மரணமடைந்த என் அருமை சக தலைவர் டாக்டர் டி.எம்.நாயரையும் வெள்ளையனின் வால் பிடிப்பவர்கள் என்றும் வெள்ளையன் பூட்ஸ் காலை நக்குபவர்கள் என்றும் ‘செண்ட்பெர்சண்ட்’ தேசபக்தர்களான காந்தியார், ராஜ கோபாலாச்சாரியார் போன்ற காங்கிரஸ் தலைவர்களாலும், அவர்களுடைய பத்திரிக்கைகளாலும், தூற்றப்படும் நான், இப்பதவியை ஏற்பேனேயானால், என் புனிதமான கட்சிக்குக் களங்கம் விளைவித்தவன் ஆவேன். அதனால் என் பதவி ஏற்கமாட்டேன்; மன்னிக்க வேண்டும்’.

ஏறக்குறைய ஒரு கோடி ரூபாய் அளவுக்கு தன் குடும்பச் சொத்தை நீதிக் கட்சிக்காகச் செலவழித்த வள்ளலும், 

நாற்பது ஆண்டுகளாகச் சென்னை நகராட்சியில் உறுப்பினராக இருந்ததோடு, அதன் முதலாவது தேர்ந் தெடுக்கப்பட்ட தலைவராகவும் ஆன பெருமைக்குரியவரும், 

(அப்போது சென்னை மாநகராட்சி அல்ல. நகராட்சிதான்.

1933 இல் மாநகராட்சி யாக தரம் உயர்த்தப்பட்டது. முதல் மேயர் ராஜா சர். M. A. முத்தையா செட்டியார்தான்.

- வாலாசா வல்லவன் )

இந்திய ஜனநாயக வரலாற்றில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில், தனது உயிரினும் மேலாக நேசித்த நீதிக்கட்சி வெற்றி வாகை சூடியது கண்டு பூரித்துப்போனவரும்

தனக்கென வாழாப் பிறர்க்குரியாளருமான சர்.பி.தியாகராயரின் இந்த அறிவிப்பு எதிரிகளையும் வியக்கச் செய்தது!

தியாகராயரால் பரிந்துரைக்கப்பட்ட மூவரும் அடங்கிய முதலாவது நீதிக் கட்சி அமைச்சரவை டிசம்பர் 17 இல் பதவி ஏற்றது!

இந்திய ஜனநாயக வரலாற்றின் துவக்க ஆட்சி என்று வருணிக்கப்படும், நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவையில், கடலூர் ஏ.சுப்பராயலு (ரெட்டியார்) முதல் அமைச்சராக இருந்து கல்வி, மக்கள் நல்வாழ்வு ஆகிய துறைகளைக் கவனித்துக் கொண்டார். பனகல் அரசர் இரண்டாவது அமைச்சராக இருந்து, உள்ளாட்சித்துறை முதலிய சில துறைகளைக் கவனித்துக் கொண்டார். கே.வி. ரெட்டி நாயுடு, மூன்றாவது அமைச்சராக இருந்து, வளர்ச்சி முதலிய சில துறைகளைக் கவனித்துக் கொண்டார்.

சென்னை நகராட்சியில் நடேசனார் ‘பஞ்சமர்’ என்ற பெயரை நீக்கி ‘ஆதி திராவிடர்’ என்று பெயர் மாற்ற தீர்மானம் கொண்டுவந்து நிறை வேற்றினார்.

அதே நேரத்தில், காங்கிரஸ் இருந்து வந்த பெரியார், தாம் பொது நிறுவனங்களில் வகித்து வந்த ஏறத்தாழ 29 பதவிகளையும் ராஜினாமா செய்தார்; 

ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு உழைத்தார்.

திருநெல்வேலியில் நடைபெற்ற மாகாண காங்கிரஸ் மாநாட்டில் வகுப்பு ரிமைத் தீர்மானம் கொண்டுவந்தார். மாநாட்டுத் தலைவர் எஸ்.சீனுவாச அய்யங்கார் வகுப்புரிமைத் தீர்மானத்துக்கு அனுமதி மறுத்தார்.

#திராவிடர்இயக்கக்குறிப்புகள்

Tuesday, June 28, 2022

அஜினோமோட்டோ - ஒரு குறிப்பு

 *அஜினோமோட்டோ எப்படி ஒரு உணவின் சுவையை கூட்டுகிறது?*

*அது உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக ஏன் கூறப்படுகிறது?*

அஜினோமோட்டோ என்னும் ஒரு சுவை கூட்டும் உப்பு... அதை சர்க்கரை என்றும் சொல்லலாம்...!

பொதுவாக எல்லா சீன வகை உணவுகளில், சுவை கூட்ட சேர்க்கப்படும் இந்த அஜினோமோட்டோ பற்றி, நாம் என்ன அறிந்து வைத்திருக்கிறோம் என்றால்...

அது லைட்டா தூவி விட்டால், டேஸ்ட் இல்லாத உணவு கூட ருசிக்கும். ஆனால் அதிகமாக யூஸ் பண்ணினால் முடி கொட்டும் அவ்வளவு தான் என்று...

ஆனால் உண்மையில் இதன் வரலாற்றை அறிந்தால்?

அஜினமோட்டோ என்பது நாம் நினைப்பது போல, அது ஒரு கடல் உப்பின் பெயரல்ல...

அது ஒரு கம்பெனியின் பெயர் , ஜப்பானில் 1917 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் பெயரே அதன் பொருளுக்கும் ஒட்டிக்கொண்டது..

உண்மையில் இந்த உப்பின் பெயர் Monosodium glutamate ( MSG ) என்பதாகும்,

இதனை மருத்துவ உலகில் slow killer என்கிறார்கள்..

ஜப்பான் தலைநகர் டோக்கியோ, சிவோவை தலைமையிடமாக கொண்டு, கிகுனே இகெடா என்பவரால், 1917ல் இந்த அஜினோமோட்டோ தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது,

அப்போது கடல் படுகைகளில் வளரும் ஒரு பூஞ்சை மற்றும் பாசி செடி ( Seaweed ) வகைகளில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வகை உப்பு தான் monosodium ஆகும்..

முதலில் கிகுனே இகெடா, 1909ல் அவர் தனது வீட்டில் நடத்தி வந்த வைத்தியசாலையில், அதனை மருந்தாக பயன்படுத்தி வந்தார்...

பிறகு உணவுகளில் சேர்த்து, அதில் ருசி கூட்டப்பட்ட இருந்ததை அறிந்து பிறகு, அதனை உபயோகித்து Seasoning, cooking oil, sweetener, amino acids வரை தயாரித்து, பின் Pharmaceutical துறையிலும் இந்த உப்பை அறிமுகம் செய்தார்...

முதலில் அது தயாரிக்கப்பட்ட விதம் என்னவோ உயர் தரமானதாக இருந்தது.

ஆனால் 1917இல் அமெரிக்க நிறுவனத்துடன் கைகோர்த்து, வியாபார நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தொழில்சாலையில் , Glutamate என்னும் செயற்கை அமிலத்தையும், அந்த monosodium உப்போடு கலந்துவிட்டு வியாபாரத்தை அதிகப்படுத்தினர்..

Glutamate என்பது ஒரு அடிமைப்படுத்தும் காரியமாகும்..

ஒரு முறை உண்டால், மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் போதை பொருள் போன்றதொரு சுவையூக்கி ஆகும்..

முதலில் இந்த glutamate ஐ உபயோகித்து, Artificial Sweetener என்னும் Aspartame ஐ தயாரித்து வந்தனர்.

பிறகு இதன் அபாயமறிந்து, அமெரிக்காவில் தடை செய்துவிட்டனர் ஆனால் அதன் மறுரூபமே இந்த அஜினோமோட்டோ உப்பாகும்.

இன்றைய அவசர உலக சமையல் குறிப்புகளில், தவறாமல் இடம்பெறும் இந்த அஜினோமோட்டோ உப்பை, பயன்படுத்தாத நாடுகளே இல்லை எனலாம்..

சாலையோர கடைகள் தொடங்கி, மல்டி குஷன் ரெஸ்டாரண்ட் வரை.. சென்னை முதல் நியூயார்க் வரை என எல்லா உணவகங்களிலும், இதனை ருசிகூட்ட பயன்படுத்தாதவர்கள் இல்லை..

முன்பெல்லாம் சைனீஸ் வகை உணவுகளில் தான், அஜினோமோட்டோ தூவப்படும் என்ற மாயை போய், தமிழகத்து ரசம் வரை இதை தூவ ஆரம்பித்துவிட்டார்கள்...

சரி இதை நாம வாங்கி பயன்படுத்த வேண்டாம் என நினைத்து புறக்கணித்தாலும், நாம் உபயோகிக்கும் அத்தனை வகையான பதப்படுத்தப்பட்ட உணவு பொருள்களிலும், இது மறைமுகமாக கலக்கப்பட்டுள்ளது..

அது நாம் விரும்பியும், விரும்பாமலும் நம் நாவை அந்த சுவைக்கு அடிமைப்படுத்துகிறது, குறிப்பாக குழந்தைகள்...

அவர்கள் உண்ணும் பாக்கெட் சிப்ஸ், கிரீம் பிஸ்கட், சாதாரண பிஸ்கட், நூடுல்ஸ், இன்ஸ்டன்ட் சூப், மசாலா ஐட்டங்கள், டின்னில் வரும் மீன், சிக்கன்,ரெடிமேட் சப்பாத்தி, பரோட்டா, சமோசா,பப்ஸ், சாஸ் வகைகள், சோயா பொருட்கள், சாக்லேட்கள், KFC, Pizza , Maggi மற்றும் சில குளிர்பானங்கள் என எல்லாத்திலும் அஜினோமோட்டோ என்னும் MSG slow killer உண்டு,

அதனால் தான் இந்த Lays, Kurkure வகையறாக்களை உண்ணும் நம் வாண்டுகள், அதற்கு அடிமையாகிறார்கள்.

*உண்பதால் வரும் பக்க விளைவுகள்:-*

1. ஆணோ பெண்ணோ இருபாலருக்கும் முடி கொட்டுவது உறுதி

2. Glutamate இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகப்படுத்துவதால், அதிகமான பசி எடுக்கிறது.

நாம் உணவை அடிக்கடி உண்ண உண்ண ஊளைச்சதை போடுகிறது, பிறகு அதை குறைப்பது மிக கடினம்.. உடல் எடை கூடினால், தானாக சுகரும் இதய நோயும் இலவசமாக வரும்.

3. குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு, இந்த அஜினோமோட்டோ கொடிய விஷமாகும்.. ஐந்து வயது குழந்தைக்கும் தீராத தலைவலியை உருவாக்கும் தன்மை கொண்டது.

4. நரம்பு மண்டலத்தில் அதீத உற்சாகத்தை உருவாக்கி, பிறகு பயங்கரமான பலஹீனத்தை உண்டாக்கி விடும்.

இதனை மருத்துவர்கள் Over Stimulation of Nervous System என்கிறார்கள்.

5. இருதய நோய்களாக அதிபயங்கர துடிப்பும் சில நேரம் வலியும் உருவாக்கும்.

6. முகத்தில் எந்நேரமும் ஒரு எரிச்சல் இருப்பது போலவே சிலர் உணருவார்கள், அரிப்பும் தோன்றும்,  சிலரது முகம் கருத்திருக்கும்.

7. வழக்கமாக இரத்த கொதிப்பு, தைராய்டு, நீரிழிவு, ஆஸ்துமா, உணவு ஒவ்வாமை , அதீத வியர்வை சுரப்பியால் உண்டாகும் Dehydration என்னும் நீர்ச்சத்து குறைதல், கண்களில் ரெட்டினா குறைபாடு எல்லாம் உருவாக அஜினோமோட்டோ காரணியாகிறது.

8. இவை எல்லாம் ஒரு நாள், நம்மை புற்றுநோயிடம் இழுத்துச்செல்லும்..

 அஜினோமோட்டோவை தவிர்ப்போம்.

நன்றி: முக நூல் பதிவு

Sunday, June 26, 2022

அண்ணா சில நினைவுகள்

அண்ணா சில நினைவுகள் - கவிஞர் கருணானந்தம் - திராவிடன் ஸ்டாக் வெளியீடு - முதல் பதிப்பு 2013 - பக்கங்கள் 248 - விலை ₹ 250/

●  கவிஞர் கருணானந்தம் திராவிடர் கழகத்தில் 1942 முதல் இருந்தவர். பெரியாரை விட்டு அண்ணா 1949ல் திமுகவை தொடங்கிய பிறகும் பெரியாரிடமும் அண்ணாவிடமும் நெருங்கி பழகியவர். மத்திய அரசின் ஆர்எம்எஸ்ஸில் சார்ட்டராக பணியாற்றியவர். அண்ணாவோடு 27 ஆண்டுகள் நெடிய தொடர்பும், அவரது நட்புக்கும் பாத்திரமானவர். திமுகவின் பல மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தி காட்டியதால் இவரை ' மாநாட்டு ஸ்பெஷலிஸ்ட் ' என்றும் அழைப்பார்கள் !

●  கவிஞர் கருணானந்தத்தின் முதல் கவிதை தொகுப்பு - பூக்காடு. அண்ணாவின் சிறப்பான அணிந்துரையும் கலைஞரின் சிறப்புரையும் கொண்டு வெளியான நூல். பிற்காலத்தில் அவருக்கு பரிசையும் புகழையும் வாரித்தந்த நூல். கவிதையில் தன் சிறப்பை அதில் காட்டியது போல, கட்டுரை இலக்கியத்திலும் அவரது சிறப்பை உணரச் செய்யும் நூல் தான் இந்த நினைவுகள் !

●  அண்ணாவைப் பற்றி பேசும் இந்த நூல் - அவரின் கொள்கைப் பற்று; எளிமை; தோழமைப் பண்புகள்; உதவி செய்யும் மனோபாவம்; அறிவாற்றல்; எழுத்து திறன்; நாவன்மை இவைகள் பற்றிய நிகழ்வுகளின் நினைவுகளை சுவையாக சிறுகதைகளாக தந்துள்ளது !

●  அண்ணாவுக்கு கவிதை பிடிக்கும்; கவின் ஓவியம் பிடிக்கும்; மேடை நாடகமும் மேம்பட்ட சினிமாவும் பிடிக்கும்; நெத்திலி மீன் கருவாடு பிடிக்கும்; நண்பர்களுடன் சீட்டு விளையாட பிடிக்கும்; புத்தகங்களில் மூழ்கி தன்னையே மறக்க பிடிக்கும்; பெரியாரைப் பிடிக்கும்; பெரியார் மட்டுமே தனது தலைவர் என்பதை பெருமிதமாக சொல்லப் பிடிக்கும் !

●  ௧விஞர் இந்த நூலை ஒரு சிறுகதைகள் தொகுப்பை போல தனது நினைவுகளை ஒவ்வொன்றாக பகிர்ந்துள்ளார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான உணர்வுகளை தருகிறது.. ஒவ்வொன்றையும் முடிக்கும் போது சிறுகதையின் யுக்தியான - மாற்றத்தையோ அல்லது ஏமாற்றத்தையோ தந்து நம்மை வியக்க வைக்கிறது !

●  மார்ச் 6ம் தேதி 1967ல் அறிஞர் அண்ணா தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்கின்றார். அதனால் அவரது தென் சென்னை நாடளுமன்ற பதவியை ராஜினாமா செய்ய வேண்டியுள்ளது. அண்ணாவிடம் பலர் தங்களை எம்.பியாக்க வேண்டுகிறார்கள். அண்ணாவோ முரசொலி மாறனை ( இயற் பெயர் - தியாகராஜ சுந்தரம்) நிறுத்த முடிவு செய்தார். 

●  ஆரம்பத்தில் கலைஞரும் மாறனின் அம்மாவும் அதற்கு சம்மதிக்க வில்லையாம். கருணானந்தம் தனது முயற்சியால் அவர்களை மாறனை தேர்தலில் போட்டியிட  சம்மதிக்க வைக்கிறார். பின்பு நடந்த இடைத்தேர்தலில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில், முரசொலி மாறன், அண்ணா பெற்ற வாக்குகளை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று சரித்திரம் படைத்தார் ! அண்ணாவின் தேர்வு சோடை போகுமா ?

●  அண்ணா ஒரு சகலகலா வல்லவர்.. வரலாறும், அரசியலும், பொருளாதாரமும், இலக்கியமும் அவர் ஆர்வமாக அறிந்து வைத்த துறைகள். அதுபோலவே இசையைப் பற்றியும் நிறைய தெரிந்து வைத்திருந்தார். இசையை பற்றி அண்ணாவின் மொழியில் :

●  " இசை என்றால் இசைய வைப்பது ! அதனால்தான் தேவார, திருவாசக, திருப்பாவை, திருவெம்பாவை பாடிய நால்வர், ஆழ்வார்கள் காலத்திலிருந்து - இராமலிங்க அடிகள் காலம் வரை, தமிழ்ப் பண்களின் அடிப்படையில் இசைப் பாடல்களாகவே இயற்றித் தந்து, தமது சைவ அல்லது வைணவ சித்தாந்தங்களுக்கு மக்களை இசைய வைத்தனர் ! " ..என்று இசை பற்றி அண்ணா கூறிய கருத்துக்கள், இன்றும் நமக்கு இசைவாகத்தான் உள்ளது !

●  அண்ணாவையும் திரைப் படங்களையும் பிரிக்க முடியாது ! தமிழ் திரையுலக வரலாற்றில் அண்ணா ஓரே இரவில் எழுதி முடித்த ' ஓர் இரவு ' திரைப்படம் அது வரை யாரும் செய்யாத புதுமை. ஜெமினி தயாரித்த, தமிழ் படங்களிலேயே மிகப்பெரிய பொருட் செலவில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படமான ' சந்திரலேகா ' வை அண்ணாவும் கவிஞரும் குடந்தையில் பார்த்தார்களாம் ! படத்தை பற்றி அண்ணா :

●  " இவ்வளவு செலவு செய்து படத்தை எடுத்திருக்கான். ஒரு நல்ல வசனகர்த்தாவை வைத்து டயலாக் எழுதத் தெரியல ! கிராமவாசி கூட அக்கிரஹார தமிழ்ல பேசுறாங்க ! எவ்வளவு பொருத்தமில்லாம irrelevant ஆக இருக்குது ! "...எனக் கூறினாராம்.

அந்தப் படத்தை இன்று பார்த்தாலும், அண்ணாவின் விமர்சனம் எவ்வளவு relevant என்பதை உணர முடியும் !

அண்ணா மக்களோடு மக்களாக நெருக்கமாக பழகியவர் அல்லவா ?

●  மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற அண்ணாவின் சொல்லோவியத்திற்கு ஒரு சிறந்த சான்றாக இந்த நிகழ்வை அறிய முடிகிறது - 1967 பொதுத் தேர்தல் முடிவுகள் ஓவ்வொன்றாக வர ஆரம்பிக்கின்றன. திமுகவினர் ஒவ்வொருவராக வெற்றியடைந்த செய்திகள் வருகின்றது. திடீரென விருதுநகர் தொகுதியில் பெ. சீனிவாசன் திமுக வெற்றி என வானொலியில் சிறப்பு செய்தி !

●  அண்ணாவுக்கு பேரிடியானது இந்த செய்தி ! " இது உண்மைதானா ? உண்மைத்தான் சொல்றானா ? அப்படீனா காமராஜ் தோல்வியா ? சேச்சே ...இது நடக்க கூடாதே ! அவரு தோற்கலாமா ? நாம் அவரை தோற்கடிப்பதா ? அரசியலில் அவர் எதிரிங்கறதை நான் மறுக்கல ! ஆனா, தமிழ் நாட்டுக்கு அவரு எவ்வளவு செஞ்சிருக்காரென்பதை மக்கள் மறந்து விட்டாங்களே ! அவரு மட்டும் தோத்திருக்க கூடாது ! " ..என அழாத குறையாக வருத்தமடைந்தாராம் !

●  அந்த அறிஞருக்கு,  பேரறிஞருக்கு இணையான ஒரு அரசியல் வாதியை, இனி தமிழகம் காணுமா ?

●  அண்ணாவின் இறுதி நாட்களை நினைவுபடுத்தும் கவிஞரின் எழுத்துக்கள் நம்மை கலங்க செய்கிறது. அண்ணா அடையாறு மருத்துவ மனையில் இறுதி கட்டத்தில்.. நள்ளிரவில் கூட உடனேயே அண்ணாவை காண வேண்டி, ஆசிரியர் கி. வீரமணியின் அடையாறு வீட்டில் பெரியார் கார் ஷெட்டிலேயே படுத்து உறங்கினாராம்.

●  அண்ணாவின் மறைவு செய்தியை தந்தை பெரியாரிடம் தெரிவித்த போது, " எல்லாம் போச்சு ! எல்லாம் போச்சு ! " என்று  கண்ணீரோடு கதறினாராம் ! அண்ணாவின் சடலம் அவரது நுங்கம்பாக்கம் இல்லத்திற்கு கொண்டு வந்த போது, பெரியாரின் கையைப் பிடித்துக்கொண்டு கலைஞர், " அய்யா !..நாங்க அனாதைகள் ஆயிட்டோமே அய்யா ! " எனக் கதறி கதறி அழுததையும் பதிவு செய்து, கவிஞர் கருணானந்தம் இறுதியாக இவ்வாறு எழுதி இந்த நூலை நிறைவு செய்கிறார் - " இனி எழுத என்னாலாகாது "...

●  கண்களில் வடிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு, இந்நூலைப்பற்றி இதற்கும் அதிகமாக என்னாலும் எழுதிவிட முடியாது !

பொ. நாகராஜன்.

பெரியாரிய ஆய்வாளர், சென்னை. 26.06.2022.

********************************************

Saturday, June 25, 2022

கிராம நத்தம் பற்றியக் குறிப்புகள்

கிராம நத்தத்தை பற்றி புரியாமல் அவதிப்படும் இளைய தலைமுறையினர் களுக்கான விளக்கங்கள்!

1. நத்தம் என்று வகை படுத்தப்பட்ட நிலங்கள் எல்லாம் குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்டது. டிடிசிபி,சிஎம்டிஏ அங்கீகார குடியிருப்பு மனைகள் சமீபங்களில் வந்தது.அதற்கு முன் எல்லாம் நத்தம் நிலங்கள் தான் வீட்டு மனைகள்!வெள்ளையர்கள் தமிழகத்தை ஒட்டு மொத்தமாக சர்வே செய்து நிலத்தை வகைபடுத்தும்போது பயிர் செய்யும் நிலங்கள் நஞ்சை,புஞ்சை,மானாவாரி,தரிசு என வகைப்படுத்தி விட்டு, அப்பொழுது அங்கு இருந்த பூர்வீக குடியிருப்புகளையும்,அதனை சுற்றி எதிர்காலத்தில் குடியிருப்பு தேவை அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு

காலியாக உள்ள இடங்களையும் சேர்ந்தது “நத்தம்” என்று வகைப்படுத்தி வைத்தனர்.

2.சிஎம்டிஏ,டிடிசிபி உருவாகவில்லை என்றால் நத்தம்தான் இன்றுவரை வீட்டு மனை தேவைகளை நிறைவேற்றி கொண்டு இருக்கும்.ஒன்றே ஒன்று நினைவில் வைத்து கொள்ளுங்கள் நத்தம் என்றால் குடியிருப்புக்கான நிலம் ஆகும்.

3. நத்தத்தை பொதுவாக கிராம நத்தம் என்று சொல்வார்கள்.இன்னும் ஆழமாக கவனித்து பார்த்தால் ஊர் தெருவில் இருப்பது ஊர் நத்தம் என்றும் சேரியில் இருப்பதை சேரி நத்தம் என்றும் இன்றளவும் மக்களிடையே புழங்கி வருவதை காணலாம்.

4. கிராமத்தில் உள்ள நத்தம் இடம் அனைத்தையும் ஒரே புலபடமாக வரைந்து அதற்கு ஒரு சர்வே எண்ணை கொடுத்தோ அதிக பரப்பு இருந்தால் 2,3 சர்வே எண்களை கொடுத்து வகைப்படுத்தி இருப்பார்கள். பெரும்பாலும் 1ஹெக்டேர் இல் இருந்து 10 ஹெக்டர் பரப்புவரை நத்தம்நிலங்களை பிரித்து இருப்பர்

5. உதாரணமாக திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் சேவூர் கிராமம் என்று எடுத்துக்கொண்டால் அதில் இருக்கும் பழைய குடியிருப்புகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் நத்தமாக வகைபடுத்தி சர்வேஎண் 625 என்றும் அதன் விஸ்தீரணம் 6ஏக்கர் என்றும் வைத்து கொள்வோம்.

6. மேற்படி 6ஏக்கர் பரப்பில் 50 குடும்பம் தனது வீடு , தோட்டம் வழி என 2.5ஏக்கரில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். மீதி இருக்கிற இடங்கள் 3.5 ஏக்கர் காலியாக இருக்கும். இப்படி ஆட்கள் யாரும் இல்லாமல் இருக்கின்ற நிலங்களை “நத்தத்தில் புறம்போக்கு” என்று கூறுவார்கள் விட்டனர்.

7. இப்படி நத்தத்தில் புறம்போக்காக இருக்கிற பகுதிகள் அரசினுடையது ஆகையால் ஆரம்ப பள்ளி , சுகாதார நிலையம், பஞ்சாயத்து அலுவலகம், நூலகம் ரேசன்கடை, பால் உற்பத்தியாளர் சங்கம் என்று அரசு உயர் பயன்பாட்டுக்கு எடுத்து கொள்ளும்.இன்னும் மீதம் இருக்கிற இடங்கள் யார் கைபற்றிலும் இல்லாமல் காலியாகவே இருக்கும்

8.மேற்படி 625 சர்வே எண்ணில் 2.5 ஏக்கரில் 50 குடும்பங்கள் இருப்பதாக சொன்னேன் அல்லவா, அந்த 50 குடும்பங்களும் 2.5 ஏக்கர் நத்தம் நிலத்தை சரிசமமாக பகிர்ந்து தலா 5 சென்ட் என்று கைப்பற்றுதலில் வைத்து இருக்க மாட்டார்கள். ஒருவர் 10 சென்டுக்கும் , ஒருவர் 8 சென்ட் மற்றொருவர் 4 சென்ட் இன்னொருவர் 1 சென்டுக்கு இன்னொருவர் 2 சென்ட் என்று ஆளுக்கு ஒரு விதமாய் கைப்பற்றுதலிலும் அனுபவித்தலிலும் இருப்பார்கள்

9. மேற்படி 50 நபர்களும் ஆளுக்கொருவிதமாய் கிரய(விடுதலை/செட்டில்மெண்ட்

பாகபிரிவிணை) பத்திரங்கள் வைத்து வைத்திருப்பார்கள்.சில இடங்களில் கிரைய(விடுதலை/செட்டில்மெண்ட்/பாகபிரிவிணை) பத்திரங்களும் இல்லாமல் பூர்வீக அனுபவத்தில் இருப்பர்.

10. உங்க வீட்டுக்கு பத்திரம் இருக்கே பட்டா இல்லையா? என்று கேட்டால் இது கிராம நத்தம், பட்டா தேவையில்லை , பட்டா கிடையாது பத்திரம் மட்டும்தான் என்று எல்லாம் சொல்வார்கள்

11.. நத்தம் நிலத்தில ஆரம்ப காலம் முதல் தொட்டே கிரயம், தானம்,விடுதலை, செட்டில்மென்ட் உட்பட அனைத்து சொத்து பரிமாற்ற பத்திரங்களும் சார்பதிவகத்தில் பதியப்பட்டது.அப்பொழுது நத்தம் நிலத்திற்கு பட்டா இருந்தால் பத்திரம் பதிவார்கள் என்ற நிலை இல்லை.இப்பொழுதும் நத்தம் சர்வே நடக்காத கிராமங்களிலும் பட்டா இல்லாமல் பத்திர பதிவு நடக்கிறது.

12.மேற்படி பத்திர பதிவுகள் எல்லாம் முழுபுலத்தின் சர்வே எண்ணை் வைத்துதான் நடக்கும். அதற்கு உட்பிரிவு சர்வே எணகள் இருக்காது.நான்கு மால் எல்லை (அ) ஜமாபந்தியில விவரிப்பதன் மூலமாக தான் ஒரு தனிப்பட்ட சொத்தை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.பிற சொத்துக்களில் உட்பிரிவு சர்வே எண்ணை வைத்து தெளிவாக அடையாள் கண்டு கொள்ள முடியும்.

13.கிராம நத்தத்தை பற்றி விவரம் தெரிந்தவர்கள் காலியாக இருக்கும் நத்தம் புறம்போக்கு இடங்களை மடக்கி அனுபவித்து கொண்டு இருக்கின்றனர்.சில ஊர்களில் அதனை வீட்டு மனைகளாக பிரித்து ஊரில் இருப்பவர்கள் எல்லாம் சரிசமமாக பங்கு போட்டு கொண்டனர். ஒரு சில இடங்களில் அரசே காலியாக இருக்கும் இடங்களை பிரித்து நிலமற்றவர்களுக்கு , அடித்தட்டு மக்களுக்கு வீட்டு மனை ஒப்படையாக வழங்கி உள்ளது.

14. மேற்படி அரசு கொடுத்த ஒப்படைகள் ஆவணங்கள் கிராம அ.பதிவேடுகளில் நத்தம் கணக்குகளில் இன்று வரை ஏற்றபடவே இல்லை. எல்லா ஒப்படைகளும் முன்பு சொன்னது போல்தான் ஒரே முழுபுலசர்வே எண் தான்.ஒவ்வொரு நில ஒப்படைகளின் மனை உட்பிரிவு செய்து தனி எண்கள் கொடுக்கப்படவில்லை.புலபடத்தில் உட்பிரிவு (Fmb cut) வெட்டி வரையாமலே இருக்கின்றனர்.

15.சுதந்திரம் அடைந்த 1947ஆம் ஆண்டு முதல் 1990வரை கிராம நத்தம் என்றால் மேற்சொன்ன விஷயங்கள் தான் நடந்தது. 1990 to 1995 வரை தமிழக கிராமங்களில் உள்ள நத்த நிலத்திற்கு நத்தம் நிலவரித் திட்டம் கொண்டுவரப்பட்டது.

16.நத்தம் நிலவரி திட்டம் என்றால் இருக்கின்ற நத்தம் நிலங்களை துல்லியமாக அளந்து யார் யாரிடம் எவ்வளவு இடம் இருக்கிறது. என வரைப்படம் வரைந்து போது இடங்களை தனியாக வகைப்படுத்தி வழிகளை ஒழுங்குபடுத்தி அளந்து அதனை எல்லாம் ஒரு படமாக வரைந்து ஒவ்வொன்றுக்கும் உட்பிரிவு எண் கொடுப்பார்கள்.

17. உதாரணமாக முன் குறிப்பிட்ட திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், சேவூர் கிராமத்தில் சர்வேஎண் 625 க்கு 50வீடுகள் 2.5 ஏக்கர் பரப்பில் இருந்தது என்று சொல்லி இருந்தேன்.அவை நத்தம் நிலவரி திட்டத்திற்கு பிறகு 625/1, 625 /2, 625/3, 625/4…..625/49,625/50 வரை உட்பிரிவு செய்து நத்தம் புலப்படத்தில் மேற்க்கண்ட 50 உட்பிரிவுகளை குறிப்பிட்டு நத்தம் FMB தயாரிப்பர்.

18. சர்வே செய்ய வரும்போது யார் யார் நத்தத்தில் அனுபவத்தில் இருந்தார்களோ அல்லது யார் கிரயப்பத்திரங்கள் வைத்து இருக்கிறார்களோ அவர்களின் பட்டியல் தாயாரிக்கப்பட்டு நத்தம் பதிவேடு உருவாக்கப்பட்டு அந்த மக்களுக்கு நத்தம் பட்டாவும் வழங்கப்பட்டது.

19. மேலும் நத்தம் நிலவரி திட்ட தோராய பட்டா, நத்தம் நிலவரி திட்ட தூய பட்டா என இரண்டு படி நிலையான நடைமுறைகள் நத்தம் நிலவரி திட்ட சர்வேயில் பின்பற்றபடுகின்றன.

20. நத்தம் நிலவரி திட்ட தோராய பட்டாவில் , பிழைகள் ,தவறுகள் விஸ்தீரண அளவுகளில் சிக்கல்கள் இருந்தால் அதனை சரி செய்து கொள்ள மனு செய்வதற்கு கால அவகாசம் கொடுப்பார்கள்.

21.மேலும் ஒருவர் நத்ததில் 10 சென்ட் அனுபவத்தில் இருந்தால் 10 சென்ட்டுக்கும் நத்தம் பட்டா கொடுக்கமாட்டார்கள்.3 செண்டுக்கோ அல்லது 4 செண்டுக்கோ நத்தம் தோராய பட்டா தருவார்கள்.மீதி இடத்தை அரசு இடமாக அறிவித்துவிடுவர்.அதனை ஆசேபிப்பவர்கள் அரசிடம் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் மனு செய்யலாம்.இந்த பட்டா ஒரு தற்காலிக பட்டா ஆகும்.

22. தோராய பட்டாவில் முழுமையாக விவரங்கள் மக்களிடம் இருந்து வந்த பிறகு தவறுகள் எல்லாம் களைந்து இறுதியான பட்டாவாக கொடுப்பது நத்தம் நிலவரி திட்ட தூய பட்டா ஆகும். இந்த பட்டா தாயாராகும் போதே நத்தம் தூய அடங்கல் பதிவேடும் தயாராகிவிடும்.

23. 1990 க்கு பிறகு தான், கிராம நத்த நிலத்திற்கு நத்தம் FMB நத்தம் தூய அடங்கல்,நத்தம் தோராய பட்டா, நத்தம் தூய பட்டா போன்ற ஆவணங்கள் உருவாகின. இதனால் தான் யார் யார் எந்த ஏந்த நிலத்தை வைத்து இருக்கிறார்கள் என துல்லியமாக கணக்கெடுக்கப்பட்டது. அதற்கென தனி சர்வே எண் உட்பிரிவுகளும் வந்ததால் புதிதாக பதியப்படும் கிரைய பத்திரங்கள் மற்றும் பிற பரிவர்த்தனைகளிலும் சர்வே எண்ணும் அதன் உட்பிரிவு எண்களும்ஆவணப்படுத்தபட்டன.

24. இதுவரை கிராம நத்தம் வரலாறு கோர்வை படுத்தி இருக்கிறேன். இனி கிராம நத்தம் நிலத்தில் என்னென்ன சிக்கல்கள் இருக்கிறது என்பதனை பார்க்கலாம்.

25. கிராம நத்த ஆவணங்களில் FMB தூய அடங்கல் தோராய பட்டா போன்றவை இன்றுவரை கணினி மயமாக்கப்படவில்லை. அதனால் இன்னும் ஆன்லைன் ஆகவில்லை. இன்றைய தலைமுறையினர் கிராம நத்த பட்டாவை ஆன்லைனில் தேடுகின்றனர். இவையெல்லாம் தற்போது ஆன்லைனில் கிடைக்காது என்பதே உண்மை.

26. இன்னும் பல கிராமங்களில் ஆரம்ப கட்ட நத்தம் நிலவரி திட்ட சர்வேக்களே செய்யாமல் இருக்கின்றனர். அதனால் நத்தம் FMB நத்தம் பட்டா இல்லாமல் வீட்டுகடன் வங்கிகடனுக்கு வாய்ப்பில்லாமல் அவதி பட்டு கொண்டு இருக்கினர்

27. மேலும் தமிழகத்தின் பல கிராமங்களில் நத்தம் நிலவரி திட்ட தோராய பட்டா மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இறுதி பட்டாவான நத்தம் நிலவரிதிட்ட தூய பட்டா நடைமுறை அப்படியே கிடப்பில் இருக்கிறது.

28. மேலும் பல கிராமங்களில் நத்தம் நிலவரி திட்ட தூய பட்டா வந்தாலும், அதில் பல தவறுகள் இருக்கிறது. உரிமையாளர் பெயர் தவறுதலாக உள்ளது. உரிமையாளர் கிரைய பத்திரம் வைத்து இருந்தும், வேறு நபர் மீது தூய பட்டா கொடுக்கப்பட்டு இருக்கிறது. தூய பட்டாவில் எங்கள் இடத்தை சேர்த்து பக்கத்து வீட்டுக்காரர் தூயபட்டாவில் ஏற்றிவிட்டார்கள். என் இடத்தை புறம்போக்கு என வகைப்படுத்தி விட்டனர். என பல குளறுபடிகள் நத்தம் நிலவரிதிட்ட தூய பட்டா கொடுத்த சர்வேயிலும் இருப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

29. தவறுதலாக நத்தம் பட்டாவில் பெயர் ஏறியவர் அல்லது பெயர் எறியவரின் வாரிசுகள் மேற்படி பட்டாவை வைத்து எங்களுடைய நிலம் என்று வழக்கு போடுகின்றனர். உண்மையான நில உரிமையாளர் மலங்க மலங்க முழித்துகொண்டு நீதிமன்ற வாயில் நின்று கொண்டு இருக்கிறார்கள்.

30. நத்தம் நிலவரி திட்ட சர்வே நடக்காத கிராமஙக்ளில் முழு புலத்தின் உட்பிரிவு செய்யபடாத ஒரே சர்வே எண்ணை வைத்து ஒரே இடத்திற்கு வேறு வேறு நபர் பெயரில் இரண்டுக்கு மேற்பட்ட பத்திரங்கள் பதியப்பட்ட்டு ஓர் இடம் இரு பத்திரங்கள் என்ற பிரச்சனையாகி இரண்டு நபரும் நீதிமன்றத்தில் மல்லுகட்டி கொண்டு இருக்கிறார்கள்.


31.நத்தம் நிலவரி திட்ட சர்வேயில் நிலத்துக்கான பத்திரங்கள் நில உரிமையாளர் வைத்து இருந்தாலும் புறம்போக்கு என நிலவரிதிட்ட சர்வேயில் வகைப்படுத்திவிட்டால் பட்டா இடமாக மாற்ற வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தவம் இருக்கிறார்கள்.

32.பல கிராம நத்த இடத்தை அரசு இலவசமாகவோ பணம் வாங்கி கொண்டோ ஒப்படையாக வழங்கி இருக்கும்.நத்தம் சர்வே இதுவரை நடக்காத கிராமங்களில் மற்றும் சர்வே நடந்த கிராமங்களின் கிராம கணக்கில் குறிப்புகளாக கூட ஒப்படை பற்றிய விவரங்கள் இருக்காது. அரசு புறம்போக்கு ஆக்கிரமிப்பு என்று 10,20 ஆண்டுகளுக்கு பிறகு யாராவது வழக்கு தொடுத்தால் ஒப்படை நிலம்தான் என்று நிரூபிக்க அரசிடம் இது சம்பந்தப்பட்ட தனது BACK END கோப்புகள் தேடி எடுக்க முடியாமல் தவித்து கொண்டு இருக்கின்றனர்.

33.நத்தம் இடங்களில் உங்களுக்கு சிக்கல்கள் இருந்தால் முதலில் அங்கு நத்தம் நிலவரிதிட்ட சர்வே நடந்ததா? என்று பார்க்க வேண்டும்.அப்படி நடந்தால் தோராய பட்டாவில் உள்ளதா தூயபட்டாவில் உள்ளதா என பார்க்க வேண்டும்.நத்தத்தில் அரசு நில ஒப்படை கொடுத்து இருந்தால் அரசிடம் அது சம்மந்தபட்ட கோப்புகள் இருக்கிறதா என்று ஆராயவும்.அதன் பிறகு ஆவண நிலவரங்களுக்கு ஏற்றவாறு மாவட்ட ஆட்சியருக்கு மனுவோ நீதிமன்ற வழக்குககளுக்கோ செல்ல வேண்டும்.

நன்றி : மகேஷ் ராஜன் முக நூல் பதிவு (30.12.2018)

Thursday, June 23, 2022

பிசிராந்தையார் - பாவேந்தர்

 புத்தகத்தின் பெயர் - பிசிராந்தையார்

ஆசிரியர்- பாவேந்தர் பாரதிதாசன்

- நிவேதா பாலபாஸ்கரன்

பாவேந்தரின் பிசிராந்தையார் நாடகம் நட்பின் மேன்மையை உணர்த்துகிறது. பாண்டிய நாட்டில் வாழும் பிசிராந்தையார் சோழ மன்னன் கோப்பெருஞ்சோழனின் பெருமைகளை கேள்வியுற்று பார்க்காமலேயே நட்பு கொள்கிறார். அதேபோல் கோப்பெருஞ்சோழனும்🤴பிசிராந்தையாரின் புலமை பெருமைகளை கேள்வியுற்று நட்பு கொள்கிறார். சினிமாவில் நாம் பார்க்காமல் காதல் ❤கொள்வதை பார்த்துள்ளோம். ஆனால்,  சங்க காலத்தில் பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன் பார்க்காமலேயே  நட்பு கொண்டனர். 

கதையின் ஆரம்பத்தில் அமைந்த பிசிராந்தையார் மட்டும் மேற்படியார் உரையாடல் மிகவும் கவரும் வகையில் அமைந்துள்ளது. அரிசி வாங்க பணம் இல்லை என்று மேற்படியார் கூற தன்னிடம் உள்ள கல்லிழைத்த பதக்கத்தை கழற்றி கொடுக்கிறார். 

சில புலவர்கள் "ஐயா நகை தந்து நகையை பறித்தார் உங்களிடமிருந்து"

பிசிராந்தையார் "நகை இழந்தது பெரிதன்று. நகைப்பை பெற்றேன் அது பெரிது.பெறற்கரிது! ..... "

இவ்வுரையாடல் மூலம் பாண்டிய நாட்டின் செழிப்பையும், பிசிராந்தையாரின் தாராள குணம் தெரிந்து கொள்ள முடிகிறது. 

பாண்டிய நாட்டில் பச்சைகிளி மர்மமான முறையில் இறந்துள்ளாள் அதை செய்தவர் யார் , எதற்காக செய்தனர் என்று நாடகம் விறுவிறுப்பாக நகர்ந்து சோழ நாட்டிற்கும் பாண்டிய நாட்டிற்கும் இடையே விரிசலை ஏற்படுத்துகிறது. கோப்பெருஞ்சோழனின் 👑இரு மகன்கள் ஆட்சியை கைப்பற்ற தன் தந்தைக்கு எதிராக சூழ்ச்சி செய்கின்றனர். இக்கொலையை வித்தாக வைத்து பாண்டியனுக்கும் சோழனுக்கும் பகையை உருவாக்க முடிவு செய்து திட்டத்தை செயல் படுத்துகிறார்கள் .  இதையறிந்த கோப்பெருஞ்சோழன் தன் மகன்களுக்கு எதிராக போர் புரிய முடிவு செய்கிறார். அப்போது எயிற்றியனார் தடுக்கிறார். 

தாங்கள் தன் மக்களைக் கொன்றால் உலகம்🌎 ஆட்சிகாக சோழ மன்னன் தன் மகன்களை கொன்றான் என்று இகழும் என கூறுகிறார். பின் கோப்பெருஞ்சோழன் வடக்கிருக்க முடிவு செய்கிறார். வடக்கிருக்கும் இடத்தில் பிசிராந்தையாருக்காக ஒரு இடத்தை தேர்வு செய்கிறார். பிசிராந்தையார் வர வாய்பில்லை, பார்க்காமலேயே தனது சிநேகிதனுக்காக உயிர் விட யார் வருவார் என மக்கள் பேசிக்கொண்டே இருக்கும் போது பிசிராந்தையார் அங்கு வந்து சோழனை கண்ணீர் மல்க சந்தித்து வடக்கிருந்து தன் நணபனுடன் உயிர் பிரிகிறார். 

மக்கள் அனைவரும் கோப்பெருஞ்சோழன் மற்றும் பிசிராந்தையாரின் நட்பை போற்றுகின்றனர். 

இந்நாடகத்தில் நட்பு மட்டுமல்ல அரசியல், அறம், பாசம், சூழ்ச்சி, வளம், மக்களின் மனோபாவம் போன்றவற்றை பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் இலக்கிய நயத்துடன் கொடுத்துள்ளார்.

தந்தை பெரியார் - கி.ஆ.பெ.விசுவநாதம்

 தந்தை பெரியாருடனான சந்திப்பு - கி.ஆ.பெ.விசுவநாதம்.....

1938 இந்தி எதிர்ப்புப் போரில் பெரியார் சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வை இங்கே விவரிக்கிறார் முத்தமிழ்க் காவலர். படியுங்கள்...

‘ 1938 இல் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் போது பெரியாரைக் கைது செய்து அவர் மீது குற்றத்தைச் சாட்டி தண்டித்து, பல்லாரி சிறையில் அடைக்க சென்னை முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்டு உத்திரவிட்டது. 

அப்போது அவருக்காக எதிர் வழக்காடிய பாரிஸ்டர் பன்னீர்ச்செல்வம் அவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிற்கும் பெரியாரைக் கட்டிப்பிடித்துக் கண்ணீர் உகுத்து அழ ஆரம்பித்துவிட்டார். அவர்கள் இருவரையும் போலீசார் பெரும்பாடுபட்டே பிரித்தார்கள்’.

‘பின் பல்லாரி சிறையில் நானும் (கி.ஆ.பெ.) அவரும் (சர். ஏ.டி.பன்னீர்ச்செல்வம்) மட்டுமே போய்ப் பெரியாரைப் பார்த்து வந்தோம்’. 

‘எங்களுக்குப் பல அரசியல் கருத்துக்களையும், நாட்டில் நாங்கள் செய்ய வேண்டிய பணிகளையும் மிகத் தெளிவாகவும், பொறுமை யாகவும் கூறி எங்களைப் பெரியார் வழி அனுப்பி வைத்தது எங்களைக் கலக்கமடையச் செய்தது’.

‘அவர் சிறையில் இருக்கும் போதுதான் சென்னை ஐலண்டு கிரவுண்டில் ஜஸ்டிஸ் கட்சி மகாநாடு நடந்தது. அவர் பல்லாரி சிறை யில் இருந்ததால் அவர் படத்தையே தலைமையாக வைத்து மகாநாட்டை நடத்தினோம்’.

‘அப்போது ஆந்திர, கேரள, கர்நாடக, தமிழகம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் பொதுச் செயலாளராகப் பணிபுரிந்தேன்’.

‘தலைவர் பெரியார் பல்லாரி சிறையில் இருந்ததால் அவரது தலைமை உரையின் முற்பகுதியை சர் ஏ.டி. பன்னீர் செல்வமும், பிற்பகுதியை நானும் படிக்கும் வாய்ப்பைப் பெற்றோம்’.

‘பெரியார் கட்டளைப் படி அவரது பணிகளை சட்டசபைக்கு உள்ளே ஏ.டி. பன்னீர்செல்வமும், சட்டசபைக்கு வெளியே நானும்செய்து வந்தோம்’ என்று உருக்கமாக நிகழ்வுகளை தொகுத்து எழுதுகிறார் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.